Print Version|Feedback
War danger surges as India blames Pakistan for attack on Kashmir base
காஷ்மீர் இராணுவத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டும் நிலையில் போர் அபாயம் அதிகரிக்கிறது
By V. Gnana
19 September 2016
ஞாயிறன்று சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைந்திருக்கும் ஊரி பகுதியிலுள்ள இந்திய இராணுவத் தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பதினேழு இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர், குறைந்தது 20 பேர் படுகாயமடைந்தனர்.
சுமார் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த சண்டை நீடித்ததில் தாக்குதல் நடத்திய நான்கு பேரும் கொல்லப்பட்டதாய் கூறப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்கனவே இருக்கும் பாரிய பாதுகாப்புப் படை பிரசன்னத்தை மேலும் “உயர்த்துவதை”க் கொண்டு இந்திய அதிகாரிகள் பதிலிறுப்பு செய்தனர்.
சீனாவுக்கு எதிரான தனது போர் முனைப்பில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கையால் எரியூட்டப்பட்டு தெற்காசியாவில் பதட்டங்கள் அதிகரித்துச் செல்வதற்கு மத்தியிலும், அத்துடன் காஷ்மீரில் சமூக மற்றும் அரசியல் கிளர்ச்சி தீவிரப்பட்டு செல்வதற்கு மத்தியிலும் நடந்திருக்கும் நேற்றைய தாக்குதல் ஆசியாவில் ஒரு பெரும் போர் வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இதுவரை, ஊரி தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்றிருக்கவில்லை. ஆயினும், இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என்று இந்தியா உடனடியாகக் குற்றம் சாட்டியதோடு தனது சிப்பாய்களின் மரணத்திற்குப் பழிதீர்க்கவும் சபதமிட்டது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் பல வாரங்களாகவே கனன்று கொண்டிருக்கின்றன. இந்தியாவின் ஒரே முஸ்லீம்-பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாரிய அமைதியின்மைக்கும், பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தியிருப்பதற்குமான பதிலிறுப்பாக, புதுடெல்லி, பலோசிஸ்தானில் இன-தேசியவாதக் கிளர்ச்சியை பாகிஸ்தான் மிருகத்தனமாக ஒடுக்குவதாகக் கூறி ஒரு இராஜதந்திரரீதியான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு நரேந்திர மோடி எடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுகின்ற இந்தப் பிரச்சாரம், பாகிஸ்தான் சிதறுவதை ஆதரிக்க இந்தியா தயாராக உள்ளது என்பதையே உட்கருத்தாக கொண்டிருகிறது.
இறந்த தாக்குதல்தாரர்கள் பாகிஸ்தான்-ஆதரவு காஷ்மீரி இஸ்லாமியக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Muhammad - JeM) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய இராணுவம் குற்றம்சாட்டியிருக்கிறது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியப் பகுதியில் இருந்து இந்த JeM போராளிகள் ஊடுருவி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இன்னும் தள்ளிய, அத்துடன் அனுமானிக்கக் கூடிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சற்று குறைவாக இருந்த பக்கத்தில் இருந்து, இராணுவத் தளத்தின் மீது தங்கள் தாக்குதலைத் தொடுத்திருந்தனர் என்று அது கூறியது.
“கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையே ஆரம்பகட்ட தகவல்கள் கூறுகின்றன” என்று இந்திய இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஜெனரல் லெப்டினண்ட் ஜெனெரல் ரன்பீர் சிங் தெரிவித்தார். “அவர்களிடம் இருந்து நான்கு ஏகே-47 ரக துப்பாக்கிகளும் நான்கு கையெறிகுண்டு ஏவுசாதனங்களும், அத்துடன் ஏராளமான எண்ணிக்கையில் போரில் பயன்படுத்துவதைப் போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன”.
இந்திய அரசாங்க அதிகாரிகள், பதவியில் இருக்கின்ற மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் ஊரி தாக்குதலுக்கு ஆக்ரோசமான மிரட்டல்களைக் கொண்டு பதிலிறுப்பு செய்துள்ளனர்.
