Print Version|Feedback
Obama’s legacy: Identity politics in the service of war
ஒபாமாவின் மரபு: போருக்கு சேவை செய்யும் அடையாள அரசியல்
Bill Van Auken
29 July 2016
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், அவரின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான ஹிலாரி கிளிண்டனிடம் "செங்கோலை ஒப்படைக்க" அவர் தயாராக இருப்பதாக அறிவித்து, பராக் ஒபாமா புதனன்று இரவு ஜனநாயக கட்சியினது பிலடெல்பியா தேசிய மாநாட்டிற்கான அவரது உரையை நிறைவு செய்தார். பெருநிறுவன ஊடகங்களில் அந்த உரை குறித்த விபரங்கள் மீண்டும் மீண்டும், அமெரிக்க ஜனாதிபதி அவர் "மரபின்" தொடர்ச்சியாளராக மற்றும் பாதுகாவலராக கிளிண்டனை சித்தரித்துள்ளதாக குறிப்பிடுகின்றன.
ஆனால் ஒபாமாவின் மரபு என்ன? ஓர் அரை நூற்றாண்டாக ஜனநாயக கட்சியைப் பீடித்திருந்த போர் சம்பந்தமான உள்கட்சி பிளவுகளை அவர் வெற்றிகரமாக கடந்து வந்திருப்பதைத்தான் அதன் இன்றியமையாத அரசியல் அர்த்தத்தில் உள்ளடக்கி உள்ளது. இரண்டு உலக போர்கள் மற்றும் அதற்கடுத்து சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போர் நெடுகிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதன்மை கட்சியாக ஜனநாயகக் கட்சி பேணி வந்த நிலைப்பாட்டின் மூலவேர்களுக்கு ஜனநாயகக் கட்சியினர் திரும்பி இருப்பதை, அவரின் நிர்வாகம் குறிக்கிறது.
பரந்துபட்ட மக்களின் ஒரு போர் எதிர்ப்புணர்வு அலையின் மீதேறி அதிகாரத்திற்கு வந்த ஒபாமா, முழுமையாக அவரின் இரண்டு பதவிக்காலம் முழுவதிலும் அமெரிக்காவைப் போரில் வைத்திருந்த முதல் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற நம்பமுடியாத சிறப்புக்கு உரியவராகிறார்.
அவர் மரபுரிமையாக பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களைத் தொடர்ந்த அதேவேளையில் லிபியாவில் அரசாங்கத்தைக் கவிழ்த்து அந்த சமூகத்தை சீரழித்த ஒரு புதிய போரையும் தொடங்கினார்; சிரியாவில் இப்போது அமெரிக்க துருப்புகளை நிலைநிறுத்தியமை உட்பட ஆட்சி மாற்றத்திற்கான ஒரு பினாமி போரை வடிவமைத்துள்ளார்; சோமாலியா, யேமன், பாகிஸ்தான் மற்றும் அதற்கு அப்பாலும் தாக்குதல்களை நடத்தி உள்ளார்.
அதன் “ஆசிய முன்னிலை" மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க-நேட்டோ படைகளைப் படிப்படியாக கட்டியமைத்தவை ஆகியவற்றுடன், ஓர் அதிகரித்த மூன்றாம் உலக போர் அபாயத்தை முன்னிறுத்தும் உலக மேலாதிக்கத்திற்கான இடைவிடாத வேட்கையில், வாஷிங்டனின் இராணுவ பலம் அதிகரித்தளவில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது.
பாரியளவிலான ஆளில்லா டிரோன் விமான போர்முறையினது விரிவாக்கம், இலக்கில் வைக்கப்பட்ட படுகொலைகள் மற்றும் கொலை பட்டியல்கள், அத்துடன் படைத்துறைசாரா மக்களது சுதந்திரங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க பொலிஸை இராணுவமயப்படுத்தியமை ஆகியவற்றிற்காகவும் ஒபாமா நிர்வாகம் நினைவுகூரப்படும்.
போர் என்பது பிலடெல்பியா மாநாட்டில் ஒரு விவாதத்திற்குரிய விடயமாக கூட இருக்கவில்லை என்பது தான் இவை அனைத்திற்கும் முன்னால் அசாதாரணமாக இருக்கிறது. தனது பிரச்சாரத்தின் போது ஒபாமாவின் போர்களைப் பகிரங்கமாக ஆதரித்தவரும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பாரிய அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்பு ஆகிய இரண்டினது தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருமான கிளிண்டனின் "அரசியல் புரட்சியை" உத்தியோகபூர்வமாக நிறைவு செய்து வைத்த மோசடி எதிர் வேட்பாளர் பேர்ணி சாண்டர்ஸ், விமர்சனமின்றி கிளிண்டனுக்கு ஒப்புதல் வழங்கியதன் மூலமாக அவ்விடயத்தின் மீதான மௌனத்திற்கு உத்தரவாதம் வழங்கினார்.
இரண்டு பிரதான கட்சிகளது மாநாடுகளுக்கும் முன்னதாக, இந்த ஜனாதிபதி தேர்தல் ஆண்டுக்கும் மற்றும் 1968 க்கும் இடையே ஊடகங்களில் பல ஒப்பீடுகளும், மீண்டுமொருமுறை வீதிகளில் வன்முறை வெடிக்கலாம் என்ற அனுமானங்களும் இருந்தன.
அமெரிக்க அரசியலின் வன்முறை சூழலை ட்ரம்ப் பிரச்சாரம் தீவிரப்படுத்தி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்றாலும், இத்தகைய பெரிதும் மேலோட்டமான ஒப்பீடுகளில் 48 ஆண்டுகளுக்கு முன்னர் வன்முறையைக் கொண்டு வந்த முக்கிய பிரச்சினை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டிருந்தது, அதுவாவது: ஜனநாயக கட்சியை திக்குமுக்காட செய்த வியட்நாம் போருக்கான பாரிய மக்கள் எதிர்ப்பாகும்.
வியட்நாம் போருக்கு அவரது சொந்த கட்சிக்குள் இருந்த எதிர்ப்பு காரணமாக, அப்போது பதவி வகித்து வந்த ஜனநாயக கட்சி ஜனாதிபதி லிண்டன் ஜோன்சனால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியவில்லை, அவர் முதலில் ஒய்கன் மக்கார்த்திக்கும் (Eugene McCarthy), பின்னர் அப்பிரச்சினையில் ஜோன்சனுடன் முறித்துக் கொண்ட ரோபர்ட் கென்னடிக்கும் அவரின் ஆதரவை வெளிப்படுத்தினார்.
ஒரு போர் ஆதரவாளரான துணை ஜனாதிபதி ஹம்பேர்ட் ஹம்ப்ரே (Hubert Humphrey) ரோபர்ட் கென்னடியின் படுகொலையைத் தொடர்ந்து வேட்பாளர் ஆக்கப்பட்டு, அவர் பின்னர் குடியரசு கட்சி ரிச்சார்ட் நிக்சனால் தோற்கடிக்கப்பட்டதால், பனிப்போர் காலத்திய அருவருப்பான தாராளவாத உடன்படிக்கையின் அடிப்படையில் இருந்த ஜனநாயக கட்சியின் சித்தாந்த அடித்தளத்தங்களை, அதாவது உள்நாட்டில் உதட்டளவில் சமூக சீர்திருத்தம் பேசுவதும், அதனுடன் வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அசைக்க முடியாதவாறு ஆதரிப்பதையும் வியட்நாம் போர் ஆட்டங்காண செய்திருந்தது.
1972 இல் போர்-எதிர்ப்பு வேட்பாளர் ஜோர்ஜு மெக்கவர்ன் (George McGovern) வெற்றி பெற்றார், நிக்சன் தோற்கடிக்கப்பட்டார். இதனால் வியட்நாம் போர் முடிந்த தசாப்தங்களில் ஜனநாயகக் கட்சி அதன் அரசியல் கணக்கீடுகளில் போர் எதிர்ப்புணர்வை கணக்கில் எடுக்க நிர்பந்திக்கப்பட்டது.
அமெரிக்க முதலாளித்துவ அரசுக்குள் இருந்த அக்கட்சியின் முன்னணி நபர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களாக மற்றும் மூலோபாய சிந்தனையாளர்களாக இருந்த வாஷிங்டனின் சிந்தனை குழாம்களுக்கும், கல்வியாளர்கள் மற்றும் போருக்கு பரந்த எதிர்ப்பு கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தின் உயரடுக்குகளை உள்ளடக்கிய ஓர் அரசியல் அடித்தளத்திற்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டது.
இது ஒரு தேர்தல் மாற்றி ஒரு தேர்தலில் கட்சிக்குள் உள்முரண்பாடுகளை உருவாக்கியது. ஜனநாயக வேட்பாளர்கள் ஒருபுறம் அக்கட்சியின் வாக்காளர்களது பரந்த பிரிவுகளிடம் நம்பகத்தன்மையைத் தக்க வைக்க பகிரங்கமாக போர் எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டார்கள். மறுபுறம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நிச்சயமாக தயவுதாட்சண்யமின்றி வெளியுறவு கொள்கையைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்த பெருநிறுவன மற்றும் இராணுவ-உளவுத்துறை ஸ்தாபகத்திற்குள் நம்பகத்தன்மையைப் பேணுவதற்கு பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டார்கள்.
ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் 2003 இல் பாரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, அதற்கடுத்து இந்த எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்குள் திருப்பி விட பல்வேறு போலி-இடது சக்திகளது முயற்சிகளும் வந்தன.
2004 ஜனாதிபதி தேர்தலில் ஹோவர்ட் டீன், “ஜனநாயகக் கட்சியின் ஜனநாயக பிரிவின்" பிரதிநிதியாக கட்சிக்குள் போர் எதிர்ப்புணர்விற்கு கோரிக்கைவிட்டு ஆரம்ப அபிமான நபராக உயர்ந்தார். கட்சி ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களால் அவரின் வேட்பாளர் அந்தஸ்து தடம் புரள செய்யப்பட்ட பின்னரும் கூட, போரை ஆதரித்திருந்த ஜோன் கெர்ரி ஓர் போர் எதிர்ப்பாளராக காட்டிக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டார், அவர் தனக்குத்தானே அரசியல் சிக்கல்களை உண்டாக்கி கொண்டதால் புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட அவரிடம் வெற்றியை ஒப்படைத்தார்.
இறுதியில் 2008 இல் வேட்பாளர் அந்தஸ்தை ஹிலாரி கிளிண்டன் இழந்து பராக் ஒபாமா வென்றதற்கான உறுதியான காரணம், அமெரிக்காவின் 2002 ஈராக் போருக்கு கிளிண்டன் ஒப்புதல் வழங்கியதாகும்.
ஒபாமா இராணுவவாதத்தின் எதிர்ப்பாளர் கிடையாது என்பதை அவரின் அரசியல் முன்வரலாறு குறித்த ஒரு நெருக்கமான ஆய்வு எடுத்துக்காட்டிய போதினும், ஒபாமாவின் வேட்பாளர் நியமனத்தை ஊக்குவிப்பதில், அவரது இன அடித்தளம் குறிப்பாக போலி-இடதால் ஏதோவித முற்போக்கான மற்றும் போர் எதிர்ப்பு அரசியலுக்கான நற்சான்றாக முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே அமெரிக்க உளவுத்துறை அமைப்புடனான அவரது குடும்ப மற்றும் தொழில் சம்பந்தமான தொடர்புகள் செய்திகளில் இருந்து ஒதுக்கப்பட்டன.
ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டமை போலி-இடதால் "மாற்றத்திற்குரியதாக" பெருமைபீற்றப்பட்ட அதேவேளையில் இதே அரசியல் சக்திகளின் உதவியுடன் அவரின் நிர்வாகத்தினது போக்கில் இருந்து என்ன வெளிப்பட்டது என்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தீவிரமாக பெருக்குவதற்கு அடையாள அரசியலை பயன்படுத்தும் முறையாகும்.
இந்த சூத்திரம் பிலடெல்பியா மாநாட்டில் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டது, அங்கே இனம், பாலினம் மற்றும் பாலியல் நிலைநோக்கு ஆகியவையே அரசியல் மற்றும் சமூக வாழ்வை தீர்மானிக்கும் காரணிகள் என்பதாக காட்டும் அடையாள அரசியல், வெட்கமின்றி அமெரிக்க இராணுவவாத கொண்டாட்டத்திற்குள் நேரடியாக பின்னிப்பிணைக்கப்பட்டிருந்தது.
இது, "பூரணமாக சுயசேவை" வழங்கும் மற்றொரு ஏகாதிபத்திய போர் படையான பிரெஞ்சு வெளிநாட்டு படையணிக்கு சார்பாக வழங்கப்பட்ட ஒரு கருத்தான, அதாவது "நமது இராணுவம் அது செயல்படுவதற்கான வழியில், மனிதயினத்தின் ஒவ்வொரு நிறத்தினையும் பொதுவான சேவையில் பிணைத்துக் கொள்ள பார்க்கிறது,” என்ற அவரது அறிவிப்பு உட்பட ஒபாமாவின் மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உரையில் வெளிப்பாட்டைக் கண்டது.
“நமக்கு போதிய வாக்குகள் கிடைத்ததும், பின்னர் நடைமுறைகள் தொடங்கும். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், தனது விருப்பத்திற்குரிய கணவருக்குப் பின்னால் மறைந்து கொள்ளாமல் தனது நாட்டுக்காக பெருமையுடன் சேவையாற்றும் கடற்படை வீராங்கனையைக் … கூட கேட்டுப் பாருங்கள்,” என்று குறிப்பிடும் அளவிற்கு அவர் சென்றார்.
அமெரிக்க இராணுவம் இரண்டாம் உலக போருக்கும் மற்றும் 2011 இல் "கேட்காதீர்கள், கூறாதீர்கள்" கொள்கையை இல்லாதொழித்து, சேவையில் இருக்கும் 114,000 க்கும் அதிகமான படையினரை பதவியிலிருந்து மதிப்பிழந்த விதத்தில் வெளியேற்றி, நீண்டகாலமாக வெறித்தனமான ஓரினச்சேர்க்கையின் ஓர் அரணாக இருந்துள்ளது. இராணுவத்திற்குள் ஓரினச்சேர்க்கையாளர்களை அனுமதிப்பது ஒழுங்கை குலைக்கும் என்பது அமெரிக்க கட்டளையகத்திற்கான ஒரு நம்பிக்கைக்குரிய ஷரத்தாக இருந்துள்ளது.
அமெரிக்க தாராளவாத அரசியலுடன் அடையாளப்படும் தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்கு மத்தியில் இராணுவத்திற்கான ஆதரவை வென்றெடுப்பது அரசியல்ரீதியில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆளும் அரசியல் ஸ்தாபகமும் இராணுவ உயரதிகாரிகளின் தீர்க்கமான அடுக்குகளும் இரண்டுமே ஏற்றுக் கொண்டிருந்தன என்பதே இக்கொள்கையை மாற்றுவதற்கான ஆதரவின் மையத்தில் இருந்தது.
“இவை உங்களின் துருப்புகள். இது உங்களின் போர்கள். அவர்கள் உங்களின் நலனுக்காகவே போரிட்டு வருகிறார்கள்,” என்பது வெளிப்படையாக அம்மாநாட்டின் சேதியாக இருந்தது.
இதேபோன்ற அடையாள அரசியல் பிரச்சினைகளை ரஷ்ய-விரோத விஷம பிரச்சாரத்தைத் தூண்டிவிடுவதற்கான அதன் முயற்சிகளில் ஒபாமா நிர்வாகம் பயன்படுத்தியது, இது பிலிடெல்பியாவில் காட்சிக்கு வந்தது. இவ்விதத்தில் நன்கு-முடுக்கிவிடப்பட்ட பிரச்சாரங்கள், சோச்சி குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போது ஓரினச் சேர்க்கையாளர்கள் சம்பந்தமாக புட்டினால் வழங்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் Pussy Riot இசைக்குழுவை சுற்றி உண்டாக்கப்பட்டன.
அம்மாநாட்டின் சூடான வார்த்தைஜாலங்களுக்கு விடையிறுப்பாக, வாஷிங்டன் போஸ்ட் இன் பாதுகாப்புத்துறை கட்டுரையாளர் "கிளிண்டன் இப்போது ஜனநாயகக் கட்சியை ரஷ்ய-விரோத கட்சியாக்கி உள்ளார்" என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். அவர் குறிப்பிடுகையில், “டோனால்ட் ட்ரம்ப் ஐ தேசிய பாதுகாப்புக்கு ஓர் அபாயகரமான அச்சுறுத்தலாக சித்தரிக்கும் அவர்களின் வைராக்கியத்தால், ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதியானால் அவர் இப்போது அமெரிக்க-ரஷ்ய உறவுகள் மீதான இரண்டு பிரதான அமெரிக்க கட்சிகளின் ஒட்டுமொத்த பாத்திரத்தையும் மாற்றியமைக்ககூடிய ஒரு கூர்மையான ரஷ்ய-விரோத நிலைப்பாட்டை கிளிண்டன் பிரச்சாரம் எடுத்துள்ளது,” என்றார்.
ஹிலாரி கிளிண்டனின் எதிர் போட்டியாளர் பேர்ணி சாண்டர்ஸ் இன் பிரச்சாரத்தைத் தோற்கடிக்கவும் மற்றும் வேட்பாளர் அந்தஸ்தைப் பெறுவதற்குமான முயற்சியில் கிளிண்டன் பிரச்சாரத்திற்கும் மற்றும் ஜனநாயகக் கட்சி தேசிய குழுவிற்கும் இடையே இருந்த கூட்டுறவை எடுத்துக்காட்டும் ஜனநாயகக் கட்சி தேசிய குழுவின் மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதற்கு விடையிறுப்பாக, ரஷ்ய-விரோத பிரச்சாரம் கூர்மையாக முடுக்கிவிடப்பட்டது.
