Print Version|Feedback
අතුරුදහන්වූවන් පිලිබඳ කාර්යාලය: රාජ්යයට සහ මිලිටරියට සුදුහුනු තැවරීමේ වංචනික යාන්ත්රනයක්
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்: அரசுக்கும் இராணுவத்துக்கும் வர்ணம் பூசும் ஒரு மோசடி பொறிமுறை
Pani Wijesiriwardena
12 September 2016
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) ஸ்தாபிக்கும் மசோதாவானது மக்களுக்கு, விசேடமாக ஆயிரக்கணக்கான தமிழ் ஒடுக்கப்ட்டவர்களுக்கு எதிராக கொழும்பு அரசாங்கமும் இராணுவமும் பொலிசும் செய்த குற்றங்களை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் இன்னொரு வஞ்சகமான மிகைப்படுத்தலாகும்.
பற்கள் இல்லாத சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படும் ஓ.எம்.பி.க்கு எந்தவொரு நீதிமன்ற அதிகாரமும் இல்லை. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு "ஒ.எம்.பி.யினால் கண்டு பிடிக்கப்படும் எந்தவொரு விடயமும் குற்றவியல் அல்லது சிவில் சட்ட மீறல் சம்பந்தமான குற்றத்திற்கு வழிவகுக்காது.” ஒ.எம்.பி. ஒரு சுயாதீனமான அமைப்பு அல்ல. அதன் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவரும் ஜனாதிபதியினாலேயே நியமிக்கப்படுகின்றனர். போரின் இறுதி சில நாட்களில் பாதுகாப்பு அமைச்சர் பதவி வகித்த, அதேபோல் போரை முன்னெடுத்த அரசாங்கங்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே இத்தகைய அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதிலேயே இதன் மோசடித்தனம் அம்பலமாகின்றது.
கடந்த அக்டோபர் மாதம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் நிறைவேற்றப்பட்ட, அமெரிக்க-இலங்கை கூட்டு பிரேரணையில், இலங்கை தரப்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியினை "பூர்த்தி" செய்யும் அர்த்தத்திலேயே புதிய சட்டமானது கொண்டுவரப்பட்டது. பிரேரணையின் படி இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறும் முதல் அமர்வுக்கு முன்னதாக, இலங்கை அரசாங்கத்தினால் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு "முறையான பொறிமுறை" நிறுவப்பட வேண்டும்.
26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போதும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) 1971 எழுச்சியின் போதும் மற்றும் 1988-90 காலப்பகுதியில் முன்னெடுத்த பாசிச கிளர்ச்சியின் போதும் 65,000 பேர் காணாமல் போயுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. இதில் மிகப் பெரும்பான்மையானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களாவர். 2009ம் ஆண்டில் உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தில், இராணுவப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை அமைத்த நிபுணர் குழு பிரகடனம் செய்துள்ளது. போரின் முடிவில், தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை கண்டுபிடித்து தருமாறுகோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் தீவுக்குள்ளும் வெளிநாடுகளிலும் இடைவிடா பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான தமிழ் தேசிவாத கட்சிகள், முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி இடது கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் என்று அழைக்கப்படுவனவும் இந்த பிரச்சாரங்கள் பலவற்றில் மேலே அமர்ந்துகொண்டு அந்த வெகுஜன எதிர்ப்பை திசை திருப்புவதற்கு முயற்சி செய்வதிலும், தொடர்ச்சியாக மக்கள் இதில் பங்குபற்றுவதிலும் இந்த குற்றங்கள் சம்பந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் உக்கிரமடைந்து வரும் பகைமையே வெளிப்பட்டுள்ளது.
போரின் இறுதி காலத்திலும் அதன் பின்னரும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், சீனாவுடன் வளர்த்துக்கொண்ட நெருங்கிய உறவுகள் தமது மூலோபாய நலன்களுக்கு எதிராக அமைவதைக் கண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், இராஜபக்ஷவை சீனாவிடம் இருந்து அந்நியப்படுத்தும் நெம்புகோலாக, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்கள், காணாமல் ஆக்குதல் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், வாஷிங்டன் தலைமையில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணையை கோரி முன்மொழியப்பட்ட பிரேரணையின் பின்னணியில் இந்த நலன்களே இருந்தன. மாறாக, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய எந்த கவலையும் அங்கிருக்கவில்லை.
