Print Version|Feedback
“Thinking Through the Unthinkable”
RAND Corporation lays out scenarios for US war with China
“சிந்திக்க முடியாததன் ஊடாக சிந்தித்தல்"
ராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாம் சீனாவுடனான அமெரிக்க போருக்கு சூழல்களை வடிவமைக்கிறது
Peter Symonds
5 August 2016
“சீனாவுடன் போர்: சிந்திக்க முடியாததன் ஊடாக சிந்தித்தல்" என்று தலைப்பிட்ட ராண்ட் (RAND) பெருநிறுவன அமைப்பின் ஒரு புதிய ஆய்வு, சீனாவிற்கு எதிரான ஒரு அமெரிக்க போரை மதிப்பிடுவதற்காக அர்பணிக்கப்பட்ட சிந்தனைக்குழாம் ஆய்வறிக்கைகளில் சமீபத்தியது மட்டுமேயாகும். அமெரிக்க இராணுவத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் உயரதிகாரிகளிடையே சீனாவுடனான ஒரு போர் திட்டமிடப்பட்டு வருகிறது மற்றும் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பதற்கு மற்றொரு ஆதாரத்தை வழங்குகிறது.
ராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாமின் அந்த வஞ்சகமான ஆய்வறிக்கை குறிப்பிடுத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ராண்ட் அமைப்பு பனிப்போர் காலம் முழுவதிலும், “சிந்திக்க முடியாததன் ஊடாக சிந்திப்பதற்கான" முதன்மை சிந்தனைக்குழாமாக இருந்தது. இந்த இழிவார்ந்த கருத்து 1950 களில் ராண்ட் இன் முதன்மை மூலோபாயவாதி ஹெர்மன் கான் ஆல் (Herman Kahn) வழங்கப்பட்டதாகும். அவர் அணுவெப்பாற்றல் போர் (On Thermonuclear War ) எனும் அவரது கொடூரமான நூலை சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக "ஜெயிக்கக்கூடிய" அணுஆயுத போருக்கான ஒரு மூலோபாயத்தை விவரிக்க அர்பணித்திருந்தார்.
கடந்த வாரம் வெளியான புதிய ஆய்வின் முன்னுரையின்படி, “இந்த ஆய்வை இராணுவத்தின் துணை செயலர் அலுவலம் முன்னெடுத்தது, மற்றும் ராண்ட் அர்ரோயோ (RAND Arroyo) மையத்தின் மூலோபாயம், கோட்பாடு மற்றும் ஆதாரவளங்கள் திட்டத்திற்குள் இது நடத்தப்பட்டது. ராண்ட் பெருநிறுவன அமைப்பின் பாகமாக இருந்த ராண்ட் அர்ரோயோ மையம் அமெரிக்க இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட, மத்திய அரசின் நிதியுதவி பெற்ற ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையமாகும்.”
அந்த ஆய்வறிக்கை காஹ்ன் பாரம்பரியத்தில் ஒரு போர்-சகாச ஒத்திகையாகும்: அதாவது அமெரிக்கா, சீனா மற்றும் உலகின் ஏனைய பகுதி மக்களுக்கு ஏற்படும் பேரழிவுகரமான பாதிப்புகளை முற்றிலும் அலட்சியப்படுத்தி இரண்டு ஆணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு சாத்தியமான போரின் விளைபலன்களை அது எடை போடுகிறது.
அந்த ஆய்வறிக்கை, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு போர் ஏனைய அதிகாரங்களை உள்ளீர்க்காது என்றும்; அது கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்குள் மட்டுப்பட்டு இருக்கும் என்றும்; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்றும் பெரிதும் கேள்விக்குரிய பல அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. யதார்த்தத்தில் சீனா மீதான ஒரு போர் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க கூட்டாளிகளையும் உள்ளடக்கி இருக்கும் என்பதுடன், அவ்விதத்தில், அனேகமாக எல்லா விதத்திலும், கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தீவிரமடைந்து கிழக்கு ஆசியா கடந்தும் பரவி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அபாயத்தை உயர்த்தும்.
ஒபாமா நிர்வாகத்தின் "ஆசிய முன்னிலை" இன் பாகமாக, அமெரிக்கா அப்பிராந்தியம் எங்கிலும் கூட்டணிகளை பலப்படுத்தி, புதிய இராணுவத் தள ஏற்பாடுகளை ஸ்தாபித்து, இராணுவரீதியில் "ஒருங்கிணைந்து இயங்கும் தன்மையை" திட்டவட்டமாக்கி உள்ளது. அமெரிக்க இராணுவம், மிக குறைந்தபட்சம், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் அதன் உளவுத்துறை மற்றும் இராணுவ ஆதாரவளங்களை நிலைநிறுத்தாமல் சீனாவிற்கு எதிரான போரைத் தொடுக்காது.
ராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாம் ஆய்வறிக்கை, (மிதமான அல்லது கடுமையான) தீவிரத்தன்மை மற்றும் (ஒருசில நாட்களில் இருந்து ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்டு நீளக்கூடிய) கால அளவு என மாறக்கூடிய இரண்டு காரணிகளால் வரையறுக்கப்பட்ட ஒரு மோதலுக்கு நான்கு எளிய சூழல்களைக் கருத்தில் எடுக்கிறது. (ஏற்கனவே அறிவிக்கப்படாத ஆயுத போட்டியில் இருக்கின்ற) இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தைக் கொண்டு பார்த்தால், காலப்போக்கில் விளைபலன்கள் மாறக்கூடும் என்றும் அது குறிப்பிடுகிறது. இவ்விதத்தில் அது 2015 இல் சண்டையிடப்பட்ட ஒரு போர் மற்றும் 2025 இல் சண்டையிடப்படும் ஒரு போர் என இரு தரப்பிலும் இழப்புகள் மற்றும் செலவுகளை ஆய்வு செய்கிறது.
இந்த ஆய்வறிக்கையின் தொகுப்புரை, மிதமான மோதல்களை விட கடுமையான மோதல்களின் ஆதாயம் மீது மிக அதிக கவனம் செலுத்துகிறது. ஒரு சிறிய கடுமையான போர் மற்றும் ஒரு நீண்ட கடுமையான போர் ஆகிய இரண்டு விதத்திலேயுமே, சீனா மீதான பொருளாதார மற்றும் இராணுவ பாதிப்பு அமெரிக்கா மீது ஏற்படக்கூடியதை விட மிக அதிகமாக இருக்குமென அந்த ஆய்வு மதிப்பிடுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா 2015 ஐ விட 2025 இல் மிகப் பெரும் இழப்புகளைச் சந்தித்து, நிறைய விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று அது நிறைவு செய்கிறது.
அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது: “சீனாவுடனான ஒரு போரில், அமெரிக்காவின் இராணுவ அனுகூலங்கள் குறையும் போது, அதன் திட்டங்களை நிறைவேற்றுவதன் மீதான அதன் நம்பிக்கையும் மிகவும் குறைந்துவிடும். ஒரு போர் ஏற்பட்டால் சீனாவின் பாதுகாப்புகளை அழித்து, செயல்பாட்டு கட்டுப்பாட்டை பெற்று, நிச்சயமான வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பதையே சீனாவின் மேம்படுத்தப்பட்ட இராணுவ ஆற்றல்கள், அதுவும் குறிப்பாக அணுகுவதைத் தடுக்கும் மற்றும் பகுதிக்குள் உள்நுழைவதை முறியடிக்கும் (A2AD) தகைமைகள் அர்த்தப்படுத்துகின்றன,” என்று குறிப்பிட்டது.
பெண்டகனின் திட்டமிடல் மற்றும் தயாரிப்புகள் அனைத்தையும் அடியில் கொண்டுள்ள அறிவிக்கப்படாத தீர்மானம் என்னவென்றால் சீனாவுடனான ஒரு போரைக் காலங்கடத்தாமல் உடனடியாக நடத்த வேண்டும் என்பது தான். அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தல், 2020 வாக்கில் அதாவது இப்போதிருந்து வெறும் மூன்று ஆண்டுகளில், அதன் மொத்த விமானப்படை மற்றும் கடற்படை ஆதாரங்களில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக் பகுதியில் வைப்பதைக் கருத்தில் கொண்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக ஆசியாவில், மிக முக்கியமாக தென் சீனக் கடலில், அபாயகரமான வெடிப்புப் புள்ளிகளை வாஷிங்டன் திட்டமிட்டு தூண்டிவிடுவதானது பெய்ஜிங்கை "ஆக்ரோஷமானதாக" மற்றும் "விரிவாக்கவாத சக்தியாக" சித்தரிப்பதையும் மற்றும் போர் அறிவிப்பிற்கு அவசியமான காரணங்களை தயார் செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் அந்த ஆய்வறிக்கையின் ஒவ்வொரு கருதுகோள்களும், அமெரிக்காவிலிருந்து ஆயிரமாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு பிரதேசத்தைச் சுற்றி ஆக்ரோஷமான, நவ-காலனித்துவ குணாம்சம் கொண்ட ஒரு போரை அடிக்கோடிடுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு சீனாவை முழுமையாக அடிபணிய செய்வதற்கு குறைவின்றி வாஷிங்டனின் நோக்கம் வேறொன்றுமில்லை.
