Print Version|Feedback
More airstrikes in new US war in Libya
லிபியாவிலான புதிய அமெரிக்க போரில் கூடுதல் வான் தாக்குதல்கள்
By Peter Symonds
3 August 2016
அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளவாறு தொடர்ந்து நடந்துவரும் இராணுவ நடவடிக்கையின் பாகமாக லிபிய கடற்கரை நகரமான சிர்ட்டே மீது திங்களன்று தொடங்கிய அமெரிக்க விமானப்படை தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. பெயரளவிற்கு ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) போராளிகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக இருந்தாலும், அமெரிக்க இராணுவவாதத்தின் இந்த புதிய தொடக்கம் மிக பரந்தளவில் அப்பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும்.
திங்களன்றும், நேற்றும் மற்றும் நேற்றைய முந்தைய நாளும் சிர்ட்டே நகரின் ISIS இடங்களையும், டாங்கிகள், வாகனங்கள், ஒரு ராக்கெட் ஏவுதளத்தையும் இலக்கில் வைத்து, அந்நகரின் ஐந்து இடங்களை அமெரிக்கா தாக்கியதாக பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஜெஃப் டேவிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அசோசியேடெட் பிரஸ் தகவல்படி, மத்தியத் தரைக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள நீரிலும் நிலத்திலும் தாக்கும் போர்க்கப்பல் USS Wasp இல் உள்ள கடற்படை தாக்குதல் போர்விமானம் தாக்குதல்களில் பங்குபற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை ஆதரவுடன் திரிப்பொலியின் கைப்பாவை ஆட்சியான ஒத்திசைந்த தேசிய அரசாங்கம் (GNA), விமானத் தாக்குதல்கள் நடத்துவதற்கு வாஷிங்டனுக்கு அதன் உத்தியோகபூர்வ ஒப்புதலை மூடிமறைப்புடன் வழங்கியுள்ளது. பல்வேறு போராளிகள் குழுக்களுக்குள் இருந்து ஒன்றுதிரட்டப்பட்ட GNA படைப்பிரிவுகள், இப்போது சிர்ட்டே இல் இருந்து ISIS போராளிகளை வெளியேற்றும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
சிர்ட்டே நகரை மீண்டும் கைப்பற்ற அமெரிக்க இராணுவம் வெறுமனே GNA க்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அறிவித்த டேவிஸ், “அவர்கள் அந்நோக்கத்தை எட்டுவதற்காகும் கால அளவை பொறுத்து அந்நடவடிக்கைக்கான கால அளவு தீர்மானிக்கப்படும்,” என்றார். அமெரிக்க விமானத் தாக்குதல்கள் அனேகமாக "வாரங்கள் அல்ல மாதங்களுக்கு" நீடிக்கும் என்றார். எவ்வாறிருப்பினும் “இப்போதைக்கு" சிர்ட்டே தான் இலக்கு என்றாலும் கூட, GNA க்கான பொறுப்புறுதியை "முழுமையாக தாங்கி நிற்க வேண்டியிருக்கும்" என்பதை டேவிஸ் சுட்டிக்காட்டினார்.
திங்கட்கிழமையின் தாக்குதல்கள் மற்றொரு தனித்த தாக்குதல் என்பதை விட ஒரு நீடித்த விமானத் தாக்குதலின் தொடக்கத்தைக் குறிப்பதாக பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரிகள் ராய்டர்ஸ் க்கு தெரிவித்தனர். முந்தைய அமெரிக்க விமானத் தாக்குதல்கள் மேற்கத்திய நகரமான சப்ரதாவின் ISIS பயிற்சி முகாம் ஒன்றின் மீது பெப்ரவரியில் நடத்தப்பட்டன.
வாஷிங்டன் அந்த எண்ணெய் வளம்மிக்க வடஆபிரிக்க நாட்டில் ஒரு புதிய இராணுவ தலையீட்டிற்கு பல மாதங்களாக தயாரிப்பு செய்து வந்துள்ளது. முப்படை தளபதிகளின் தலைவர் தளபதி ஜோசப் டுன்ஃபோர்டு, ஆயிரக் கணக்கான அமெரிக்க துருப்புகளை உள்ளடக்கிய ஒரு "நீண்டகால நடவடிக்கை" உடனடியாக அவசியப்படுவதாக மே மாத இறுதியில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். GNA இன் ஒப்புதல் முத்திரை பெறுவதில் இக்கால தாமதம் ஆகியுள்ளது.
