Print Version|Feedback
The social roots of unrest in Milwaukee, Wisconsin
விஸ்கான்சின் மில்வாக்கி அமைதியின்மையின் சமூக வேர்கள்
Niles Niemuth
16 August 2016
ஆழமாக வேரூன்றிய சமூக கோபம் மீண்டுமொருமுறை பொலிஸ் வன்முறைக்கு எதிராக ஓர் அமெரிக்க நகரில் கொதித்துக் கொண்டிருக்கிறது. இம்முறை போராட்டங்கள், இதுவரையில் அடையாளம் காணப்படாத ஆபிரிக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஒருவர், 23 வயதான ஒரு ஆபிரிக்க அமெரிக்கர் Sylville K. Smith ஐ சனியன்று இரவு படுகொலை செய்ததைத் தொடர்ந்து விஸ்கான்சின் மில்வாக்கியின் அண்டை பகுதியான ஷெர்மன் பார்க்கில் வெடித்துள்ளன.
அண்ணளவாக 100 பேர் ஸ்மித் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே எதிர்ப்பைகாட்ட சனியன்று இரவு ஒன்றுதிரண்டனர். அன்றைய இரவு அண்மித்து விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன அத்துடன் ஒரு எரிவாயு நிரப்பும் நிலையம், ஒரு வங்கி கிளை மற்றும் வாகன பாகங்கள் விற்கும் கடை தீயிட்டு கொளுத்தப்பட்டதில் போய் முடிந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய பொலிஸ் கார்கள் மற்றும் இதர வாகனங்கள் சேதமாக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போராட்டங்களின் போது பொலிஸ் 31 பேரை கைது செய்தது.
குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் ஐ ஆதரிக்கும் மில்வாக்கி உள்ளாட்சியின் ஷெரீஃப் உம் ஒரு முக்கிய ஆபிரிக்க அமெரிக்கருமான டேவிட் கிளார்க் இன் வேண்டுகோளினது பேரில், விஸ்கான்சின் ஆளுநர் ஸ்காட் வால்கர் தேசிய பாதுகாப்புப்படைக்கு அழைப்புவிட்டார். சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட மில்வாக்கி பொலிஸ் துறை அதிகாரிகள் (MPD) மற்றும் வழமையான பொலிஸ் ரோந்துப்படைகளுக்கு கூடுதலாக, நகர அதிகாரிகள் அவசியமென கேட்டுக் கொண்டால் போராட்டக்காரர்களுக்கு விடையிறுப்பதற்காக குறைந்தபட்சம் 100 பேர் பின்புலத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்தனர்.
அந்நகரில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு விடையிறுப்பதற்காக தேசிய பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்தும் உத்தரவை வால்கர் பிறப்பித்திருப்பது, 2014 க்குப் பின்னர் இது இரண்டாவது முறையாகும். இராணுவத்தின் ஒரு பிரிவான தேசிய பாதுகாப்புப்படை 2014 இல் மிசோரி ஃபேர்குஷன் இல் மற்றும் 2015 இல் மேரிலாந்து பால்டிமோரில் மக்கள் போராட்டங்களை நொறுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
மில்வாக்கியில் ஸ்மித் கொல்லப்பட்டதுதான் போராட்டங்களுக்கான உடனடி காரணமாக இருந்தாலும், பரந்த பிரச்சினைகள் சம்பந்தப்பட்டுள்ளன என்பது தெளிவானது. அவற்றில் சம்பந்தப்பட்டிருப்பது இனப்பாகுபாடுகள் அல்ல, மாறாக அமெரிக்க நிதியியல் உயரடுக்கால் தொடுக்கப்பட்ட ஒருதலைபட்சமான வர்க்க போர் ஆகும். அமெரிக்காவின் பல நகரங்களைப் போலவே, மில்வாக்கியும் தசாப்தங்களாக தொழிற்சாலைகள் மூடல் மற்றும் நிதியியல்மயமாக்கல் (financialization) ஆகியவற்றால் சீரழிக்கப்பட்டதால், இது 1920 களுக்குப் பின்னர் இருந்து உயர்ந்த மட்டத்திலான சமத்துவமின்மையை உருவாக்கி உள்ளது. பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு கண்ணியமான சம்பளங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய தொழிற்சாலைகள் ஏறத்தாழ அனைத்துமே அழிந்துவிட்டன.