இறுதியாக, வாஷிங்டன் தனது சக்தியைப் பயன்படுத்தி செய்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக, அமெரிக்க சார்பு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அப்போதிருந்து, வாஷிங்டனின் மூலோபாய திட்டங்களுக்குள் இலங்கை மேலும் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. தமது தேவைகளுக்கு ஏற்ப கொழும்பு அரசாங்கம் செயற்படுகின்ற நிலைமையில், இலங்கை மீதான போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக காத்திரத்தை குறைத்த வாஷிங்டன், ஆரம்ப பிரேரணையில் இருந்த "சர்வதேச விசாரணை" என்பதை இலங்கைக்குள் இடம்பெறும் "தேசிய மட்டத்திலான விசாரணைக்கு” கீழறக்கியது.
முதலாளித்துவ ஆட்சியின் கீழ், ஏகாதிபத்திய அணுசரனையில், சர்வதேச ரீதியிலோ அல்லது உள்நாட்டிலோ யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான விசாரணைகளை நடத்துவதில் தமிழர்களது அல்லது மனித உரிமை மீறப்பட்ட எந்தவொரு மக்கள் குழுவினதும் ஜனநாயக உரிமை உறுதிப்படுத்தப்படப் போவதில்லை. உலகம் முழுவதும் போர்க் குற்றங்களுக்கு பொறுப்பாளியான அமெரிக்கா, தனது மூலோபாய நலன்களின் பேரிலேயே இலங்கையில் கபடத்தனம் மற்றும் பாசாங்குத்தனத்துடன் தலையீடு செய்தது. அமெரிக்கா, இலங்கையில் போரை ஆதரித்ததோடு இராஜபக்ஷ ஆட்சியின் கடந்த அரசாங்கங்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் ஆதரித்தது.
வடக்கு-கிழக்கு ஒடுக்கப்பட்ட தமிழ் மக்ள் மீது கொடூரமான இராணுவ ஆட்சியை அப்படியே பராமரிக்கும், வடக்கு மற்றும் தெற்கில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதான ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு பொலிஸ்-அரசை நோக்கி வேகமாக நகரும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை, ஜனநாயகத்தின் சாம்பியன்களாக சித்தரிப்பதிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கபடத்தனம் நிர்வாணமாக காட்சியளிக்கின்றது.
ஒ.எம்.பி. நிறைவேற்றப்பட்ட உடன், தெற்கு மற்றும் மத்திய ஆசியவுக்கான அமெரிக்க ராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் “இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை முன்கொண்டு செல்ல பெரும் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது" என்றார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் சம்ந்தமான அமெரிக்க இராஜாங்கச் செயலர் டொம் மில்னொவாஸ்கியின் படி, இது "நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு வரலாற்றுப் படி" ஆகும். இலங்கைக்கான அமெரிகத் தூதர் கெசாப், "ஓ.எம்.பி., இலங்கை அனைவரும் அர்த்தமுள்ள விதத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்கான பயணத்தில் வரலாற்று மைல்கல் ஆகும்," என்றார். இந்த கருத்துக்கள், வாஷிங்டனின் ஆதரவு, அரசாங்கத்திற்கு உள்ளது என்பது பற்றிய உத்தரவாதம் ஆகும்.
கொழும்பு ஆளும் வர்க்கத்துடன் செய்துகொள்ளும் ஏதாவதொரு சமரசத்தின் மூலம், தமது தேவைகள் மற்றும் சலுகைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏங்கிக்கொண்டிருக்கும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், "இதன் மூலம் காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என மோசடியாக் கூறுவதன் மூலம், அரசாங்கத்தின் வஞ்சக நடவடிக்கைக்கு வெள்ளைப் பூசினார்.
எவ்வாறெனினும், தமது கவலைகளை விசாரிக்கவென கொழும்பு ஆட்சியாளர்கள் நிறுவிய நல்லிணக்க ஆணைக்குழு போன்றவற்றின் மோசடி மற்றும் கபடத்தனத்தை கண்டுள்ள ஒடுக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில், இந்த புதிய தந்திரோபாயம் பற்றிய எந்தவொரு நம்பிக்கையும் கிடையாது என்று நன்கு அறிந்த சம்பந்தன், இந்த சட்டத்தை வகுக்கும்போது காணாமல்போனவர்களின் உறவினர்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை என்று கவலை தெறிவித்தார்.
