Print Version|Feedback
German report criticizing Turkey highlights growing tensions within NATO
துருக்கியை விமர்சிக்கும் ஜேர்மன் அறிக்கை நேட்டோவிற்குள் அதிகரித்து வரும் பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது
By Johannes Stern
19 August 2016
வாஷிங்டன் மற்றும் ஜேர்மன் ஆளும் உயரடுக்கு பிரிவுகளின் குறைந்தபட்சம் மறைமுகமான ஆதரவைப் பெற்றிருந்ததற்கான எல்லா அறிகுறிகளுடன் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு எதிரான தோல்வியடைந்த இராணுவ சதிக்கு நான்கு வாரங்களுக்கு சற்று அதிகமான காலத்திற்குப் பின்னர், அங்காரா மற்றும் மேற்கத்திய சக்திகளுக்கு, அதிலும் குறிப்பாக பேர்லினுக்கும் இடையிலான உறவுகள் புதிய உறைந்த மட்டங்களை எட்டியுள்ளன.
புதனன்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் தோமஸ் டி மஸியரிடம், அவரது அமைச்சகம் தயாரித்த ஓர் ஆவணம் வெளியானதில் அவருக்கு கவலைப்பட ஏதாவது உண்டா என்று வினவியபோது, அவர் ஜேர்மன் பிராந்திய ஒளிபரப்பு ஸ்தாபனம் RBB க்கு "அங்கே கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்றார். 2011 இல் இருந்து இஸ்லாமிய குழுக்களுக்கு "மத்திய கிழக்கின் ஒரு மைய அரங்கமாக" இருந்ததற்காக அந்த உள்துறை அமைச்சக ஆவணம் துருக்கியைக் குற்றஞ்சாட்டுவதுடன், காசாவில் ஹமாஸ் உடன், எகிப்தில் முஸ்லீம் சகோத்தரத்துவத்துடன் மற்றும் சிரியாவில் ஆயுதமேந்திய இஸ்லாமிய சக்திகளுடன் "சித்தாந்த ரீதியிலான புரிந்துணர்வு" வைத்திருந்ததற்காக எர்டோகனை விமர்சிக்கிறது.
ஜேர்மன் மத்திய உளவுத்துறை சேவையால் பெரிதும் எழுதப்பட்ட அந்த அறிக்கை, இடது கட்சியின் (Die Linke) ஒரு நாடாளுமன்ற கேள்விக்கு ஒரு நம்பகரமான பதிலாக வந்தது. இவ்வார ஆரம்பத்தில் ஜேர்மன் அரசு ஒளிபரப்பு ஸ்தாபனம் ARD அதை வெளியிட்டதற்குப் பின்னர் அது துருக்கிய அரசாங்கத்தின் சீற்றத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.
“இந்த குற்றச்சாட்டுக்கள் குழம்பிய நிலைப்பாட்டின் ஒரு புதிய வெளிப்பாடாகும், இது சில காலம் வரையில் எங்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இலக்கில் வைத்து எங்கள் நாட்டை சின்னாபின்னமாக்க முயன்று வந்துள்ளது,” என்று துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டது. அது பேர்லினின் இரட்டை வேஷத்தை குற்றஞ்சாட்டியதோடு, குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கு (PKK) எதிராக ஜேர்மன் அரசாங்கம் துருக்கிக்கு நிறைய ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கோருகிறது.
“இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அவற்றினது இரட்டை வேஷ மனோபாவங்களுக்காக அறியப்படும் ஜேர்மனியின் சில அரசியல் வட்டாரங்கள் உள்ளன என்பது வெளிப்படையானது,” என்று அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது. “பயங்கரவாதத்தின் ஆதாரம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு விதத்திலும் பயங்கரவாதத்திற்கு எதிராக உண்மையாக போராடும் ஒரு நாடாக துருக்கி இருந்துள்ளது, அதன் மற்ற பங்காளிகளும் கூட்டாளிகளும் அதே வழியில் நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறது,” என்று அது குறிப்பிட்டது.
