Print Version|Feedback
Socialism vs. Capitalism and War
The SEP and IYSSE schedule November 5 antiwar conference in Detroit
முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு டெட்ரோய்டில் நவம்பர் 5 இல் போர் எதிர்ப்பு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது
The Socialist Equality Party
15 September 2016
நவம்பர் 5 இல் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு "முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" என்ற தலைப்பில் மிச்சிகன் டெட்ரோய்டில் வாய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. அணுஆயுத மூன்றாம் உலக போரைத் தீவிரப்படுத்த அச்சுறுத்துகின்ற அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் போர் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் சாத்தியமான அளவிற்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும், போர் தயாரிப்புகளின் அளவு மக்களின் நனவு மட்டத்தை விட மிகவும் அளவு கடந்து இருக்கிறது என்பதும் சர்வதேச தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மிகப்பெரிய அபாயமாகும். இது முதலாளித்துவ உயரடுக்கின் சதிகளுக்கே அனுகூலமாகிறது.
வெறும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், இராணுவ வெற்றிக்காக ஒவ்வொன்றையும் அபாயத்திற்குட்படுத்தி, மந்திரிமார்களும், முடியாட்சியாளர்கள் மற்றும் வணிக தலைவர்களும் சூழ்ச்சிகரமாக முடிவெடுத்ததன் விளைவாக உலக மக்கள் முதலாம் உலக போருக்குள் தள்ளப்பட்டனர். 1918 இல் முதலாம் உலக போர் முடிந்து வெறுமனே இருபத்தியொரு ஆண்டுகளில் பாசிசம் மற்றும் யூத இனப்படுகொலை பயங்கரங்களுடன் சேர்ந்து இரண்டாம் உலக போர் வெடித்தது. இந்த இரண்டு உலகப் பெரும் மோதல்களும், ஒருமித்து 100 மில்லியன் மக்களின் உயிரைப் பறித்ததுடன், பூமியின் பரந்த பெரும்பகுதிகளை நிர்மூலமாக்கின.
1939 கோடைக்குப் பின்னர் எந்தவொரு கட்டத்திலும் இருந்ததை விட இன்று உலக போர் அபாயம் மிக அதிகளவில் உள்ளது. வாஷிங்டன், பேர்லின், இலண்டன் மற்றும் ஏனைய உலக தலைநகரங்களில் அரசியல்வாதிகளும் தளபதிகளும் அணுஆயுதங்களைக் கொண்டு போர் நடத்துவது உட்பட "சிந்திக்க முடியாததை" எல்லாம் செயலூக்கத்துடன் பரிசீலித்து வருகிறார்கள்.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பின்னர், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்கா தொடங்கிய முடிவில்லா மோதல்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய போட்டியாளர்களுடன், குறிப்பாக அணுஆயுதங்கள் ஏந்திய ரஷ்யா மற்றும் சீனாவுடன், ஓர் உலகளாவிய மோதலாக மாற்றங்கண்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், நவம்பர் 5 கூட்டம், முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம் என்பது, ஒரு அதிமுக்கிய அரசியல் நிகழ்வாகும். இக்கூட்டம், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு இரக்கமின்றி வக்காலத்துவாங்கும் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டோனால்ட் ட்ரம்ப் இருவரும் இரண்டு மிகப் பெரிய முதலாளித்துவ கட்சிகளின் வேட்பாளர்களாக இறங்கியுள்ள தேசிய தேர்தலின் இறுதி நாட்களில் நடைபெற உள்ளது.
ஜனாதிபதி தேர்தலை இந்த வேட்பாளர்களில் யார் வென்றாலும், அதற்கடுத்து வரவிருக்கும் மாதங்களில் அங்கே இராணுவ நடவடிக்கைகள் துரிதமாக தீவிரப்படுத்தப்படும். இருந்தபோதினும், போர் குறித்த பிரச்சினை, ஏறத்தாழ முழுமையாக தேர்தல் பிரச்சாரங்களில் கைவிடப்பட்டுள்ளது. ஊடகங்கள் கண்டுங்காணாமல் இருக்கும் நிலையில், ட்ரம்ப் மற்றும் கிளிண்டன், இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் குறித்து சாத்தியமான அளவிற்கு வெகு குறைவாகவே பேசுகிறார்கள்.
