Print Version|Feedback
Kerry backs Duterte’s murderous anti-drug campaign: “Placing a cheapness on the lives of Orientals”
டுரேற்ற இன் கொலைகார நடவடிக்கையான போதை-தடுப்பு திட்டத்தை கெர்ரி ஆதரிக்கிறார்: “கிழக்கத்திய மக்களின் உயிர் மலிவாக மதிப்பிடப்படுகிறது"
Joseph Santolan
4 August 2016
ஜூலை 30 அன்று மணிலாவில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற ஐ சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, கொலைப் படைகள், பொலிஸ் படுகொலைகள் மற்றும் படுகொலை முகாம்களை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையான டுரேற்ற இன் போதை-தடுப்பு திட்டத்திற்கு 32 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உறுதியளித்தார். ஜூன் மாத இறுதியில் டுரேற்ற பதவியேற்றதில் இருந்து, பொலிஸ் மற்றும் கண்காணிப்பு குழுக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட 500 க்கும் அதிகமான குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
1971 இல் செனட் வெளியுறவுகள் கமிட்டிக்கு முன்னால் கெர்ரி, தார்மீக அட்டூழியங்களின் அர்த்தத்தில் வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தினது நடத்தையைக் கண்டித்து விளக்கமளித்ததில் இருந்து நீண்ட தூரம் கடந்து வந்துள்ளார். “கிழக்கத்திய மக்கள் உயிரை அமெரிக்கா மலிவாக மதிப்பிடுவதை நாம் பார்த்தோம்" என்று அக்கமிட்டிக்கு தெரிவித்தார்.
அதற்குப் பிந்தைய நீண்ட காலத்தில் கெர்ரி அதுபோன்ற எவ்விதமான தார்மீக தயக்கங்களையும் உதறித்தள்ளி, ஜனநாயகக் கட்சி எந்திரத்திற்குள் தன்னைத்தானே ஒருங்கிணைத்து, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நின்று தோல்வியடைந்து, இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உயர்மட்ட இராஜாங்க முகமாக மாறியுள்ளார். இப்போது மனித உயிர்களுக்கு வாஷிங்டனினது மலிவான விலை சீட்டை தொங்கவிடுபவர்களில் அவரும் ஒருவர்.
வறிய பிலிப்பைன்வாசிகளைப் படுகொலை செய்வதற்கு நிதியுதவியாக அவர் 32 மில்லியன் டாலர் வழங்குவது, வாஷிங்டனின் சீன-விரோத "ஆசிய முன்னிலைக்கு" மணிலாவின் ஆதரவைப் பெறுவதற்காக ஆகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், “கிழக்கத்திய மக்களின் உயிர்கள்" எப்போதுமே மலிவாக தான் இருக்கிறது. 1898 இல் வில்லியம் மெக்கென்லி 20 மில்லியன் டாலரில் ஸ்பெயினிடமிருந்து பிலிப்பைன்ஸ் காலனியை விலைக்கு வாங்கினார். அந்த விற்பனை உடன்படிக்கையானது, அமெரிக்கா ஓர் ஏகாதிபத்திய சக்தியாக உலக அரங்கில் நுழைந்ததைக் குறித்த ஆக்கிரமிப்பு போரில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான பிலிப்பைன்வாசிகளின் இரத்தத்தில் எழுதப்பட்டது.
“தலைமறைவாக இருந்த அமெரிக்கர்", சிஐஏ நடவடிக்கையாளர் எட்வார்ட் லாண்ஸ்டேல் ஆல் 1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ராமொன் மக்சேசே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து, பெர்டினான்ட் மார்க்கோஸ் இன் இராணுவ சட்ட ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்தது வரையில், வாஷிங்டன் அதை ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அதன் காலடிபீடமாக பேணி, ஏறத்தாள முழு கட்டுப்பாட்டுடன் அதன் முன்னாள் காலனியை ஆட்சி செலுத்தி வந்துள்ளது.