“இந்த வெறுப்புமிக்க தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட மாட்டார்கள் என்று இந்த தேசத்திற்கு நான் உறுதி கூறுகிறேன்” என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். அவரது உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தனது ட்வீட்டில் “பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத அரசு, அது அங்ஙனமே அடையாளப்படுத்தப்பட வேண்டும், தனிமைப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
பிரபலங்களிடம் இருந்தான ஏராளமான அறிக்கைகள் ஒரு திருப்புமுனைப் புள்ளி எட்டப்பட்டிருப்பதாக வலியுறுத்தின.
மோடியும் அவரது தலைமைப் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களுடைய அடுத்த நடவடிக்கைகள் குறித்து கூடிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலரான, ராம் மாதவ், “மூலோபாயரீதியாய் ஒதுங்கியிருந்த நாட்கள் எல்லாம் முடிந்து விட்டன. பலவீனமானவர்கள் மற்றும் கோழைகளின் கருவியாக பயங்கரவாதம் இருக்குமானால், தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கும் நிலையில் ஒதுங்கியிருத்தல் என்பது திறனின்மையையும் போட்டித்திறனின்மையையுமே வெளிப்படுத்துவதாகி விடும்” என்று கூறினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியரான சேகர் குப்தாவும் இதே கருத்துகளை எதிரொலித்தார்: “ஊரி தாக்குதலுக்கும் வழக்கம் போல இந்தியா பதிலிறுப்பு காட்டாது இருக்கும் என்று பாகிஸ்தான் நினைத்தால், அது கற்பனைமயக்கமே. இந்த இந்தியா பழைய மூலோபாயரீதியான ஒதுங்கியிருத்தலில் இருந்து நகர்ந்து விட்டது.”
பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட தாக்குதலுக்கு எல்லைதாண்டிச் சென்று தாக்குவதன் மூலமாக இந்தியா பதிலளிக்க வேண்டும் என்று இந்தியாவின் இராணுவ பாதுகாப்பு ஸ்தாபகத்திற்குள் இருக்கின்ற சக்திவாய்ந்த கூறுகளும், அத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான ஆதரவுத் தளத்தில் உள்ளடங்கியிருக்கின்ற இந்து மேலாதிக்கவாதக் குழுக்களும் நீண்டகாலமாகவே அறிவுறுத்தி வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட எந்தவொரு நடவடிக்கையையும், தான் போருக்குச் சமமான ஒரு நடவடிக்கையாக கருதவிருப்பதை பாகிஸ்தான் சமிக்கை செய்திருப்பதன் மூலம், இந்திய “பதிலடி”யானது போட்டி அணுஆயுத அரசுகளுக்கு இடையிலான ஒரு முழுவீச்சிலான போராக துரிதமாக வளர்ச்சி காணக் கூடிய சாத்தியம் அதிகரித்திருக்கிறது.
இந்த மூர்க்கத்தன அறிக்கைகளின் சங்கமத்திற்கு மத்தியில், லெப்டினண்ட் ஜெனரலான ரன்பீர் சிங் “எதிரியின் எந்த பயங்கர வடிவமைப்புகளுக்கும்” “தகுந்த பதில்” தர இராணுவம் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தார்.
JeM உள்ளிட்ட இந்திய-விரோத இஸ்லாமிய காஷ்மீரிக் குழுக்களுக்கும் பாகிஸ்தான் உளவுத்துறையின் பிரிவுகளுக்கும் இடையில் இரகசிய உறவுகள் நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கின்றன என்றபோதும், தான் சம்பந்தப்பட்டுள்ளதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் நிராகரித்தது. “இந்தியா எந்த விசாரணையும் செய்யாமல் பாகிஸ்தான் மீது உடனடியாகப் பழிபோடுகிறது. நாங்கள் இதனை நிராகரிக்கிறோம்” என்று வெளியுறவு அமைச்சகச் செய்தியாளரான நபீஸ் சகாரியா தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் “முகாந்திரமற்றவை முதிர்ச்சியற்றவை” என்று பாகிஸ்தான் இராணுவத்தின் ஒரு அறிக்கை தெரிவித்தது. இந்திய-விரோத காஷ்மீரி கிளர்ச்சியாளர்களை எல்லைக் கட்டுப்பாட்டின் தனது பக்கத்தில் இருந்து இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீருக்குள் ஊடுருவ இனியும் அனுமதிப்பதில்லை என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தம் செய்தார்.
