Print Version|Feedback
Growing disquiet in Washington over Russian-Iranian actions in Syria
சிரியாவில் ரஷ்ய-ஈரானிய நடவடிக்கைகள் தொடர்பாக வாஷிங்டனில் அமைதியின்மை அதிகரிக்கிறது
By Bill Van Auken
18 August 2016
சிரியாவிற்குள்ளான இலக்குகள் மீது தாக்குவதற்காக இரண்டாவது நாளாய் புதனன்று ஈரானின் வடமேற்கில் இருக்கும் ஒரு வான் தளத்தை ரஷ்யக் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தின. அந்த இலக்குகள், அலெப்போ நகரைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக சிரிய அரசாங்கத்தின் படைகளுடன் போரிட்டு வருகின்ற ஜிகாதிய குடிப்படைகளுக்கு ஆதரவான ஆயுதக் கிடங்குகளாகவும் உத்தரவு மையங்களாகவும் செயல்பட்டதாக ரஷ்யா விவரித்தது.
Tupolev-22M3 நெடுந்தூர குண்டுவீச்சு விமானங்களாலும் SU-34 தந்திரோபாய குண்டுவீச்சு விமானங்களாலும் நடத்தப்பட்ட இந்த விமானத் தாக்குதல்கள், அல்கெய்தாவுடன் தொடர்புபட்ட குடிப்படை குழுக்களுக்கு எதிராகவும், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், சென்ற செப்டம்பரில் ரஷ்யா தொடக்கிய குண்டுவீச்சுப் பிரச்சாரத்தை நடத்துவதற்காக முதன்முறையாக மூன்றாவது நாடு ஒன்றின் தளத்தை அது பயன்படுத்திய நிகழ்வாக இருந்தது.
இந்த நெடுந்தூர விமானங்கள், சிரியாவிற்குள் ரஷ்யா வைத்திருக்கும் தளத்தில் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகப் பெரியவை ஆகும். முன்னதாக அவை தெற்கு ரஷ்யாவில் இருந்து பறந்து வந்திருந்தன. ஈரானியத் தளங்களைப் பயன்படுத்துவது விமான நேரத்தை 60 சதவீதம் வரை குறைக்கிறது என்பதோடு, விமானம் பெரும் அளவிலான குண்டுகளை சுமந்துசெல்வதற்கும் வகைசெய்கிறது.
இந்த நடவடிக்கை வாஷிங்டனின் ஆளும் ஸ்தாபகத்திற்குள்ளாக அமைதியின்மையின் வெளிப்பாடுகளை தூண்டிவிட்டுள்ளது. சிஐஏ, பெண்டகன் மற்றும் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கட்டார் உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்தியக் கூட்டாளிகளால் ஆயுதங்களும் நிதியாதாரமும் அளிக்கப்படுகின்ற இஸ்லாமிய பிரிவினைவாத குடிப்படை குழுக்களை நம்பி சிரியாவில் ஆட்சியை மாற்றுவதற்காக அமெரிக்க ஆதரவுடன் நடந்து வருகின்ற ஐந்து ஆண்டு காலப் போர், ஒரு வெளிப்படையான தோல்விக்கு முகம்கொடுத்து நிற்கின்ற நிலை குறித்து அதன் கவலை மேலும் மேலும் அதிகரித்துச் செல்கிறது.
ஈரானிய தளத்தைப் பயன்படுத்தியதற்காக வெளியுறவுத் துறையின் உத்தியோகபூர்வ கண்டனத்தைத் தவிர, அலெப்போவிலான மனிதாபிமான நெருக்கடியை அதிகமான அமெரிக்கத் தலையீட்டுக்கான சாக்காகப் பயன்படுத்தி, சிரியாவில் இன்னும் கூடுதல் மூர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக ஒபாமா நிர்வாகத்தினைக் குற்றம்சாட்டுகின்ற தலையங்கங்கள் மற்றும் செய்திக் கட்டுரைகளின் ஒரு அதிகரித்த அலையும் இருந்தது.
