ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers and youth at Jaffna protest speak out against US-backed Sri Lankan regime

யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களும் இளைஞர்களும் அமெரிக்க-ஆதரவு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகப் பேசினர்

By Subash Somachandran and K. Nesan 
27 September 2016

சனிக்கிழமை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க-ஆதரவு ஆட்சியின் கொள்கைகளையும் இரா.சம்பந்தனின் தமிழ் தேசியவாத கூட்டமைப்பு (TNA) சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதையும் எதிர்த்து யாழ்ப்பாணத்தில் ஊர்வலம் சென்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்கள், "இலங்கையின் சிறிசேன-விக்கிரமசிங்க-சம்பந்தன் ஆட்சிக்கு எதிராய் தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்!" என்ற துண்டுப் பிரசுரத்தின் ஆயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்ததோடு பேரணியில் கலந்து கொண்டவர்களை பேட்டி கண்டனர். அவர்கள் பல தொழிலாளர்களுடனும், இளைஞர்களுடனும் பேசினார். பேரணியில் சென்ற அனைவருமே சிறிசேன ஆட்சி மீதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். அதேபோல், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்த தமிழ் மக்கள் பேரவையை (TPC) பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசியவாத கன்னைகளின் மீதும் தங்கள் நம்பிக்கையின்மையை தெரிவித்தனர்.

இலங்கை அரசாங்கம், இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மீது இரத்தக்களரியான பாரிய படுகொலையை மேற்கொண்டு ஏழு ஆண்டுகளின் பின்னர், யுத்தம் ஏற்படுத்திய பேரழிவுகளில் எதுவும் தீர்க்கப்படவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள், காணாமல் போயுள்ள உறவினர்கள் பற்றிய கவலையையும் எதிர்பார்ப்பையும் பற்றி பேசினர், இன்னமும் இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை திருப்பித் தரவேண்டும் என்று கோரினர், மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரினர்.


தனது பிள்ளைகளின் துணையுடன் அரசுக்கெதிரான எதிர்ப்பை வெளிப்படுத்தும் முதியோர்களில் ஒருவர்

சயந்தன், யாழ் பல்கலைக்கழக மாணவர் கூறியதாவது: "ஏனையவர்களைப் போலவே, நானும் இங்கு சிறிசேன-ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு என் எதிர்ப்பை தெரிவிக்க வந்தேன். ஆட்சிக்கு வந்தபோது, அது 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வாக்குறுதியளித்தது. ஆனால் கடந்த 21 மாதங்களில் எதுவும் செய்யப்படவில்லை. தமிழ் வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தேர்ந்தெடுத்தனர், ஆனால் அவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கோ அல்லது தமிழ் மக்களைப் பாதிக்கும் வேறு எந்த பிரச்சினைகளையோ தீர்க்க எதையும் செய்யவில்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு நட்பான எதிர் கட்சியாக மாறிவிட்டனர்."

சயந்தன், தமிழ் மக்கள் பேரவை மீதான தனது அவநம்பிக்கையையும் சுட்டிக்காட்டினார். "இதுவரை நான் பார்த்ததில், இந்த பேரணியின் அமைப்பாளர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இடையே எந்த வேறுபாடுகளையும் காணமுடியவில்லை," என்ற அவர், "இந்த பேரணியை ஏற்பாடு செய்தவர்கள், தங்கள் அரசியல் தேவைகளுக்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாள உத்தேசித்துள்ளனர். நாம் போராட்டத்தை நம் கையில் எடுக்க வேண்டும்," என மேலும் கூறினார்.


காணாமல் போன தமது உறவினர்களின் படங்களுடன்

ஒரு கணக்கியல் ஆசிரியை, உலக சோசலிச வலைத் தள நிருபரிடம் தெரிவித்ததாவது: "நான் இந்த பேரணியில் கலந்து கொள்ள குருநகர் பகுதியில் இருந்து வந்தேன். எம்முடைய உரிமைகளுக்காக நாம் பல தசாப்தங்களாக போராடி வந்துள்ளோம் என்பது உலகத்துக்கு தெரியும், ஆனால் படுகொலைகளையும் அழிவுகளையும் தவிர வேறு எதுவும் கிடையாது. புதிய அரசாங்கம் பல வாக்குறுதிகளை அளித்தது. இது நல்லாட்சி மற்றும் மாற்றத்துக்கான அரசாங்கம் என்று எம்மிடம் கூறினர், ஆனால் எதுவும் மாறவில்லை. முந்தைய அரசாங்கம் சீன-சார்பானது, தற்போதைய அரசாங்கம் அமெரிக்கா சார்பானது."

அப்பெண்மணி, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பதை விமர்சித்தார்: "அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் போரில் எமது மக்களை கொன்றபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தங்கள் நலன்களுக்காக யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கின்றன. கடந்த மாதம், அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகள், சம்பந்தனின் ஆதரவுடன் எமது கடற்பரப்பில் ஒரு கூட்டு பயிற்சியை நடத்தின. அவருக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் ஆர்வம் இல்லை, அவரது நோக்கம் அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் சேவை செய்வதே. தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை அரசியல் அனாதைகளாக்கியுள்ளது. இந்த கொள்கையை எதிர்க்கவே நாம் இங்கே வந்துள்ளோம் என நான் நினைக்கிறேன்."

ஆர்ப்பாட்டமானது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாஷிங்டன்-சார்பு மற்றும் கொழும்பு-சார்பு கொள்கைகள் பற்றி மட்டுமன்றி, தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பாளர்களது கொள்கைகள் மீதான எதிர்ப்பினாலும் குணாம்சப்படுத்தப்பட்டிருந்தது. சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களுக்கு இடையே பெருகிவரும் ஐக்கிய உணர்வை பிளவுபடுத்துவதற்கு வழி தேடும் முயற்சியாக, இராணுவம் கைப்பற்றிக்கொண்டுள்ள, முன்னர் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தில், பெரும்பான்மை சிங்கள இன உறுப்பினர்கள் பௌத்த கோயில்களை கட்டுவிப்பதை எதிர்ப்பது சம்பந்தமாக, பேரணியின் கவனத்தைக் குவிக்க தமிழ் மக்கள் பேரவை முயற்சித்தது.


ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியோர் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரசுரத்தை ஆர்வமாக படிக்கின்றனர்

ராஜமனோகரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை பற்றி கூறுகையில், "இரு கோஷ்டிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இரு தரப்பினரும் அரசாங்கத்துடனேயே இருக்கின்றனர். அப்படியெனில் ஏன் அவர்களால் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய முடியாது? ஏன் அவர்களால் காணாமல் போனவர்கள் பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்க முடியவில்லை? ஏனெனில், அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை," என்றார்.

"தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எந்த அரசியல் கட்சியும், மற்ற நாடுகளின் மீதான அமெரிக்காவின் பேரழிவு அரசியல் பற்றி பேசவில்லை, இலங்கையிலான அதன் தலையீடு, அதனது நலன்களுக்கானதாகும் மற்றும் மற்ற நாடுகளை ஒத்த அழிவு இங்கும் உருவாகக் கூடும். மக்கள் இந்த அபிவிருத்திகளைப் பற்றி அந்தளவு விழிப்புடன் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

பஸ் ஓட்டுனர் ஒருவர், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடன் தமிழ் தேசியவாதத்தின் வரலாற்று பாத்திரம் பற்றி பேசுகையில், பாராளுமன்ற அரசியலாலோ அல்லது புலிகளின் ஆயுதப் போராட்ட அரசியலாலோ இறுதியில் தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை நிறைவேற்ற எதுவும் செய்ய முடியவில்லை என்பதில் உடன்பட்டார். தமிழ் மக்கள் பேரவை பற்றி பேசும் போது, இந்த பேரணி எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையில் நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். நீங்கள் அவர்களைப் பற்றி கூறியது சரியானதே என்று தோன்றுகிறது. அவர்களும் எம்மை ஏமாற்றுகிறார்கள்," என்றார்.


சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடுகின்றனர்

பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் தலையீட்டை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். துண்டுப் பிரசுரத்தை தமிழ் மக்கள் பேரவை விநியோகிக்கவில்லை எனக் கூறி சோசலிச சமத்துவக் கட்சியின் பிரசுரத்தை வாங்க வேண்டாம் என அழைப்பு விட்னர். அதை கேட்ட தொழிலாளர்களும், இளைஞர்களும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களைச் சூழ்ந்துகொண்டு மேலும் பிரதிகளை மற்றவர்களுக்காகவும் வாங்கிக்கொண்டனர்.

பேரணியில் ஆற்றிய உரையில், தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர் விக்னேஸ்வரன், சீனாவுடன் போருக்கான ஒரு களமாக இலங்கையை மாற்ற முயலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தானும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பபும் வழங்கும் அடிமைத்தனமான ஆதரவை மூடிமறைத்தார். "எமது நல்லாட்சி அரசாங்கம்" தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என வஞ்சகத்தனமாக முறைப்பாடு செய்த அவர், தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு சம பொறுப்பை கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயான நெருக்கமான உறவுகள் குறித்து பேசுவதை முழுமையாக தவிர்த்துக்கொண்டார்.

விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு "சர்வதேச சமூகத்துக்கு" வேண்டுகோள் விடுத்த அதே சமயம், சிறிசேன நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா. பொது சபையின் அமர்வில் பங்கு கொண்டிருந்தார். சிறிசேன இலங்கையில் "சாதகமான மாற்றங்கள்" செய்தமைக்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இளவரசர் செய்ட் ராட் அல்-ஹுசைனாலும் பாராட்டப்பட்டார். ஒபாமாவை சந்தித்த பின்னர், "இலங்கை மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது, உதவி தேவைப்படும்போதெல்லாம் அமெரிக்கா எம்மோடு இருக்கும் என்று ஜனாதிபதி ஒபாமா கூறினார்." என சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.