Print Version|Feedback
Divisions rise inside EU at summit between Germany, France and Italy
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி இடையிலான உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான பிளவுகள் மேலெழுகின்றன
By Alex Lantier
23 August 2016
இத்தாலிய தீவான வென்ரொரேனே (Ventotene) இல் நேற்று நடந்த ஒரு உச்சிமாநாட்டில் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெலும், பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் மற்றும் இத்தாலியப் பிரதமரான மாத்யூ ரென்சியும் சந்தித்துப் பேசினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்த சற்று காலத்திற்குப் பின்னர் பேர்லினில் மேர்கெல், ஹாலண்ட் மற்றும் ரென்ஸியை ஒன்றாக அமரவைத்திருந்த ஜூன் 27 நெருக்கடி உச்சிமாநாட்டின் ஒரு மறுநிகழ்வாய் இது இருந்தது. பேர்லின் உச்சிமாநாட்டிற்கு பின்னர் - இம்மாநாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துகின்ற பரந்த புதிய பொருளாதார “சீர்திருத்தங்களுக்கும்” ஒரு ஐக்கியப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய இராணுவக் கொள்கைக்கும் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்- ஒற்றுமை காட்டுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் மேலும் உடைவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் அவர்கள் தீர்மானம் பூண்டிருந்தனர். அடுத்த மாதத்தில் ஸ்லோவாக்கிய தலைநகரான பிரடிஸ்லாவாவில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு தயாரிப்பு செய்வதற்காக நேற்று அவர்கள் மீண்டும் கூடிப் பேசினர்.
விமானந் தாக்கி கப்பலான கரிபால்டியின் விமானப் பகுதியில் நின்றபடி மாநாட்டின் கூட்டு செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கி வைத்த ரென்ஸி, “பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் ஐரோப்பாவின் கதை முடிந்து விட்டதாகப் பலரும் கருதினார்கள்” என்று அறிவித்தார். “ஆனால் அவ்வாறு இல்லை, நாங்கள் வருங்காலத்தில் ஒரு புதிய பக்கத்தை எழுதுவதற்கு விரும்புகிறோம்.”
உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிபந்தனைகளை உத்தியோகபூர்வமாய் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவருகின்ற லிஸ்பன் உடன்படிக்கையின் ஷரத்து 50 ஐ பிரிட்டன் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு முன்னதாகவே, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புதிய வெடிப்பின் விளிம்பில் தான் நின்று கொண்டிருக்கிறது. சிரியா மற்றும் மத்திய கிழக்கில் துரிதமாக அதிகரித்துச் செல்கின்ற போர், ஐரோப்பாவில் குடியேற்ற நெருக்கடி மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள், இத்தாலியை மையமாகக் கொண்ட ஐரோப்பிய வங்கித்துறை உருக்குலைவு ஒன்றின் அபாயம் அதிகரித்துச் செல்வது ஆகிய அவசரமான நெருக்கடிகளின் ஒரு விரிந்த வரிசைக்கு Ventotene இல் அமர்ந்து பேசிய ஐரோப்பிய மண்டலத்தின் மூன்று பெரும் பொருளாதாரங்களும் முகம்கொடுத்து இருந்தன. ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் மீதும் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் ஜனநாயக உரிமைகளின் மீதும் கூடுதல் தாக்குதல்கள் நடத்துவது தவிர்த்த வேறு எந்த பொதுவான முன்மொழிவுகளிலும் அவை ஒன்றுபடத் தவறின.
“அடையாள விடயங்கள் நிறைய இருந்தன, என்றாலும் ஸ்தூலமாய் எதுவுமில்லை” என்று இந்த மாநாடு குறித்து சுவிட்சர்லாந்தின் Neue Zürcher Zeitung முடிவு கூறியிருந்தது. இந்த மூன்று நாடுகளின் “ஒற்றுமை குறித்த வெறுமையான அறிவிப்புகள் மற்றும் ஐரோப்பியத் திட்டம் குறித்த வாய்நிரம்பிய புகழ்வார்த்தைகளை” கிண்டலடித்த அப்பத்திரிகை எழுதியது: “அவற்றின் சிந்தனைகள் பரந்த அளவில் மோதலில் இருந்தன, ஆகவே அனைத்துமே பொதுவான வாக்குறுதிகளின் மட்டத்தில் தான் தங்கி விட்டிருந்தன.”