ஈரானில் இருந்து ரஷ்ய விமானத் தாக்குதல்கள் குறித்து வெளியான செய்திகளுக்கு பதிலிறுத்த வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரான மார்க் டோனர் ரஷ்யாவை இரண்டாவது நாளாக புதன்கிழமையன்றும் விமர்சனம் செய்தார். “அலெப்போவில் மற்றும் அதனைச் சுற்றி ஏற்கனவே இருக்கின்ற ஒரு மிக அபாயகரமான நிலைமையை இது தொடர்ந்து சிக்கலாக்குகின்றது என்பதால் இந்த நடவடிக்கை உதவிகரமான ஒன்றாக இல்லை” என்று அவர் அறிவித்தார்.
மக்களின் ஒரு சிறுபகுதியினர் ஜிகாதிப் போராளிக் குழுக்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்து வருகின்ற பகுதியான கிழக்கு அலெப்போ மீதான அரசாங்கத்தின் முற்றுகையை உடைக்கும் நோக்கத்துடனான ஒரு “கிளர்ச்சி” தாக்குதல் நிறுத்தப்படுவதுதான் அமெரிக்காவை கவலைக்குள்ளாக்கியிருக்கின்ற அந்த “சிக்கல்”. அமெரிக்காவினாலும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளாலும் கனரக ஆயுதங்கள் உள்ளிட்ட பாரிய அளவிலான ஆயுதங்கள் பாய்ச்சப்பட்டு தயாரிப்பு செய்யப்பட்டிருந்த ஒரு தாக்குதலின் மூலமாக, ஒட்டுமொத்த நகரத்தையும் வெற்றிகாணும் விளிம்பில் தாங்கள் இருந்ததாக அல்கெய்தா சக்திகள் ஏற்கனவே பெருமையடித்திருந்தன. எனினும், சிரிய அரசாங்கத்தின் படைகள், லெபனானின் ஹெஸ்போல்லா இயக்கப் போராளிகளின் உதவியோடும், ரஷ்ய விமானத் தாக்குதல்களின் ஆதரவோடும், மேற்கத்திய ஆதரவு கொண்ட இஸ்லாமியவாதிகளது ஆரம்பகட்ட வெற்றிகளையும் தோற்றப்பாட்டளவில் தலைகீழாக்கியுள்ளன.
இந்தத் தலைகீழ் நிலை, அலெப்போவின் துயரநிலை குறித்த பிரச்சாரத் தாக்குதலுக்கு தூண்டிவிட்டிருக்கிறது. நகரின் மேற்குப் பகுதியில் அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழான பகுதியில் வாழும் அலெப்போவின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக, “கிளர்ச்சியாளர்கள்” நடத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சு மற்றும் விஷ வாயுத் தாக்குதல்களை எல்லாம் இந்தப் பிரச்சாரத் தாக்குதல் ஏறக்குறைய முற்றிலுமாய் அலட்சியம் செய்துவிடுகிறது. உடனடியான சண்டைநிறுத்தத்திற்கும் தனது பினாமிப் படைகளுக்கு விநியோகத்தை மீண்டும்சீர் செய்ய வசதியாக “மனிதாபிமான கூடங்களை” திறந்து விடுவதற்கும் வாஷிங்டன் அழுத்தமளித்து வருகிறது.
