Print Version|Feedback
The witch-hunt against Chinese influence in Australia
ஆஸ்திரேலியாவில் சீனச் செல்வாக்கிற்கு எதிராக வேட்டை
Peter Symonds
14 September 2016
பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் மோதல்தன்மையிலான "முன்னிலையை" முழுமையாக ஆதரிக்காத எவரொருவரையும் பழித்துரைக்கும் நோக்கில், குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக, ஆஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் ஓர் ஒருமித்த சீன-விரோத பிரச்சாரம் எழுந்திருப்பது, ஆசிய பசிபிக்கில் அமெரிக்க போர் முனைவின் முன்னேறிய குணாம்சம் குறித்த ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும்.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் முன்னணி பிரமுகர் சாம் தாஸ்த்யாரிக்கு சீன வணிகர் ஒருவர் சிறிய தொகை கொடுத்தமை "அம்பலமானதும்" தொடங்கிய விவகாரம், அமெரிக்க இராணுவ கூட்டணிக்கான முழுமையான ஆதரவையோ அல்லது முக்கியமாக தென் சீனக் கடலில் சீன "விரிவாக்கவாதம்" குறித்து அதிகரித்தளவில் மிரட்டும் குற்றச்சாட்டுக்களையோ கேள்விக்குட்படுத்தும் விதத்தில் உள்ள எந்தவொரு அரசியல்வாதி, வணிக பிரமுகர் அல்லது அமைப்புக்கு எதிராகவும் ஒரு முழு அளவிலான வேட்டையாக கடந்த வாரம் தீவிரமடைந்தது.
மிகவும் வெளிப்படையான பழியுரை Sydney Morning Herald இன் சர்வதேச ஆசிரியர் பீட்டர் ஹார்ட்செர் ஆல் எழுதப்பட்டது, அவர் "எலிகள், பூச்சிகள், கொசுக்கள் மற்றும் தீங்கிழைக்கும் பறவைகளை" வேரூடன் களைந்தெறிந்து "வெளிநாட்டு செல்வாக்கு பெற்ற உளவாளிகளுக்கு எதிராக பாதுகாக்க" மாவோ சேதுங் ஆல் நடத்தப்பட்டதைப் போன்ற "நான்கு தீங்கிழைக்கும் பூச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு" அழைப்பு விடுத்தார். தாஸ்த்யாரி போன்ற "எலிகளை", முன்னாள் தொழிற் கட்சி வெளியுறவு அமைச்சகர் பாப் கார் உட்பட தங்களை அறியாமலேயே பெய்ஜிங்கின் நிழலுருவாக இருப்பவர்கள் என்று கூறப்படுபவர்களை அல்லது "பூச்சிகளை", பில்லியனர்கள் கெர்ரி ஸ்டோக்ஸ் மற்றும் ஜேம்ஸ் பாக்கர் போன்ற சீனாவிற்கு கடமைப்பட்டிருப்பவர்களாக குற்றஞ்சாட்டப்படும் வணிகர்களை அல்லது "கொசுக்களை", ஹார்ட்செர் அவரது கடுமையான வசைபாடலில் இலக்கில் வைத்திருந்தார்.
“தீங்கிழைக்கும் பறவைகள்" அல்லது சீன செல்வாக்கிற்கு உறுதுணையாய் இருப்பவர்கள் மீதான ஹார்ட்சர் இன் வரையறை, சீன-ஆஸ்திரேலிய அமைப்புகளை மட்டும் சுற்றி வளைக்கவில்லை, மாறாக, சீன பின்புலம் கொண்ட எவரொருவரையும், அதாவது சீனாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அரை மில்லியன் மக்களையும், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் 150,000 மாணவர்களையும் கேள்விக்குட்படுத்தியது, சீன வம்சாவளியைச் சேர்ந்த பலரைக் குறித்து கூற வேண்டியதே இல்லை. இதுபோன்ற சீன-விரோத விஷம பிரச்சாரம், இரண்டு உலக போர்களின் போது ஆஸ்திரேலியாவில் "அந்நிய எதிரிகளை" பாரியளவில் அடைத்து வைக்க நடந்தது போல, அதீத பொலிஸ் சோதனைகளுக்கு வழிவகுக்கவும் மற்றும் சீனாவுடனான போர் சமயத்தில் கைது செய்வதற்கும் சேவையாற்றுகிறது.
