Print Version|Feedback
Sri Lankan plantation workers demand higher wages
இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோருகின்றனர்
By our correspondents
24 June 2016
இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சம்பளத்தை அதிகரிக்க மறுப்பதோடு, தற்போதைய சம்பள கட்டமைப்பை ஒழித்து, அதற்குப் பதிலாக குத்தகை விவசாய முறைக்கு சமமான வருமானப் பகிர்வு திட்டமொன்றை திணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை வளர்ந்து வருகின்றது. முந்தைய கூட்டு ஒப்பந்தம் 15 மாதங்களுக்கு முன்பே காலவதியாகிவிட்டது.
தற்போது பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தோட்டத் தொழிலாளர்கள் மீது இந்த தாக்குதலை சுமத்த கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் ஒத்துழைத்து வருகின்றன.
மத்திய மலையக பிரதேசங்களில் ஹட்டன் மற்றும் மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் கடந்த வாரம் தமது தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மோசமாகிவருவதைப் பற்றி பேசினர். அவர்கள் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீது தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
என்பீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்துகளை தொழிற்சாலைக்கு கொண்டு செல்கின்றனர்.
ஹட்டனுக்கு அருகில் டிக்கோயாவில் உள்ள இன்ஜஸ்றீ தோட்டத் தொழிலாளர்கள், ஏழு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதற்கு எதிராக 2015 ஜூலையில் கசப்பான போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள பற்றாக்குறைக்கு எதிராகப் போராடியதாலேயே அந்த தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டனர். தோட்ட நிர்வாகம் தொடர்ந்தும் அதன் ஊழியர்களை துன்புறுத்துகிறது.
இன்ஜஸ்றீ தோட்ட நிர்வாகம், தனது மகப்பேறு விடுமுறையின் பின்னர் மீண்டும் வேலை கொடுக்க மறுத்தது என கமலா கூறினார். "இதனால் நிர்வாகம் எனது 25,000 ரூபா மகப்பேறு நிதி மற்றும் பணிக்கொடுப்பனவையும் தாமதப்படுத்தியுள்ளதுடன் இப்போது நான் நாள் கூலிக்கு வேலை செய்கிறேன்," என்று அவர் கூறினார். "அவர்கள் நாட்கூலி ஆட்களை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். ஒப்புதல் விடுமுறையில் மத்திய கிழக்கு நாடுகளில் இரண்டு ஆண்டுகள் வேலைசெய்த பின்னர், மீண்டும் வேலைக்கு வந்தவர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்களும் நாட்கூலி தொழிலாளர்களாக வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். புதிதாக, நிரந்தர தொழிலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.
"கம்பனி ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கு 30 ரூபா மட்டுமே தருகிறது. பறிப்பதற்கு போதுமான கொழுந்து இல்லாதபோது எப்படி நாம் போதுமான வருமானம் ஈட்ட முடியும்? சில நாட்கள் நான் ஏழு கிலோ மட்டுமே பறித்துள்ளேன். கடந்த மாதம் என் சம்பளம் 4,000 ரூபாய் ($ US28) தான் இருந்தது. "
ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணியினதும் (ம.ம.மு.) தலைவர்கள், 100 ரூபா நாள் சம்பள உயர்வை கொடுக்க அரசாங்கம் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் என்று அறிவித்தனர்.
மற்றொரு தோட்ட தொழிலாளி ஆத்திரத்துடன் இந்த ஒப்பந்தத்தை கண்டித்தார். "இந்த அற்ப சம்பளம் கொடுக்கப்பட்டாலும் கூட, அது சீனி ஒரு கிலோ வாங்கக் கூட போதுமானதல்ல. இப்போது சீனி ஒரு கிலோ 130 ரூபாய், ஒரு தேங்காய் 50 ரூபாய், கோதுமை மாவு 98 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது. இந்த சொற்ப ஊதியத்தில் நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்கவும் வேண்டும். தொழிற்சங்கங்கள் சந்தா கட்டணத்தை வசூல் செய்துகொள்கின்றன, ஆனால் அவர்கள் எங்கள் பிரச்சினைகளை பற்றி கவலைப் படுவதில்லை."
