Print Version|Feedback
Germany and France press ahead with a European military union
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஓர் ஐரோப்பிய இராணுவ ஒன்றியத்தை முன்னெடுக்க அழுத்தமளிக்கின்றன
By Johannes Stern
23 September 2016
ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயென் மற்றும் அவரது பிரெஞ்சு சமபலமான ஜோன்-ஈவ் லு திரியோன் ஆகியோரது கூட்டு இராணுவ கொள்கை ஆவணத்தை ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது, இது முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரடிஸ்லாவா உச்சி மாநாட்டிற்கு முன்னதாக ஐரோப்பிய பத்திரிகைகளில் மேற்கோளிடப்பட்டிருந்தது. பாரீஸூம் பேர்லினும், ஒரு சுதந்திரமான ஐரோப்பிய இராணுவம் மற்றும் வல்லரசு கொள்கையின் அபிவிருத்தியை முன்னோக்கி அழுத்தமளிப்பதற்காக, எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை பயன்படுத்தி வருகின்றன என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.
“GVSP [கூட்டு பாதுகாப்பு மற்றும் இராணுவ கொள்கை] ஐ புதுப்பித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பரந்த, நிஜமான மற்றும் நம்பகமான பாதுகாப்பை நோக்கி" என்ற அந்த ஆறு பக்க ஆவணத்தின் தலைப்பே மொத்தத்தையும் எடுத்துரைக்கிறது. ஆரம்பம் தொடங்கி, வொன் டெர் லெயென் மற்றும் லு திரியோன் "வெளிநாட்டுக்கான புதிய ஐரோப்பிய ஒன்றிய உலகளாவிய மூலோபாயம் மற்றும் பாதுகாப்பு கொள்கை (EUGS)” என்று குறிப்பிடுகின்றனர், இது ஜூலையில் பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் முதல் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி பெடிரிகா மொஹிரினி ஆல் சமர்பிக்கப்பட்டது.
ஜேர்மன் வெள்ளையறிக்கைக்கு இணையாக எழுதப்பட்டதும் மற்றும் பேர்லின் தொனியைத் தாங்கியிருப்பதுமான மொஹிரினி ஆவணத்தின் மையத்தில் இருப்பது என்னவென்றால், அமெரிக்காவில் இருந்து சுதந்திரமாக மற்றும் உலகளாவிய இராணுவ தலையீடுகளுக்கு தகைமை கொண்ட ஓர் இராணுவ ஒன்றியமாக ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்றுவதாகும். எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து அதன் அங்கத்தவர்களைப் பாதுகாக்க நிச்சயமாக நேட்டோ இருக்கிறதுதான் என்றாலும், ஐரோப்பா "அதுபோன்ற கூட்டு முயற்சிகளுக்கு தீர்க்கமாக பங்களிப்பு செய்யவும், அத்துடன் அவசியப்பட்டால் மற்றும் அவசியப்படும்போது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கவும்" ஐரோப்பா "சிறந்த ஆயுத பலத்துடன், பயிற்சி அளிக்கப்பட்டும் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டும் இருக்க வேண்டும்" என்று உலகளாவிய மூலோபாயம் குறித்த அந்த ஆவணத்தின் ஒரு பகுதி குறிப்பிடுகிறது.
வொன் டெர் லெயென் மற்றும் லு திரியோன், “குறிப்பாக பாதுகாப்பு மற்றும் இராணுவத்துறையில் நடவடிக்கைக்கான உறுதியான திட்டங்களில்" இந்த மூலோபாயத்தை "விரைவாக" நடைமுறைப்படுத்துவதற்கு இப்போது அழைப்புவிடுக்கிறார்கள். “GSVP இராணுவ நோக்கங்களை ஆதரிப்பது, இராணுவ தகைமையை அபிவிருத்தி செய்வது மற்றும் ஐரோப்பிய இராணுவ கூட்டு ஒத்துழைப்பு, அத்துடன் ஐரோப்பிய இராணுவத்துறைக்கு உறுதியான ஆதரவு" ஆகியவை அந்த நடவடிக்கை திட்டங்களில் உள்ளடங்கும். இந்த அடித்தளத்தில், ஒரு "மூலோபாய சுயாட்சி உறுதி செய்யப்படும்" மற்றும் ஒரு "பலமான போட்டித்தன்மை கொண்ட மற்றும் ஆக்கபூர்வமான" ஐரோப்பிய இராணுவத்துறை கட்டமைக்கப்படும்.