அமெரிக்கா அதன் இராணுவ வழிவகைகள் மூலமாகவும், ரஷ்யா மற்றும் சீனாவை சுற்றி வளைத்தும், அதிகப்பட்ச வரம்பிற்கு ஒரு புதிய உலக போருக்கான பதட்டங்களைத் தீவிரப்படுத்தியும் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பேண முயன்று வருகிறது. பெனிக்னோ அக்வினோ தலைமையிலான முந்தைய பிலிப்பைன்ஸ் நிர்வாகத்தின் கீழ், ஹேக் இல் உள்ள மத்தியஸ்த்துக்கான ஐ.நா நிரந்தர நீதிமன்றத்தில் சீனாவிற்கு எதிராக ஒரு சட்டபூர்வ உரிமைகோரலை பதிவு செய்தும் மற்றும் அந்நாட்டில் வரம்பின்றி அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்துவதற்கு அனுமதிக்கும் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டும், மணிலா, தென் சீனக் கடலில் அமெரிக்க முன்னிலைக்கு தாக்குமுகப்பாக இருப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.
ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட டுரேற்ற நிர்வாகம், பெய்ஜிங் உடனான பொருளாதார உறவுகளை விரிவாக்கலாமென்ற நம்பிக்கையில், சீனாவைத் தூண்டிவிடுவதில் மேலும் தயக்கம் காட்டுகிறது.
டுரேற்ற, மனித உயிர்களை வெளிப்படையாகவே அவமதிக்கும் ஒரு பாசிச வகைப்பட்ட தலைவராவார். அவர் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை வழங்கி இருப்பதுடன், “குற்றவாளிகளைப்" பூண்டோடு அழிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். உகாண்டா சர்வாதிகாரியும் பெருந்திரளான மக்களைக் கொண்ட படுகொலையாளரை குறிப்பிடும் விதத்தில், அவர் பிலிப்பைன்ஸின் இடி அமீனாக பதவி விலகிவாரென்று ஓர் உரையில் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களைக் பின்தொடர ஒபாமா நிர்வாகம் உலகெங்கிலும் தீவிர வலது மற்றும் பாசிசவாத சக்திகளுக்கு நிதியுதவி வழங்கும் மற்றும் ஆதரிக்கும் ஒரு நடைமுறை வடிவத்தை ஸ்தாபித்துள்ளது. 2013 இல், அது எகிப்திய படுகொலையாளர் தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி இன் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தது. 2014 இல் அது மாஸ்கோவிற்கு எதிரான நடவடிக்கையின் பாகமாக உக்ரேனில் ஒரு பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒத்துழைத்தது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்றுவதற்கான அதன் திட்டத்தில் அல் கொய்தா இணைப்பு கொண்ட அல் நுஸ்ரா முன்னணியை ஒரு பினாமியாக ஆயுதமேந்த செய்தது.
சீனாவை பொருளாதாரரீதியில், அரசியல் மற்றும் இராணுவரீதியில் தனிமைப்படுத்துவதற்கும் மற்றும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கும் டுரேற்ற அரசாங்கம் உதவுவதால், அந்த கொலைபாதக அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்குவதில் ஒபாமா நிர்வாகத்திற்கு எந்த தயக்கமும் கிடையாது.
வாஷிங்டனின் நிதியுதவிகளை டுரேற்ற நல்ல முறையில் பயன்படுத்துகிறார். பொலிஸ் மற்றும் கண்காணிப்பாளர்களால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு பதினைந்தில் இருந்து இருபது வரையில் இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு படுகொலை செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள், மக்களின் வறிய அடுக்கைச் சேர்ந்தவர்கள், குடிசைப்பகுதிகளில் குடியிருப்பவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நகரங்களில், குறிப்பாக மணிலாவில், மில்லியனர்களின் விளிம்போரத்தில் இருப்பவர்கள் மற்றும் சிறிய சந்துக்களில் இருக்கும் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களாவர்.
