ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German armed forces prepare for domestic operations

ஜேர்மன் ஆயுதப் படைகள் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு

By Peter Schwarz 
3 September 2016

ஜேர்மன் உள்துறை அமைச்சர் தோமஸ் டி மஸியர் புதன்கிழமை அன்று போலீசும் ஆயுதப் படைகளும் (Bundeswehr) பிப்ரவரி 2017ல் முதல்தடவையாக கூட்டு உள்நாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சர்வசாதாரணமாக அறிவித்தார். இது ஒரு அரசியல் திருப்பு முனையும் மற்றும் ஜேர்மன் அரசியலமைப்புச்சட்டத்தை அடியோடு மீறுவதுமாகும்.

உள்நாட்டில் இராணுவ நடவடிக்கைகள் போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் பொதுவாக  தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். 1920 மற்றும் 30களில் வைய்மார் குடியரசில் இராணுவம் வகித்த பாத்திரத்திலிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைகளுள் அதுவும் ஒன்றாகும். அரசுக்குள்ளே அரசாக, Reichswehr (1919 இலிருந்து 1935 வரை ஜேர்மன் இராணுவம்) ஒரு எதேச்சாதிகார ஆட்சியை நிறுவுவதற்கும் மற்றும் ஹிட்லரின் எழுச்சிக்கும் ஒரு தீர்க்கரமான பங்கை வகித்தது.

கூட்டாக பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான முடிவு, இரு கட்சி சார்ந்த ஒன்றாகும். இந்த முக்கிய கூட்டத்தில், தோமஸ் டி மஸியர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லையன் (இருவருமே CDU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் மாநில உள்துறை அமைச்சர் ரால்ப் ஜேகர், (SPD) அத்தோடு சார்லாந்து மற்றும் மெக்லன்பேர்க் போமரானியாவின் மாநில உள்துறை அமைச்சர்கள் (CDU) கலந்துகொண்டிருந்தனர்.

பயிற்சிகள் ஆரம்பத்தில் CDU இன் சகோதரக் கட்சியான கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) ஆல் ஆளப்படும் பவேரியா, SPD-பசுமைக் கட்சிகளால் ஆளப்படும் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மற்றும் பிரேமன், அதேபோல பிரதமர் வின்பிரீட் கிறெற்ஷ்மான் (பசுமைக் கட்சி) இன் கீழ் பசுமைக் கட்சி-CDU கூட்டால் ஆளப்படும் பாடன் வூட்டெம்பேர்க் ஆகிய நான்கு மாநிலங்களில் இடம்பெறும். இதர மாநிலங்களும் இதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளன.

அனைத்துக் கட்சிகளும் ஆயுதப் படைகளை (Bundeswehr) உள்நாட்டில் பயன்படுத்துவது மீதாக எந்த ஒரு பகிரங்க விவாதத்தையும் வைக்காது தவிர்ப்பதில் முனைப்பாய் உள்ளன. ஏனென்றால் பரந்த அளவு எதிர்ப்புக்காக அவை அஞ்சுகின்றன. இந்தக் காரணத்தினால்தான் அவை இந்த அடியெடுப்பின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று தாக்கங்களை குறைத்துக் காட்டுகின்றன.

அவர்கள் அரசியற் சட்டத்தின் ஷரத்து 35-ஐ மேற்கோள் காட்டுகின்றனர். இச்சட்டமானது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் “உத்தியோகபூர்வ பேரிடர் நிவாரணம்” என்றழைக்கப்படுவதை ஒழுங்கமைக்க பயன்படுத்தப்படுகின்றது. இதன்படி, ”இயற்கைப் பேரிடர் அல்லது சிறப்பாக பெரும் விபத்து” இவற்றின் போது மாநிலங்கள் ஆயுதப் படைகளை உதவிக்கு அழைக்கலாம். இந்த அடிப்படையில்தான் படையினர்கள் 2013ல் அழிவுகரமான எல்ப நதி வெள்ளப் பெருக்கின்போது அணைக்கரைகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டனர்.

