Print Version|Feedback
Rio 2016: The “Olympic ideal” and the reality of capitalism
ரியோ 2016: “ஒலிம்பிக் கருத்தியலும்", முதலாளித்துவத்தின் யதார்த்தமும்
Bill Van Auken
8 August 2016
“மனிதயின மதிப்பைக் காப்பதில் அக்கறை கொண்ட ஒரு சமாதானமான சமூகத்தை வளர்க்கும் கண்ணோட்டத்தில், மனிதர்களின் ஒத்திசைவான அபிவிருத்திக்கான சேவையில் விளையாட்டை நிறுத்துவதுதான் ஒலிம்பிசத்தின் நோக்கம்.” ஒலிம்பிக் சாசனத்தின் "அடிப்படை ஒலிம்பிச கோட்பாடுகளில்" காணப்படும் இந்த வரிகள், உணர்வுபூர்வ மனோபாவத்துடன் “ஒலிம்பிக் கருத்துருவைத்" தொகுத்தளிப்பதாக கருதப்படுகிறது.
ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பொற்காலம் என்ற ஒன்று ஒருபோதும் இருந்ததே இல்லை, அது ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதற்கான செயற்களமாகவே சேவையாற்றி உள்ளது. நவீன ஒலிம்பிக்ஸ் இன் ஸ்தாபகர் Baron Pierre de Coubertin, விளையாட்டை அவர் மனிதயினத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் அதன் சாத்தியத்திறனுக்காக மட்டும் மதிப்பிடவில்லை, மாறாக போரில் சிறந்த சிப்பாய்களாக ஆவதற்கு பிரெஞ்சுக்காரர்களை தயாரிப்பு செய்வதற்கும் அது பயன்படுகிறது என்பதை தெள்ளத்தெளிவாக ஒப்புக் கொண்டார்.
எவ்வாறிருப்பினும் ரியோ டி ஜெனெரோவின் 2016 விளையாட்டுக்கள் தொடங்கிய நிலையில், ஒலிம்பிக் கருத்துரு என்று கூறப்படுவதற்கும், பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக சமத்துவமின்மையில் சிக்கியுள்ளதும், மற்றொரு உலக போருக்கு நகர்ந்து கொண்டிருப்பதுமான முதலாளித்துவ அமைப்பு முறையின் யதார்த்தத்திற்கும் இடையிலான முரண்பாடு இந்தளவிற்கு அதிக கூர்மையாக இருந்திருக்கவே இருந்திருக்காது.
அந்நகரின் பெருமிதத்திற்குரிய மராக்கானா (Maracana) மைதானத்தில் நடத்தப்பட்ட ரியோ விளையாட்டுக்களின் தொடக்க விழா, பரவலாக சர்வதேச செய்தி ஊடங்களால் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அங்கிருந்து அரை மைல் தொலைவில் நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பிரேசிலிய பொலிஸ் இன் ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து குறைவாகவே அறிவிக்கப்பட்டது, இந்த ஆர்ப்பாட்டம் போராட்டக்காரர்களால் எது "விலக்கிவிடப்பட்ட விளையாட்டுக்கள்" என்று குறிப்பிடப்பட்டதோ அதற்கு எதிராக அழைக்கப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிகளில் இருந்து விரட்ட பொலிஸ் கண்ணீர் புகை குண்டுகள், மிளகுப் பொடிகள் மற்றும் மயக்கம் உண்டாக்கும் கையெறி குண்டுகளையும் பிரயோகித்தனர்.
ஒலிம்பிக் விளக்கு ஏந்தி செல்லப்பட்ட வழிகளிலேயே ஆரம்ப மோதல்களைக் காணக் கூடியதாக இருந்தது, ஒரு சம்பவத்தில் கடற்கரை நகரமான Angra dos Reis இல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு கூட்டத்தால் அணைக்கப்பட்டது. ஆழமடைந்துவரும் நிதிய நெருக்கடியின் காரணமாக அரசுத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாத நிலைமைகளின் கீழ், போக்குவரத்து சேவை மற்றும் மருத்துவக் காப்பீடு வெட்டப்பட்டு வருகின்ற நிலைமைகளின் கீழ், ஒலிம்பிக்ஸ் க்காக செலவிடுவதை எதிர்க்க அவர்கள் திரும்பி இருந்தார்கள்.