டெட்ரோய்டில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் நவம்பர் 5 கூட்டம் மட்டுமே, உலக போர் அபாயம் மற்றும் தற்போது விரிவடைந்துவரும் மோதலின் யதார்த்தம் குறித்து விவாதிக்கும் மற்றும் அதை எதிர்க்கும் ஒரே கூட்டமாக இருக்கும். இக்கூட்டம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் பெப்ரவரி 18 அறிக்கையில் போருக்கு எதிரான ஓர் இயக்கத்திற்கு அவசியமான அரசியல் அடித்தளத்தை விரிவாக்கம் செய்து இருந்தது:
1) போருக்கு எதிரான போராட்டம், சமூகத்தின் மிகப் பெரிய புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பின்னால் மக்களின் சகல முற்போக்கான கூறுபாடுகளையும் ஐக்கியப்படுத்துவதை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்
போரை தோற்றுவிக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடி, சமத்துவமின்மை மற்றும் வறுமைக்கு எதிராகவும், கூலிகள், வேலைகள், மருத்துவக் கவனிப்பு, கல்வி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சகல சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் போராட்டங்களின் வடிவத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அடித்தளத்தையும் தோற்றுவிக்கிறது.
பரந்த பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை நிலைமைகளைச் சீரழித்ததில் போருக்கான செலவுகள் ஒரு முக்கிய காரணியாகும். கடந்த வாரம் பிரௌன் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கை, 2001 இல் இருந்து ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் போர்களுக்கு அண்ணளவாக 5 ட்ரில்லியன் டாலர்கள் விலையாக கொடுக்கப்பட்டிருப்பதாக மதிப்பிட்டது, இதில் பெண்டகனின் அடிப்படை வரவு-செலவு திட்டத்தில் செலவிடப்பட்ட 6.8 ட்ரில்லியன் டாலர்கள் உள்ளடக்கப்படவில்லை. ஒருமித்து பார்த்தால், இது அமெரிக்காவின் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைக்குமான 37,000 டாலருக்குச் சமம்.
பள்ளிகள் நிதியாதாரமற்று உள்ளன, சமூக உள்கட்டமைப்பின் சிதைவு மோசமான நிலையில் உள்ளது, அனைவருக்கும் மருத்துவக் கவனிப்புகள், ஓய்வூதியங்கள் மற்றும் கண்ணியமான சம்பளங்கள் வழங்க பணமில்லை என்று முடிவில்லாமல் கூறப்படுகிறது. ஆனால் ஒபாமா நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட 1 ட்ரில்லியன் மதிப்பிலான அணுஆயுத "நவீனமயப்படுத்தும்" திட்டம் உட்பட இராணுவத்திற்கு நிதியளிக்க எல்லையில்லாமல் பணம் இருக்கிறது.
2) போருக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச போராட்டமாக இருக்க வேண்டும், ஏனென்றால் போருக்கு அடிப்படை காரணமான இந்த பொருளாதார அமைப்புமுறையை மற்றும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டம் இல்லாமல், போருக்கு எதிரான ஒரு தீவிர போராட்டம் எதுவும் இருக்க முடியாது
ஏகாதிபத்தியம், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் வளர்ச்சி மற்றும் முரண்பாடுகளில் இருந்து எழுகிறது. தேசிய அரசாங்கங்களைக் கட்டுப்படுத்துகின்ற போட்டி பெருநிறுவன நலன்கள், முக்கிய சந்தைகள் மற்றும் மூலப் பொருட்களின் ஆதாரவளங்களைக் கட்டுப்பாட்டில் எடுப்பதன் மூலமாக நெருக்கடியின் சுமையை அவற்றினது போட்டியாளர்கள் மீது சுமத்த முனைவதால், உலக முதலாளித்துவத்தின் அமைப்புரீதியிலான நெருக்கடி போர் உந்துதலை எரியூட்டுகிறது. உலக பொருளாதாரம் மற்றும் தேசிய-அரசு அமைப்புக்கு இடையிலான, முதலாளித்துவ அமைப்புமுறைக்குள்ளேயே பொதிந்துள்ள இந்த முரண்பாடுக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பே ஏகாதிபத்திய போர் மற்றும் சூறையாடலாகும்.