பசுமை கட்சி கிறெற்ஷ்மான்  மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ரால்ப் ஜேகர், அவர்களது கட்சிகளுக்குள் சில தயக்கங்கள் இருப்பினும், கூட்டுப் பயிற்சியை ஆதரிப்பதற்கு சில ஷரத்துக்களை மேற்கோள் காட்டினர்.

போலீஸ் மற்றும் ஆயுதப் படைகளுக்கு இடையில் கூட்டுப்பயிற்சியும் கலந்தரையாடல்களும் முக்கியமானவை, ஏனெனில் ஒரு அவசரகால நிலையில் பல்வேறு தகவல்தொடர்பு வழிகளில் வேலைசெய்ய வேண்டியிருக்கும் என்று ஜேகர் வலியுறுத்தினார். ஆயினும், அவர் பயிற்சிக் தேவைகள் “உள்நாட்டு பாதுகாப்பு என்பது முதல் இடத்தில் போலீசின் பொறுப்பு என்ற” உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.” என்றார்.

ஆயினும், திட்டமிடப்பட்ட பயிற்சிகள் பேரிடர் நிவாரணம் பற்றியதல்ல, மாறாக பயங்கரவாத எதிர்ப்புநடவடிக்கையை உள்ளடக்கி இருக்கிறது. “நாம் சிக்கலான, நாட்கணக்கிலான கடினமான பயங்கரவாத விஷயங்களை எதிர்கொள்ளக்கூடும்” என்பது எதிர்காலத்தில் சாத்தியமானதே என்றார் மஸியர். பயிற்சிகளில் சம்பந்தப்பட்டிருப்பது “விரும்பத்தகாத ஆனால் சாத்தியமுள்ள சூழலுக்கான ஒரு அறிவார்ந்த முன்பாதுகாப்பு” ஆகும்.

அத்தகைய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் அர்த்தப்படுத்தப்படுவது என்ன என்று மூன்றாண்டுகளுக்கு முன்னர் பொஸ்டனில் மற்றும் மிக அண்மையில், பிரான்சிலும் காணக்கூடியதாக இருந்தது.

போஸ்டனில், நகரின் வருடாந்த தொலைதூர ஓட்டப் பந்தயத்தின் மீது தாக்குதல் நடத்திய 19 வயதுடையவரை பிடிப்பதற்கான வேட்டையை பாதுகாப்பு படைகள் முழு நகரையும் 24 மணிநேரத்திற்கு அவசரகால நிலையில் வைத்திருப்பதற்கு ஒரு நியாயப்படுத்தலாக பயன்படுத்தியது. அதிகாரிகள் ஊரடங்கை அமல்படுத்தியபோது, கனரக ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படையினரும், போலீசும் நகரை சல்லடைபோட்டு தேடியதுடன், நீதிமன்ற ஆணை இல்லாமல் வீடுவாசல்களுக்குள்ளும் தேடுதலை நடாத்தினர். அந்நடவடிக்கைகள் உண்மையான அச்சுறுத்தலுக்கு பரந்த அளவில் பொருந்தா வீதத்தில் இருந்தன. அவை மக்களை ஒரு போலீஸ் அரசுக்கு, பழக்கப்படுத்துவதற்கு பயன்பட்டன. அதில் நிரந்தரமாக சோதனை நடாத்துவது, கண்காணித்தல் மற்றும் ஆத்திரமூட்டல் நாளாந்த நிகழ்வாக இருக்கும்.

“இவற்றின் பின்னாலும் மற்றும் ஏனைய உரிமைகள் மீதான பிறதாக்குதல்களுக்கும் பின்னால் இருப்பது விரைந்துவளரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வீழ்ச்சியுறும் வாழ்க்கைத் தரங்களால் எரியூட்டப்படும் உள்நாட்டு முனையில் உள்ள வர்க்கப் பதட்டங்கள் பற்றிய பீதியே ஆகும்” என்று WSWS குறிப்பிட்டது. “இச்சூழல்களின் கீழ், அமெரிக்க மக்களின் பரந்த பெரும்பான்மையினருக்கு வறுமையையும் பயத்தையும் தவிர வேறெதனையும் தரமுடியாத ஆளும் செல்வந்த தட்டானது, தவிர்க்க முடியாமல் எழுந்து வரும் சமூக வெடிப்புக்களை எதிர்கொள்ள போலீஸ்- இராணுவ சாதன ஒடுக்குமுறை சக்திகளை திரட்டும்.”

