Print Version|Feedback
SEP public meeting in Colombo: Halt the attacks on living conditions! Fight for socialist policies!
கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை நிறுத்த! சோசலிச கொள்கைகளுக்காகப் போடு!
By the Socialist Equality Party (Sri Lanka)
27 July 2016
இலங்கையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும், ஜனநாயக உரிமைகள் மீதான அதன் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காத்திரமான போராட்டங்கள் அபிவிருத்தியடைந்து வருகின்றன.
இலங்கையிலான வேலை நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும், உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி சூழலில், சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, இந்தியா மற்றும் ஏனைய இடங்களிலும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் மறு எழுச்சியின் பாகமாகவே இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதாகவும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் போலி வாக்குறுதிகளை கூறியே அதிகாரத்திற்கு வந்தார். தொழிற்சங்கங்கள், போலி இடது கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் என்று அழைக்கப்படுவனவும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, வெகுஜனங்களுக்கு உள்ள ஒரே மாற்றீடு எனக் காட்டி சிறிசேனவின் தேர்வுக்கு முண்டுகொடுத்தன.
ஆட்சிக்கு வந்து வெறும் 18 மாதங்களுக்குள், சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. இது முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை தொடர்ந்தும் தொழிலாள வர்க்கத்தின் மீதே திணிப்பதற்காக, இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்த தாக்குதல்களை இன்னும் உக்கிரமாக்கியுள்ளது.
சிறிசேன, இந்திய மற்றும் இலங்கை ஆளும் தட்டுக்களின் ஒரு பகுதியின் ஆதரவுடன், அமெரிக்க சதியிலான ஒரு ஆட்சி மாற்றத்தின் வழியாகவே அதிகாரத்திற்கு வந்தார். வாஷிங்டன் இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சி முறையை எதிர்க்கவில்லை, மாறாக, பெய்ஜிங் உடன் அவர் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளையிட்டே கவலைகொண்டிருந்தது. வாஷிங்டன், சீனா மீதான அதன் போர் தயாரிப்பில் ஆசியா முழுவதும் இராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கி வருகின்ற சூழ்நிலையிலேயே, சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் அமெரிக்க முகாமின் பக்கம் நாட்டின் வெளிநாட்டு கொள்கையை திருப்பியுள்ளனர்.
சிறிசேனவை நியமிப்பதில் அமெரிக்காவின் பின்னணியை அம்பலப்படுத்தியதோடு, ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கை நிலைமைகளையும் பாதுகாக்கவும் போர் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டவும் ஒரு சோசலிச மாற்றீட்டுக்காகப் தொடர்ச்சியாகப் போராடி வரும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ) அமைப்பும் கொழும்பில் நடத்தும் பொதுக் கூட்டத்தில், இந்த சோசலிச மற்றும் அனைத்துலக வேலைத் திட்டம் பற்றி கலந்துரையாடப்படும். நாம் இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட புத்திஜீவிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
கூட்ட விவரங்கள்:
நாள்: ஆகஸ்ட் 9, செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 4:00 மணிக்கு
இடம்: கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடம்