Print Version|Feedback
New flashpoint in escalating war: Turkey shells ISIS and Kurdish forces in Syria
தீவிரமடையும் போரில் புதிய தீப்பற்றும் புள்ளி: சிரியாவில் ISIS மற்றும் குர்திஷ் படைகள் மீது துருக்கி குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்துகின்றது
By Barry Grey
24 August 2016
சென்ற வாரத்தில் சிரியாவின் வடக்கு நகரமான Hasakeh இல் அமெரிக்க-ஆதரவு குர்திஷ் படைகளின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்திய சிரிய அரசாங்கத்தின் போர் விமானங்களின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சிரியாவின் எல்லை நகரமான Jarablus க்குள்ளும் மற்றும் அதன் அருகிலும் உள்ள ISIS போராளிகளுக்கு எதிராகவும், குர்திஷ் குடிப்படைக்கு எதிராகவும் துருக்கி பீரங்கி குண்டுப்பொழிவை தொடக்கியுள்ளது.
துருக்கி அதன் எல்லை நகரங்களான Karkamis மற்றும் Kilis மீது திங்களன்று விழுந்த குண்டுகள் Jarablus நகரை ஆக்கிரமித்திருக்கும் ISIS படைகளால் ஏவப்பட்டவை என்று கூறுகிறது.
இந்த பதிலடி குண்டுவீச்சை தவிர, சனிக்கிழமையன்று குறைந்தபட்சம் 54 பேரினது உயிரிழப்பிற்கும் மற்றும் ஏராளமானோர் படுகாயமடைவதற்கும் காரணமான ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலை சந்தித்த Gaziantep நகரத்தில் சுமார் 1500 சிரிய “கிளர்ச்சிப்படையினர்” கொண்ட ஒரு படையையும் துருக்கி திரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த கொடூரச் செயலுக்கு ISIS என தான் காரணம் என துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
துருக்கி-சிரிய எல்லை நகரமான Jarablus இல் தனது எல்லையில் துருக்கி, டாங்கிகளையும் ஆயுதமேந்திய படையினரை சுமந்து செல்லும் கவச வாகனங்களையும் நிறுத்தி, பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாக அரசின் செய்தி நிறுவனமான Anadolu தெரிவித்தது.
Gaziantep நகரில் இருக்கும் “கிளர்ச்சிப் படை”, Jarablus இல் ISIS இன் கட்டுப்பாட்டை உடைக்கும் நோக்கத்துடன் சிரியாவுக்குள் நுழைகின்ற அதேநேரத்தில், அதனால் உருவாகின்ற அதிகார வெற்றிடத்தை குர்திஷ் தலைமை கொண்ட, அமெரிக்க-ஆதரவு சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) கைப்பற்றிவிடாமலும் பார்த்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் தலையீடு செய்கின்ற உலக சக்திகளிடையேயான மாறிக்கொண்டிருக்கும் கூட்டணிகள் மற்றும் மோதல்களின் ஒரு சிக்கலுக்குள் இந்த சமீபத்திய வெடிப்புமிக்க திருப்பமானது, துருக்கியை, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் பிரதான பினாமிப் படையான குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவுகளுடன் (Kurdish People’s Protection Units) அல்லது சிரிய ஜனநாயகப் படைகளின் (SDF) முதுகெலும்பாய் திகழும் YPG உடன் நேரடியான மோதலுக்குள் கொண்டுவர அச்சுறுத்துகிறது.
இந்த மாத ஆரம்பத்தில், உக்கிரமான மற்றும் மரணகரமான அமெரிக்க வான்படை ஆதரவுடன் SDF, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த Manbij நகரத்தை விட்டு ISIS ஐ விரட்டியது. துருக்கிக்குள்ளாக குர்திஷ் பிரிவினைவாத குர்திஷ்தான் தொழிலாளர் இயக்கத்திற்கு (Kurdistan Workers Movement - PKK) எதிராய் ஒரு மூர்க்கத்தனமான போரை நடத்தி வருகின்ற துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்டோகனின் அரசாங்கத்தை இது உஷார்படுத்தியது. மான்பிஜில் இல் YPG இன் வெற்றியானது, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடன் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு அறிவிக்கப்படாத குர்திஷ் பிராந்தியத்தை மேலும் வலுப்படுத்திவிடும் என்று அது அஞ்சுகிறது.
நேட்டோ கூட்டாளிகளான துருக்கியும் அமெரிக்காவும், சிரியாவில் நாளுக்கு நாள் ஒன்றுக்கொன்று குறுக்கிடும் நோக்கங்களுடன் வேலை செய்வது அதிகரித்துச் செல்கிறது. இது சிரியாவின் ஈரான்-ஆதரவு மற்றும் ரஷ்யா-ஆதரவு சிரிய ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சியை அகற்றுவது, அமெரிக்காவின் கைப்பாவை அரசாங்கம் ஒன்றை அங்கு அமர்த்துவது ஆகிய, அமெரிக்கா அந்நாட்டின் போது இந்த படுபயங்கரப் போரை ஏவியதற்கான மையமான காரணத்தை மேலும் விரக்தி பெறச் செய்வதாக இருக்கிறது. Jarablus இல் விரிந்து செல்லும் மோதலானது, ஜூலை 15 அன்று நடந்த ஒரு தோல்வியடைந்த இராணுவ சதியின் பின்னால் அமெரிக்கா உடந்தையாக இருந்ததாய் துருக்கி குற்றம்சாட்டியமை, ரஷ்யா மற்றும் ஈரானுடன் ஒத்துழைத்துச் செல்வதை நோக்கி எர்டோகன் திரும்பியமை, மற்றும் அசாத்திற்கான எதிர்ப்பை துருக்கி மென்மைப்படுத்தியிருப்பது இவற்றைப் பின்தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே பதட்டம் நிரம்பிய நிலைமைகளின் கீழ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான ஜோசப் பைடன் துருக்கியின் உயர் அதிகாரிகளைச் சந்திக்க இன்று வருவதன் ஏககாலத்திலும் இது நடக்கிறது.
எல்லையில் சிரிய பகுதியில் இருக்கும் SDF இன் ஒரு அதிகாரியான நஸ்வார் ஹெஜ் மன்சூர், துருக்கியில் திரட்டப்பட்டிருக்கும் படைகளில் “பயங்கரவாதிகளும்” அத்துடன் துருக்கிய சிறப்புப் படையினரும் இடம்பெற்றிருந்ததாக கூறியதாக செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸில் செய்தி வெளியாகியிருந்தது. “நேரடி அல்லது மறைமுக ஆக்கிரமிப்பிற்கான எந்தத் திட்டங்களில் இருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்கு நாங்கள் தயாரிப்புடன் இருக்கிறோம்” என்று SDF யிடம் இருந்தான ஒரு அறிக்கை அறிவித்தது.
SDF உடன் இணக்கம் கொண்ட ஒரு கிளர்ச்சிப்படைத் தளபதியான அப்துல்-சத்தார் அல்-ஜடெர், திங்களன்று பிற்பகுதியில் ”Jarablus இராணுவ கவுன்சில்” உருவாக்கப்படுவதான ஒரு பிரகடனம் ஒளிபரப்பப்பட்டு துருக்கியின் “வலிந்த தாக்குதல்களில்” இருந்து நகரத்தின் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு வாக்குறுதியளித்த சற்று நேரத்தின் பின் கொல்லப்பட்டார். அதனையடுத்து அவரது மரணத்திற்கு துருக்கியின் பாதுகாப்பு முகவர்கள்தான் காரணம் என்று இராணுவ கவுன்சில் குற்றம்சாட்டியது. சந்தேகத்திற்குரிய இரண்டு பேர் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறிய ஹெஜ் மன்சூர், ஆயினும் அவர்களது அடையாளங்களை வெளியிடவில்லை.