பிரான்சில், நவம்பர் 2015ல் நடந்த பாரிஸ் தாக்குதல்களை அடுத்து அரசாங்கமானது அவசரகால நிலையை அமல்படுத்தியது முதற்கொண்டு, ஆயுதமேந்திய சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவத்தினர், வீதிகளில் தொடர்ந்தும் காணப்படுகின்றனர். இங்கும் கூட, படையினர்கள் மாறாது நிலைகொண்டிருப்பதற்கு, ஊரடங்குகளுக்கு, தன்னிச்சையாய் வீடுகளில் தேடுதல் வேட்டைகள் நடத்துவதற்கு மற்றும் சமூக எதிர்ப்பினை சமாளிக்க பயன்படுத்துவதற்கு இவற்றிற்கு மக்கள் பழக்கப்படல் பற்றிய ஒரு விஷயம் ஆகும். அவசரகால நிலையானது ஏற்கனவே வெறுக்கப்பட்ட புதிய தொழிற் சட்டத்திற்கு எதிராக எழுந்து வந்த ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனியில், ஆயுதப் படைகளை அரசாங்கங்கள் உள்நாட்டில் இறக்குவது என்பது தனது சொந்த மக்களுக்கு எதிராக இயக்கப்படுவதாகும். ஜேர்மன்  இராணுவவாதத்தை நோக்கி திரும்புவதானது தவிர்க்கவியலா வகையில் போலீஸ் அரசுக்கு திரும்புவதுடன் தொடர்புடையது.

ஜூலையில் ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கை மற்றும் ஆயுதப் படைகளின் எதிர்காலம் மீதான “வெள்ளை அறிக்கை 2016” ஐ ஏற்றதன் மூலம், ஆளும் கட்சிகளான CDU/CSU மற்றும் SPD ஆகியவை வெளிநாட்டில் இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கான அதிகரித்த பாதுகாப்பு செலவினத்தை ஆயுதப்படைகளை உள்நாட்டில் பயன்படுத்துவதுடன் இணைப்பதற்கு உடன்பட்டன.

“ஜேர்மனியில் ஆயுதப் படைகளை ஈடுபடுத்தல் மற்றும் அதன் பங்கு“ என்ற பிரிவில், வெள்ளை அறிக்கையானது “அவசரகால நிலைகளை திறமையாக நிர்வகிக்க போலீசுக்கு துணைபுரியும்பொருட்டு, ஆயுதப்படைகள், சில குறிப்பிட்ட நிலைமைகளில், உள்நாட்டு பணிகளைச் செய்யும் மற்றும் தலையீடு செய்வதற்கானதும், நடைமுறைப்படுத்துவதற்குமான அதிகாரத்தைச் செயற்படுத்தும்” என்று விளக்குகிறது. பயங்கரவாத தாக்குதல்கள் வகைப்பட்ட முக்கிய விஷயங்களில் உள்நாட்டில் ”சிறப்பான இராணுவ முறைகளைப் பயன்படுத்துவதற்கு” ஆயுதப் படைகளை அழைக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லையன் அந்தவேளை குறிப்பிட்டார். அவ்வம்மையார் “அதாவது: அது சட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது” என்று மேலும் குறிப்பிட்டார்.

“தலையீடு செய்வதற்கான மற்றும் அதிகாரங்களை செயற்படுத்துதல்” மற்றும் “சட்ட அதிகாரத்தை” அனுபவித்தல் இவை எல்லாம் பேரிடர் நிவாரணம் என்பதன் தர்க்கவியல் மற்றும் தொழில்நுட்பம் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். ஆயுதப் படைகளானது இவ்வாறு உள்நாட்டு ஒடுக்குமுறையின் ஒரு கருவியாகவும் மற்றும் ஜேர்மனியின் துன்பகரமான வரலாற்று மரபுகளின் மீதும் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 1894ல் பிரஷ்ய இராணுவமானது தெற்கு ஜேர்மனியில் ஜனநாயகப் புரட்சியின் கடைசி மூச்செடுப்பை நசுக்கியதன் மூலம் ஜேர்மனியின் முதலாளித்துவ ஜனநாயக அபிவிருத்தியை தடைசெய்தது. கெய்சர் பேரரசில், அது பின்னர் வரலாற்றாளர் கோர்டொன் கிரேய்க் அழைத்ததுபோல, “அரசுக்குள் அரசை” அமைத்தது, மற்றும் பேரரசின் தீவிர உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கை மீது நீடித்த செல்வாக்கின் தாக்கத்தை செய்தது.