மிகப்பெரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம், மக்கள் மத்தியில் வேகமாக மதிப்பிழந்து போயுள்ள நிலையில், இனவாத பிரச்சாரத்தின் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முண்டியடிக்கும் இராஜபக்ஷ மற்றும் அவரைச் சுற்றியுள்ள ஒன்றிணைந்த எதிர்க் கட்சி, புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அது அமெரிக்கா மற்றும் இந்தியாவை மகிழ்விக்கும் நோக்கத்துடன் "இராணுவ வீரர்களை" கூண்டில் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று கபடத்தனமாக கூறுகின்றது. போர் வீரர்கள் என அவர் யுத்தத்தை முன்னெடுத்த இராணுவத்தை அவர் வணங்குகிறார்.
உண்மையான மக்களின் பங்களிப்பின் மூலம் அல்லது, பாராளுமன்றத்தில் விவாதத்தின் மூலமோ அல்லாமல், ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இந்த சட்டத்தின் உண்மையான தன்மை, "கூட்டு எதிர்க் கட்சிக்கு" பதில் அளித்து வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் கூறிய கருத்தின் மூலம் தெளிவாகின்றது. இராணுவத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆராயப்பட்டு "இராணுவ வீரர்களை" அந்தக் குற்றங்களில் இருந்து விடுவித்து “பாதுகாத்துக்கொள்ள” வேண்டியதும் இராணுவத்தின் "சர்வதேச புகழைப் பேண வேண்டியதுமே" இந்த சட்டத்தின் நோக்கம் என்று சமரவீர கூறினார்.
உண்மையிலேயே இந்த காணாமல் ஆக்குதல்கள் அனைத்தும், பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட கொடூரமான இராணுவ முறைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்பது யாவரும் அறிந்த விடயமாகும். அத்தகைய சம்பவங்கள் சம்பந்தமாக ஆதாரங்களை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்கள், பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் இழுபடுவதிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கமும் அதை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக சேவையாற்றிய ஜே.வி.பி., “பிரஜைகள் சக்தி” போன்ற போலி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நவ சம சமாஜக் கட்சி போன்ற போலி இடது கட்சிகளும், "ஜனநாயகத்தின் பெரும் வெற்றி" என ஓ.எம்.பி.யை மிகைப்படுத்துவதற்கு முன்வந்துள்ளன. ஜே.வி.பி., இந்த மோசடி நடவடிக்கைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியும் அது பற்றி மக்கள் நம்பிகையை உருவாக்கும் நோக்கத்திலும், 1971 இலும் 1988-89 இலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் தகவல்களையும் அதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகின்றது. அவர்கள் அரச இராணுவத்தைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் அணிசேர்ந்துள்ளனர்.
ஏகாதிபத்தியவாதிகள் முதல் அவர்களின் இலங்கை பிரதிநிதிகளுமாக அனைவரும், ஓ.எம்.பி.யை ஜனநாயகத்தின் ஒரு வெற்றி என கூறுவது வஞ்சத்தனமான உழறல்களாகும். பிறப்பில் இருந்தே இனவாதத்தை தனது ஆட்சியின் மிக அடிப்படையான கருவியாகக் கொண்டுள்ள ஆளும் வர்க்கம், தன்னால் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த இனவாத யுத்தத்தின் அட்டூழியங்களை வெளிப்படுத்தும் ஒரு பொறிமுறையை எப்போதும் செயல்படுத்தப் போவதில்லை. விசேடமாக தான் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் சுமையை தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவரும், மற்றும் அதற்கு எதிராக எழும் தொழிலாளர்களினதும் ஒடுக்கப்பட்டவர்களதும் போராட்டங்களை இரத்தத்தில் நசுக்குவதற்காக மேலும் மேலும் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மீது தங்கியிருக்கும் ஒரு அசாங்கம், இராணுவத்தின் கொடுமையை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் உறுப்பினர்களை மகிழ்விக்கும் முறையில் தங்கியிருப்பதையே செய்யும்.
ஓ.எம்.பி. என்பது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்கும் போலி முகத்துடன் கொழும்பு அரசினதும் இராணுவத்தினதும் குற்றங்களை பூசி மெழுகுவதற்காக உருவாக்கப்பட்ட பொறியைத் தவிர வேறு ஒன்றும் அல்ல.