ரியோவில் 2016 விளையாட்டு போட்டிகளை நடத்தும் அனுமதி பிரேசிலிய அரசாங்கத்திற்கு 2009 இல் வழங்கப்பட்ட போது, அப்போதைய ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva, “நமக்குரிய நேரம் வந்துள்ளது,” என்று அறிவித்தார். அந்நாட்டின் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்திற்கு மீளுயர்ந்திருந்த நிலையில் பிரேசில் 2008 உலகளாவிய நிதியியல் பொறிவின் பாதிப்புகளில் இருந்து தப்பித்திருப்பதாக அக்காலக்கட்டத்தில் லூலா பெருமைபீற்றி வந்தார்.
அப்போதிருந்து உலக முதலாளித்துவ நெருக்கடி பிரேசிலின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளதுடன், அது உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மையை 11 சதவீதத்திற்கு அதிகமாக உந்தி சென்று, நிஜமான கூலிகள் வீழ்ச்சியடைய கொண்டு சென்றுள்ளது. ஏற்கனவே சமூகரீதியில் உலகின் மிகவும் சமநிலையற்ற நாடுகளில் ஒன்றாக உள்ள அந்நாட்டில், மில்லியன் கணக்கானவர்கள் மீண்டும் பெரும் வறுமையில் தள்ளப்படும் அச்சுறுத்தலில் உள்ளனர்.
விளையாட்டுக்கள் தொடங்கிவிட்ட நிலையிலும் கூட, பிரேசிலிய செனட் ஜோடிக்கப்பட்ட வரவுசெலவு திட்ட முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களின் மீது பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி டில்மா ரூஸ்செஃப் மீதான குற்றவிசாரணை முன்னெடுக்க நகர்ந்து வருகிறது. தொழிலாளர்கள் கட்சி (PT) தலைவருக்கு எதிராக செயல்படுபவர்களும், அக்கட்சியைப் போலவே, பல பில்லியன் டாலர் பெட்ரோபராஸ் ஊழல் மோசடியில் உடந்தையாய் சிக்கியவர்கள் தான். இருந்தபோதினும் அவர்கள் பிரேசிலிய மற்றும் வெளிநாட்டு மூலதனம் இரண்டினாலும் ஆதரிக்கப்படுகிறார்கள், அவை ரூஸ்செஃப் இன் முன்னாள் துணை ஜனாதிபதியும் அரசியல் கூட்டாளியுமான இடைக்கால ஜனாதிபதி மிக்கெல் திமெர் (Michel Temer) இன் கீழ் அதிகரித்தளவில் சிக்கனக் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக ஒரு முழு அளவிலான ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றன.
விளையாட்டுக்கள் தொடங்குவதற்கு முன்னதாக, பிரேசிலிய அரசாங்கம் எல்லாவிதத்திலும் அதன் சாரத்தில் மிகவும் சிறியளவில் இருந்த பயங்கரவாத சூழ்ச்சிகளைக் குறித்த கருத்துக்களைப் மிகப்பெரியளவில் பரப்பியது. உண்மையில் ரியோ விளையாட்டுக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய பாதுகாப்பு நடவடிக்கை பயங்கரவாதிகளை அல்ல, மாறாக பிரேசிலிய மக்களையே இலக்கில் வைத்துள்ளது. ஏற்கனவே 2012 இலண்டன் விளையாட்டுக்களின் போது திரட்டப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்காக சுமார் 100,000 இராணுவ துருப்புகள் மற்றும் பொலிஸ் ரியோ எங்கிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர், பலர் எதிர்த்து தாக்கும் முனைப்பில் உடையணிந்து, தாக்கும் துப்பாக்கிகளுடன் இருந்தனர், கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகளையே கூட பக்கபலமாக கொண்டிருந்தனர்.