ரஷ்ய-ஈரான் நடவடிக்கையானது ஒருவிதத்தில், ஒரு வருடத்திற்கும் சற்று முந்திய காலத்தில் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஏற்பட்ட உடன்பாட்டின் பகுதியாக ஏற்கப்பட்டிருந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றை மீறியதாக இருப்பதாகவும் வெளியுறவுத் துறை கடந்த இருநாட்களின் சமயத்தில் அறிவுறுத்தி வருகிறது. அணுஆயுதங்களை விநியோகிக்க பயன்படுகின்ற எந்த ஆயுத முறையையும் விற்பனை செய்வதற்கு அல்லது இடம்மாற்றுவதற்கு தடைவிதிப்பதான மொழியும் இதிலடங்கும். இந்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையற்றதாக இருக்கிறது, ஏனென்றால் ரஷ்யா தனது போர் விமானங்களை ஈரானின் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை, மாறாக அந்நாட்டின் தளங்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் “மிதவாத எதிர்ப்பு இலக்குகளை” தாக்கியிருந்ததாக இருநாட்களிலுமே வெளியுறவுத் துறை குற்றம்சாட்டிய அதேநேரத்தில், இந்த மிதவாதிகள் என்றழைக்கப்படுபவர்களின் அடையாளம் குறித்த எந்த விவரங்களையும் வழங்கத் தவறியது. உண்மை என்னவென்றால் அங்கு களத்தில் ஆதிக்கம் மிகுந்த சக்தியாக இருப்பது அல் நுஸ்ரா முன்னணி ஆகும். இந்த சிரிய அல்கெய்தா தொடர்பு அமைப்பானது சென்ற மாதத்தில் தனது பெயரை மாற்றிக் கொண்டதோடு, மற்ற இதேபோன்ற சலாபிச ஜிகாதிப் போராளிக்குழுக்களுடன் சேர்ந்து, அல் கெய்தாவுடன் சம்பிரதாயபூர்வமாக இணைப்பை முறித்துக் கொண்டது. “மிதவாதிகளை” அல்கெய்தாவுடன் தொடர்புபட்டவையிடம் இருந்து பிரித்து விடுவதாக அமெரிக்கா சூளுரைத்திருந்த அதேநேரத்தில், சிஐஏ இனால் ஆயுதங்களும் நிதியும் அளிக்கப்படும் மனிதர்கள், இந்த சக்திகளுடன் முழுமையாக ஒருங்கிணைந்திருப்பதால் அதை அதனால் செய்யமுடியாமல் இருக்கிறது.
மத்திய கிழக்கில் இராணுவரீதியாக தனது சவாலற்ற மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, அமெரிக்கா செய்து வருகின்ற 25 ஆண்டு கால முனைப்புக்கு, ஒரு தடைக்கல்லாக செயல்படத்தக்க ஒரு கூட்டணி எழுந்து விடக் கூடுமோ என்பதுதான் அமெரிக்காவிலான உண்மையான கவலையாக இருக்கிறது. ரஷ்ய-ஈரான் உடன்பாடானது ஷாவின் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்தை தூக்கிவீசிய 1979 புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் முதன்முறையாக ஈரானியத் தளங்களில் இருந்து ஒரு வெளிநாட்டு இராணுவம் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டதை குறித்து நிற்கிறது.
இந்த உடன்பாட்டின் அடித்தளத்தில், முன்னதாக ஈரானுக்கு ரஷ்யா தரையிலிருந்து வானில் பாய்ந்து தாக்கும் S-300 ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை வழங்குவதற்கு வகைசெய்தது. முன்னதாக இது, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஐ.நா விதித்த தடைகளின் இறுக்கப்பிடியின் காரணத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. ஏவுகணை அமைப்பின் பாகங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டிருந்ததாக, ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரஷ்ய விமானங்கள், ஈரானில் இருந்து, பிரதமர் ஹைதர் அல்-அபாதியின் அமெரிக்க-ஆதரவு அரசாங்கத்தின் அனுமதியுடன் ஈராக்கிய பிராந்தியத்தின் ஊடாக பறப்பது அமெரிக்காவுக்கு இன்னும் உடன்பாடற்ற ஒரு சூழ்நிலையாக இருக்கிறது. விமானந்தாங்கிக் கப்பலில் இருந்தான ஏவுகணைகளை காஸ்பியன் மற்றும் மத்தியதரைக்கடல் பகுதியில் இருந்து ஈராக்கிய பிராந்தியத்தின் ஊடாக ஏவுவதற்கு அபாதி அரசாங்கம் ரஷ்யாவுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
அமெரிக்காவின் கோணத்தில், நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாக, செவ்வாயன்று சீன அரசாங்கம் சிரியாவில் ஆசாத் அரசாங்கத்துடன் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புக்கு முயல்வதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான அலுவலகத்தின் இயக்குநரான குவாய் யூஃபே, டமாஸ்கஸ் விஜயம் செய்து, சிரியாவின் உயர் அதிகாரிகளை சந்தித்தார். அப்போது சிரிய அரசாங்கப் படைகளுக்கு அதிகமான இராணுவ உதவி மற்றும் பயிற்சியை வழங்குவதற்கு அவர் உறுதியளித்தார். சிரியாவில் இருந்த சமயத்தில் குவான் ஒரு மூத்த ரஷ்ய தளபதியையும் சந்தித்துப் பேசினார். ISIS மற்றும் சிரியாவின் அல் கெய்தா இரண்டிலும், சீனாவின் ஜின்ஜியாங் பிராந்திய உய்குர் மக்களில் இருந்தான இஸ்லாமியவாதிகள் பங்கேற்றிருப்பதை, சிரியாவுடன் தமது ஈடுபாட்டை அதிகப்படுத்துவதற்கான காரணங்களில் ஒன்றாக சீன அதிகாரிகள் எடுத்துக்காட்டினர்.