ஹார்ட்சர் ஆல் பெயரிடப்பட்டவர்கள் அமெரிக்காவிற்கோ மற்றும் அமெரிக்க கூட்டணிக்கோ எந்த விதத்திலும் எதிரானவர்கள் கிடையாது, மாறாக சீனாவை நோக்கிய மோதல்தன்மையிலான நிலைப்பாடு ஆஸ்திரேலியாவின் முன்னணி வர்த்தக பங்காளியும், ஒரு முக்கிய முதலீட்டு ஆதாரமும் ஆன ஒரு நாட்டுடன் உறவுகளை சேதப்படுத்துமே என்று கவலை கொண்டவர்களாவர்.
கடந்த வாரம் ஆஸ்திரேலிய பைனான்சியல் ரிவியூ இல் பிரதம மந்திரி மால்கம் ரேர்ன்புல் ஐ மறைமுகமாக சுட்டிக்காட்டி மிகவும் கபடத்தனமான கருத்து வந்தது, ஏனென்றால் சீனாவில் அவரது வணிக நலன்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய உளவுத்துறை அமைப்புக்கு அவர் மீது நம்பிக்கையில்லை. 2011 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் "முன்னிலை" ஐ அறிவித்த போது, ரேர்ன்புல் அது குறித்து சற்றே விமர்சனபூர்வமாக இருந்ததுடன், சீனாவுக்கு இடம் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். கடந்த செப்டம்பரில் பிரதம மந்திரி ஆனதில் இருந்து, தென் சீனக் கடல் விவகாரத்தில் வார்த்தையளவில் அமெரிக்க தொனியைப் பின்தொடர்ந்தாலும், சீனத் தீவுத்திட்டுக்களை சுற்றி 12 கடல் மைல் எல்லைக்குள் சுதந்திர கடல் போக்குவரத்து நடவடிக்கை எனப்படும் (Freedom of navigation operation - FONOP) ஐ அங்கீகரிக்கவில்லை.
தென் சீனக் கடலில் ஓர் ஆத்திரமூட்டும் FONOP ஐ நடத்த கான்பெர்ரா மீதான வாஷிங்டனின் அழுத்தம், ஜூலை 2 பெடரல் தேர்தலில் ரேர்ன்புல் இன் தாராளவாத-தேசிய கூட்டணி மிகச் சிறிய வித்தியாசத்தில் வென்றதைத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது. அதற்கு பின்னர் உடனடியாக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடென் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து, மேலாதிக்க பசிபிக் சக்தியாக இருக்க வாஷிங்டனின் தீர்மானத்தை வலியுறுத்தினார்.
எந்தவொரு தடுமாற்றக்காரர்களுக்குமான குறிப்பிட்ட எச்சரிக்கையில், பைடென் வலியுறுத்தினார்: “21ஆம் நூற்றாண்டில் பொருளாதாரரீதியில் எந்த நாடு முன்னணியில் இருக்கப் போகிறது என்று பந்தயம் கட்ட வேண்டுமானால்… நான் அமெரிக்கா மீது தான் பந்தயம் கட்டுவேன். ஆனால் இதை நான் வேறு விதத்தில் கூறுவதானால்: அமெரிக்காவிற்கு எதிராக பந்தயத்தில் இறங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது,” என்றார். தென் சீனக் கடலில் சீன உரிமைகோரல்களைச் சவால் விடுக்க ரேர்ன்புல் ஆஸ்திரேலிய போர்க்கப்பலை அனுப்ப வேண்டுமென வாஷிங்டன் எதிர்பார்க்கிறது என்பதை அமெரிக்க அட்மிரல்கள் மற்றும் தளபதிகளின் நீண்ட தொடர்ச்சியான விஜயங்கள் ஏற்கனவே பகிரங்கமாக தெளிவுபடுத்தி உள்ளன.