இதற்கு கூடுதலாக, அந்த ஜேர்மன்-பிரெஞ்சு ஆவணம் "இராணுவ மற்றும் படைத்துறைசாரா திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான ஒரு நிரந்தர ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்திற்கும்" மற்றும் "ஒரு நிரந்தர ஐரோப்பிய ஒன்றிய இராணுவ திட்டமிடும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அமைப்புக்கும்" அழைப்புவிடுக்கிறது. “GVSP இன் துல்லியத்தன்மையை" அதிகரிக்க, வொன் டெர் லெயெனும் மற்றும் லு திரியோனும் மேற்கொண்டு ஒரு "ஐரோப்பிய மருந்து கட்டளையகத்தை" கட்டமைக்க "ஐரோப்பிய ஒன்றிய 'போர்க்கள குழுக்களது' செயல்திறனைக் கூடுதலாக மேம்படுத்த,” மற்றும் "ஐரோப்பிய ஒன்றிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான இராணுவப் படைப்பிரிவின் துருப்பு செயல்பாட்டை மேம்படுத்த" முன்மொழிகின்றனர்.
இதற்கு கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியம் "(தரைவழி/வான்வழி/கடல்வழி) மூலோபாய வழித்தட தகைமைகளை அபிவிருத்தி செய்து" “ஐரோப்பிய தளவாட பரிவர்த்தனை மையத்துடன் இணைக்க வேண்டும்" என்று அது முன்மொழிந்துள்ளது. “கடல்சார் ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு மூலோபாயம் (EUMSS)” ஒன்றை அபிவிருத்தி செய்வது மற்றும் "தற்போதைய ஐரோப்பிய அதிகாரிகளது வலையத்தை மேம்படுத்தவும்", “நமது அதிகாரிகளுக்கு இடையே ஒரு நிஜமான ஐரோப்பிய உத்வேகத்தை ஊக்குவிக்கவும்" அதிகாரிகளுக்கு கூட்டு பயிற்சியளிப்பதும் கூடுதல் திட்டங்களில் உள்ளடங்கும்.
ஐரோப்பாவின் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடி, மற்றும் சர்வதேச அளவில் பிரதான சக்திகளுக்கு இடையே அதிகரித்துவரும் மோதல் ஆகிய நிலைமைகளின் கீழ், பேர்லினும் பாரீஸூம் அக்கண்டத்தின் இராணுவமயமாக்கலுக்கு துரிதமாக முன்னோக்கி அழுத்தமளித்து வருகின்றன. வொன் டெர் லெயெனும் லு திரியோனும் செப்டம்பர் 26 மற்றும் 27 இல் நடக்க உள்ள இராணுவ அமைச்சர்களின் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பின்போது "ஒரு கால அட்டவணையை" முன்வைக்க உத்தேசித்திருக்கின்றனர். அவர்களது நோக்கம், நவம்பர் 15 இல் ஐரோப்பிய ஒன்றிய இராணுவ அமைச்சர்களின் அடுத்த கூட்டத்தில் "ஒரு சாதகமான முடிவை" பெறுவதாகும். பின்னர் ஐரோப்பிய கவுன்சில் டிசம்பரில் "பாதுகாப்பு மற்றும் இராணுவத்துறையில் பரந்த கூடுதல் அரசியல் பின்பற்றத்தக்க வழிமுறைகளை ஏற்கும்.
