Print Version|Feedback
Rising global tensions surface at G20 summit
அதிகரித்துவரும் உலகளாவிய பதட்டங்கள் ஜி20 உச்சிமாநாட்டில் மேலெழும்புகின்றன
By Nick Beams
5 September 2016
உலக பொருளாதாரத்தில் 85 சதவீதம் உள்ளடக்கிய ஜி20 நாடுகள் குழுவின் மாநாடு, 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பிந்தைய பிரதான சர்வதேச பொருளாதார மாநாடாக மாறியிருந்தது. அது குறிப்பாக உலக வளர்ச்சிக்கான பொருளாதார ஊக்குவிப்பு கொள்கைகளை ஒருங்கிணைப்பதையும் மற்றும் 1930 களின் பெருமந்த நிலைமைக்குப் பிந்தைய படுமோசமான பொருளாதார சுருக்கத்திற்கிடையே அந்நாடுகள் பாதுகாப்புவாதத்திற்குள் வீழ்வதைத் தடுப்பதையும் நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது.
மந்தநிலை முடிந்துவிட்டதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர், மிகக் குறைந்த வளர்ச்சி மட்டங்களில் ஒன்றை உலக பொருளாதாரம் பதிவு செய்துள்ள நிலையில் Hangzhou இல் இன்று நிறைவடைகின்ற ஜி20 நாட்டு தலைவர்களின் இரண்டு நாள் உச்சி மாநாடு அதை ஊக்குவிக்க எந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும் முன்வைக்க போவதில்லை என்பதும், பிரதான சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களால் பாதுகாப்புவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன என்பதும் எட்டாண்டுகளுக்குப் பிந்தைய உலக பொருளாதாரத்தின் நிலையை அடையாளப்படுத்துகின்றன.
சீன எஃகு உலக சந்தைகளில் பெருக்கெடுத்து பாய்வதால் வேலை வெட்டுக்கள் மற்றும் ஆலைமூடல்களுக்கு இட்டுச் செல்வதாகவும், அந்நாடு உற்பத்தியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் வலியுறுத்துகின்ற நிலையில், எஃகு துறையில் அதீத உபரி உற்பத்தித்திறன் என்று கூறப்படும் பிரச்சினை பிரதான மோதல் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.
மறுபுறம் 100 மற்றும் 150 மில்லியன் டன்களுக்கு இடையே வெட்டுவதற்கோ அல்லது 2020 க்குள் சுமார் 13 சதவீத உற்பத்தி திறனைக் குறைக்கவோ சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு உடன்படுகின்றது என்றாலும், உலகளாவிய தேவை பலவீனமாக இருப்பதே பிரதான பிரச்சினையாக உள்ளது.
சனியன்று உத்தியோகப்பூர்வ நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு இடையிலான ஒரு சந்திப்பில் எஃகுத்துறை பிரச்சினையே திட்டநிரலில் இருந்தது. அந்த விவாதத்தின் சீன தொகுப்புரை ஒன்று குறிப்பிடுகையில், “பலவீனமான உலக பொருளாதார மீட்சி மற்றும் மந்தமான சந்தை தேவைகளால் சில தொழில்துறையில் தூண்டிவிடப்பட்ட அதீத உபரி உற்பத்தித்திறன்,” உட்பட "கட்டமைப்பு பிரச்சினைகளை" சீனாவும் அமெரிக்காவும் கண்டு கொண்டிருப்பதாக குறிப்பிட்டது. “எஃகு மற்றும் ஏனைய தொழில்துறையில் அதீத உபரி உற்பத்தித்திறன் ஓர் உலகளாவிய பிரச்சினை, அதற்கு ஒரு உலகளாவிய விடையிறுப்பு தேவைப்படுகிறது,” என்பதையும் இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இதேவிதமான வார்த்தைகள் மின்பகுப்பு அலுமினிய தொழில்துறை சம்பந்தமாகவும் பிரயோகிக்கப்பட்டது.