இத்தாலிய வங்கிகள் மீதான ஒரு நெருக்குதலைத் தவிர்ப்பதற்காகவும் இத்தாலிய பொருளாதாரம் ஆழமாய் மந்தமடைகின்ற நிலையில் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் போராடி வருகின்ற ரென்ஸி சூளுரைத்தார்: “பொருளாதார விடயங்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன் கரம்கோர்த்து வலிமையான நடவடிக்கைகளையும், தரமான முதலீடுகளையும் நாங்கள் விரும்புகிறோம், உற்பத்தி 4.0 (Manufacturing 4.0) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்கிறோம். இளைஞர்கள் மீது நாங்கள் கவனம் குவிக்க வேண்டியுள்ளது.”
ஆயினும் ரென்ஸியின் ஆலோசனைமொழிவுகள் முளையில் கிள்ளியெறியப்படுபவையாக இருக்கின்றன. மாநாட்டிற்கு முந்தைய காலத்தில், அரசின் நிதிநிலை பற்றாக்குறை விடயத்தில் விதிகளைத் தளர்த்துவதற்கு ரென்ஸி விடுத்த அழைப்புகளையும், 315 பில்லியன் யூரோ முதலீட்டு நிறுவனத்தை உருவாக்குவதை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்க ஹாலண்ட் விடுத்த அழைப்புகளையும் மேர்க்கெல் தணித்துப் பேசினார். கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் இத்தாலிய நிதி நெருக்கடியை ஒருவகையில் மெதுவாக்குவதன் மூலமாக சமூக வெட்டுகளுக்கான அழுத்தத்தைக் குறைக்கக் கூடியதாகவும், அத்துடன் ஜேர்மனியின் ஐரோப்பியப் போட்டியாளர்களுக்கு வரம்புபட்ட பொருளாதாரத் திட்டங்களுக்கு நிதியாதாரம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கக் கூடிய இத்தகைய கொள்கைகள் பேர்லினில் கணிசமான எதிர்ப்புக்கு முகம்கொடுக்கின்றன.
மேர்கெல் தனது கருத்துகளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் “ஸ்திரப்பாட்டு உடன்படிக்கையானது” நிதிநிலைப் பிரச்சினைகளில் ”நெகிழ்வுக்கான கூடுதல் வாய்ப்புகளை” வழங்குவதாகக் கூறினார் என்ற அதேநேரத்தில், இத்தாலியின் 300 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான வாராக் கடன்கள் இன்னுமொரு ஐரோப்பிய ஒன்றிய வங்கிப் பிணையெடுப்பின் மூலமாக வலியில்லாமல் உறிஞ்சிக் கொள்ளப்படுவதென்பது நடவாத காரியம் என்பது தெளிவாகிறது. இத்தாலியின் பொருளாதாரமானது 2016 இன் இரண்டாவது காலாண்டில் தேக்கம் கண்டு, தரைதட்டி நின்று கொண்டிருக்கிறது. வரித் தாக்கல்கள் உருக்குலைந்திருப்பதால், ஒரு வங்கி மூடலைத் தூண்ட அச்சுறுத்துகின்ற வகையிலான ஒரு புதிய அரசாங்க நிதிநிலை நெருக்கடிக்கு இத்தாலி முகம்கொடுத்து நிற்கிறது.”
ஆயினும் இன்னுமொரு பாரிய “பண இறைப்பு” மூலமாக, அதாவது ஐரோப்பிய மத்திய வங்கியின் மூலம் யூரோக்களை அச்சிடுவதன் மூலமாக, இந்த அத்தனை நெருக்கடிகளையும் தீர்ப்பதான முயற்சிக்கு ஜேர்மனி எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஒரு வங்கி தோல்வியடைவதால் உண்டாகும் பணச் செலவை ஈடுகட்டுவதில், கடன் கொடுத்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் இரு தரப்பும் பங்களிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிகள் கோருகின்றன. இதன் விளைவாக, பொறிந்து போன சிறு வங்கிகளில் தமது சேமிப்பை இட்டு வைத்திருந்த இத்தாலியின் ஏராளமான சேமிப்புதாரர்கள் ஏற்கனவே நாசத்தை சந்தித்துள்ளனர். UniCredit மற்றும் Monti dei Paschi di Siena போன்ற பெரிய இத்தாலிய வங்கிகளும் இருப்பை அச்சுறுத்தும் நிதி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து நிற்கின்ற நிலையில், இத்தாலியில் வாராக் கடன்களை முடிவுக்குக் கொண்டு வருவதை எப்படிக் கையாளலாம் என்ற பிரச்சினை குறித்து ஐரோப்பிய மண்டலத்திற்குள்ளான மோதல்கள் வெடிப்பான வடிவங்களை எடுக்கத் தயாராய் நிற்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டும், ஐரோப்பிய நாணயமதிப்பை விட்டும், விலகும் முடிவுக்கு இத்தாலியின் அரசாங்கத்தை கொண்டுசெல்லும் அளவுக்கும் கூட, இது இட்டுச் செல்லக் கூடும்.