ஊரி தாக்குதலைக் கண்டித்தும் இந்தியாவுடனான தனது மூலோபாயக் கூட்டை மறுஊர்ஜிதம் செய்தும் அமெரிக்கா ஒரு அறிக்கை விடுத்தது. பாகிஸ்தான்தான் இத்தாக்குதலுக்குப் பொறுப்பு என்ற இந்தியாவின் குற்றச்சாட்டைக் குறித்த எந்த கருத்தையும் அது தவிர்த்திருந்தது. அமெரிக்கா இத்தாக்குதலை “வன்மையாக” கண்டிப்பதாய் அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரான ஜோன் கிர்பி தெரிவித்தார். “பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எங்களது அனுதாபங்களை தெரிவிக்கிறோம்”. “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்திய அரசாங்கத்துடன் கொண்டுள்ள வலிமையான கூட்டிற்கு அமெரிக்கா உறுதிபூண்டிருக்கிறது” என்று கிர்பி மேலும் சேர்த்துக் கொண்டார்.
இந்திய அரசாங்கம் தொடர்பாக, காஷ்மீரில் இருக்கின்ற பாரிய சமூக கோபத்தை சுரண்டிக் கொள்கின்ற பல்வேறு பாகிஸ்தான்-ஆதரவு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான பதிலிறுப்பு ஆகிய இரண்டின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தையும் ஊரி தாக்குதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதனால் விளைகின்ற மோதல்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் வகுப்புவாத-இனவாத மற்றும் பிராந்தியப் பதட்டங்களை ஆழப்படுத்துவதோடு, அணுஆயுதங்கள் கொண்ட பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான ஒரு போரின் அபாயத்தை இன்னும் அதிகரிக்கின்றன.
இத்தகையதொரு போர் பிரளயப் பின்விளைவுகளைக் கொண்டிருக்கக் கூடும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இராணுவ-மூலோபாய வலிமை வித்தியாசம் அதிகரித்திருப்பதால், இஸ்லாமாபாத் தந்திரோபாய அணுஆயுதங்களை நிலைநிறுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் “யுத்தக்கள” அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமானால், அணுஆயுத வரம்புநிலை மீறப்பட்டு விட்டதாக இந்தியா கருதும் (அதாவது வெப்பஅணு (thermonuclear) ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுக்க இந்தியா தயாராய் இருக்கிறது) என்று சூசகம் செய்ய புது டெல்லியை இது தூண்டியது.
முன்னாள் பிரிட்டிஷ் இந்திய சாம்ராஜ்யம் முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட பாகிஸ்தானாகவும் இந்து பெரும்பான்மை கொண்ட இந்தியாவாகவும் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினை செய்யப்பட்டதற்கு உடனடியாகப் பின்வந்த காலத்தில் 1947-48 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் முதன்முறையாக காஷ்மீர் விடயத்தில் யுத்தம் செய்தன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அறிவிக்கப்பட்டு நடந்த மூன்று போர்களில் இரண்டாவதிலும் அத்துடன் 1999 இல் நடந்த அறிவிக்கப்படாத போரான கார்கில் யுத்தத்திலும் காஷ்மீர் தான் மையப் பிரச்சினையாக இருந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முதலாளித்துவ வர்க்கங்கள் தெற்காசியாவின் மிகப் பெரும்பான்மை மக்களது அத்தியாவசிய வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய தவறினாலும் அணு ஆயுதங்களைக் கொண்டு தங்களை ஆயுதபாணியாக்கிக் கொள்ளத் தவறவில்லை என்ற நிலையில், அவற்றுக்கிடையில் எழுகின்ற போட்டியின் நச்சுத்தனமான மற்றும் வெடிப்பு கொண்ட தன்மையின் காரணத்தால், சமீப ஆண்டுகளில், இந்தப் பிராந்தியம் ஒரு “அணுஆயுத வெடிப்பு புள்ளி”யாக இன்னும் சொன்னால் “உலகின் மிக அபாயகரமான அணுஆயுத வெடிப்பு புள்ளி”யாக கூறப்பட்டு வருகிறது.