சொல்லப்போனால் இன்னும் கவலையளித்திருப்பது, சென்ற மாதத்தில் துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுக்கு எதிராக நடந்த ஒரு கருச்சிதைந்த கவிழ்ப்புமுயற்சியை அடுத்து - இந்த முயற்சிக்கு அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளது ஆதரவு இருந்தது என்பதையே அறிகுறிகள் அனைத்தும் சுட்டிக்காட்டின - ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு வலுப்பட்டிருப்பது தான். ஜூலை 15 இராணுவ சதிக்குப் பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தில், எர்டோகன் சென்ற வாரத்தில் ரஷ்யாவின் இரண்டாம் நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பேர்கிற்கு விஜயம் செய்து புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். துருக்கியும் ரஷ்யாவும் ISISக்கு எதிரான ஒரு கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஒரு ஆலோசனை “மேசை மீது வைக்கப்பட்டிருந்ததாக” பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் துருக்கிய வெளியுறவு அமைச்சரான Mevlüt Çavuşoğlu கூறினார்.
இதனைப் பின்தொடர்ந்து ரஷ்ய கூட்டமைப்பு பாதுகாப்பு கமிட்டியின் ஒரு உறுப்பினரான செனட்டர் விக்டர் ஓசிரோவிடம் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது: ”[சிரியாவிலான] பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக தனது இன்சிர்லிக் (Incirlik) தளத்தை துருக்கி ரஷ்ய வான்வெளிப் படைகளுக்கு வழங்கக் கூடும்.” ஆயிரக்கணக்கிலான அமெரிக்க விமானப் படை மனிதர்களுக்கும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்குமான தளமாக இன்சிர்லிக் இப்போது சேவை செய்து வருகிறது. கருக்கலைந்த கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாக அது செயலாற்றியதற்குப் பின்னர் அதன் நிலை ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக ஆனது. அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்சம் 50 அமெரிக்க அணு ஆயுதங்களது பாதுகாப்பையும் அது கேள்விக்குள்ளாக்கியது.
செவ்வாயன்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் வெளியிட்ட அதன் மூலோபாய ஆய்வாளரும் நீண்டகால பெண்டகன் ஆலோசகருமான அந்தோனி கோர்டஸ்மன் மூலம் உருவாக்கப்பட்டிருந்த ஒரு ஆய்வறிக்கையில் சிரியாவில் அமெரிக்கக் கொள்கை சிதறியோடிக் கொண்டிருப்பதே மையப்பொருளாய் இருந்தது.
சூழ்நிலை “MENA [Middle East and North Africa] பிராந்தியத்தின் வருங்காலத்திற்கும் மற்றும் அமெரிக்காவின் மூலோபாய நலன்களுக்கும் தீவிரமான அச்சுறுத்தலாய் இருப்பதாக” கூறிய கோர்டஸ்மன் அமெரிக்காவின் போர்க் கொள்கை குறித்து எந்த தீவிரமான பொது விவாதமும் இல்லாமலிருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார்: “அமெரிக்காவின் தேசிய வரலாற்றில் முதன்முறையாக, அது பல போர்களுக்கு மத்தியில் இருக்கின்ற நிலையில், அந்தப் போர்களில் எதுவும் எங்கே செல்கின்றன அல்லது அவற்றின் நீண்டகாலத் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை தீவிரமாக விவாதிக்காமல் அல்லது கலந்துரையாடாமலேயே ஒரு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் கடந்து சென்று விடக் கூடும்.”