இந்நகரம் 1960 மற்றும் 2010 க்கு இடையே அதன் முக்கால்வாசி தொழில்துறை வேலைகளை இழந்துள்ளது. உற்பத்தித்துறை வேலைவாய்ப்பு அழிந்ததால் குறிப்பாக அது அந்நகரின் கறுப்பின தொழிலாளர்கள் மீது பாதிப்பைக் கொண்டிருந்தது. 1970 இல் இருந்து 2010 வரையில், மகாநகர மில்வாக்கி பிராந்தியத்தில் 16 இல் இருந்து 64 வயதான கறுப்பின மக்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 73.4 சதவீதத்தில் இருந்து 44.7 சதவீத அளவிற்கு செங்குத்தாக வீழ்ச்சி அடைந்தது.
2014 இல் அந்நகரின் மொத்த வறுமை விகிதம் 29 சதவீதமாகும், இது தேசிய விகிதத்தை விட அண்மித்து இரண்டு மடங்கு அதிகம். 18வயதான மற்றும் அந்த வயதிற்குக் குறைந்த வயதுடைய குழந்தைகள் மற்றும் இளைஞர் தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், இவற்றுடன் 42 சதவீதத்திற்கும் அதிகமாக ஏழைகள் அதிகரித்து வருகிறார்கள். ஷெர்மன் பார்க் அண்டைபகுதியில் மக்கள்தொகையில் 43 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்கள் வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள்.
ஜனாதிபதி பராக் ஒபாமா ஷெர்மன் பார்க் பகுதிக்கு விஜயம் செய்திருந்தது மிகவும் பொருத்தமாகவுள்ளது. அங்கே அப்பகுதியில் எஞ்சியிருந்த ஒருசில தொழில்துறை ஆலைகளில் ஒன்றான Master Lock ஆலையில் 2012 இல் அவர் உரையாற்றினார். மலிவு கூலி உற்பத்தி வேலைகளை "உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு" Master Lock கை ஒரு சிறந்த உதாரணம் என்று ஒபாமா புகழ்ந்தார். ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமான பதவி காலத்தில் ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவின் சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையின் மலைப்பூட்டும் மட்டங்களைச் சீர்செய்ய தொடங்கும் ஒரேயொரு திட்டத்தையோ அல்லது நடவடிக்கையையோ முன்மொழியவில்லை.
வறுமை மற்றும் சமத்துவமின்மையின் வளர்ச்சி, சமூக கோபத்தின் வெடிப்பு மற்றும் பொலிஸ் படைகளை கட்டியமைப்பது ஆகியவை ஒரே வர்க்க இயக்கவியலின் ஒன்றோடொன்று பிணைந்த கூறுபாடுகளாகும். 2011 இன் போக்குவரத்து நிறுத்த புள்ளிவிபர பகுப்பாய்வு, ஆபிரிக்க அமெரிக்க ஓட்டுனர்களை விட வெள்ளையின ஓட்டுனர்கள் நகர பொலிஸாரால் ஏழு மடங்கு அதிகமாக ஓட்டும்உரிமை பறிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று காட்டுகின்ற நிலையில் இனவாதம் என்ன பாத்திரம் வகித்தாலும் சரி, அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் தொடுக்கப்படும் போர் தொழிலாள வர்க்கத்தின் எல்லா இனத்தவர்களையும் நோக்கி திருப்பிவிடப்பட்டதாகும்.
பொலிஸ் வன்முறை பிரச்சினையை பார்க்கையில், அமெரிக்காவில் பொலிஸால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் வெள்ளையினத்தவர்களே என்பதை மீண்டுமொருமுறை வலியுறுத்துவது அவசியமாகிறது. சமூக கோபத்திற்கு எரியூட்டி வரும் நிலைமைகளைப் பொறுத்த வரையில், இவை இனங்களை கடந்து நிற்கின்றன. அமெரிக்காவில் உள்ள ஏழைகளில் பெரும்பான்மையினர் வெள்ளையினத்தவர்களாவர், கடந்த பல தசாப்தங்களாக வெள்ளையின தொழிலாளர்கள் அவர்களது வாழ்க்கை நிலைமைகளில் மிகவும் அழிவுகரமான வீழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் வெள்ளையின தொழிலாள வர்க்கத்திடையே இறப்புவிகிதம் மலைப்பூட்டும் அளவிற்கு அதிகரித்திருப்பதை தான் ஒருவர் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஆபிரிக்க அமெரிக்கர்களைப் பொறுத்த வரையில், அமெரிக்க வாழ்வில் மிகவும் குறைவாகவே குறிப்பிடப்படும் உண்மையாக இருந்தாலும் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று கடந்த நான்கு தசாப்தங்களாக ஆபிரிக்க அமெரிக்க மக்களிடையே அதிகரித்திருக்கும் சமூக சமத்துவமின்மையின் அசாதாரண வளர்ச்சியாகும். அமெரிக்க மக்கள்தொகையின் உயர்மட்ட 1 சதவீதத்தில் உள்ள ஒரு கறுப்பின குடும்பம் சராசரி கறுப்பின குடும்பத்தை விட 200 மடங்கு அதிகமான நிகர மதிப்பைக் கொண்டுள்ளது, மற்றும் மொத்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் வைத்திருக்கும் செல்வவளத்தில் 67 சதவீதத்தை உயர்மட்ட 10 சதவீதம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.