கிளிண்டனும் அவரது ஆதரவாளர்களும் அந்த மின்னஞ்சல்கள் வெளியானதை ஒரு “தேசிய பாதுகாப்பு” பிரச்சினையாக சித்தரித்தும், அமெரிக்க தேர்தல்களைச் சீர்கெடுக்க அந்த கசிவுக்குப் பின்னால் விளாடிமீர் புட்டின் தான் முக்கிய நபராக இருந்தார் என்று அர்த்தமின்றி குற்றஞ்சாட்டியும், அந்த மின்னஞ்சல்களின் பரபரப்பான உள்ளடக்கங்கள் மீதான எந்தவித விவாதத்தையும் தவிர்த்துவிட முயன்றனர்.
முன்னதாக வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்கள் மற்றும் உள்நாட்டில் ஒட்டுமொத்த உளவுவேலைகள் அம்பலமானதற்கு விடையிறுத்ததிலும் இதே முறைதான் பயன்படுத்தப்பட்டது என்பது நினைவுகூரப்பட வேண்டும், அதில் செல்சியா மேனிங், ஜூலியான் அசான்ஜ் மற்றும் எட்வார்ட் ஸ்னொவ்டென் ஆகியோர் வக்கிரமான தொல்லைகள், சிறையடைப்பு மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் வடிவத்தில் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தயவுதாட்சண்யமற்ற ஒடுக்குமுறைக்கும், அத்துடன் போருக்குமான எதிர்ப்பு, ஜனநாயகக் கட்சி மாநாட்டில் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. இவ்விரண்டையுமே கிளிண்டன் ஆதரித்தார் என்பது மட்டுமல்ல அதில் பங்கு வகித்திருந்தார் என்பதையும் கூற வேண்டியதே இல்லை.
மிகவும் திட்டவட்டமாக, 1960 கள் மற்றும் 1970 களில் ஜனநாயக கட்சியினருடன் முறித்துக் கொண்டு ரீகன் மற்றும் புஷ் நிர்வாகங்களின் முன்னணி பதவிகளுக்குள் நகர்ந்த, பொதுவாக "நவபழமைவாதிகள்" என்று குறிப்பிடப்படும், ஓர் ஒட்டுமொத்த அரசியல் அடுக்கு, ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பகிரங்க கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டு, இப்போது மீண்டும் திரும்பி வந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் இந்த அரசியல் பரிணாமம் வெறுமனே கட்சி தலைமை மற்றும் அரசு அமைப்புகளுக்குள்ளும் நடக்கும் தந்திரங்கள் சார்ந்த விடயமல்ல. இது போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு புதிய ஆதரவு வட்டத்தை வழங்குகின்ற, கூர்மையாக வலதிற்கு நகர்ந்துள்ள ஒரு தனிச்சலுகை கொண்ட சமூக அடுக்கிற்குள் ஒரு சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ளது. கவனமானமுறையில் வர்க்க அடித்தளத்திற்கு எதிராக, இனம், பாலினம் மற்றும் பாலியல் நிலைநோக்கு பிரச்சினைகளை முறையாக நிர்ணயம் செய்வதென்பது இந்த பிற்போக்குத்தனமான திருப்பத்திற்கு ஒரு முக்கிய சித்தாந்தரீதியிலான அடித்தளத்தை வழங்குகிறது.
பிலடெல்பியா மாநாடு, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் தீவிரமயமாதலுக்கு நேரெதிராக நகர்ந்து வரும், மற்றும் ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்து வரும் ஒரு கட்சியை அம்பலப்படுத்துகிறது.
அடுத்த காலகட்டத்தில், வர்க்க போராட்டம் மிகவும் சக்தி வாய்ந்த விதத்தில் எழுச்சி அடைகையில், அமெரிக்க தொழிலாளர்கள் போருக்கு எதிராக மீளெழுவதைக் காணும்.
இந்த அபிவிருத்திக்கு நனவுபூர்வமான அரசியல் வெளிப்பாட்டை வழங்கி, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக மற்றும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிராக ஒரு பாரிய சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடுவதற்குப் பிரச்சாரம் செய்யும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மட்டுமே ஆகும். ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வையிட் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் நைல்ஸ் நிமுத் இன் SEP பிரச்சாரத்தை ஆதரித்து கட்டியெழுப்புமாறு நாம் நமது வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்துகிறோம்.