Print Version|Feedback
Tensions rise between Russia and Ukraine after terrorist provocation
பயங்கவாத ஆத்திரமூட்டலுக்குப் பின்னர் ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையே பதட்டங்கள் அதிகரிக்கின்றன
By Bill Van Auken
12 August 2016
ரஷ்யாவின் ஆட்சிக்குட்பட்ட கிரிமியாவில் பயங்கரவாத ஆத்திரமூட்டல் பற்றிய செய்தி வெளியானதை அடுத்து ரஷ்யா உடனான பதட்டங்கள் அதிகரித்திருப்பதற்கு இடையே, மேற்கத்திய ஆதரவிலான உக்ரேனின் ஆட்சி அதன் இராணுவப் படைகளை போருக்கான உயர் எச்சரிக்கை நிலையில் நிறுத்தி இருப்பதாக அது வியாழனன்று அறிவித்தது.
அதன் பாகத்திற்கு மாஸ்கோ, கிரிமியா மீதான ஒரு தாக்குதலை எதிர்க்க ரஷ்ய கடற்படை ஒத்திகை நடவடிக்கைகளுடன் சேர்ந்து கருங்கடலில் போர் பயிற்சி ஒத்திகைகள் நடத்துவதாக அறிவித்தது.
இந்த விவகாரத்தை பாதுகாப்பு அவையில் பேசுவதற்கு அதன் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதரை வியாழனன்று அனுப்பிய உக்ரேனிய அரசாங்கம், கிரிமியாவிலும் மற்றும் உக்ரேனிய எல்லையிலும் ரஷ்யா 40,000 க்கும் அதிகமான துருப்புகளை நிறுத்தி இருப்பதாக குற்றஞ்சாட்டியது. கிரிமியா ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் வரலாற்று அடித்தளம் என்ற நிலையில், அது எப்போதுமே பெரிமளவில் அந்நாட்டு இராணுவத்தை அங்கே நிறுத்தி இருக்கும்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் விடாலி சர்கின் அக்குற்றச்சாட்டை நிராகரித்ததுடன், “எமது இராணுவத்தைக் கணக்கிடுவதற்கு பதிலாக, அவர்கள்" கிழக்கு உக்ரேனில் "மோதலுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும்,” என்று அறிவித்தார், அங்கே கியேவ் அரசு படைகள் ரஷ்ய மொழி பேசும் ஒரு பிரிவினைவாத சிறுபான்மையினரை தொடர்ந்து தாக்கி வருகிறது, ஏப்ரல் 2014 இல் இருந்து அங்கே சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிரிமியா மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு வாக்களித்த ஒரு பொது வாக்கெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட ஒரு தீபகற்ப பிராந்தியமான அதன் முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கும் நோக்கில் உக்ரேனிய அரசாங்கம் ஒரு பயங்கரவாத தாக்குதலை ஒழுங்கமைத்ததாக மாஸ்கோ, உக்ரேனிய அரசாங்கத்தை குற்றம்சாட்டுகின்றது. இந்த நகர்வு, வாஷிங்டன் மற்றும் ஜேர்மனியால் முடுக்கிவிடப்பட்டு அதிதீவிர தேசியவாத மற்றும் பாசிசவாத சக்திகள் முன்னெடுத்த பெப்ரவரி 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதி தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-ஆதரவிலான விக்டர் யானுகோவிச் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து நீக்கி ரஷ்ய-விரோத வெறிபிடித்த ஆட்சியை நிறுவிய பின்னர் நடந்தது. ரஷ்யாவை சுற்றி வளைக்க மற்றும் இராணுவரீதியில் அடிபணிய வைக்க அமெரிக்க தலைமையிலான உந்துதலைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா அந்த பதவிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தது.
ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அமெரிக்க தலைமையிலான இராணுவ கூட்டணி மிகவும் கவனித்துவருவதாக ஒரு நேட்டோ அதிகாரி AFP நிறுவனத்திற்குத் தெரிவித்தார், “கிரிமியாவில் ரஷ்யாவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கை பதட்டங்களைத் தணிப்பதற்கு உதவுவதாக இல்லை,” என்று அவர் அறிவித்தார்.
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Elizabeth Trudeau அந்த சூழலை "மிகவும் அபாயகரமானதாக" குறிப்பிட்டதோடு, “கிரிமியா உக்ரேனின் பாகமாக உள்ளது" என்ற வாஷிங்டனின் நிலைப்பாட்டை மீளவலியுறுத்தினார்.
உக்ரேன் ஒழுங்கமைத்த சிறப்பு நடவடிக்கைகள் குழு கிரிமிய பிராந்தியத்திற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துவதாக கூறும் ரஷ்யாவின் கருத்தை இருவருமே உதறித் தள்ளினர்.
உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதான உளவுத்துறை இயக்குநகரத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஆகஸ்ட் 6-7 அன்று இரவு அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறி, ரஷ்யாவின் அரசு பாதுகாப்புத்துறை அமைப்பு, FSB, புதனன்று ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டது. ஆகஸ்ட் 8 அன்று கூடுதல் ஊடுருவல் முயற்சிகள் மீண்டும் செய்யப்பட்டன.
உக்ரேனிய கையாட்களின் நோக்கம் கிரிமியாவில் "முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் வாழ்க்கைக்கு ஆதரவளிக்கும் வசதியிடங்களை" இலக்கில் வைத்திருந்த நிலையில், அவர்களைக் கைது செய்யும் முயற்சியில் ஒரு FSB உளவாளி கொல்லப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. அந்நடவடிக்கைக்கு ஆதரவாக ஆயுதமேந்திய கவச வாகனங்கள் உள்ளடக்கிய உக்ரேனிய இராணுவ பிரிவுகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு ரஷ்ய சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன.
“மொத்தம் 40 கிலோ TNT வெடிமருந்துகளுடன் 20 வெடிகுண்டு சாதனங்களும்", அவற்றுடன் கண்ணிவெடிகள், கிரனைட்டுக்கள் மற்றும் தாக்குதலுக்கான சிறப்பு ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக FSB அறிவித்தது.
அந்த அமைப்பு அது கூறியதற்கு ஆதாரமாக, Yevgeniy Aleksandrovich Panov என்று அடையாளம் காணப்பட்ட சிறப்பு படைப்பிரிவுகளின் ஒரு தலைவரும் உக்ரேனிய இராணுவ உளவுத்துறையின் ஒரு கையாள் என்று கூறப்படும் ஒரு உக்ரேனியரைக் கொண்டு வந்து காட்டியது.
கிரிமியாவின் பிரதம மந்திரி Sergei Aksyonov கூறுகையில், பயங்கரவாத நடவடிக்கைகளின் நிஜமான மூல ஆதாரம் வாஷிங்டன் ஆகும் என்று குற்றஞ்சாட்டியது. “அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உக்ரேனிய அதிகாரிகளுக்கு தைரியம் கிடையாது … அவை அவர்களின் சொந்த நடவடிக்கைகளோ, சேதிகளும் இல்லை,” என்று கூறிய அவர் தொடர்ந்து கூறுகையில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அவர்களுக்குப் பின்னால் இருந்து தூண்டிவிட்டு கொண்டிருக்கிறது,” என்றார்.
இவ்வாறு நடந்திருக்கலாமென சந்தேகிக்க அங்கே எல்லாவிதத்திலும் காரணம் உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க பொய்யுரைகள் மற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கான முழக்கத்திற்கு இடையே கிரிமியா மீதான ஆத்திரமூட்டல் வருகிறது. ரஷ்ய விமானப்படை பலத்தால் நெருக்கமாக ஆதரிக்கப்பட்டுள்ள சிரிய அரசு படைகளின் வெற்றிகளைத் தலைகீழாக்கும் ஒரு முயற்சியில் அமெரிக்கா சிரியாவில் அல் கொய்தா தொடர்புபட்ட இராணுவ போராளிகள் குழுக்களுக்கு ஆயுதங்களும் நிதியுதவிகளும் வழங்குவதை அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 1 அன்று அமெரிக்க ஆதரவிலான ஜிஹாதிஸ்டுகள், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு ரஷ்ய ஹெலிகாப்டரை, அதில் ஐந்து பேர் இருந்த நிலையிலேயே, சுட்டுவீழ்த்தியது. ஊடங்களில், அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்பில் உள்ள முன்னாள் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் கட்டுரையாளர்கள், ரஷ்ய ஆதரவிலான படைகளுக்கு எதிராக அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கும் மற்றும் "விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட மண்டலத்தை" அறிவிப்பது ரஷ்ய விமானப்படையுடன் தவிர்க்கவியலாமல் ஒரு மோதலுக்கு செல்லும் என்றாலும் அதை திணிப்பதற்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.