ஒரு கட்டுமான தொழிலாளியான கிருஷ்னசாமி, கம்பனிகளின் செலவு வெட்டினால் தான் வேலையை இழந்துள்ளதாக விளக்கினார். அவர் ஊதிய முறையை அகற்றி "வருவாய் பகிர்வு” முறையை அமுல்படுத்துவதை எதிர்த்தார். புதிய முறையின் கீழ் ஒரு தொழிலாளர் குடும்பத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலைச் செடிகள் அல்லது தோட்டத்தின் ஒரு பகுதி பராமரிப்பதற்காக ஒப்படைக்கப்படும். அதில் அவர்கள் தேயிலைக் கொழுந்து பறித்து கம்பனிக்கு கொடுக்க வேண்டும். பெருந்தோட்ட கம்பனி, தனது செலவுகள் கழித்துக்கொண்ட பின்னர் எஞ்சியதை தொழிலாளிக்கு கொடுக்கும்.
கிருஷ்னசாமி, இந்த சுரண்டல் முறையை நிராகரிக்குமாறு தோட்ட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, பழிவாங்கப்பட்ட இன்ஜஸ்றி தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்தார். தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு சென்றிருந்த கிருஷ்னசாமி கூறியதாவது: "நான் ஊட்டியில் உள்ள தோட்டங்களுக்கு சென்றேன். அங்கு வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் எங்களுக்கு இருப்பதை விட மோசமாக உள்ளன. அவர்களின் தினசரி சம்பளம் வெறும் 120 இந்திய ரூபாய்கள் அல்லது 1.80 டாலர் ஆகும். நீங்கள் சொல்வது போல், தொழிலாளர்கள் உலகம் முழுவதும் இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக போராட ஐக்கியப்பட வேண்டும்."
தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் குறைவாக இருப்பதால், அவர்கள் காய்கறிகள் பயிரிடுவதோடு பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் தேடிக்கொள்கின்றனர் என செல்வா கூறினார். "நான் காலையில் இருந்து இரவு வரை இந்த உடுப்பை உடுத்திக்கொண்டுள்ளேன். அரசாங்கம் எங்களுக்கு எதுவும் வழங்கவில்லை. தொழிற்சங்கங்கள் துருப்பு சீட்டாக தொழிலாளர்களை பயன்படுத்திக்கொண்டு சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றன. நான் தொழிற்சங்கங்களுக்கு சந்தாக்களை கொடுப்பதை நிறுத்திவிட்டேன்."
முன்னர் ஒவ்வொரு தோட்டப் பிரிவுக்கும் ஒரு மருத்துவர் இருந்தார். ஆனால் இப்போது ஐந்து பிரிவுகளுக்கும் ஒரு வைத்தியரே வேலை செய்ய வேண்டியிருக்கின்றது என செல்வா கூறினார். ஆம்புலன்ஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் காயமடைந்தால் தொழிலாளர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு தங்களது சொந்த போக்குவரத்தை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
இன்ஜஸ்றீ தோட்டத்தில் உள்ள பல குடும்பங்கள் தற்காலிக கொட்டகைகளில் வாழ்கின்றன. நரேந்திரனும் அவரது குடும்பத்தினரும் ஒரு மண் குடிசையில் வாழ்கின்றனர். "கொட்டகையில் ஒரு பகுதி கடந்த மழையில் சரிந்துவிட்டது. ஒன்பது தற்காலிக கொட்டகைகள் இங்கு உள்ளன," என்று அவர் கூறினார்.
அந்தோனி, மஸ்கெலியாவில் உள்ள கிளனியூஜி பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர். அதன் டீசைட் தோட்டப் பிரிவில் கம்பனியினால் மூன்று தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதுடன் மேலும் நான்கு பேர் இடை நிறுத்தம் செய்யப்பட்டனர். அவர்கள், நிர்வாகத்தின் உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு எதிரான வேலை நிறுத்தத்திற்கு தலைமை வகித்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டனர். நிர்வாகம் தொழிலாளர்களின் வீடுகள் சீரமைப்பதை நிறுத்திவிட்டதாக அந்தோனி கூறினார்.
கிளனியூஜி தோட்ட லயன் குடியிருப்பு.