1918 -19 புரட்சியில் சமூக ஜனநாயக பாதுகாப்பு அமைச்சர் குஸ்ராவ் நொஸ்க்க, தொழிலாளர், மாலுமிகளின் எழுச்சியை ஒழித்துக்கட்டவும், புரட்சிகர சோசலிஸ்டுகளான ரோசா லுக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீஃப்னெக்ட்டை படுகொலை செய்வதற்கும் இராணுவத்தின் மீது தங்கி இருந்தார், வைய்மார் குடியரசு முழுமையும் Reichswehr பிற்போக்கின் வலுவான ஆதிக்கம் தொடர்ந்து இருந்தது. ஜனாதிபதி என்ற வகையில் அதன் மதிப்பு மிக்க ஃபீல்டுமார்ஷல் பவுல் வொன் ஹின்டன்பேர்க், அடோல்ஃப் ஹிட்லரை 1933ல் சான்செலராக நியமித்தார். இரண்டாம் உலக யுத்தத்தில், Wehrmacht (ஹிட்லர் ஆட்சியின் கீழ் இருந்த ஒன்றிணைந்த ஆயுதப் படைகள்) பின்னர் நாஜிக்களின் குற்றங்களில் தீவிரமாய் ஈடுபட்டன.

இதுவும், இரண்டாம் உலக யுத்தத்தின் அழிவுகரமான பாதிப்புக்களுமே ஜேர்மன் மக்களின் பரந்த அடுக்குகளால் இராணுவம் ஆழ்ந்து வெறுக்கப்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன. 1950களின் ஆரம்பத்தில் கூட்டாட்சிக் குடியரசில் (மேற்கு ஜேர்மனி) இடம்பெற்ற மீளாயுதமயப்படுத்தல் பகுதி அளவில் தொழிற்சங்கங்களும் சம்பந்தப்பட்ட பரந்த எதிர்ப்புக்களைத் தூண்டி விட்டது, 1955ல் ஆயுதப் படைகள் உத்தியோகபூர்வமாய் அமைக்கப்பட்டபொழுது, அது முற்றிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நோக்கம்கொண்டது மற்றும் ஒருபோதும் உள்நாட்டில் பயன்படுத்தப்படாது என்ற உறுதியாய் சேர்ந்து கொண்டது.

“படையினர்கள் குடிமக்கள் மீது மீண்டும் ஒருபோதும் சுடக்கூடாது. உள்நாட்டில் ஆட்சியின் ஒரு கருவியாக மீண்டும் ஒருபோதும் இராணுவம் பயன்படுத்தப்படக் கூடாது. ஹிட்லரின் கீழ் ஆயுதப் படைகள் பாராளுமன்றத்திலிருந்து சுயாதீனமாக ஒருவகை நான்காம் சக்தியாக செயற்பட்டன. ஆயுதப் படைகள் (Bundeswehr) பாராளுமன்றத்திற்கு (Bundestag) மிகவும் கட்டுப்பட்டதாகும்” என அண்மையில் tagesschau  செய்தி நிகழ்ச்சிக்காக ஒருவர் பங்களிப்பாளர் அப்பொழுது அரசியற்சட்டத்தில் வேரோடியிருந்த கோட்பாடுகளை தொகுத்துக்கூறி இருந்தார்.