உக்ரேனிலேயே கூட, செல்வந்தர் பெட்ரோ பொறோஷென்கோ தலைமையிலான நெருக்கடியில்-சிக்கியுள்ள வலதுசாரி கியேவ் ஆட்சியின் இராணுவத்தைக் கட்டமைக்க வாஷிங்டன் வேலை செய்துள்ளது. பாசிசவாத தலைமையில் உள்ள போராளிகள் குழுக்களது அங்கத்தவர்களை உள்ளடக்கிய உக்ரேனிய படைகளுக்குப் பயிற்சியளிக்க மேற்கு உக்ரேனின் நிலத்தில் அமெரிக்கா இப்போதும் 500 பலமான படைப்பிரிவை நிறுத்தியுள்ளது, அதேவேளையில் ஆயிரக் கணக்கில் இல்லையென்றாலும் நூற்றுக் கணக்கான ஏனைய அமெரிக்க இராணுவ சிப்பாய்களும் ஒப்பந்ததாரர்களும் வழமையாக அந்நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதம், கருங்கடலில் ரஷ்யாவிற்கு சவால் விடுக்கும் நோக்கில் அமெரிக்க கடற்படை "Sea Breaze” ஒத்திகைகளில் உக்ரேனிய போர்க்கப்பல்களுடன் இணைந்தது. ஜூலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி பொறோஷென்கோ உடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனுக்கு விஜயம் செய்தபோது, அங்கே அவர் கிரிமியா மீதான கியேவ் ஆட்சியின் உரிமைகோரலை வாஷிங்டன் ஆதரிக்குமென வலியுறுத்தினார்.
உக்ரேன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான அபாயகரமான போர் பதட்டங்கள் ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே கட்டவிழ்ந்துள்ளன, இதில் ஜனாதிபதி போட்டியில் முன்னணியில் உள்ளவரும், ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், குறிப்பாக ரஷ்யா மீதான பிரச்சினையில் பாசிசவாத குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் ஐ வலதிலிருந்து தாக்குகிறார்.
ட்ரம்ப் ஐ விளாடிமீர் புட்டினின் ஒரு கைப்பாவையாக குற்றஞ்சாட்டி அவருக்கு எதிரான ஒரு நவ-மக்கார்த்தியிச பிரச்சாரத்தை ஜனநாயகக் கட்சியினர் நடத்துகின்ற அதேவேளையில் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கான தேர்தல்களில் கிளிண்டனுக்கு சவால் விடுத்த செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் க்கு எதிராக மோசடி செய்த முயற்சிகளை அம்பலப்படுத்தும் விதத்தில் ஜனநாயக கட்சியின் தேசிய குழு மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிடுவதற்கு பின்னால் ரஷ்யா ஜனாதிபதி இருந்தார் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உக்ரேன் மீதான குடியரசுக் கட்சி செயல்திட்டத்தின் குறிப்புகளை ட்ரம்ப் இன் பிரச்சாரம் "குறைத்துக்காட்டப்பட்டுள்ளது" என்பதும் ட்ரம்ப் க்கு எதிராக கொண்டு வரப்படும் குற்றச்சாட்டாகும், மீண்டும் இதுவும் ஆதாரமின்றி உள்ளது. உண்மையில் அந்த குறிப்புகளானது, "ரஷ்யா மீளெழுச்சி பெற" துணைபோவதற்காக ஒபாமா நிர்வாகத்தைக் குற்றஞ்சாட்டுகிறது, மாஸ்கோவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்கிறது மற்றும் "உக்ரேனின் ஆயுதப் படைகளுக்கு உரிய உதவிகளை வழங்க" அழைப்புவிடுக்கிறது. “உயிர்பறிக்கும் ஆயுதங்களை" அவர்களுக்கு வினியோகிப்பதற்கான குறிப்பை அது விட்டுவிட்டது என்பது தான் குறையாக இருந்தது, இது ஒபாமா நிர்வாகம் அதுவே கூட செய்வதில்லை என்று கூறி வரும் ஒன்றாகும்.
அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் முக்கிய பிரமுகர்களிடம் இருந்தும் அத்துடன் அதிகரித்த எண்ணிக்கையில் குடியரசு கட்சி கொள்கை வகுப்பாளர்களிடம் இருந்தும் அதிகரித்த ஆதரவுடன், கிளிண்டன் அதுபோன்ற கொள்கைகளை வலதிலிருந்து தாக்குகிறார். கிரிமியாவில் நடத்தப்பட்டதைப் போன்ற ஆத்திரமூட்டல்கள் அனேகமாக தூண்டுதலுக்குச் சேவையாற்றுகின்ற நிலையில், கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடன் ஒரு நேரடியான இராணுவ மோதலைக்கு தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளை உள்ளடக்கும் அதுபோன்றவொரு அபாயகரமான தீவிர மோதல் நவம்பர் வரையில் தள்ளிப்போனாலும் கூட அது ஒரு பகிரங்கமான பிரச்சினையாக இருந்து வருகிறது.