நியூ யோர்க் டைம்ஸ் தகவல்படி, போதை-தடுப்பு திட்டத்தில் கொல்லப்படலாமென அஞ்சி 114,000 க்கும் அதிகமானவர்கள் பொலிஸில் சரணடைந்துள்ளனர். அவர்கள் அந்நாட்டின் காட்டுமிராண்டித்தனமான சிறைகூடங்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சிறைகளின் நிலைமைகளைக் காட்டி பிரிட்டனின் Independent பத்திரிகை ஜூலை 31 அன்று ஒரு புகைப்பட கட்டுரை வெளியிட்டது. துர்நாற்றம் வீசும் சிறைக்கூடங்கள், திறந்தவெளி நீதிமன்றங்கள் மற்றும் கைதிகளுக்கான படிக்கட்டுகள் மிகவும் நெருக்கமாக அமைந்திருப்பதுடன் மூச்சுவிடக்கூட அங்கே இடமில்லை. மனித உயிர்களுக்கான இந்த நிலைமைகளை விட தொழில்துறையில் கால்நடைகள் இருக்கும் இடங்கள் எவ்வளவோ பரவாயில்லை.
கூட்டம் நிரம்பி வழிவதை சமாளிக்க சித்திரவதை முகாம்களை கட்டமைக்க டுரேற்ற பரிந்துரைக்கிறார். “மனிதயின சேவைக்கு இனியும் தேவையில்லை" என்று அவர் கூறுபவர்களை அடைத்து வைக்க நாடெங்கிலும் இராணுவத் தளங்களின் மத்தியில் கம்பி வேய்ந்த மிகப்பெரிய அமைப்புகளை கட்டமைக்க அவர் அழைப்புவிடுத்து வருகிறார். இத்தகைய சிறையடைப்பு முகாம்களுக்கு டுரேற்ற பயன்படுத்தும் ஆரம்ப நிதியுதவிகளைத் தான் ஜோன் கெர்ரி வழங்கி உள்ளார்.
டுரேற்ற இன் ஒடுக்குமுறை பிலிப்பைனோவில் "பெரிதும் பிரபலமானதாகும்" என்று ஆகஸ்ட் 2 அன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன்னதாக அவர் மீதான மதிப்பார்ந்த நம்பிக்கை குறித்த நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பையும், கருத்துக்கணிப்புகளில் அவரது "பெரும் வெற்றியையும்" அது ஆதாரமாக மேற்கோளிட்டது. உண்மையில் டுரேற்ற வெறுமனே 38 சதவீத வாக்குகள் பெற்று, வாக்கு சிதறியதால் ஜனாதிபதி பதவியை வென்றார். டுரேற்ற க்கான ஆதரவு அடித்தளம் பெரிதும் குட்டி-முதலாளித்துவ மற்றும் பெருவணிக தட்டிடமிருந்து வருகிறது.
அமெரிக்க படைகளை அந்நாட்டில் நிலைநிறுத்துவதை ஆதரிப்பதாக அறிவித்துள்ள புதிய ஜனாதிபதி, கெர்ரி விஜயத்திற்குப் பின்னர், சீனாவிற்கு எதிரான அவரின் சொல்லாடல்களைத் தீவிரப்படுத்த தொடங்கி உள்ளார். சீனாவிற்கு எதிரான அதன் போக்கை அவர் பின்பற்றும் வரையில், டுரேற்ற இன் கொலைப்படைகள் மற்றும் சிறையடைப்பு முகாம்களுக்கு வாஷிங்டன் தொடர்ந்து மகிழ்ச்சியோடு நிதியுதவிகளை வழங்கும்.
2016 அமெரிக்க தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான கட்சியாக தன்னைத்தானே முன்நிறுத்தி வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காக அது சர்வதேச அளவில் தீவிர வலது அரசாங்கங்கள் மற்றும் அரசியல் சக்திகளை ஊக்குவிப்பதைத் தொடரும். ரொட்ரிகோ டுரேற்ற இன் கொலைப்படைகளுக்கு நிதியுதவி வழங்கும் கட்சியை ஆதரிப்பதன் மூலமாக பாசிசவாத டோனால்ட் ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்யும் அபாயத்தை எதிர்க்க முடியாது. சோசலிசத்திற்கான போராட்டத்தில் அமெரிக்காவிலும், பிலிப்பைன்ஸிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தால் மட்டுமே போர் மற்றும் அதிகரித்துவரும் பாசிசவாத அச்சுறுத்தலை நிறுத்த முடியும்.