FONOP ஆத்திரமூட்டல் ஒன்றுக்கான நச்சார்ந்த சூழலை உருவாக்க, இப்போது நடந்து வரும் சீன-விரோத பிரச்சாரத்திற்கான சமிக்ஞையாக பைடெனின் விஜயம் இருந்தது, இத்தகைய ஒரு நடவடிக்கை சீன பதிலடியைத் தூண்டும் சாத்தியக்கூறு கொண்டது என்பதுடன் பகிரங்கமான மோதலைத் தீவிரப்படுத்தும். சீன இணையவழி ஊடுருவல், சீன முதலீட்டால் "தேசிய பாதுகாப்புக்கான" அபாயங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் சீன மேலாளுமை கொண்ட வலையமைப்பு ஆகியவை குறித்த கடுமையான மற்றும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளின் ஒரு பிரவாகம் காணக் கிடைக்கிறது. டாஸ்த்யாரி அவரது "தவறை" வருந்தி ஒப்புக் கொண்டு தொழிற்கட்சி செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்ட போதும் கூட, அரசாங்க அமைச்சர்கள் திங்களன்று கேள்வி நேரத்தின்போது "ஷாங்காய் சாம்" ஐ கண்டிக்க வரிசைக்கட்டி நின்றனர்.
இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருந்து ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகத்திற்குள், ஊடகங்கள், அமெரிக்க ஆய்வு மையம் போன்ற பல்வேறு சிந்தனைக்குழாம்கள், இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகள் போன்ற அரசு எந்திரங்களுக்குள் அமெரிக்கா பிடியில் கட்டமைக்கப்பட்ட மேலாளுமையுடன் ஒப்பிடுகையில் "சீன செல்வாக்கு" முக்கியத்துவமற்ற நிலைமைக்கு ஒன்றுமில்லாதாகி விடுகிறது. 2010 இல், விரல்விட்டு எண்ணக்கூடிய தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகார தரகர்கள், பின்னர் இவர்கள் கான்பெர்ராவில் இருந்த அமெரிக்க தூதரகத்தின் "பாதுகாப்பு பெற்ற ஆதார நபர்கள்" என்பது வெளியானது, அப்போதைய பிரதம மந்திரி கெவின் ரூட் சீனாவிற்கு அமெரிக்கா இடம் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதன் மூலம் ஒபாமா நிர்வாகத்தை அவர் அந்நியப்படுத்தியதும் இரவோடு இரவாக அவரை வெளியேற்றிய ஓர் உள்கட்சி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அவர்கள் முடுக்கிவிட்டனர்.