அரசியலில், ஜனநாயகக் கட்சியினராலும் சரி குடியரசு கட்சியினராலும் சரி ஆபிரிக்க அமெரிக்கர்கள் அதிகார பதவிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இதில் ஒபாமா, லோரெட்டா லின்ச், கொண்டாலிசா ரைஸ் மற்றும் கொலின் பாவெல் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். பெரும்பாலான பிரதான அமெரிக்க நகரங்கள் கறுப்பின நகர முதல்வர்களை (மேயர்) கொண்டுள்ளன என்பதுடன் நகர சபைகள் ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளால் நிறைந்துள்ளது.
இனவாத அரசியலை ஊக்குவிப்பவர்கள், ஆபிரிக்க அமெரிக்க தொழிலாளர் மற்றும் இளைஞர்களுக்கு முற்றிலும் விரோதமான நலன்களைக் கொண்ட மிகவும் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க பிரிவுகள் மற்றும் ஆளும் வர்க்கத்திற்காகவே பேசுகிறார்கள்.
பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஒரு நிஜமான போராட்டம் ஒருசில குறிப்பிட்ட அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
முதலாவதாக பொலிஸ் வன்முறை என்பது "கறுப்பின அமெரிக்காவிற்கு" எதிராக "வெள்ளையின அமெரிக்காவின்" இனப் பகைமையின் விளைபொருள் கிடையாது, மாறாக வர்க்க ஆட்சியின் ஒரு கருவியான அரசின் இயல்பின் ஒரு பிரதிபலிப்பாகும். இராணுவத்திலிருந்து உளவுத்துறை அமைப்புகள் வரையில் ஒரு பரந்த ஒடுக்குமுறை எந்திரத்தின் ஒரு கூறுபாட்டின் பாகமாக உள்ள பொலிஸ் அதிகாரத்தைக் கட்டமைப்பது, நிதியியல் பிரபுத்துவத்தின் கொள்கைகளுக்கு எதிரான சகல சமூக எதிர்ப்பையும் எதிர்க்க பயன்படுத்தப்படும்.
இரண்டாவதாக அரசியல் ஸ்தாபகத்தின் சகல கன்னைகளும் பொலிஸ் பாதுகாப்பதை பொறுப்பேற்றுள்ளன. 2016 தேர்தல்களில், ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சியினர் ஒரு "சட்டம் ஒழுங்கு" வேலைத்திட்டத்திற்காக போட்டியிட்டு வருவதுடன் பொலிஸ் வன்முறைக்கு எழும் எதிர்ப்பைக் குற்றமானதாக்குவதற்கு அழைப்புவிடுக்கின்றனர் (இது கடந்த மாதம் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் மில்வாக்கி உள்ளாட்சியின் ஷெரீஃப் கிளார்க் ஆல் மிகவும் கடுமையாக வெளிப்படுத்தப்பட்டது).
இதற்கிடையே ஹிலாரி கிளிண்டனும் ஜனநாயகக் கட்சியினரும் பொலிஸை புகழ்கின்ற அதேவேளையில் இன அடையாள அரசியலை ஊக்குவிப்பதற்காக பொலிஸ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை வெறுப்புமிக்கவகையில் மற்றும் பாசாங்குத்தனமாக சுரண்டி வருகிறார்கள். அவர் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளை நீடிக்கவும் தொடரவும் பொறுப்பேற்றுள்ளார். அதாவது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவது, வெளிநாட்டு போரை விரிவாக்குவது மற்றும் அமெரிக்காவில் பொலிஸ் வன்முறை ஆட்சியை நிறுத்த எதுவும் செய்யாமல் இருப்பது என்பதே இதன் அர்த்தமாகும்.
பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் என்பது அதை உருவாக்கும் சமூகத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தைக் குறிக்கிறது. வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில், எல்லா இனத்தையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தும் ஓர் அரசியல் போராட்டமே இதற்கு அவசியமாகும்.