காஷ்மீர் மோதலின் வெடிப்புத்தன்மைக்கு, சீனாவுக்கு இந்தப் பிராந்தியத்தின் முக்கியத்துவம் பெருகியிருப்பது மேலும் தீவிரமூட்டியிருக்கிறது. மேற்கு சீனாவில் இருந்து பலோசிஸ்தானில் இருக்கும் குவடார் அரபிக் கடல் துறைமுகத்திற்கு பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் வழியாக ஒரு பைப்லைன் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலையை சீனா கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது. சீனாவை பொறுத்தவரை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டமானது (China Pakistan Economic Corridor - CPEC), சீனாவுடனான ஒரு போர் அல்லது போர்-நெருக்கடியின் சமயத்தில் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் சந்திப்புப் புள்ளிகளைக் கைப்பற்றுவதன் மூலமாக அதற்கு எதிரான ஒரு பொருளாதார முடக்கத்தைத் திணிப்பதற்கு அமெரிக்கா கொண்டுள்ள திட்டங்களில் இருந்து பகுதியாகத் தப்பித்துக் கொள்வதற்கு, பெரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
காஷ்மீரில் பரந்த அமைதியின்மை
காஷ்மீரில் இந்திய நிர்வாகத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களை இந்திய பாதுகாப்புப் படைகள் வன்முறையாக ஒடுக்குகின்ற நிலையில் தான் ஊரி இராணுவத் தளம் மீதான தாக்குதல் வந்துசேர்ந்தது.
இந்திய நிர்வாகத்திலிருக்கும் காஷ்மீர் இரண்டு மாதங்களுக்கும் அதிகமான காலமாய் மரணகரமான அமைதியின்மையின் பிடியில் இருந்து வருகிறது. இப்பிராந்தியத்தில் 2010க்குப் பிந்தைய மிக மோசமான வன்முறையில் ஏறக்குறைய தினந்தோறும் ஆர்ப்பாட்டங்களும் பாதுகாப்புப் படைகளுடனான மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன. பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமியவாத ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் ஒரு தலைவரான புர்ஹான் வாணி இந்திய பாதுகாப்புப் படையினரால் ஜூலை 8 அன்று கொல்லப்பட்டதால் தூண்டப்பட்ட ஏறக்குறைய அன்றாடமான இந்திய-எதிர்ப்புப் போராட்டங்களிலும் சுழற்சி முறை ஊரடங்கு உத்தரவுகளிலும் இதுவரை 85க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
சனிக்கிழமையன்று, பெல்லெட் (pellet) குண்டு காயங்கள் நிரம்பி மரணமடைந்த பதினொரு வயது பள்ளிச் சிறுவனான நசீர் ஷபியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கு உத்தரவை மீறினர். துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தவர்களின் மீது போலிஸ் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய துணைஇராணுவ அலகான மத்திய ஆயுதப் படை போலிஸ் 32 நாட்களில் 1.3 மில்லியன் பெல்லட்டுகளை (pellet) சுட்டிருந்ததாக ஜம்மு காஷ்மீர் உயர்நீதி மன்றத்தில் அது தெரிவித்தது.
“ஏராளாமானோர் பெல்லெட்-காயம்பட்டிருப்பதை இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன். 2010 அமைதியின்மையின் சமயத்திலும் பெல்லெட்டுகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இந்தமுறை அவர்கள் [அரசாங்கப் படைகள்] மிகப்பெரும் அளவில் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்” என்று பெயர் கூற விரும்பாத ஒரு மருத்துவர் அல் ஜசீராவிடம் கூறினார். “ஏறக்குறைய தினந்தோறும் பெல்லெட் குண்டு காயத்துடன் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர், பல நோயாளிகள் இதில் தங்கள் பார்வையை இழந்துள்ளனர்.”