சிரியாவில் குர்திஷ் படைகளின் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் விரிந்து செல்வதற்கும், YPG மற்றும் SDF மீது அசாத் ஆட்சியின் மிகத் தீவிரப்பட்ட அணுகுமுறை அதிகரிதுச்செல்வதற்கும் இடையில் ஒரு வெளிப்பட்ட ஒற்றுமை இருக்கிறது. சென்ற வாரத்தில், சிரிய உள்நாட்டுப் போரின் ஆரம்ப நாட்கள் தொட்டே இரண்டு முகாம்களாய் பிரிந்து கிடக்கின்ற Hasakeh நகரத்தில் YPG க்கும் சிரியத் துருப்புகள் மற்றும் அரசாங்க-ஆதரவு போராளிப் படைகளுக்கும் இடையிலான ஆறுநாள் மோதலுக்குப் பின்னர், சிரிய விமானப் படை முதன்முதலாய் YPG இன் நிலைகளின் மீது குண்டுவீசித் தாக்கியது. இந்த நடவடிக்கையானது அரசாங்க-ஆதரவுப் படைகளை விரட்டிய பின் ஒட்டுமொத்த நகரத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு குர்திஷ்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கான ஒரு பதிலிறுப்பாய் இருந்தது என்பது வெளிப்படை.
சிரியாவிலான சூழ்நிலை எந்த அளவுக்கு வெடிப்பாகவும் பெரும் பேரழிவு சாத்தியம் கொண்டதாகவும் இருக்கிறது என்பதும், அமெரிக்காவின் கொள்கை எந்த அளவுக்கு பொறுப்பற்றதாக இருக்கிறது என்பதும் அமெரிக்கப் பதிலிறுப்பால் நிரூபணமாகியுள்ளது. குர்திஷ் குடிப்படைகளுடன் முழு சட்டவிரோதமாக ஒட்டிக் கொண்டிருக்கும் தனது சிறப்புப் படைத் துருப்புகள் அரசாங்கக் குண்டுவீச்சினால் ஆபத்துக்குள்ளாகியிருந்ததாகக் கூறி, அமெரிக்கா, சிரிய போர் விமானங்களுடன் மோதுவதற்கு ஜெட் விமானங்களை குவித்து, ரஷ்ய-ஆதரவு சிரியப் படைகளுடன் ஒரு இராணுவ மோதலுக்கான சாத்தியத்தை உருவாக்கியது.
மேலதிக குண்டுவீச்சுகள் நடந்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்ற அச்சுறுத்தல்களுடன் பென்டகன் செய்தித்தொடர்பாளர் தொடர்ந்தார். சிரியா மற்றும் ஈராக்கிலான அமெரிக்க மற்றும் கூட்டுப் படைகளின் தலைமைக்கு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட லெப்.ஜெனரல். ஸ்டீபன் ஜே. டவுன்செண்ட் CNN இடம் பேசுகையில், “நாங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தால் எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்வோம்” என்று கூறினார்.
சிரியாவிலான பெரும் மோதலான மற்றும் சிக்கலான சூழ்நிலையானது இன்னும் மிகப்பெரிய மற்றும் இரத்தம்தோய்ந்த மோதலாக துரிதமாய் உருவெடுத்துவிடக் கூடும் என்பதும், அதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான அணுப் பதிலடிகளும் கூட இடம்பெறக் கூடும் என்பதும், Hasakeh நகரில் சிரிய அரசாங்கத்திற்கு ஆதரவாக ஈரானிய மற்றும் ஹெஸ்பொல்லா படைகள் இரண்டும் நிறுத்தப்பட்டிருப்பதிலும், குர்திஷ் தலைமை கொண்ட SDF க்குள்ளாக பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க சிறப்புப் படைகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதிலும் எடுத்துக்காட்டப்படுவதாய் இருக்கிறது.
