Print Version|Feedback
62 dead, 100 wounded as US bombs Syrian army near Deir ez-Zor
டெர் எஸ்-ஜொர் அருகில் சிரிய இராணுவம் மீது அமெரிக்கா குண்டுவீசியதில் 62 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்
By Alex Lantier
19 September 2016
டெர் எஸ்-ஜொர் அருகில் அல்-தார்டா மலை மீதுள்ள சிரிய அரசின் இராணுவ தளம் மீது அமெரிக்க போர்விமானங்கள் குண்டுவீசியதில், சனியன்று, குறைந்தபட்சம் 62 சிரிய துருப்புகள் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர். அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் அந்த குண்டுவீச்சுக்கு பின்னர் உடனடியாக, அத்தளத்தை இஸ்லாமிய அரசு (IS) போராளிகள் தாக்கி கைப்பற்ற அது அனுமதித்துள்ள போதினும், அத்தாக்குதலுக்கு இதுவரையில் அது வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த படுகொலை ஒரு அப்பட்டமான போர் நடவடிக்கையாகும், இது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியை சிரியாவிற்கும் மற்றும் ரஷ்யா உட்பட அதன் கூட்டாளிகளுக்கும் எதிராக நிறுத்தும் முழு அளவிலான ஒரு போராக சிரியா மோதலை தீவிரமடைய செய்ய அச்சுறுத்துகிறது. அமெரிக்க இராணுவ உயரதிகாரிகளால் கடந்த வாரம் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டதான, சிரியாவில் அமெரிக்க-ரஷ்ய போர்நிறுத்தத்தின் ஆரம்ப நாட்களில் வந்துள்ள இத்தாக்குதல், அமெரிக்க அரசாங்கத்தினுள் உள்ள அப்போர்நிறுத்தத்தை எதிர்க்கும் சக்திகளால் வேண்டுமென்ற நடத்தப்பட்டது என்பதேயே ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுகின்றன.
அமெரிக்க இராணுவம் அப்படுகொலைக்கு உத்தியோகபூர்வமாக வருத்தம் தெரிவிக்க மறுப்பது அதிர்ச்சியூட்டும் அளவிற்கு பொறுப்பற்ற தன்மையாகும். அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய எதிர்ப்பு போராளிகள் குழுக்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் சிரிய துருப்புகள், அந்நிலத்தில் ஈரான், சீனா மற்றும் ரஷ்ய படைப்பிரிவுகளால் ஆதரிக்கப்பட்டு வருகின்றது. இந்நாடுகள் சிரியாவில் பலமான படைகளை மட்டுமல்ல, மாறாக சீனா மற்றும் ரஷ்யாவை பொறுத்த வரையில் அவை அணு ஆயுதங்களையும் கொண்டுள்ளன என்ற நிலையில், இந்நாடுகள் சிரிய படைகளுக்கு பக்கவாட்டில் செயல்பட்டு வந்தால் அவற்றின் சொந்த துருப்புகளும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் இலக்குகளாக ஆகிவிடுமென பெண்டகன் இந்நாடுகளுக்கு சமிக்ஞை செய்துள்ளது.
அந்த குண்டுவீச்சை இஸ்லாமிய அரசுக்கான அமெரிக்க உதவியாக கூறி சிரிய மற்றும் ரஷ்ய அதிகாரிகள் கண்டித்துள்ளன, அதேவேளையில் வாஷிங்டனிடம் இருந்து விளக்கம் கோருவதற்கு ஐ.நா பாதுகாப்பு அவையின் ஒரு அவசர கூட்டத்திற்கு ரஷ்ய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். சிரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிக்கையில், “செப்டம்பர் 17, 2016 அன்று மாலை 5 மணியளவில், ஐந்து அமெரிக்க விமானங்கள் டெர் எஸ்-ஜொர் விமானத்தளத்திற்கு அருகில் அல்-தார்டா மலையில் உள்ள சிரிய இராணுவ நிலைகள் மீது ஒரு கடுமையான விமானத் தாக்குதலை நடத்தின. அத்தாக்குதல் ஒரு மணி நேரம் நீடித்தது,” என்று அறிவித்தது.