பெண்டகன் மற்றும் வெள்ளை மாளிகைக்கு அறிவுறுத்துகையில், ராண்ட் பெருநிறுவன அமைப்பின் ஆய்வறிக்கை "சீனாவுடன் ஒரு நீண்டகால மற்றும் தீவிரமான போரை நடத்தக் கூடியளவிற்கு முன் ஜாக்கிரதையான தயாரிப்புகளுக்கு" அழைப்புவிடுக்கிறது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “அதன் திட்டமிடல், படைத்துறைசாரா மக்களைக் கட்டுப்படுத்தும் அதன் அணுகுமுறை மற்றும் சீனா உடனான தொலைதொடர்புக்கான அதன் திறன் ஆகியவற்றைக் கொண்டு சீனாவுடனான ஒரு போருக்கான அளவு, தீவிரம் மற்றும் கால அளவை மட்டுப்படுத்தும் அமெரிக்காவின் திறனும் முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை,” என்று குறிப்பிட்டது.
அமெரிக்காவின் "படைத்துறைசாரா மக்களைக் கட்டுப்படுத்தும் அணுகுமுறையின்" அவசியம் குறித்த குறிப்பு குறிப்பாக வஞ்சகமானதாகும். ராண்ட் பெருநிறுவன அமைப்பு போன்ற சிந்தனைக்குழாம்களால், இராணுவ/பொலிஸ் படைகளால் மற்றும் இரண்டாம் உலக போரில் போர்-எதிர்ப்புக்குப் பயன்படுத்தப்பட்டதை விட அதிகமாக அவ்விதமான எதிர்ப்பை ஒடுக்கும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கான பரந்த அரசு எந்திரத்தால், அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், திட்டங்கள் வரையப்பட்டு வருகின்றன.
ராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாமின் ஆய்வறிக்கையானது, பெப்ரவரி 18, 2016 இல் "சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்று தலைப்பிட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் அறிக்கையில் குறிப்பிட்ட எச்சரிக்கைகளுக்கு உறைய வைக்கும் ஒரு நிரூபணமாகும். ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இராணுவ ஊழ்வலிவாதம் (fatalism) போர் வெடிப்பற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணியாக ஆகிவிடுகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அது சர்வதேச உறவுகள் மீதான நிபுணர் ஒருவர் எழுதிய கருத்துக்களை மேற்கோளிட்டது: “போர் தவிர்க்க முடியாது என்று ஆனவுடனே, தலைவர்கள் மற்றும் இராணுவங்களின் கணக்கீடுகள் மாறுகின்றன. அங்கே போர் நடக்குமா அல்லது போர் நடத்த வேண்டுமா என்பது அப்போது கேள்வியாக இருக்காது, மாறாக எப்போது போரை மிகவும் தீர சாகசத்துடன் நடத்தலாம் என்பது தான் கேள்வியாக இருக்கும்,” என்றவர் எழுதினார்.
அதுபோன்றவொரு சிந்தனை மாற்றம் வாஷிங்டனில் நடந்து வருகிறது என்பதையே இந்த புதிய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அணுஆயுத போருக்கான சாத்தியக்கூறை ராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாம் புறக்கணித்திருந்தாலும், ஏனைய ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் அதுபோன்றவொரு அசம்பாவிதத்திற்கு திட்டமிட்டு வருகிறார்.
“ஆசிய முன்னிலையை" திட்டமிடுவதில் ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS), வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான், சீன அணுகுண்டுகளை மதிப்பீடு செய்து ஓர் ஆய்வறிக்கை பிரசுரித்தது. “சீனாவின் அணுஆயுத பலமும், பாரிய பேரழிவுகளுக்கான ஆயுதங்களும்" என்று அந்த ஆய்வறிக்கை தலைப்பிடப்பட்டு இருந்தது.
CSIS உம் அணுஆயுத போரின் சாத்தியக்கூறை குறைத்துக் காட்டியிருந்தாலும், முற்றிலுமாக அதை நிராகரித்துவிடவில்லை. “தடுப்புமுறை சிலவேளைகளில் தோல்வியடைந்து, ஒருபோதும் முறையாக திட்டமிடப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத விதங்களில் அது தீவிரமடைவதற்கு வரலாறே ஒரு ஈவிரக்கமற்ற எச்சரிக்கையாகும்,” என்று அது குறிப்பிட்டது.
சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யாவிட்டால், முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் உடைவால் உந்தப்பட்டு மற்றொரு உலகளாவிய பேரழிவு சாத்தியம் என்பது மட்டுமல்ல, மாறாக தவிர்க்க முடியாததும் ஆகும். எவ்வாறிருப்பினும் உலக போர் பைத்தியக்காரத்தனத்தை உந்தி வருகின்ற அதே முதலாளித்துவ நெருக்கடி, சமூக புரட்சிக்கான தூண்டுதலையும் உருவாக்கி வருகிறது. இது முதலாளித்துவத்தையும் மற்றும் அதன் காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையையும் முடிவுக்குக் கொண்டு வந்து, சோசலிச அடித்தளங்களில் சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) நடத்தி வரும் அரசியல் போராட்டத்தின் அத்தியாவசிய தேவையை அடிகோடிடுகிறது.