இந்நடவடிக்கை உடன் அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரமும் உடன் இணைப்பாக இருந்தது, NBC செய்திபடி, அது "ஒலிம்பிக் பாதுகாப்பிற்காக 1,000 க்கும் அதிகமான உளவாளிகளை ஒதுக்கி உள்ளது, அவர்களில் நூற்றுக் கணக்கானவர்கள் பிரேசிலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சிஐஏ, எப்.பீ.ஐ. மற்றும் என்எஸ்ஏ ஒற்றர்களுக்குக் கூடுதலாக, அமெரிக்க சிறப்பு நடவடிக்கைகள் கட்டளையகத்திலிருந்து கடற்படை மற்றும் கப்பற்படையின் அதிரடிப்படையினரின் பிரிவுகளும் அம்மண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
2013 உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிக்காக முதலில் இப்போது ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களுக்காக ஒன்றன் பின் ஒன்றாக செய்யப்பட்ட தயாரிப்புகளுடன் கடந்த சில ஆண்டுகளில் கட்டவிழ்ந்துள்ள ஓர் ஒடுக்குமுறை நடவடிக்கையின் உச்சக்கட்டம் இது தான். அபிவிருத்திக்காக இலக்கில் வைக்கப்பட்ட வறிய மாவட்டங்களில் பத்தாயிரக் கணக்கானவர்களை அவர்களின் வீடுகளை விட்டு விரட்ட வன்முறையான பொலிஸ் நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, அதேவேளையில் இதற்கும் கூடுதலாக ஆயிரக் கணக்கான வீடற்றவர்கள் "சமூக சுத்திகரிப்பு" நடைமுறை என்ற கணக்கில் வீதிகளில் இருந்து துரத்தப்பட்டுள்ளனர். சமீபத்திய காலத்தில் அந்நகரில் ஒரு மாதத்திற்குள்ளாக பொலிஸ் 40 இல் இருந்து 50 நபர்களைக் கொன்றுள்ளது, அதேவேளையில் கூடுதல் அதிகார கொலைப்படைகள் இன்னும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளன. இந்த ஒலிம்பிக்ஸ் க்கும் மற்றும் "மனிதர்களுக்குமான மதிப்பு" இந்தளவிற்கு இருக்கிறது.
இந்த பின்புலத்திற்கு நேரெதிராக, ஒலிம்பிக்ஸ் க்காக செலவிடப்பட்ட பாரிய செல்வங்கள், இவை அனைத்துமே செல்வதிரட்சி மற்றும் தனியார் இலாபத்திற்காக செய்யப்பட்ட நிலையில், வெறுப்பூட்டுவதாக உள்ளது. கொக்ககோலா, சாம்சுங், டோவ் கெமிக்கல், ஜெனரல் எலெக்ட்ரிக், மக்டொனால்ட் மற்றும் ஏனைய நிறுவனங்கள் உட்பட பெருநிறுவன விளம்பரதாரர்கள் பிரத்யேக சந்தைப்படுத்தல் உரிமங்களுக்காக நூறு மில்லியன் கணக்கான டாலர்களைச் செலுத்தி, அவற்றை சாதகமாக்கிக் கொள்வதற்காக இன்னும் நூறு மில்லியன் கணக்கில் கூடுதலாக செலவிட்டு வருகின்றனர். அந்த 19 நாள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனங்கள் 4 பில்லியன் டாலரைக் குவித்துள்ளன, அதேவேளையில் சந்தைப்படுத்தல் வருவாய் மொத்தம் 9.3 பில்லியன் டாலராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பீட்டளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய தனிப்பட்ட தொழில்ரீதியிலான விளையாட்டு வீரர்கள் உற்பத்தி பொருட்களைக் காட்சிப்படுத்துவதன் மூலமாக பத்து மில்லியன் கணக்கில் சம்பாதிப்பார்கள். ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள், நிதியாதாரங்கள் சம்பந்தப்படாமல் ஒரு கொண்டாட்டமாக இருந்த நாட்கள் நீண்டகால நினைவுகளாகிவிட்டன.
விளையாட்டுக்களுக்கு உள்ளேயே கூட, சமூக சமத்துவமின்மையின் மேலோங்கிய சூழல் எப்போதும் இருந்துள்ளது. அவசர அவசரமாக கட்டப்பட்ட ஒலிம்பிக் தங்குமிடங்களின் தரக்குறைவான நிலைமைகள் வறிய அணிகளுக்கு ஒப்படைக்கப்படும் அதேவேளையில், ரியோ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பொலிஸ் மற்றும் கடற்படை ரோந்து படகுகள் சுற்றி வர ஆடம்பரமான உல்லாச கப்பலான Silver Cloud இல் அமெரிக்க கூடைப்பந்து "கனவு அணி" வசித்து வருகிறது.