அத்தகையதொரு முடிவு எடுக்கப்பட்டால், இத்தாலியில் நூறாயிரக்கணக்கிலான பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ள பிரான்சுக்கு அது என்ன விளைவுகளைக் கொண்டு வரும், அந்த நிலைமைகளில் பிரான்சும் கூட யூரோவிலேயே தொடர முடியுமா என்பதெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை.
“ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் நாம் நுழைந்திருக்கும் நிலையில், இத்தாலியிலான நிலையும், ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளில் அது ஏற்படுத்தியிருக்கக் கூடிய விளைவுகளும், நாம் கவலை கொள்கின்ற மிகப்பெரும் பெரு-அரசியல் அபாயங்களில் ஒன்றாகத் தொடரும்” என்று Eurasia Group இல் பணிபுரியும் லண்டனை அடிப்படையாகக் கொண்ட ஆய்வாளரான ஃபெடரிகோ சாண்டி Market Watch இடம் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னுமொரு வெளியேற்றத்தைத் தூண்டும் சாத்திய திறனை கொண்டுள்ளது. ரென்ஸியின் பெயர் அவரது சிக்கன நடவடிக்கைகளின் காரணத்தால் பெருமளவில் பலவீனப்பட்டுள்ளது. யூரோ-எதிர்ப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு ஐந்து-நட்சத்திர இயக்கத்திடம் (M5S) இருந்தும் அவர் அரசியல் சவாலுக்கு முகம்கொடுத்து நிற்கிறார். இந்த அமைப்பு யூரோவில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு கருத்துவாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இத்தாலிய செனட்டின் அதிகாரங்களை மாற்றியமைப்பதற்காக ரென்ஸி முன்வைத்திருக்கும் நவம்பர் கருத்துவாக்கெடுப்பில் தோல்விகண்டு பின் வாக்குறுதியளித்தவாறு அவர் பதவியிறங்குவாரேயானால், ஐரோப்பிய-ஒன்றியத்திற்கு எதிரான இன்னுமொரு அரசாங்கம் இத்தாலியில் அமர்வதே அது கொண்டுவரும் விளைவாக இருக்கும்.
ஐரோப்பிய இராணுவ மற்றும் உளவு முகமைகளைக் கட்டியெழுப்புவதற்கும், அத்துடன் அகதிகள் மீதும் புலம்பெயர்ந்தவர்கள் மீதும் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்குமான மூர்க்கத்தனமான, பிற்போக்குத்தனமான அழைப்புகளை விடுத்து மேர்க்கெல், ஹாலண்ட் மற்றும் ரென்சி ஐரோப்பிய முதலாளித்துவத்தின் நெருக்கடியில் இருந்து எழுந்து நிற்கக் கூடிய நிதி மோதல்களை மூடிமறைப்பதற்கு முயற்சி செய்தனர்.
“ஐரோப்பா தனது சொந்தப் பாதுகாப்பை மேம்பட்ட வகையில் உறுதி செய்தாக வேண்டும் என்பதோடு, அது நடைமுறைரீதியானதாகவும் இருந்தாக வேண்டும். நாம் ஐரோப்பிய எல்லைகளை மேம்பட்ட வகையில் பாதுகாப்பதோடு கூடுதலான உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புத் துறையில் கூடுதல் ஒருங்கிணைப்பு, கூடுதல் சாதனங்கள் மற்றும் கூடுதல் ஆதார வளங்களும் நமக்குத் தேவையாகும்” என்று ஹாலண்ட் கூறினார். மத்திய தரைக்கடல் முழுமையிலிருந்தும் ஐரோப்பாவை நோக்கி ஓடிவருகின்ற ஆபிரிக்கக் குடியேற்ற கப்பல்களை ஆபிரிக்காவிற்கு திரும்ப நிர்ப்பந்திக்கும் கடற்படை ரோந்து நடவடிக்கையான ஆபரேஷன் ஸோபியாவின் அடையாளக் கப்பலான கரிபால்டியின் ஊழியர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
சிரியாவில் அதிகரித்துச் செல்லும் போரையும் அகதிகள் நெருக்கடியையும் குறிப்பிட்டு மேர்க்கெல் கூறினார்: ஐரோப்பிய ஒன்றியத்தின் “உள்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்புக்காக நாம் இன்னும் கூடுதலாய் நிறைய செய்தாக வேண்டியிருக்கிறது”. ஐரோப்பாவிற்குப் பயணிப்பதில் இருந்து அகதிகளைத் தடுப்பதில் ஏனைய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அளிக்கும் ஒத்துழைப்பையும் அவர் பாராட்டினார்: “அகதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளின் கட்டுப்பாடு ஆகியவற்றை நாங்கள் விவாதிப்போம், ஆயினும் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியமாக இருக்கிறது. துருக்கியுடனான ஒத்துழைப்பு நல்ல விடயம்; இல்லையென்றால் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான போராட்டத்தில் எங்களால் வெற்றிகாண முடியாது. ஆயினும் புலம்பெயர்ந்து வருபவர்களின் சொந்த நாடுகளது உதவியும் நமக்கு அவசியமாக உள்ளது.”