வொன் டெர் லெயெனும், லு திரியோனும் ஜூலை தொடக்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய-நேட்டோ கூட்டறிக்கை ஒன்றை குறிப்பிட்டு, “ஒரு பலமான, மிகவும் ஆற்றல் வாய்ந்த ஐரோப்பிய இராணுவம் என்பது அதே நேரத்தில் நேட்டோவைப் பலப்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது,” என்று வலியுறுத்தினர். ஆனால் ஒரு சுதந்திரமான ஐரோப்பிய இராணுவ கட்டமைப்பைக் கட்டமைப்பது என்பது போருக்குப் பிந்தைய காலத்தில் அட்லாண்டிக் கடந்த கூட்டணிக்கு சவால் விடுக்கிறது என்பதுடன், இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலக போர்களுக்கு இட்டுச் சென்ற அதே மோதல்களை திரும்ப உருவாக்கும் என்பதில் அங்கே ஐயமில்லை.
வாஷிங்டன் சார்பாக, கடந்த காலத்தில் ஒரு கூட்டு ஐரோப்பிய இராணுவ கொள்கையின் அபிவிருத்தியை மீண்டும் மீண்டும் தடுத்து வந்த இலண்டன், சமீபத்திய ஜேர்மன்-பிரெஞ்சு முயற்சியை விமர்சித்தது.
பிரிட்டிஷ் இராணுவத்துறை செயலர் மைக்கேல் ஃபலோன் பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் உத்தியோகபூர்வ அங்கத்தவராக பிரிட்டிஷ் இருக்கும் வரையில், அது ஐரோப்பிய இராணுவத்திற்கான திட்டங்களுக்கு எதிராக வாக்களிக்கும். “அது நடக்கப் போவதில்லை,” என்று பிரடிஸ்லாவாவில் விவாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களைக் குறித்து ஃபலோன் தெரிவித்தார். “நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான அங்கத்தவர்களாக இருக்கிறோம், நேட்டோவிற்கு ஒரு போட்டியாளரை உருவாக்கும் எந்தவித முயற்சியையும் நாங்கள் எதிர்ப்போம்,” என்று தாராளவாத ஜனநாயகவாதிகளின் முன்னாள் தலைவர் அறிவித்தார். “உணர்வுபூர்வமான ஓர் ஐரோப்பியர் கூட, ஐரோப்பிய இராணுவத்தின் உருவாக்கத்தை நேட்டோவை ஆழமாக சேதப்படுத்தும், ஒரு நீண்டகால அச்சுறுத்தலாக கருதுவதாக" தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கான அதன் சொந்த பாரிய நடவடிக்கையைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய இராணுவமயமாக்கலுக்கு எதிர்வினையாற்றுகிறது. பைனான்சியல் டைம்ஸில் கிடைக்க செய்யப்பட்ட ஃபலோனுக்கான 10 பக்க தனிப்பட்ட விபரக் குறிப்பில், தளபதி சர் ரிச்சார்ட் பாரோன் பிரிட்டிஷ் ஆயுத படைகளின் போர் தயாரிப்புநிலை போதுமானளவிற்கு இல்லை என்று குறை கூறியதோடு, புதிய ஆயுத அமைப்புகளைக் கொள்முதல் செய்ய அழைப்புவிடுத்தார். ரஷ்யா உடனான ஒரு போருக்கு ஓரளவிற்கு கூட தயாரிப்பின்றி இருப்பதற்காக பாரோன் எச்சரித்தார். “சகல பிரதான ஆயுத படைகளுக்கு அடித்தளமான தகைமை என்பது வடிவமைப்பு அளவிலேயே உதிர்ந்து போயுள்ளது,” என்று குறைகூறிய அவர் தொடர்ந்து கூறுகையில், “நவீனகால மோதல், நாம் தாக்குப்பிடிக்க விரும்பும் அளவிற்கு சிறியதாகவும், சுருக்கமாகவும் இருக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக ஓர் உணர்வு உள்ளது, இது முற்றிலும் அர்த்தமற்றது,” என்றார்.