அரசியலமைப்பு சட்டத்தை ஜேர்மன் ஆளும் வர்க்கம் சிலநேரங்களில் அச்சுறுத்தும் ஒன்றாக காட்டுகின்ற அதேவேளை, தங்களின் சொந்த நலன்களை பாதுகாக்கும் விஷயமாகின்ற பொழுது, அதாவது மத்திய பாதுகாப்பு சேவையை “அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு“ எனப் பெயரிடுவது மற்றும் அரசியல் எதிராளிகளை “அரசியலமைப்பு சட்டத்தின் பகைவர்கள்” எனவும் பெயரிடுவது, அதேபோல சமூகவியலாளர் Jürgen Habermas இன் “அரசியலமைப்புச் சட்ட தேசபக்தவாதத்துக்கான” குறிப்பிடல் உள்பட அனைத்தும் அச்சட்டமானது அவர்களின் நலன்களுக்கு குறுக்காக நிற்கும்பொழுது, அவர்கள் அதை ஒரு காகிதக் குப்பையாக நடத்துகிறார்கள்.

1968 மே இல் பிரெஞ்சு வேலைநிறுத்தத்தின் உச்சக்கட்டத்தின்பொழுது மற்றும் சர்வதேச மாணவர்கள் கிளர்ச்சிகளின் பொழுது, CDU/CSU மற்றும் SPD க்களின் பெரும் கூட்டணி அரசு அவசரகால நிலை சட்டங்களை ஏற்றுக் கொண்டது. இவை உடனடியாக நிகழும் ஆபத்தை தவிர்ப்பதற்கு அல்லது சுதந்திர ஜனநாயக ஒழுங்கமைப்பினை பாதுகாக்க” (அரசியற்சட்டத்தின் ஷரத்து 87a) அதாவது, முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதற்காக ஆயுதப் படைகளை உள்நாட்டில் பயன்படுத்த அனுமதித்தது. ஆயினும் இந்த பந்தி ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.

1990ல் ஜேர்மனியின் மறு ஐக்கியத்தினை அடுத்து, அதன் ஜூலை 12, 1994 “அதன் பகுதிக்கு வெளியிலான” தீர்ப்பில், உச்சநீதிமன்றமானது நேட்டோ எலலைகளுக்கு அப்பால் இராணுவ நடவடிக்கைகளுக்கு பச்சை விளக்கு காட்டியது. இராணுவவாதத்தின் தீவிர ஆதரவாளர்கள் கூட முன்னர் அரசியலமைப்புச்சட்டம் இந்த தீர்ப்பிற்கு மேலானது என்று அனுமானித்திருந்தனர். அது முதற்கொண்டு ஆயுதப் படைகள் யூகோஸ்லாவியாவிலருந்து ஆப்கானிஸ்தான வரை பல யுத்தங்களில் தலையீடு செய்திருக்கிறது.

பின்னர் வந்த மற்ற தீர்ப்புக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் வாசகத்தை திருத்தம் செய்யாமல் இராணுவவாதத்திற்கான தடைகளை அகற்றின. எடுத்துக்காட்டாக, 2012ல் “அதன் பகுதிக்கு வெளியிலான” தீர்ப்பை அடுத்து இன்னொரு வரலாற்றுத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் “விதிவிலக்கான அழிவுகரமான சூழ்நிலைமைகளில்”- முடிவில்லாத ஒரு நெகிழ்வான வரையறையுடன் ஆயுதப் படைகளின் உள்நாட்டு நடவடிக்கைகளை அனுமதித்தது. அரசியலமைப்புச்சட்ட அமைவு நீதிபதிகள் இவ்வாறு “அவர்கள் திருத்திய அரசியற்சட்டம் பற்றி விளக்கம் சொல்லவில்லை.” அந்த நேரம் Süddeutsche  Zeitung  அதனை “இது ஒரு நீதித்துறை சதி” என்று குறிப்பிட்டது.

அதுமுதற்கொண்டு, ஸ்தாபகமயமாக்கப்பட்ட இந்த அரசியல் கட்சிகள், சூழ்ச்சிக்கையாளலுக்காக இந்தப் புதிய வாய்ப்பை சுரண்டிக் கொள்வதில் கடுமையாக முயற்சிக்கின்றன. போலீசாலும் இராணுவத்தாலும் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த கூட்டுப் பயிற்சியானது ஜேர்மன் அரசியலில் ஒரு மைல் கல் ஆகும்.