இதற்கிடையே தேசியவாதத்தை ஊக்குவிக்க மற்றும் போருக்குத் தயாரிப்பு செய்ய ஒலிம்பிக்ஸைப் பயன்படுத்துவதென்பது, பேர்லினில் அடோல்ஃப் ஹிட்லர் ஒன்றுகூட்டிய 1936 ஒலிம்பிக்கிற்குப் பிந்தைய எந்தவொரு காலத்தையும் விட ரியோ விளையாட்டுக்களில் மிகத் தீவிரமாக உள்ளது.
அரசு ஒத்துழைப்புடன் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தி, ரியோவில் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ள பாராலிம்பிக்ஸ் (Paralympics) இல் இருந்து ரஷ்ய விளையாட்டு வீரர்கள் முற்றிலுமாக தடுக்கப்படுவார்கள் என்று திங்களன்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தனிப்பட்ட விளையாட்டிற்கான கூட்டமைப்பு முடிவெடுப்பதை உதறித் தள்ளிய ஒரு முறையின் கீழ், முன்னதாக அந்நாட்டின் தடகள அணியின் 118 அங்கத்தவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
உலக ஊக்கமருந்து தடைவிதிப்பு அமைப்பு, வாஷிங்டன், பல்வேறு அரசுசாரா அமைப்புகள் மற்றும் மேற்கத்திய ஊடகங்களும் ரஷ்யாவை ஒரு "தான்தோன்றித்தனமான" தேசமாகவும், அது பலவந்தமாக தடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு பரந்த முயற்சியின் பாகமாக, ரியோ ஒலிம்பிக்ஸ் இல் இருந்து ஒவ்வொரு ரஷ்ய விளையாட்டு வீரரையும் வெளியேற்றவும் மற்றும் அங்கே அந்நாட்டின் கொடி தென்படுவதையே கூட தடுக்க தீவிரமான பிரச்சாரம் செய்துள்ளன.
இந்த விளையாட்டுக்களில் ரஷ்யாவிற்கு தடைவிதிப்பதற்கான பிரச்சாரம், 2014 இல் உக்ரேனில் அதிதீவிர வலது ரஷ்ய-விரோத ஆட்சியை நிறுவிய அமெரிக்க மற்றும் ஜேர்மனால் முடுக்கிவிடப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் இருந்து ஒரே சீராக தீவிரமாக்கப்பட்டுள்ள அந்நாட்டின் மேற்கத்திய எல்லைகளை அதிகரித்தளவில் அமெரிக்கா-நேட்டோ முற்றுகையிடுவதுடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது.
ரஷ்யா மோசடி செய்யாமல் இருந்திருந்தால், அந்த விளையாட்டு நிகழ்வுகள் களங்கமின்றி இருந்திருக்கும் என்று ரஷ்யா மீதான உணர்ச்சிபூர்வமான கண்டனங்களில் தீய அபிப்ராயம் மற்றும் பாசாங்குத்தனத்தின் துர்நாற்றம் வீசுகிறது. சர்வதேச அளவில் ரஷ்ய-விரோத பிரச்சாரம், அந்த விளையாட்டுக்களின் ஒட்டுமொத்த அமைப்பையும் சுற்றி நடக்கும் முழு ஊழலையும் அத்துடன் ஏறத்தாழ ஒவ்வொரு நாடும் ஊக்கமருந்து பயன்படுத்தும் வழக்கத்தையும் மறைக்கிறது.
அமெரிக்க தேர்தலில் தலையீடு செய்வதாக விளாடிமீர் புட்டினை கண்டித்து, ஜனநாயகக் கட்சியின் நவ-மக்கார்த்தியிச பிரச்சாரத்துடன் இணைந்த விதத்தில் நடந்து வரும் சர்ச்சை, அணுஆயுதப் போருக்கு விரைவிலேயே இட்டுச் செல்லக்கூடிய ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலுக்கு மக்களின் மனோபாவத்தைத் தயாரிப்பு செய்வதற்கான முயற்சியின் பாகமாக பாய்ச்சப்பட்டுள்ளது.
இந்தாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டுமொருமுறை பூமி எங்கிலும் இருந்து பங்கெடுப்பவர்களின் மலைப்பூட்டும் விளையாட்டு திறன்களை காட்டும் என்றாலும், இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் சமத்துவமின்மை மற்றும் சுரண்டல் மீது அடித்தளமிட்டுள்ள ஒரு சமூக அமைப்புமுறையால் நிழலிடப்பட்டு, மனிதயினத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்துகிறது.