சீனா உற்பத்தியைக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு சீனா அடிபணிந்தது என்ற வலியுறுத்தல் முன்பினும் அதிகமாக ஐரோப்பிய ஒன்றியதால் பலமாக வலியுறுத்தப்பட்டது. ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் கூறுகையில் ஜி20 “அவசரமாக ஒரு தீர்வைக் காண வேண்டும்" என்றும், பெய்ஜிங் அதன் தொழில்துறை மீது ஒரு சர்வதேச கண்காணிப்பு இயங்குமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். “இதுவொரு உலகளாவிய பிரச்சினை என்றாலும் ஒரு குறிப்பிட்ட சீன பரிமாணத்தில் இதை தீர்க்க வேண்டியுள்ளது,” என்றவர் தெரிவித்தார்.
இறுதி அறிக்கை வரைவது மீதான விவாதங்களில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானும் எஃகு உபரி உற்பத்தி குறித்த குறிப்பைக் கோரின, இதை செய்யவில்லையானால் உலக வர்த்தக அமைப்பிற்குள் (WTO) அதன் “சந்தை பொருளாதார அந்தஸ்தை" வெல்வதற்கான சீனாவின் முயற்சிகளை அது பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எச்சரித்தனர். இந்தாண்டின் இறுதியில் முடிவெடுக்கப்பட உள்ள இந்த அந்தஸ்தைப் பெற பெய்ஜிங் ஆர்வத்துடன் முயன்று வருகிறது ஏனென்றால் அதன் வர்த்தக கொள்கைகள் மீது ஏனைய நாடுகள் நடவடிக்கை எடுக்கும் ஆற்றலை அது மட்டுப்படுத்துகிறது.
இது காலனிகள் மீதான ஏகாதிபத்திய மேலாதிக்க நாட்களை விட வேறெதையும் நினைவூட்டவில்லை என்ற விதத்தில், பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பு (OECD) கண்காணிப்பு செய்யும் என்பதாக முதல் முன்மொழிவு இருந்தது. ஆனால் இந்தியாவோ அல்லது சீனாவோ OECD அங்கத்துவ நாடுகள் கிடையாதென்பதைக் குறிப்பிட்டு, இந்தியா பல எதிர்ப்புகளை எழுப்பியதும் "OECD ஒத்துழைப்புடன் அதீத எஃகு உபரி உற்பத்தித்திறன் குறித்து உலகளாவிய விவாத களம்" ஒன்று அமைப்பதற்கும் மற்றும் 2017 இல் அறிக்கை சமர்பிக்கவும் அழைப்புவிடுக்குமாறு அந்த பரிந்துரை மாற்றியமைக்கப்பட்டது.
உற்பத்தி செய்யப்படும் எல்லா எஃகும் உலகளவில் மிக அதிகளவில் அவசியப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களில் பயன்படுத்த முடியும் என்ற நிலைமைகளின் கீழ், உலகளாவிய இலாபகர அமைப்புமுறையில் ஆழமடைந்துவரும் குழப்பத்திற்கான ஒரு நிச்சயமான அறிகுறியாக "உபரி உற்பத்தித்திறன்" அந்த உச்சிமாநாட்டின் பொருளாதார நிகழ்ச்சிநிரலின் மையத்தில் இருந்தது.
அனைத்திற்கும் மேலாக பதட்டங்கள் எஃகு சம்பந்தமாகவும் அல்லது சீனாவிற்கும் ஏனைய பிரதான சக்திகளுக்கும் இடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டதோடு நின்றுவிடவில்லை.
ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக 13 பில்லியன் டாலர் வரி உத்தரவை அனுப்பும் ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்தின் மீது அமெரிக்க விமர்சனங்களுக்கு ஜூங்கர் விடையிறுக்கையில், அந்நிறுவனம் அமெரிக்காவில் இருப்பதால் தான் அது இலக்கில் வைக்கப்பட்டுள்ளது என்ற கருத்துக்களை நிராகரித்தார், முந்தைய வரி உத்தரவாணைகள் ஐரோப்பிய நிறுவனங்களைப் பாதித்திருப்பதாக அவர் தெரிவித்தார். “இது அமெரிக்காவிற்கு எதிரான முடிவல்ல,” என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு பங்காண்மை (TTIP) மீதான பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்படுவதற்கு மிகச் சிறிய வாய்ப்பே உள்ளது என்று ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இரண்டிடம் இருந்தும் அறிக்கைகள் வந்ததற்கு இடையே இந்த ஆப்பிள் நிறுவன வரி உத்தரவாணை வந்தது. கடந்த வாரம் ஒரு முக்கிய தொலைக்காட்சி பேட்டியில், ஜேர்மன் பொருளாதார அமைச்சரும் துணை சான்சிலருமான சிங்மர் காப்ரியேல் கூறுகையில் பேச்சுவார்த்தைகள் "நடைமுறையளவில் தோல்வி அடைந்துள்ளன ஏனென்றால் ஐரோப்பியர்களாகிய நாங்கள் இயல்பாகவே அமெரிக்க கோரிக்கைகளுக்கு அடிபணிய முடியாது,” என்றார்.