லிபிய மண்ணில் அமெரிக்க சிப்பாய்கள் இருப்பார்களா என்பதை Military Times உடன் பேசுகையில் அமெரிக்க அதிகாரிகள் கூறவில்லை. இருப்பினும் சிறப்பு நடவடிக்கை துருப்புகளின் சிறிய சிறிய "தொடர்பு குழுக்கள்", உளவு செய்திகளைப் பெறவும் மற்றும் உள்நாட்டு இராணுவ பிரிவுகளுடன் கூட்டுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் சமீபத்திய மாதங்களில் அந்நாட்டிற்கு உள்ளே சென்று வந்துள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய சிறப்பு படைகளும் லிபியாவில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
வாஷிங்டன் அதன் புதிய இராணுவ நடவடிக்கைகளை "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் நியாயப்படுத்தினாலும் கூட, 2011 இல் லிபியாவில் அமெரிக்க தலைமையிலான இராணுவத் தலையீடுதான் ISIS உருவாவதற்கும் மற்றும் அந்நாட்டில் காலூன்றுவதற்கும் நேரடியாக பொறுப்பாகிறது. லிபிய அரசாங்கத்தைக் கவிழ்த்து, அதன் தலைவர் மௌம்மர் கடாபியை படுகொலை செய்ய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அல் கொய்தா இணைப்பு கொண்ட போராளிகள் குழுக்களை மிகவும் சார்ந்திருந்தன.
அதே இஸ்லாமிய போராளிகள் குழுக்கள், பெரும் எண்ணிக்கையிலான லிபிய ஆயுதங்களுடன், பின்னர் சிரியாவில் அமெரிக்கா-முன்னெடுத்த புதிய ஆட்சி மாற்ற நடவடிக்கையில் பங்கெடுக்க அனுப்பப்பட்டனர். இரத்தந்தோய்ந்த சிரிய உள்நாட்டு போரிலிருந்து திரும்பிய அந்த அமெரிக்க பினாமிப் படைகள்தான், கடந்த ஆண்டு சிர்ட்டே நகர் மீது கட்டுப்பாட்டைப் கைப்பற்றிய இந்த ISIS படைகள்.
ஒரு சட்டபூர்வ அரசாங்கத்தின் பெயரில் நடவடிக்கை எடுப்பதாக கூறும் அமெரிக்க கூற்று ஒரு ஏமாற்று மோசடியாகும். ஃபயெஜ் அல்-சராஜ் (Fayez al-Sarraj) தலைமையில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மேற்கு-சார்பிலான GNA ஆட்சி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுடன் கடந்த டிசம்பரில் கையெழுத்தான ஒரு உடன்படிக்கையின் பாகமாக போட்டி கன்னைகளை ஒருங்கிணைத்து ஒட்டுப்போட்டு உருவாக்கப்பட்டது. அது மார்ச்சில்தான் திரிபொலியில் நிறுவப்பட்டது.
கடாபியை வெளியேற்றிய அமெரிக்க பினாமி படைகளில் முக்கியமான ஒரு நீண்டகால சிஐஏ சொத்தான தளபதி கலிஃபா ஹாஃப்தர் (Khalifa Haftar) தலைமையில் கிழக்கத்திய நகரமான பெங்காசியில் அமைந்துள்ள ஒரு எதிர்விரோத அரசாங்கம், GNA ஐ கடுமையாக எதிர்க்கிறது. ஹாஃப்தர் படைகளின் ஒரு செய்தி தொடர்பாளர் அஹ்மத் மெஸ்மாரி நேற்று அமெரிக்க விமானப்படை தாக்குதல்களை கண்டித்து, “தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் மூடிமறைப்பின் கீழ் கூட" வாஷிங்டனுக்கு "அனுமதி கிடையாது" என்று அறிவித்தார்.
கிழக்கத்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு நாடாளுமன்றவாதியான அபுபகீர் பைரா வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு கூறுகையில், “லிபிய மோதலின் எல்லா தரப்புகளும் அவர்களின் உள்நாட்டு எதிரிகளுக்கு எதிராக தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையில், கோழைத்தனமாக இருந்தாலும் கூட, இராணுவ அல்லது அரசியல் ஆதரவு என்றழைக்கப்படும் இதற்கு துரதிருஷ்டவசமாக அவர்களது கதவுகளை மகிழ்ச்சியோடு திறந்து விட்டிருக்கின்றன,” என்றார்.