ஜேர்மன் உள்துறை அமைச்சகம் மற்றும் துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இடையிலான விரோதமான கருத்து பரிமாற்றங்கள் —இரண்டுமே ஒன்றையொன்று பகிரங்கமாக பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில்— மேற்கத்திய சக்திகளுக்கும் அங்காராவற்கும் இடையிலான உறவுகள் கடுமையாக சீரழிந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது, இது ஏற்கனவே ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு முன்னரே வளர்ச்சியடைந்திருந்தது.
கடந்த ஜூன் மாதத்திலேயே, ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் கூட்டமாக கொல்லப்பட்டதை "இனப்படுகொலையாக" விவரித்து ஜேர்மன் நாடாளுமன்றம் (Bundestag) நிறைவேற்றிய ஒரு தீர்மானம் அங்காராவில் கூர்மையான விடையிறுப்புக்கு இட்டுச் சென்றது. பேர்லினின் நகர்வு "இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இராஜாங்க, பொருளாதார, அரசியல், வர்த்தக மற்றும் இராணுவ உறவுகளைப் … பாதிக்கக்" கூடும் என்று எர்டோகன் எச்சரித்தார்.
சில வாரங்களுக்குப் பின்னர் மற்றொரு மோதல் பின்தொடர்ந்தது, அப்போது தென் துருக்கியில் உள்ள இன்செர்லிக் விமானப்படை தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 250 ஜேர்மன் படையினரை ஜேர்மன் நாடாளுமன்றவாதிகள் சந்திக்க வருவதை துருக்கி தடுத்திருந்தது. இன்செர்லிக் தளம் சிரியா மற்றும் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான குண்டுவீச்சு நடவடிக்கைக்குரிய பிரதான தளமாக மட்டும் சேவையாற்றவில்லை, மாறாக அது எர்டோகனுக்கு எதிராக தோல்வியடைந்த சதியின் மையமாகவும் மாறி இருந்தது.
சிரியாவிற்குள் மேற்கத்திய ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனி பிரிவினைவாத குர்திஷ் படைகளை ஆதரித்து பலப்படுத்தி வருவதாக எர்டோகன் அதிகரித்தளவில் கவலை கொண்ட பின்னர், ரஷ்யாவை நோக்கிய துருக்கிய வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட ஒரு கூர்மையான மாற்றத்திற்கு மத்தியில்தான் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி நடந்தது.
தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் ஒருபுறம் வாஷிங்டன் மற்றும் பேர்லினுக்கும், மற்றும் மறுபுறம் அவற்றின் பெயரளவில் நேட்டோ கூட்டாளியான துருக்கிக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளமை உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது. அந்த சதியானது மத்திய கிழக்கில் மேற்கத்திய வெளியுறவு கொள்கையை, குறிப்பாக எஞ்சியுள்ள ரஷ்யாவின் கடைசி கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைத் தூக்கியெறிவதற்கான திட்டங்களை குறுக்காக வெட்டும் ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையிலானதும் மற்றும் சாத்தியமானால் ஈரான் மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு சாத்தியமான கூட்டணியை தடுக்க ஒழுங்கமைக்கப்பட்டது என்பதை உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பத்திலிருந்தே விளங்கப்படுத்தியது.
கடந்த சில நாட்களாக, மேற்கத்திய அதிகாரிகளும் வெளியுறவு கொள்கை மூலோபாயவாதிகளும், துருக்கிய இராணுவத்தின் மேற்கத்திய சார்பு பதவிக்கவிழ்ப்பு சதியாளர்களைக் களையெடுப்பதற்காக அங்காராவைக் கூர்மையாக தாக்கினார்கள், மேலும் கடந்த வாரம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான எர்டோகனின் சந்திப்புக்குப் பின்னர் மாஸ்கோ உடனான அங்காராவின் நல்லிணக்கத்தைக் குறித்து கவலைகளை எழுப்பினர்.
“ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தமை ஆயுத படைகளைப் பிளவுபடுத்தி உடைத்திருப்பதை தவிர வேறொன்றும் செய்யவில்லை,” என்று ஒரு துருக்கி வல்லுனரான ஆரொன் ஸ்ரைன் வாஷிங்டனை மையமாக கொண்ட சிந்தனை குழாம் அட்லாண்டிக் கவுன்சில்க்குத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு கொள்கைக்கான வாஷிங்டன் பயிலகத்தில் துருக்கிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கான நிபுணர் சோனர் கஹாப்ரே எச்சரிக்கையில், “சமீபத்திய நினைவுகளில் முதல்முறையாக, துருக்கியின் நேட்டோ அங்கத்துவம் மீது அங்காராவில் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள், அந்நாடு ரஷ்யாவின் 'நண்பராக' ஆவதை நோக்கி நகர வேண்டுமா என்று விவாதிக்கிறார்கள்,” என்றார்.
NBC இன் வெளிநாட்டு செய்தியாளர் மாற் பிராட்லே குறிப்பிடுகையில் "முன்னுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தலைவர்களில் அமெரிக்கா மற்றும் நேட்டோ மீது ஏறத்தாழ நம்பிக்கையிழந்துள்ள அதிகாரிகளின் ஒரு குழுவும் உள்ளது, அவர்கள் ரஷ்யா மற்றும் தொலைதூர கிழக்கு இராணுவ அதிகாரங்களுடன் நெருக்கமான உறவைக் கோருகின்றனர்,” என்று அறிவித்தார்.
ஆகஸ்ட் 12 அன்று ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி ஜாவித் ஜாரீஃப் அங்காராவிற்கு விஜயம் செய்தார். மேற்கத்திய தலைவர்களைப் போலில்லாமல், அவர் "ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களுக்கு எதிராக அவர்கள் காட்டிய எதிர்ப்பிற்காக துருக்கிய தேசத்தை" வாழ்த்தினார். அவர் ரஷ்யா-துருக்கி உறவுகள் வளர்வதையும், சிரியா மோதலைத் தடுக்க அவர்களது புதிய முயற்சிகளையும் பாராட்டினார். “[சிரியா] பிரச்சினையில் நாங்களும் ரஷ்யா உடன் மிகப்பெரிய உறவுகளைக் கொண்டுள்ளோம், மேலும் [அப்பிராந்தியத்தில்] மோதல்களை நிறுத்தி பாதுகாப்பு மற்றும் சமாதானத்தைக் கொண்டு வர எல்லா தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் துருக்கி மற்றும் சிரியா இரண்டுடனும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றவர் தெரிவித்தார்.
இந்த வாரம் துருக்கிய Hurriyet Daily News உடனான ஒரு நேர்காணலில் துருக்கிய பாதுகாப்பு மந்திரி Fikri Işık, உண்மையில் அங்காரா ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு நெருக்கமான மூலோபாய மற்றும் இராணுவ கூட்டணியைப் பரிசீலித்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்: “எங்கள் கூட்டாளிகளுக்கு தான் எங்கள் முன்னுரிமை என்றாலும், அவசியப்படும்போது ரஷ்யா மற்றும் சீனா உடனான கூட்டுறவில் இருந்து எங்களை அது தடுத்துவிட முடியாது. எங்கள் கூட்டாளிகளின் அணுகுமுறை துருக்கியை தள்ளிவைக்க செய்யுமானால், அது வேறு விதமான கூட்டுறவைக் கொண்டு எங்களின் தகைமையை அபிவிருத்தி செய்ய எங்களை நிர்பந்திக்கும். ரஷ்யா மற்றும் சீனா போன்ற நேட்டோவில் அல்லாத நாடுகளுக்கு நாங்கள் கதவை அடைக்க முடியாது,” என்றார்.