சிரியாவிலான அபிவிருத்திகள் “வெறுமனே ஒரு பாரிய மற்றும் நீடித்த மனிதாபிமான கொடுங்கனவு மட்டுமல்ல, அது ஒரு மூலோபாய கொடுங்கனவும் கூடத் தான்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். மோதலில் ரஷ்யா மற்றும் ஈரானின் பாத்திரம் அதிகரித்துச் செல்வதையும் அசாத் அரசாங்கம் அநேகமாகப் பிழைத்துக் கொள்ளும் சாத்தியமிருப்பதையும் குறிப்பாக அவர் சுட்டிக் காட்டினார்.
”இந்தப் பிரச்சினைகளை தீர்க்க இதுவரை அமெரிக்கா எதுவும் செய்ததாகத் தெரியவில்லை” என்று கோர்டஸ்மன் எழுதுகிறார். “ரஷ்யாவுடனான, வெளியுறவுச் செயலர் கெர்ரியின் பேச்சுவார்த்தைகள், அசாத்தை ஆதரிப்பதில் ரஷ்யாவுக்கு கூடுதல் செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கியதற்கு சற்று அதிகமாக செய்திருக்கின்ற வேளையில், அமெரிக்கா ISIS மீது கவனத்தை குவிக்கிறது - இத்தெரிவுகள் ஈரானுக்கும் சக்தியளிக்கின்றன என்பதோடு, அமெரிக்கா ISIS ஐ தோற்கடிக்கும் பட்சத்தில் சிரியாவில் உண்மையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த இன்றியமையாத கேள்விகளையும் எழுப்புகிறது.”
இதே கேள்வியை அமெரிக்காவின் இராணுவத் தலைமையும் கேட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறி, வடக்கு சிரியாவில் மன்பிஜ் நகரை வெற்றிகண்டதன் பின்னர், அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைத் துருப்புகளின் ஆதரவுடன் போரிட்டு வருகின்ற அமெரிக்க ஆதரவுப் படைகள், துருக்கியின் எல்லையை நோக்கி தப்பி ஓடிக் கொண்டிருந்த ISIS உறுப்பினர்கள் நிரம்பிய 100 முதல் 200 வரையான டிரக்குகள் மற்றும் கார்களின் ஒரு அணிவரிசை பாதுகாப்பாகச் செல்ல அனுமதித்தன என்ற செய்தியில் வெளிப்படுகிறது. இந்தப் படைகள் என்றோ ஒரு நாள் சண்டையிடுவதற்காக - அசாத்திற்கு எதிராக என்றே அமெரிக்கா நம்பும் என அனுமானிக்கலாம் - உயிர்வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளதே இதன் நிகரவிளைவு.
ஒபாமா நிர்வாகம் தனது இராணுவ முயற்சிகளை ரஷ்யாவுக்கு எதிரான சுற்றிவளைப்பு மற்றும் போர்த் தயாரிப்பில் குவிக்க தெரிவு செய்து, சிரியாவில் அமெரிக்காவின் ஈடுபடுத்தத்தை மட்டுப்படுத்துவதற்கு முனைகின்ற அதேவேளையில், அசாத்தின் அரசாங்கம் மறுஸ்திரப்படுவதையோ அல்லது டமாஸ்கசில் ரஷ்யாவுடன் அணிவகுத்துள்ள எந்த ஒரு ஆட்சியும் வலுப்படுவதையோ ஏற்றுக்கொள்ள அது தயாராய் இல்லை. ரஷ்யா, ஈரான், சீனா மற்றும் அநேகமாய் துருக்கி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பான நடவடிக்கைகள் குறித்து அதிகரிக்கும் பதட்டங்கள் உலகளாவிய அளவில் பேரழிவுகரமான விளைவுகளைக் கொடுக்கக் கூடிய ஒரு இராணுவ மோதலின் அச்சுறுத்தலை முன்வைக்கின்றன.