அதே அமெரிக்க சார்பிலான எந்திரம் தான், சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ கட்டமைப்பில் சிக்கிக் கொள்வதை குறித்து எச்சரிக்கும் அரசியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்கு பிரிவுகளை சீனாவின் ஐந்தாவது தூணாக முத்திரைக் குத்தும் வெறித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சீன-விரோத வெளிநாட்டவர் எதிர்ப்பு வெறியையும் ஊக்குவிக்கும் இந்த பிரச்சாரம், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே விரிந்து செல்லும் இடைவெளியால் உருவாகி உள்ள மிகப்பெரும் சமூக பதட்டங்களை ஒரு "வெளிநாட்டு எதிரிக்கு" எதிராக வெளியில் திசை திருப்புவதற்கான ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இப்போது பழிசுமத்துவதற்கான இலக்கில் ரஷ்யா வைக்கப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவில் இது சீனாவாக இருக்கிறது, அதுவும் தீர்க்கமான காரணங்களுக்காக. ஆஸ்திரேலியாவில் சீன-விரோத பிரச்சாரம் அதிகளவில் முன்னெடுக்கப்படுவது, அமெரிக்க நலன்களுக்கு சீனாவை கீழ்படிய செய்ய நோக்கம் கொண்ட ஒபாமாவின் "முன்னிலை" தடைபட்டுள்ளது என்ற வாஷிங்டனில் கவலைகள் அதிகரித்து வருவதற்கு இடையே நடக்கிறது. பொருளாதார முகப்பில், ஆசியாவில் சீன செல்வாக்கைப் பலவீனப்படுத்த முயலும் பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) அமெரிக்க காங்கிரஸில் ஒருவேளை நிறைவேறாமல் போகலாம். இராஜாங்கரீதியில், தென் சீனக் கடலில் சீனாவை எதிர்கொள்ள, சமீபத்திய லாவோஸ் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் ஒபாமாவால் அழுத்தமளிக்க முடியாமல் போயுள்ளது.
பைடென் அவரது விஜயத்தின் போது அறிவித்ததைப் போல, மேலாதிக்க பசிபிக் சக்தியாக அதன் இடத்தை கைவிடுவதற்கு அமெரிக்காவிற்கு விருப்பமில்லை. இப்போது அது தென் சீனக் கடலில் சீன கடற்போக்குவரத்து உரிமைகோரல்களுக்கு இராணுவரீதியில் சவால் விடுக்க ஆஸ்திரேலியா முன்வர வேண்டுமென பார்க்கிறது. அதுபோன்றவொரு நகர்வு அப்பிராந்தியத்தில் துரிதமாக பதட்டங்களை அதிகரித்து, வாஷிங்டனுக்கு மிகவும் தேவையான சர்வதேச ஆதரவை வழங்கும், பெய்ஜிங் இராணுவரீதியில் எதிர்வினையாற்றினால், அமெரிக்கா இன்னும் பலத்தோடு தலையிடுவதற்கு சாக்குபோக்குகளை வழங்கும். ஆசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அதன் சொந்த நலன்களை முன்னெடுக்க அமெரிக்காவினது ஆதரவைச் சார்ந்துள்ள ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம், இரண்டாம் உலக போருக்குப் பின்னர், கொரிய மற்றும் வியட்நாம் போர்களில் இருந்து மத்திய கிழக்கின் சமீபத்திய அமெரிக்க தலைமையிலான நடவடிக்கைகள் வரையில் நடைமுறையளவில் சூறையாடும் ஒவ்வொரு மோதலிலும், அமெரிக்காவிற்கு இராணுவ படைகள் மற்றும் அரசியல் ஆதரவை வழங்கியுள்ளது.
அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சீனாவுடன் போருக்கு தயாரிப்பு செய்து வருகின்ற வேளையில், நீண்டகால அரசியல் பிரமுகர்களும் செல்வந்த வணிகர்களும் இந்தளவிற்கு முரட்டுத்தனமாக இழிவாக சித்தரிக்கப்பட்டு வருவது, இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் கொதித்துக் கொண்டிருக்கும் அதீத புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு ஓர் அறிகுறியாகும். போர் அபாயம் இன்னும் வெளிப்படையாக ஆகும்போது கட்டவிழக் கூடிய, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரவியுள்ள போர் எதிர்ப்புணர்வு குறித்து ஆளும் வட்டாரங்களின் பயத்திற்கும் இதுவொரு அளவீடாகும்.
ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கம், சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள அதன் சகாக்களைப் போலவே, அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. போருக்கான மூலக்காரணமான முதலாளித்துவத்தை மற்றும் அதன் காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வர ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதன் சகோதர கட்சிகள் நடத்திவரும் அரசியல் போராட்டத்தில் தான் போர் அச்சுறுத்தலுக்கான பதில் தங்கியுள்ளது.