மத்திய கிழக்கில் ரஷ்யா, ஈரான், சீனா மற்றும் துருக்கி இடையே உறவுகள் சுமுகமாகி வருகையில், வடக்கு சிரிய நகரமான அலெப்போவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய சக்திகளுக்கு பின்னடைவு ஏற்படுள்ள நிலையில், மேற்கத்திய சக்திகள் அப்பிராந்தியத்தில் அவற்றின் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுக்க அதிகரித்த அளவில் குர்திஷ் போராளிகள் குழுக்களை அவற்றின் பினாமிகளாக கட்டமைத்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 12 அன்று துருக்கிய எல்லைக்கு அருகில் மூலோபாயரீதியில் முக்கியமான சிரியாவின் மன்பீஜ் (Manbij) நகரம், ISIL இடமிருந்து (ஈராக் மற்றும் லெவண்ட்க்கான இஸ்லாமிக் அரசு) அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஒத்துழைப்பின் கீழ் சிரிய ஜனநாயக படைகள் (SDF) மீண்டும் கைப்பற்றின. சிரிய ஜனநாயக படைகளுக்குள் பலமான சக்தியாக இருப்பது குர்திஷ் மக்களின் பாதுகாப்பு பிரிவுகள் (YPG) ஆகும். அதேநேரத்தில் ஜேர்மனி வடக்கு ஈராக்கில் குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகளுக்கு மீண்டும் ஆயுதங்கள் வினியோகிக்க தொடங்கியது.
Süddeutschen Zeitung பத்தரிகையின் செய்திப்படி, 1,500 G36 தாக்கும் துப்பாக்கிகள், 100 டாங்கி-தகர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மூன்று கவச வாகனங்கள் உட்பட சுமார் 70 டன் ஜேர்மன் ஆயுதங்கள் செவ்வாயன்று குர்திஷ் தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரான எர்பில் இற்கு வந்தது.
துருக்கியிலேயே கூட துருக்கிய பாதுகாப்பு படைகளை இலக்கில் வைத்து நடந்த தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களில் குறைந்தபட்சம் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏனைய 226 பேர் காயமடைந்ததாக வியாழனன்று துருக்கிய ஊடகங்கள் அறிவித்தன, இதற்காக குர்திஷ் கிளர்ச்சியாளர் மீது பழி சுமத்தப்பட்டன. அந்த தாக்குதல்களில் இரண்டு கிழக்கு துருக்கியின் பொலிஸ் நிலையங்களை இலக்கில் கொண்டிருந்த கார் குண்டுவெடிப்புகளாகும், அதேவேளையில் சாலையோரத்தில் நடந்த மூன்றாவது குண்டுவெடிப்பு அந்நாட்டின் தென்கிழக்கில் சிப்பாய்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஓர் இராணுவ வாகனத்தைத் தகர்த்தது.
சுதந்திர ஐரோப்பிய ஊடக களமான EurActiv நேற்று அறிவிக்கையில் அமெரிக்க-துருக்கிய கூட்டணியின் நடைமுறையளவிலான உடைவை எடுத்துக்காட்டும் ஒரு நகர்வாக, வாஷிங்டன் துருக்கியின் இன்செர்லிக் விமானத் தளத்தில் வைத்திருந்த அதன் அணுஆயுதங்களை ருமேனியாவின் Deveselu விமானத் தளத்திற்கு மாற்றத் தொடங்கி உள்ளது. பெயர் வெளியிடாத ஓர் ஆதார நபரின் கருத்துப்படி, அவ்வாறு மாற்றுவது தொழில்நுட்பரீதியிலும் அரசியல் அர்த்தத்திலும் மிகவும் சவாலானதாகும்: “20+ அணுஆயுதங்களை நகர்த்துவதென்பது அவ்வளவு சுலபமானதில்லை,” என்றார்.
மத்திய கிழக்கில் வல்லரசுகளுக்கு இடையிலான நேரடியான மோதல் அபாயம் அதிகரித்து வருகின்றன நிலையில், பதட்டங்கள் நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, மாறாக மேற்கத்திய அரசாங்கங்களுக்கு உள்ளேயே கூட வெடித்து வருகின்றன.
முன்னொருபோதும் இல்லாத நகர்வாக, பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) தலைமையிலான ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் அங்காராவை தாக்கிய ஜேர்மன் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை நிராகரித்தது. எர்டோகன் மற்றும் புட்டின் க்கு இடையிலான சந்திப்புக்குப் பின்னர், ஸ்ரைன்மையர் அறிவிக்கையில், “மாஸ்கோ இல்லாமல், ஈரான், சவூதி அரேபியா அல்லது துருக்கி இல்லாமல் சிரியா உள்நாட்டு போரில் ஒரு தீர்வு கிடைக்காது,” என்று அறிவித்தார்.