இஸ்லாமிய அரசுடன் வாஷிங்டன் உடந்தையாய் இருப்பதாக அது குற்றஞ்சாட்டியது: “அதே தளத்தின் மீது இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, அதை கட்டுப்பாட்டில் எடுத்தமை… இந்த பயங்கரவாத அமைப்பிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுகிறது,” என்றது குற்றஞ்சாட்டியது.
அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் உள்முரண்பாட்டு கன்னைகள், இக்குண்டுவீச்சு குறித்து வழங்கிய முரண்பாடான விபரங்களில் இருந்து என்ன வெளிப்படுகிறது என்றால், இரத்தம் உறைய செய்யும் வகையில் படுகொலை திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்பது தான்.
"உள்நோக்கமின்றி ஏற்பட்ட சிரிய படைகளின் அந்த உயிரிழப்புக்காக" ஒபாமா நிர்வாகம் மாஸ்கோ மூலமாக டமாஸ்கஸிற்கு வருத்தங்களைத் தெரிவித்ததாக பெயர் வெளியிடாத மூத்த அமெரிக்க அதிகாரிகள் பத்திரிகைக்கு தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும் மத்திய கிழக்கில் பெண்டகனின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom), சிரிய இராணுவ இழப்புகளுக்கு எந்தவித அனுதாபமும் தெரிவிக்காமல் கடமைக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“இலக்கில் வைக்கப்பட்ட சிப்பாய்களும் வாகனங்களும் சிரிய இராணுவத்தின் பாகமாக இருக்கலாமென கூட்டுப்படை அதிகாரிகளுக்கு ரஷ்ய அதிகாரிகள் தகவல் அளித்ததும், கூட்டுப்படை விமானத் தாக்குதலை உடனடியாக நிறுத்திவிட்டதாக,” அது அறிவித்துடன், சாந்தமாக தொடர்ந்து குறிப்பிடுகையில், “பல்வேறு இராணுவப் படைகள் மற்றும் போராளிகள் குழுக்களை மிக அருகருகே கொண்ட ஒரு சிக்கலான நிலையில் சிரியா இருப்பதால், கூட்டுப்படைகள் சிரியாவின் இராணுவப் பிரிவு என்று தெரிந்தே உள்நோக்கத்துடன் தாக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தாக்குதலையும் மற்றும் அதிலிருந்து ஏதேனும் படிப்பினைகளைப் பெற முடியுமா என்று காண அதை சுற்றியுள்ள சூழல்களையும் கூட்டுப்படை மீளாய்வு செய்யும்,” என்று குறிப்பிட்டது.
யார் மீது குண்டுவீசுகிறார்கள் என்றே தெரியாமல் அமெரிக்க சிப்பாய்கள் குண்டுவீசிவிட்டதாக கூறும் இத்தகைய வாதங்கள் மேலோட்டமாக கூட நம்புவதற்குரியதாக இல்லை, அவை ஊடகங்களின் ஏனைய விபரங்களுடன் முற்றிலுமாக முரண்படுகின்றன.
சிரிய இராணுவ படைப்பிரிவுகளை அமெரிக்க சிப்பாய்கள் தாக்குவதற்கு முன்னதாக "பல நாட்களாக" அவற்றை அமெரிக்க உளவுப்படை விமானங்கள் கண்காணித்து வந்ததாக பெயர் வெளியிட விரும்பாத Centcom அதிகாரி ஒருவர் நியூ யோர்க் டைம்ஸ் க்கு தெரிவித்தார். “சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அத்தாக்குதலின் போது, போர்விமானங்கள் அந்த திறந்தவெளி பாலைவனத்தில் வாகனங்களை அழித்தன மற்றும் டஜன் கணக்கானவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இதற்கு பின்னர் சிறிது நேரத்தில், கட்டாரில் இருந்து அமெரிக்க இராணுவ கட்டளையகத்திற்கு ஓர் அவசர அழைப்பு வந்தது… அந்த அழைப்பு ஒரு ரஷ்ய அதிகாரியிடம் இருந்து வந்தது, அவர் அமெரிக்க விமானங்கள் சிரிய துருப்புகள் மீது குண்டுவீசுவதாகவும், அத்தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும் தெரிவித்தார்.”
இருந்தபோதினும் அமெரிக்க போர்விமானங்கள் அத்தாக்குதலை நிறுத்துவதற்கு முன்னதாக பல நிமிடங்கள் சிரிய இராணுவத் தளங்கள் மீது தொடர்ந்து குண்டுவீசியதாக அந்த Centcom அதிகாரி தெரிவித்தார்.