மோசடி மற்றும் ஊகவணிகங்கள் மூலமாக பரந்த செல்வவளத்தைக் குவித்துக் கொண்டுள்ள நிதியியல் பிரபுத்துவமே, போர் தொடுக்க சதி செய்யும் ஆளும் வர்க்கமாகும். 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர், ஒபாமா நிர்வாகம், பிணையெடுப்புகள் மற்றும் "பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும்" வடிவத்தில் வங்கிகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியுள்ளது. ஊதிப் பெருத்த புதிய ஊகவணிக குமிழிகள், உலக பொருளாதாரத்தை முன்பினும் மிகப் பெரிய மந்தநிலைக்குள் செலுத்தும் வகையில், எந்நேரத்திலும் உடைய அச்சுறுத்துகின்றன.
3) போருக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ வர்க்கத்தின் சகல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராகவும், ஐயப்பாட்டிற்கு இடமின்றி முற்றிலும் சுயாதீனமாகவும் இருக்க வேண்டும்
போருக்கு எதிரான போராட்டம், சகல முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்தும் முழுமையாக உடைத்துக் கொள்ளாமல் சாத்தியமில்லை என்பதை 2016 அமெரிக்க தேர்தல்கள் எடுத்துக்காட்டியுள்ளன.
ட்ரம்ப் இன் “அமெரிக்க கோட்டை" திட்டம், இராணுவத்தின் அளவைப் பாரியளவில் அதிகரிப்பதற்கான மற்றும் இராணுவ செலவுகள் மீதான எல்லா தடைகளையும் நீக்குவதற்கான கோரிக்கையுடன் சேர்ந்து தீவிர தேசியவாதம் மற்றும் புலம்பெயர்வோர்-விரோத பேரினவாதத்துடன் இணைந்துள்ளது. இதற்கிடையே ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயகக் கட்சி பிரச்சாரம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களுக்கு போதுமானளவிற்கு கடமைப்பட்டிராத ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு முகவராக ட்ரம்ப் ஐ வலதிலிருந்து விமர்சித்து வருகிறது. கிளிண்டன், ட்ரம்ப்-எதிர்ப்புணர்வை தேர்தல் முடிந்ததும் ரஷ்யாவிற்கு எதிரான ஆக்ரோஷ நடவடிக்கைக்கான ஒரு போலி-ஆணையாக மாற்ற முயற்சித்து வருகிறார்.
ஜனநாயகக் கட்சியினது ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு போட்டியில், “பில்லியனர் வர்க்கத்தைக்" குறித்த பேர்ணி சாண்டர்ஸ் இன் வாய்சவடால் கண்டனங்களுக்காக மில்லியன் தொழிலாளர்களும் இளைஞர்களும் அவரது பிரச்சாரத்தை ஆதரித்தனர். இருப்பினும் ஒபாமா நிர்வாகத்தின் போர் கொள்கைகளுக்கு அவரது ஆதரவே, சாண்டர்ஸ் இன் "சோசலிச" மோசடிக்கான தெளிவான நிரூபணமாக இருந்தது. இப்போது அவர் கிளிண்டனின் வலதுசாரி மற்றும் இராணுவ பிரச்சாரத்தை "அரசியல் புரட்சியின்" தொடர்ச்சியாக புகழ்ந்து, அவரை ஆமோதிக்கிறார்.
ஜனநாயகக் கட்சியை சுற்றி சுழலும் நடுத்தர வர்க்க அமைப்புகளை பொறுத்த வரையில், அவை புஷ் நிர்வாகத்தின் போர் கொள்கைகளை விமர்சித்ததில் இருந்து விலகி, மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு முழு ஆதரவளிக்கவும், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராகவும் திரும்பி உள்ளன. “மனித உரிமைகள்" என்ற பதாகையின் கீழ், அவை மிகவும் கொடிய குற்றங்களுக்கு ஆதரவளிக்க தயாரிப்பு செய்து வருகின்றன.
4) அனைத்திற்கும் மேலாக, போருக்கு எதிரான போராட்டமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டிய, அனைத்துலக போராட்டமாக இருக்க வேண்டும்
உலக போர் அபாயமானது, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளில் இருந்து எழுகின்றது. உலகளாவிய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே ஒரு புதிய உலகளாவிய மோதலைத் தடுக்க முடியும். ஒரு புதிய உலக போரில் உலகின் பாதிக்கப்படாத பகுதியாக எதுவுமே இருக்க முடியாது என்பதோடு, உலகின் எந்தவொரு பாகத்தின் தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ உயரடுக்குகளது போர் திட்டங்களில் எந்தவொரு ஆர்வமும் கிடையாது.