சீனா நீங்கலாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 12 நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கையான பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP), கோட்பாட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதினும் அமெரிக்க காங்கிரஸில் எதிர்ப்பை முகங்கொடுக்கிறது. ஒபாமா நிர்வாகம் அதன் சீன-விரோத ஆசிய முன்னிலையின் பொருளாதார பாகமாக தெளிவுபடுத்தியுள்ள TPP, நிறைவேற்றப்படுவதை எவ்விதத்திலும் பாதுகாக்க தவறினால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து சிங்கப்பூர் பிரதம மந்திரி Lee Hsien Loong கடந்த வாரம் எச்சரித்தார்.
ஜப்பானிய அரசாங்கம் TPP மீது அரசியல்ரீதியில் சிக்கலான விட்டுக்கொடுப்புகளைச் செய்திருப்பதாகவும், எவ்விதமான தோல்வியும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். வணிகப் போர் பிரச்சினையை நேரடியாக தொடர்புபடுத்தி அவர் கூறுகையில், “ஒரு நிலையில்லாத உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும், அமெரிக்க அணுஆயுத குடையைச் சார்ந்திருக்கும் ஜப்பானியர்கள், வர்த்தகத்தில் அமெரிக்கர்களைப் பின்தொடர முடியாது என்பதை எடுத்துரைக்க வேண்டியிருக்கும்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், பகிரங்கமாக கூறவில்லை என்றாலும், ஜப்பான் அது யாரை சார்ந்திருக்க வேண்டும் என்ற கணக்கீடுகளைச் செய்யத் தொடங்கும் என்பதே TPP தோல்வியின் அர்த்தமாகும் என்றார்.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக சனியன்று மேலதிக ஆக்ரோஷமான ஜப்பானிய வெளியுறவு கொள்கை மீதான அறிகுறிகளுக்கு ஆதாரம் இருந்தன. அதன் வளர்ச்சி-அடையாத தொலைதூர கிழக்கில் ரஷ்ய முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் Vladivostok பொருளாதார மாநாடு ஒன்றில், பிரதம மந்திரி ஷின்ஜோ அபே ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை நோக்கி இரு நாடுகளும் வேலை செய்ய வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய எல்லைகளால் இரண்டாம் உலக போர் முடிந்த பின்னர் மேலோங்கிய முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு நேரடியாக முறையிட்டார்.
ரஷ்ய தேவைகளுக்கு ஏற்ப ஆண்டு உச்சிமாநாடுகளை நடத்தவும் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கவும் அபே முன்வந்தார், இத்தகைய ஒரு முனைவு, பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டதைப் போல, “ஜி7 நாட்டு தலைவர்களுக்கு அப்பாற்பட்டு இருக்கும். அவர்களில் பெரும்பான்மையினர் 2014 உக்ரேன் நெருக்கடியை அடுத்து ரஷ்யா மீது தடையாணைகள் விதித்ததில் இருந்து திரு புட்டினை தவிர்த்தொதுக்கி உள்ளனர்,” என்று குறிப்பிட்டது.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 3 சதவீதத்திற்கு குறைவாக உள்ளதும், 2008 க்கு முந்தைய இரண்டு தசாப்தங்கள் கண்ட வளர்ச்சியில் பாதியை விட குறைவாக உள்ளதும், இந்தாண்டு உலக வர்த்தகம் வெறுமனே 2.8 சதவீதமே உயருமென WTO மதிப்பிடுகின்ற நிலையில், உலக வர்த்தகம் குறிப்பிடும் அளவிற்கு வளர்ச்சிக் குறைந்து வரும் நிலைமைகளில், பாதுகாப்புவாத பிரச்சினையே அக்கூட்டும் நெடுகிலும் பெரிதும் மேலுயர்ந்து இருந்தது.
உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து ஜி உரையாற்றுகையில், வர்த்தக தடைகளை உயர்த்தும் அழுத்தங்களைத் தடுக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அதிக கண்டுபிடிப்புகளுக்கும் மற்றும் "அபாயங்களைத் தவிர்க்க உலக பொருளாதார சக்தியை மேம்படுத்த" கூடுதலாக கூடி-ஒத்துழைக்கவும் பிரதான சக்திகளுக்கு அழைப்புவிடுத்தார்.
உச்சி மாநாட்டிற்கு முன்னதாக கனடா பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், பிரிட்டன் வெளியேறும் வடிவத்தில் ஆகட்டும் அல்லது "தேர்தல் பிரச்சாரங்களில் பாதுகாப்புவாத வாய்சவடால்களின்" வடிவத்தில் ஆகட்டும் "கட்டுக்கடங்காமல் பாய்ந்துவரும் பாதுகாப்புவாத" அலையை உலக தலைவர்கள் பின்னுக்குத் தள்ள வேண்டுமென கூறினார்.
“முன்னோக்கிய வளர்ச்சி நின்று போயிருக்கும் ஓர் உணர்வு உள்ளது,” என்று Hangzhou வியாபார விவாதக்குழுவில் தெரிவித்தார்.
2008 நிதி நிலைகுலைவிற்குப் பின்னர், எல்லா உலக தலைவர்களும் உலகளாவிய பொருளாதார அமைப்புகளும் 1930 களின் படிப்பினைகளைப் பெற வேண்டுமென வலியுறுத்தி, போருக்கான நிலைமைகளை உருவாக்குவதில் பெரும் பாத்திரம் வகித்த அந்த தசாப்தத்தின் அயல்நாட்டவரை பலிகொடுத்து தான் செழிக்கும் கொள்கைகளைக் கண்டித்துள்ளனர்.
ஆனாலும் இந்த அலை தொடர்கிறது. ஜூனில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் உலக வர்த்தக அமைப்பு குறிப்பிடுகையில், ஜி20 அங்கத்துவ நாடுகளால்—குறிப்பாக மிக முன்னேறிய நாடுகளால்—திணிக்கப்பட்ட வர்த்தக கட்டுப்பாடுகள் நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் [ஜூனில்] அவற்றின் அதிகபட்ச மாதாந்திர மட்டத்தை எட்டியிருப்பதாக அறிவித்தது.
அதேநேரத்தில் போர் அபாயங்கள் முன்பினும் அதிக வெளிப்படையாக அதிகரித்து வருகின்றன. ஜனாதிபதியாக அவரது இறுதி ஆசிய விஜயத்தின் போது, ஒமாபா சீனாவிற்கு எதிராக இதுவரையில் இல்லாத அவரது மிகவும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளில் ஒன்றை வெளியிட்டார். மிக முக்கியமாக, அது தென் சீன பிரச்சினை மீதான குறிப்புகளை மட்டும் உள்ளடக்கி இருக்கவில்லை, மாறாக பொருளாதாரம் வரை அது நீண்டிருந்தது.
சீனா சர்வதேச ஒழுங்கமைப்பிற்கு அதாவது அமெரிக்காவின் நலன்களுக்கு ஒத்துப் போக வேண்டுமென வலியுறுத்தி, அவர் தெரிவிக்கையில், “தென் சீனக் கடலின் சில விடயங்களில் அல்லது பொருளாதார கொள்கை என்று வருகையில் அவர்களின் சில நடவடிக்கைகளில் நாம் பார்த்துள்ளதைப் போல, சர்வதேச விதிகள் மற்றும் வழிமுறைகளை அவர்கள் மீறுவதாக நாம் காணுகின்ற இடங்களில், நாங்கள் உறுதியாக இருக்க வேண்டியுள்ளது. விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் அவர்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளோம்,” என்றார்.