இந்த பொருளடக்கத்தில், வென்ரொரேனே (Ventotene) இல் இருக்கும் அல்ரியாரோ ஸ்பினல்லி இன் கல்லறைக்கு விஜயம் செய்வதற்கு மேர்கெல், ஹாலண்ட் மற்றும் ரென்ஸி எடுத்த முடிவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுரீதியான திவால்நிலையையே மேலும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதாய் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது சிறையில் இருந்த சமயத்தில், இத்தாலியின் பாசிச சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினியின் உத்தரவின் பேரில், தேசிய அரசுகளற்ற ஒரு கூட்டரசாங்க ஐரோப்பாவுக்கு அழைப்பு விடுகின்ற வென்ரொரேனே அறிக்கை என்று அழைக்கப்படுகின்ற ஒன்றை - ஐரோப்பிய ஒன்றியத்தைக் கட்டியெழுப்புவதற்கான இயக்கத்திற்கான ஒரு ஸ்தாபக ஆவணம் - வரைவு செய்ய ஸ்பினல்லி உதவியிருந்தார்.
ஸ்பினல்லி இன் அறிக்கை, 1920கள் மற்றும் 1930களில் அவர் ஸ்ராலினிச இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் (PCI) அங்கத்துவம் பெற்றிருந்ததையும், PCI சோசலிசப் புரட்சிக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கும் எதிராய் இருந்ததையும் பிரதிபலிக்கும், பொதுவாய் ஒரு எதிர்ப்புரட்சிகர ஆவணமாகும்.போருக்குப் பிந்தைய ஐரோப்பாவை மீள்கட்டுமானம் செய்வதில் முதலாளித்துவ தொழிலதிபர்கள் ஒரு முன்னணிப் பாத்திரத்தை ஆற்றுவதாக வலியுறுத்திய அந்த அறிக்கை, “தொழிலாளர்கள், வர்க்கப் பிரச்சினையில் பயிற்றுவிக்கப்பட்டு, ஆகவே தமது சொந்த கோரிக்கைகளைத் தவிர்த்த வேறெதனையும் காண முடியாதவர்களாக இருப்பதாக” தாக்குகின்றது.
சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை கிரெம்ளின் மீட்சி செய்வதை PCI ஆதரிப்பதற்கும், அதற்குப் பின்னதாய் ரென்ஸியின் சிக்கன நடவடிக்கை-ஆதரவு ஜனநாயகக் கட்சியாக PCI இன் பெரும்பான்மை உருமாற்றம் காண்பதற்கும் தயாரிப்பு செய்ததாய் இருந்த 1970களிலான PCI இன் “யூரோ-கம்யூனிச” திருப்பத்தின் சமயத்தில் ஸ்பினல்லி அதனுடன் சேர்ந்து வேலை செய்தார்.
உண்மையில், இந்த நெருக்கடி-பின்னிய மாநாடு தெளிவாக்கியதைப் போல, ஐரோப்பாவில் தேசியப் பிளவுகளை வெல்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் திறனற்றதாக இருப்பது ஆழமாய் வேரூன்றியிக்கின்ற ஒன்றாகும் என்பதையே இந்த ஆவணம் வரைவு செய்யப்பட்டதன் பின்னான ஒட்டுமொத்தமாய் சுமார் 75 ஆண்டுகளின் காலம் எடுத்துக்காட்டியிருக்கிறது.