ஏகாதிபத்திய சதியின் கட்டுப்பாட்டு அறையாக அமெரிக்கா இருந்தாலும், அது தனித்து இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலக போர்களில் அமெரிக்காவிற்கு எதிராக சண்டையிட்ட ஜேர்மனி, அதன் ஏகாதிபத்திய அபிலாஷைகளை மீட்டுயிர்ப்பித்து வருவதுடன், அதன் அரசியல்வாதிகளும் ஊடக பிரமுகர்களும் "ஒருமுனை உலகம்" (unipolar world) முடிந்துவிட்டதாக அறிவிக்கின்றனர். ஜப்பான், அதன் இரண்டாம் உலக போருக்குப் பின்னரில் இருந்து கட்டுப்படுத்தியிருந்த ஆயுதமேந்துவதற்கான கட்டுப்பாடுகளைக் கைத்துறக்கும் முயற்சியோடு, இராணுவமயமாகி வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் ஓர் உலகளாவிய மோதலில் தங்களின் நலன்களை எந்தளவிற்கு சிறப்பாக பாதுகாப்பதென்பதைக் கணக்கிட்டு வருகின்றன.
முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து வெளிவர, இரண்டு சாத்தியமான பாதைகளே உண்டு: ஏகாதிபத்திய போர், சர்வாதிகாரம் மற்றும் காட்டுமிராண்டிதனத்திற்கான பாதை; அல்லது சோசலிச புரட்சிக்கான பாதை. உலக போர் அபாயம் என்பது ஓர் எதிர்கால அச்சுறுத்தல் அல்ல, மாறாக நிகழ்கால யதார்த்தமாகும். ஏற்கனவே மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் ஏகாதிபத்திய போர்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு, ஒட்டுமொத்த சமூகங்களே அழிக்கப்பட்டுள்ளன. ஒரு மூன்றாம் உலகப் போரில் மில்லியன் கணக்கானவர்கள், ஏன் பில்லியன் கணக்கானவர்களே கூட கொல்லப்படலாம்.
ஒரு சர்வதேச, சோசலிச அரசியல் தலைமை கட்டமைக்கப்பட வேண்டும், இழப்பதற்கு இம்மியளவு நேரமில்லை. சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்த தலைமையைக் கட்டமைத்து வருகிறது. இந்த போராட்டத்தை உங்களின் சொந்த போராட்டமாக முன்னெடுக்க நாம் நமது வாசர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
நவம்பர் 5 டெட்ரோய்ட் மாநாடு இந்த போராட்டத்தில் ஒரு முக்கிய கட்டமாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளரான ஜெர்ரி வையிட் மற்றும் நைல்ஸ் நிமூத்; உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவருமான டேவிட் நோர்த்; சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான ஜோசப் கிஷோர்; சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் தேசிய செயலரான ஆண்ட்ரே டேமன்; மேற்கு வெர்ஜீனியா பிரதிகள் சபைக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் நியோமி ஸ்பென்சர் ஆகியோர் இக்கூட்ட பேச்சாளர்களில் உள்ளடங்குவர். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் சகோதர கட்சிகளான சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி பிரதிநிதிகளும் ஏனைய பேச்சாளர்களில் உள்ளடங்குவார்கள்.
இதில் கலந்து கொள்ள திட்டமிட்டு, இன்றே sep2016.com/conference வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.
- ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு சோசலிச மூலோபாயத்திற்காக!
- சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவோம்!
- பெண்டகன் மற்றும் சிஐஏ க்கு அல்ல, பள்ளிக்கூடங்கள், வேலைகள் மற்றும் மருத்துவக் கவனிப்புக்கே நிதி வழங்க வேண்டும்!
- மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து சகல அமெரிக்க படைகளையும் திரும்ப பெற வேண்டும்!
- ரஷ்யா மற்றும் சீனா உடனான மோதலை நிறுத்த வேண்டும்! மூன்றாம் உலக போரைத் தடுப்போம்!