சமாதானம் ஒருபுறம் இருக்கட்டும், வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் ஒரு போர்நிறுத்தத்தை மற்றும் தீவிரத்தை, குறைக்க விரும்பவில்லை என்பதையே டெர் எஸ்-ஜொர் தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் சிரியாவில் 2011 இல் இருந்து நேட்டோ அதிகாரங்கள் கையாண்டு வந்துள்ள அதே மூலோபாயத்தை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்: அதாவது சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிரான இஸ்லாமிய அரசு அல்லது அல் கொய்தா இணைப்பு கொண்ட அல் நுஸ்ரா முன்னணி போன்ற இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஆதரிப்பதன் மூலமாக ஆட்சி மாற்றத்தைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இஸ்லாமிய அரசு மீண்டும் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ள போதினும் கூட, அந்த போரை தீவிரப்படுத்த அமெரிக்கா மற்றும் இஸ்லாமிய அரசு படைகளுக்கு இடையே இன்னமும் ஒரு தீர்க்கமான கூட்டுறவு இருப்பதையே இந்த சமீபத்திய தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது.
சனிக்கிழமை தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க சிந்தனை குழாம் நடவடிக்கையாளர்கள் அரசியல் சேதத்தைக் கட்டுப்படுத்த ஊடகங்களில் முன்னுக்கு வந்தனர். வில்சன் மையத்தின் ஆரோன் டேவிட் மில்லர் டைம்ஸ் இற்கு கூறுகையில், இந்த விமானத் தாக்குதல்கள் “வாஷிங்டன் இஸ்லாமிய அரசுடன் அணி சேர்ந்துள்ளதாக சதி கோட்பாடுகளை தூண்டிவிடக்" கூடும் மற்றும் "ஐநா பொது அவை கூடுவதற்கு முன்னதாக அமெரிக்காவை திணறடிக்க" ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு உதவக்கூடும் என்று எச்சரித்தார்.
இது எரிச்சலூட்டும் பிரச்சாரமாகும். சிரிய எதிர்ப்பு போராளிகள் குழுக்களை அவர்கள் ஆதரித்த நிலையில், அவர்களது பயங்கரவாத குணாம்சம் குறித்து உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கும் இதழாளர்களுக்கும் நன்கு தெரியும். சிரிய நகரங்களை ட்ரக்குகளில் குண்டுகள் வைத்து தகர்த்த தாவ்ஹிட் சிங்கங்கள் (Lions of Tawhid) என்ற போராளிகள் குழுக்களுக்கு, டைம்ஸ் இதழாளர் C. J. Chivers 2012 இல் நட்பானரீதியில் ஒரு காணொளியை வழங்கினார். சிரியா எங்கிலும் அட்டூழியங்களை நடத்தியவையான, இஸ்லாமிய அரசு உட்பட டஜன் கணக்கான அமெரிக்க ஆதரவிலான எதிர்ப்பு போராளிகள் குழுக்களில் இக்குழுவும் ஒன்றாகும், ஐரோப்பாவில் இது தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பின்னர் கடந்த ஆண்டுதான் சிரியாவில் இதன் மீது தாக்குதல் நடத்த இலக்கில் வைக்கப்பட்டது.
அமெரிக்க அரசாங்கத்தின் செல்வாக்கான கன்னைகள் போரை விரும்புகின்றன, வாஷிங்டனுடன் தற்காலிக சமாதானத்திற்கு பேரம்பேசுவது மற்றும் சிரியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு இடமளித்து கொண்டே அசாத்தை ஆதரிப்பது என்ற மாஸ்கோவின் மூலோபாயம் முற்றிலும் திவாலாகி உள்ளது. குறிப்பாக அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்புணர்வுக்கு அழைப்புவிடுக்க விரோதமாகவும், பயந்தும் உள்ள கிரெம்ளின், அமெரிக்க போர் முனைவை அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் மூலமாக கையாள விரும்புகிறது. இந்த மூலோபாயம் தோல்வி அடைந்துள்ளது, போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க இராணுவ எதிர்ப்புக்கு முன்னால் இதை ரஷ்ய அதிகாரிகளே ஏறத்தாழ முழுமையாக ஒப்புக் கொண்டனர்.