இந்திய நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் இருக்கும் இன்னொரு மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், கடந்த 72 நாட்களில் 756 பேருக்கு விழிகளில் பெல்லெட் காயம் பட்டிருந்ததாகக் கூறினார்.
இந்த பதட்டமான சூழலில், ஊரி இராணுவத்தளத்தின் மீதான தாக்குதலானது பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் இராணுவப் பதட்டங்களை அதிகரிக்கிறது. அமெரிக்கா, தென் சீன மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் சீன ஆட்சியை மூர்க்கமாக எதிர்கொள்கின்ற நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவுக்கு எதிரான ஒரு எதிர்சக்தியாக இந்தியாவையும் அது கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த ஜூன் மாதத்தில் மோடி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்தபோது, இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியங்களிலும் மற்றும் ”..நிலம், நீர், வான்வெளி, விண்வெளி மற்றும் இணையவெளி’ என அத்தனை களங்களிலும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க வாக்குறுதியளிக்கின்ற ஒரு கூட்டு அறிக்கையை இருவருமாய் இணைந்து வெளியிட்டனர்.
அமெரிக்க இராணுவம் மறுவிநியோகம், பழுதுபார்ப்பு வேலைகள் மற்றும் ஓய்வெடுப்பு ஆகிய காரணங்களுக்காக இந்திய துறைமுகங்களையும் இராணுவத் தளங்களையும் வழக்கம் போன்ற முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கும் ஒரு உடன்பாட்டில் சென்ற மாதத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அமெரிக்கா, தனது பங்காக, இந்தியாவை தனது ஒரு “முக்கிய பாதுகாப்புக் கூட்டாளி”யாக அங்கீகரித்திருக்கிறது. பென்டகனின் நெருக்கமான கூட்டாளிகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய முன்னேறிய அமெரிக்க ஆயுதங்களை அது இப்போது வாங்கிக் கொள்ள முடியும் என்பதே இதன் பொருளாகும்.
இந்தியா-அமெரிக்கா கூட்டணி இடையில் முன்னெப்போதினும் அதிகமான அளவில் வளர்ச்சி கண்டிருப்பது, தெற்காசியாவில் அதிகார சமநிலையை புரட்டிப் போட்டிருப்பதோடு, அதன்மூலமாக ஆயுதப் போட்டியையும் அணுஆயுதப் போட்டியையும் எரியூட்டிக் கொண்டிருக்கிறது, மற்றும் புது டெல்லியை கூடுதல் மூர்க்கமாகச் செயல்படுவதற்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறது என்று பாகிஸ்தான் மேலும்மேலும் உரத்த குரலில் எச்சரித்து வந்திருக்கிறது.
ஆனால் அமெரிக்கா இந்தக் கவலைகளை அலட்சியம் செய்திருப்பதுடன், ஆப்கானிஸ்தானிலான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதரவாய் பாகிஸ்தான் இன்னும் அதிகமான அளவில் செயல்பட வேண்டும் என்று கோருகிறது. அத்துடன் இந்தியா, CPEC திட்டம் இந்திய இறையாண்மையை மீறுவதாக இருக்கிறது என்று கூறி சீனாவுடனான அதன் உறவுகளில் இதனை ஒரு பெரும் பிரச்சினையாக்குவதற்கு, திரைமறைவில் இந்தியாவை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவும், பாகிஸ்தான் போலவே, முழு காஷ்மீரும் நியாயப்படி தங்களுக்கு சொந்தமானதாய் உரிமை கொண்டாடுகிறது.
இந்திய-அமெரிக்க மூலோபாயக் கூட்டணி கிளைபரப்பி விரியும் நிலைக்கு முகம்கொடுக்கும் பாகிஸ்தானும் சீனாவும் மேலும் மேலும் நெருக்கம் கொள்கின்றன.
இவ்வாறாக, இந்திய-பாகிஸ்தான் மோதலானது அமெரிக்க-சீன மோதலுடன் பின்னிப் பிணைந்ததாக ஆகி இரண்டு நாடுகளுக்கும் ஒரு பாரிய மற்றும் பெரும் வெடிப்பான புதிய குற்றச்சாட்டை சேர்த்துக் கொண்டிருக்கிறது.