"என் வீட்டின் கூரை தகடுகள் சேதமடைந்துள்ளன. மழை பெய்யும் போது சுவர்கள் ஈரமாகின்றன. மழை பெய்யும் போதெல்லாம் வீட்டுக்கு உள்ளே வாளிகள் வைத்திருக்க வேண்டும். நாம் நிர்வாகத்தினால் எந்த திருத்த வேலைகளும் செய்யப்படாத நிலையில், இந்த வீட்டில் மூன்றாம் தலைமுறையாக வாழ்ந்து வருகின்றோம்," என்று அவர் கூறினார்.
16 கிலோ இலக்கை முடிக்க நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று அந்தோனி கூறினார். நிர்வாகம் இலைகள் மீது இருக்கும் தண்ணீருக்காக இரண்டு கிலோவையும் கமிஷன் என்ற பெயரில் இன்னும் இரண்டு கிலோவையும் வெட்டிக்கொள்கின்றது.
ஒரு தொழிலாளி, தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருந்து வெளியேறிய தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் ஆனாலும் பயனில்லை என்றார்.
"எந்தவொரு தொழிற்சங்கமும் தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதில்லை," என்று கூறிய அவர், பல தொழிலாளர்களும் இளைஞர்களும் தோட்டத்தில் வாழ்வதற்கு வருமானம் போதாமையால் கொழும்புக்குச் சென்றுவிட்டனர் என்று சுட்டிக்காட்டினார்.
தோட்டத் தொழிலாளர்கள், தேயிலைச் செடிகள் மிகத் தொலைவில் இருப்பதனால், காலை எட்டு மணியில் இருந்து மதிய உணவு இல்லாமல் 3.30 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். "நாம் மதிய உணவுக்காக ரொட்டி மற்றும் தேநீர் கொண்டு செல்வோம். மதிய உணவு நேரத்தில் ரொட்டி காய்ந்து போய் இருக்கும், தேநீர் குளிர்ந்து போயிருக்கும். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையப் போவதில்லை என்றால், எங்களது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் முதலில் நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் கோரின, இப்போது அவர்கள் அதை கைவிட்டுவிட்டனர்.
"நான் வருமானப் பகிர்வு முறை நடைமுறையில் உள்ள மகா ஊவா தோட்டத்திற்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு தொழிலாளிக்கும் 1,600 தேயிலைச் செடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் செடிகளில் கொழுந்துகள் இல்லாத நாட்களில் அவர்களுக்கு எந்த வருமானமும் கிடையாது. இந்த தொழிலாளர்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். நாம் அத்தகைய ஒரு அமைப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது."
ஹட்டனில் என்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த கிருஷ்னா, 87 ஹெக்டேர் கொண்ட தோட்டத்தில் இப்போது பாதி மூடப்பட்டு மீண்டும் காடாகிவிட்டது என்று கூறினார். “என்பீல்ட் தோட்டத்தில் 110 தற்காலிக தொழிலாளர்கள் உள்ளனர். நிரந்தர தொழிலாளர்கள் 60 பேராகக் குறைக்கப்பட்டுள்ளனர்."
ஜப்பானில் கார் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்த போது, உரிமையாளர் கம்பனியை மூடிவிட்டு அதை மிகவும் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட நிறுவனத்துடன் இணைத்து ஒரு தொகை தொழிலாளர்களை வெளியேற்றினார் என்பதை, பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் ரொஷான் ராஜதுரை சுட்டிக்காட்டினார் என்று ஒரு தொழிற்சங்க அதிகாரி தன்னிடம் கூறியதாக கிருஷ்னா தெரிவித்தார். “பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் இராஜதுரை, தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டால் அவர்களும் அதே விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்."
என்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த சந்திரா, வருவாய் பகிர்வு முறையை எதிர்த்தார். "இன்று கம்பனி ஒரு கிலோ கொழுந்துக்கு 30 ரூபா செலுத்துகிறது, நாளை அவர்கள் தேயிலை விலை வீழ்ச்சியடைந்து விட்டது என்று கூறி 10 ரூபாய் வரை கூட குறைக்க கூடும். கொழுந்தை சாப்பிடவா முடியும்? அதனால் நாங்கள் அந்த விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். தொழிற்சங்கங்கள் எங்கள் மீது இந்த முறையை சுமத்த கம்பனிகளுக்கு உதவுகின்றன என்பது உண்மையே,” என அவர் கூறினார்.