மாஸ்கோ அழைப்புவிடுத்த ஐ.நா பாதுகாப்பு அவையின் அவசர கூட்டத்திற்குப் பின்னர், ஐ.நா வுக்கான ரஷ்ய தூதர் விடாலி சர்கின் (Vitaly Churkin), “பெரிதும் சந்தேகத்திற்குரிய" நேரத்தில் இத்தாக்குதல் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க தாக்குதலானது அமெரிக்க-ரஷ்ய கூட்டு மத்தியஸ்த போர்நிறுத்தத்தை தடம் புரள செய்ய ஒரு திட்டமிட்ட முயற்சியாகும் என்று குற்றஞ்சாட்டினார்.
“வெறும் இரண்டு நாட்களில் ரஷ்ய-அமெரிக்க ஏற்பாடுகள் முழு வீச்சில் வரவிருப்பதற்கு முன்னர் இது நடந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் உடையது மற்றும் தற்செயலானதல்ல,” என்றவர் தெரிவித்தார். “கூட்டு நடவடிக்கை குழுவின் பணி செப்டம்பர் 19 இல் தொடங்குவதாக இருந்தது. ஆகவே டெர் எஸ்-ஜொர் இல் அல்லது வேறெந்த இடத்திலும் அல் நுஸ்ரா அல்லது ISIS மீது அமெரிக்கா நடைமுறையளவில் ஒரு தாக்குதல் நடத்த விரும்பி இருந்தால், அவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் கூட பொறுத்திருக்கலாம், எங்கள் இராணுவத்துடன் ஒருங்கிணைந்து செய்திருக்கலாம், சரியான ஆட்கள் மீதுதான் தாக்குதல் நடத்துகிறோம் என்பதை உறுதிப்படுத்தி செய்திருக்கலாம்… அதற்கு பதிலாக அவர்கள் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையை நடத்தி இருக்கிறார்கள்,” என்றார்.
“கூட்டு நடவடிக்கை குழுவின் செயல்பாட்டைத் தடம் புரளச் செய்ய மற்றும் உண்மையில் அது இயக்கத்திற்கு வருவதைத் தடுக்க இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தான் ஒருவர் முடிவுக்கு வர வேண்டியுள்ளது,” என்பதையும் சர்கின் சேர்த்துக் கொண்டார்.
இதே மதிப்பீட்டை, இஸ்ரேல் உளவுத்துறையுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள DEBKA File பதிப்பும் எதிரொலித்தது. “அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரொவ் ஆகியோரால் ஜெனீவாவில் செப்டம்பர் 12 அன்று தீர்மானம் செய்யப்பட்டவாறு சிரியாவில் இராணுவக் கூட்டுறவு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் பெண்டகனும் அமெரிக்க இராணுவமும் அவர்களின் முப்படைகளின் தலைமை தளபதி பராக் ஒபாமாவின் உத்தரவுகளைப் பின்தொடரவில்லை,” என்று அது குறிப்பிட்டது.
“நிஜமான போர்க்கள நிலைமைகளில் அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சி பெற்றுள்ள போரிடுவதற்கான அணுகுமுறைகள் மற்றும் உத்திகளை ஆராய" இந்த போர்நிறுத்த விதிமுறைகள் ரஷ்யாவிற்கு நிறைய "சந்தர்ப்பத்தை" வழங்குகிறது என்ற உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கவலைகளை அது மேற்கோளிட்டது. இந்த காரணத்திற்காக, கெர்ரி அதற்கு உடன்பட்டாலும் பெண்டகன் அதை எதிர்க்கிறது: “பாதுகாப்புத்துறை செயலர் கார்ட்டர், காங்கிரஸ் நிறைவேற்றிய ஒரு சட்டத்திற்கு எதிராக அவர் செயல்பட முடியாது என்பதை பேணி வருகிறார். உக்ரேனின் கிரிமியா பகுதியை மாஸ்கோ இணைத்துக் கொண்டதன் விளைவாக ரஷ்யாவுடன் இராணுவத்திற்கும்-இராணுவத்திற்கும் இடையிலான சகல உறவுகளையும் தடுக்கும் சட்டத்தை அவர் மேற்கோளிட்டுக் காட்டுவதாக வாஷிங்டனின் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.”