ஒரு பிரிட்டிஷ் சிந்தனைக்குழாமான Malcolm Chalmers of the Royal United Services Institute ஜூனில் குறிப்பிடுகையில், அது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டுமானால், பிரிட்டன் "ஐரோப்பாவில் நேட்டோ கூட்டு பாதுகாப்பிற்கான அதன் கடமைப்பாடுகளைப் பேணுவதில் கணிசமான அளவிற்கு, அனேகமாக அதிகமாகவே கூட, அழுத்தத்தின் கீழ் வரும்" என்று தெரிவித்தது. அதற்குப் பின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் நேட்டோ அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆண்டும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை இராணுவத்திற்கு ஒதுக்க வேண்டுமென்ற நேட்டோவின் இலக்கை எட்ட, அதன் வரவு-செலவு திட்டத்தை 2020/2021 க்குள் ஏறத்தாழ 5 பில்லியன் பவுண்டுகளுக்கு உயர்த்தி உள்ளது.
அக்கண்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய இராணுவமயமாக்கல் திட்டங்கள் அந்த சக்திகளுக்கு இடையிலான பிளவுகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. பிரடிஸ்லாவாவில், இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் உடன் சேர்ந்து இறுதி பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கெடுக்க மறுத்தார். அதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர் தான், பிரிட்டன் வெளியேறும் வெகுஜன வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஒரு ஐரோப்பிய இராணுவ ஒன்றியத்திற்கான பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்திற்கு புத்துயிரூட்ட இத்தாலிய வென்ரொரேனே தீவின் ஒரு விமானந்தாங்கிய போர்க்கப்பலில் மேர்க்கெல் மற்றும் ஹோலாண்டை ரென்சி சந்தித்திருந்தார்.
தற்போதைக்கு ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி (இப்போதும்) நெருக்கமாக கூடி இயங்கி வருகின்றன, ஆனால் அவை வெவ்வேறு தேசிய நிகழ்ச்சிநிரலைப் பின்தொடர்ந்து வருகின்றன. உலகெங்கிலும் அதன் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை வலியுறுத்த இராணுவரீதியாக உள்ளடங்கலாக பேர்லின் ஐரோப்பாவின் தலைமையை ஏற்க விரும்புகின்ற அதேவேளையில், பிரான்ஸூம் இத்தாலியும் சாத்தியமான அளவிற்கு மிகவும் மேலோங்கிய பாத்திரம் வகிக்க மற்றும் ஜேர்மன் மேலாதிக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகின்றன.
இத்தாலிய அரசியல் இதழான Eastwest இன் சமீபத்திய பதிப்பில் வெளியான ஒரு கட்டுரையில், இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர் ஜெரார்டோ பெலோசி எழுதுகையில், “[வென்ரொரேனே] இயக்குனரகத்தில் ரென்சி இருப்பது, மத்தியதரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவின் தெற்கே பக்கவாட்டு பகுதியில் முக்கிய பாத்திரம் வகிப்பது இத்தாலியின் மீது விழுகிறது என்பதையே அர்த்தப்படுத்துகிறது,” என்றார். “லிபியாவின் ஸ்திரப்பாடு" மற்றும் "இத்தாலியிலும் மற்றும் கிழக்கு மத்தியதரைக்கடலில் உள்ள ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளிலும், அப்பிராந்தியத்திலும் உள்ள நாடுகளுக்கு மிகப் பெரிய எரிசக்தி தொடர்பை உருவாக்குவது" என்பது "நோர்டு ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) க்கான இத்தாலிய விடையிறுப்பாகும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வடக்கில் ஜேர்மனியின் மேலாதிக்கத்தைச் சமநிலைப்படுத்துவதாக இருக்கும்.”