செவ்வாய்க்கிழமையன்று, சிரியாவின் அரசு ஊடகம் மற்றும் Kurdish Hawar செய்தி நிறுவனம் இரண்டும் வெளிப்பட ரஷ்யாவின் மத்தியஸ்தத்தில் Hasakeh இல் ஒரு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதை அறிவித்தன. ஆயினும், இந்த சண்டை நிறுத்த ஷரத்துகளின் படி, அரசாங்கப் படைகள் அந்த நகரத்தில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளுவதற்கும் உள்ளூர் குர்திஷ் போலிஸ் படையின் கட்டுப்பாட்டின் கீழ் அதனை விட்டுவிடுவதற்கும் உடன்பட்டிருப்பதாக குர்திஷ் அறிக்கை கூறிய அதேநேரத்தில், சிரிய அறிக்கையானது படைகளை திரும்பப் பெறுவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
அசாத் ஆட்சிக்கும், துருக்கிக்கும் இடையில் குரோதம் குறைந்திருப்பதன் மற்ற அறிகுறிகளும் இருந்தன. வெள்ளிக்கிழமையன்று, சிரிய இராணுவத்தின் பொதுத் தளபதி, துருக்கிக்கான ஒரு வெளிப்பட்ட சலுகையாக தென்பட்ட ஒன்றாக, Hasakeh நகரில் இருக்கும் குர்திஷ் Asayesh உள்துறை போலிசை “குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் இராணுவப் பிரிவு” எனக் குறிப்பிட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது. சிரியாவின் குர்திஷ் படைகளை PKK இன் ஒரு ஆதரவு கையாட்களாக அறிவிப்பதற்கு துருக்கி நீண்டகாலமாக சிரியாவை வலியுறுத்தி வந்திருக்கிறது.
மறுபக்கத்தில், துருக்கியின் பிரதமரான பினாலி ஜில்டிரிம், சனிக்கிழமையன்று இஸ்தான்புல்லில் வெளிநாட்டு ஊடகங்களிடம் பேசுகையில், அசாத்தை நோக்கிய துருக்கியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருந்த ஒரு மாற்றத்தை எடுத்துக்காட்டினார். சிரிய நெருக்கடிக்கான ஒரு நீண்டகாலத் தீர்வின் பகுதியாக அசாத் இருக்கமுடியாது என்ற அதேநேரத்தில், ஒரு இடைமருவல் அரசாங்கத்தில் அவருக்கான ஒரு பாத்திரத்தை ஏற்றுக் கொள்ள துருக்கி விருப்பத்துடன் இருப்பதாக முதன்முறையாகக் கூறினார். அதேநேரத்தில், சிரிய நெருக்கடியில் துருக்கி கூடுதல் செயலூக்கத்துடன் தலையீடு செய்யும் என்றும் அந்நாடு இன அல்லது பிரிவினைவாதரீதியாக பிளவுபட அனுமதிக்காது - சிரிய குர்திஷ்களை நோக்கிய அமெரிக்க கொள்கை மீதான ஒரு மறைமுகமான விமர்சனம் - என்றும் ஜில்டிரிம் வலியுறுத்தினார்.
பொதுவாக அமெரிக்காவின் ஏகாதிபத்திய நோக்கங்களை எட்டுவதற்கு மேலும்மேலும் சாதகமற்றதாகிச் செல்கின்ற இந்த அதிகார கொள்ளை மற்றும் மோதும் புவி-அரசியல் மோதல்களது வெடிப்பான கலவைக்குள்ளாக, அமெரிக்கா தனது இராணுவ வன்முறையை மேலும் தீவிரப்படுத்துவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.
ஈராக்கில் மொசூல் நகரத்தையும் சிரியாவில் ரக்கா நகரத்தையும் ISIS இடம் இருந்து மீட்பதற்காக தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்கின்ற நிலையில் தனது பினாமிப் படைகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தவிருப்பதாக திங்கட்கிழமையன்று, புதிய அமெரிக்கத் தளபதியான ஜெனரல் டவுன்செண்ட் தெரிவித்தார். தீவிரமான விமான மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள், மற்றும் உள்ளூர் படைகளுக்கு ஆயுதமளிக்கவும் பயிற்சியளிக்கவுமான அதிகரித்த முயற்சிகள் ஆகியவையும் இந்த தீவிரப்படுத்தலில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார். இந்த இரண்டு நாடுகளிலும் அமெரிக்க துருப்புகளின் பிரசன்னத்தை பெரிதாக்கும் சாத்தியத்தை அவர் திறந்துவைத்திருந்தார்.