திரிபொலியை போலவே பெங்காசியும் சர்வதேச சதியின் ஒரு உள்சூழ்ச்சியின் மையத்தில் உள்ளது. GNA ஐ பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருந்தாலும் கூட, எகிப்து மற்றும் சில வளைகுடா நாடுகளுடன் சேர்ந்து ஹாஃப்தர் ஆட்சிக்கு ஆதரவு வழங்குகிறது. கடந்த மாத ஆரம்பத்தில் பெங்காசிக்கு அருகே பிரெஞ்சு பாதுகாப்பு உளவாளிகளின் ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்ட போது மூன்று பிரெஞ்சு பாதுகாப்பு உளவாளிகள் கொல்லப்பட்டதை ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் கடந்த வாரம் ஒப்புக்கொண்ட போது, பிரான்ஸ் அங்கே சம்பந்தப்பட்டிருப்பது தெள்ளத்தெளிவாக அம்பலமானது.
GNA க்கும் மற்றும் அந்நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்கும் பிரான்ஸ் அதன் முழு ஆதரவை அறிவித்து திரிபொலி உடனான உறவுகளை அது நேற்று சீர்படுத்த முயன்றது.
மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடனும் அத்துடன் ஆசிய பசிபிக்கில் சீனாவுடனும் பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு இடையே, லிபியாவில் புதிய அமெரிக்க இராணுவ தலையீடு நிகழ்கிறது. ஐயத்திற்கிடமின்றி ஒரு நீண்ட பரந்த நடவடிக்கையின் ஆரம்ப நடவடிக்கையாக இருக்கும் சிர்ட்டே மீதான விமானத் தாக்குதல்கள் லிபியா மற்றும் அதன் எண்ணெய் வயல்கள் மீதான வாஷிங்டனின் பிடியைத் திட்டவட்டமாக்குவதற்காக மட்டுமின்றி, மாஸ்கோவ் மற்றும் பெய்ஜிங்கிற்கு ஒரு எச்சரிக்கை வழங்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஒப்புதலைப் பெறும் எந்தவித முயற்சியும் இல்லாமல் அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு புதிய போரைத் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் அர்த்தமற்ற விதத்தில், 9/11 பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள் மற்றும் நடத்தியவர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய இராணுவ படைகளைப் பிரயோகிப்பதற்கான 2001 ஒப்புதல் தீர்மானத்தை மேற்கோளிட்டது. 2001 இல் ISIS இருக்கவே இல்லை என்பது மட்டுமல்ல மாறாக இப்போது அது அல் கொய்தாவின் உறுதியான எதிரியாக உள்ளது.
மற்றொரு போரைத் தொடங்குவதன் மீது ஒபாமா எந்தவித உத்தியோகப்பூர்வ அறிக்கையும் வெளியிடாமல், அதற்கு பதிலாக சிங்கப்பூர் பிரதம மந்திரி உடனான நேற்றைய ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில் கடமைக்காக ஒரு சில கருத்துக்களை வழங்கினார். ஓர் இரத்த ஆறை தடுக்க வேண்டி இருந்ததாக 2011 தலையீட்டை நியாயப்படுத்தி அறிவித்த பின்னர், “அங்கே ஒரு செயல்படும் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு முறையை ஸ்தாபிப்பதற்கு ஒரு நீண்ட நடைமுறையாகி இருக்கின்ற ஒன்றுக்கு" இந்த புதிய இராணுவ நடவடிக்கைகள் "தொடக்கமாக இருக்கும்" என்று அறிவித்தார்.
வாஷிங்டன் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பாதுகாக்க முன்பினும் அதிக கடுமையான பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்குள் தஞ்சமடைந்துள்ளதால், யதார்த்தத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒருபோதும் முடிவில்லா "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதன் சமீபத்திய இந்த ஆரம்ப போர்முனை, ஈராக் மற்றும் சிரியாவில் போலவே, லிபிய மக்களுக்கு புதிய பேரழிவுகளை மட்டுமே வழங்க இருக்கிறது.