Print Version|Feedback
Erdogan accuses US of supporting failed coup in Turkey
துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்ததற்காக எர்டோகன் அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டுகிறார்
By Alex Lantier and Johannes Stern
1 August 2016
துருக்கியில் ஜூலை 15 ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியை ஒபாமா நிர்வாகம் ஆதரித்திருந்ததாக துருக்கிய அரசாங்கம் நம்புகின்ற நிலையில், அம்முயற்சியைத் தொடர்ந்து அங்காரா மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான உறவுகள் வேகமாக சீர்குலைந்து வருகின்றன. அங்காராவில் குண்டுவீசி அழிக்கப்பட்ட ஒரு பொலிஸ் தளத்தின் இடிபாடுகளில் இருந்து வெள்ளியன்று வழங்கிய தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளில், துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அமெரிக்க அரசாங்கம் ஆதரித்ததாக நேரடியாக குற்றஞ்சாட்டினார்.
கொலராடோ, ஆஸ்பெனில் நடந்த ஒரு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உயர்மட்ட அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் துருக்கிய இராணுவத்தில் ஒரு துப்புரவாக்கலைத் தொடங்கியமைக்காக எர்டோகனைக் குற்றஞ்சாட்டி வெளியிட்ட அறிக்கைகளை எர்டோகன் கண்டித்தார். அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் (James Clapper) வாஷிங்டனுக்கு நெருக்கமான துருக்கிய இராணுவ அதிகாரிகளைக் கைது செய்தமைக்காக எர்டோகனைச் சாடினார். “எங்களுடனான பேச்சுவார்த்தை-கூட்டாளிகள் பலர் நீக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்,” என்றவர் சீறினார். “இது பின்னடைவுக்கு சென்று கொண்டிருக்கிறது, துருக்கியர்களுடனான கூட்டுறவை இன்னும் சிக்கலாக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்றார்.
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் ஜோசப் வொட்டெல் (Gen. Joseph Votel), இந்த துப்புரவுபடுத்தல் "மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்" ஏனென்றால் இது சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) போராளிகள் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதிக்கும் என்று எச்சரித்தார். நேட்டோ தலைமை தளபதி ஜெனரல் குர்டிஸ் ஸ்காபர்ரோட்டி (Curtis Scaparrotti) கூறுகையில், “துருக்கியில் நாங்கள் தொடர்பு கொண்டுள்ள அதிகாரிகளில் சிலர் இப்போது காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள், சிலரின் விடயத்தில் அவர்கள் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைவாக ஓய்வில் அனுப்பப்பட்டு விட்டார்கள்,” என்றார்.
“அமெரிக்க தளபதி அவர் பேச்சில் ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களின் தரப்பில் நிற்கிறார். அவரது கருத்துக்கள் மூலமாக அவரே அவரை அம்பலப்படுத்தி கொண்டார்… இதில் நீங்களா முடிவெடுப்பது? யார் நீங்கள்? அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முறியடித்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதை விட்டுவிட்டு, நீங்கள் ஆட்சிகவிழ்ப்பு சதியாளர்கள் பக்கம் நிற்கிறீர்,” என்று கூறி அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்ததாக எர்டோகன் கோபத்துடன் வொட்டெலைக் குற்றஞ்சாட்டினார்.
அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஏற்பாடு செய்ததாக எர்டோகன் குற்றஞ்சாட்டுகின்ற, அமெரிக்காவில் உள்ள துருக்கிய இஸ்லாமியவாதி பெத்துல்லா கூலனைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், “அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர் உங்கள் நாட்டில் இருக்கிறார். நீங்கள் அங்கே அவரை பேணி வளர்த்து கொண்டிருக்கிறீர்கள். அது பகிரங்கமாகி விட்டது,” என்றார். “இந்த திட்டத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை என் மக்கள் அறிவார்கள்… இதற்குப் பின்னால் எந்த தலைமை உளவுத்துறை இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள், உங்களது இந்த அறிக்கைகளைக் கொண்டு உங்களை நீங்களே வெளிப்படுத்தி உள்ளீர்கள், உங்களை நீங்களே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்,” என்றார்.
இராணுவ அதிகாரிகளைக் கைது செய்வதைத் தீவிரப்படுத்துவது துருக்கியின் எதிர்காலத்தை பாதிக்குமென அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள் அக்கறை வெளியிட்டதற்காக துருக்கிய ஜனாதிபதி அவற்றை தாக்கினார். அவர் இராணுவத்தில் களையெடுப்பை தொடர சூளுரைத்தார். “அவர்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?” என்று வினவிய அவர், “தற்காலிக வேலைநீக்கங்கள், தடுப்புக் காவல் நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் மற்றும் அதைப் போன்றதை மற்றும் அவற்றை அதிகரிப்பதைக் குறித்து அவர்கள் கவலை கொள்கிறார்கள். அவர்கள் இவற்றை அதிகரித்திருக்க போகிறார்களா? மக்கள் தவறுக்கு பொறுப்பாகி இருந்தால், அவர்கள் செய்திருப்பார்கள்,” என்றார்.
எர்டோகன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இருதரப்பினது அறிக்கைகளும், ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னர் ஏற்கனவே வாஷிங்டனுக்கும் அங்காராவிற்கும் இடையிலான உறவுகள் கடுமையாக சீரழிந்திருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. எர்டோகன் உயிர்பிழைத்ததை வரவேற்பதில் இருந்து விலகி, வாஷிங்டன், 270 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த மற்றும் எர்டோகனே படுகொலை செய்யப்படுவதற்கு நெருக்கத்தில் சென்ற ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியிலிருந்து மயிரிழையில் தப்பித்த அந்த அரசாங்கத்தைத் தாக்கி வருகிறது.
அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியானது, துருக்கியும் ஓர் அங்கத்துவ நாடாக உள்ள நேட்டோ கூட்டணிக்குள் திரைக்கு பின்னால் அதிகரித்து வரும் வெடிப்பார்ந்த பதட்டங்களை அம்பலப்படுத்தி உள்ளது. அந்த முயற்சிக்கப்பட்ட சதி, துருக்கி மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் சுமூகமாகி வரும் பின்புலத்தில் நடந்தது, இந்த பின்புலம் மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையை, குறிப்பாக, மாஸ்கோவின் உயிர்பிழைத்திருக்கும் ஒரே அரபு கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஐ பதவியிலிருந்து நீக்குவதை முடுக்கிவிடுவதன் மூலமாக ரஷ்ய செல்வாக்கைப் பலவீனப்படுத்தும் அமெரிக்க திட்டங்களைக் குறுக்காக வெட்டுகிறது.
சிரியாவில், அமெரிக்க-ஆதரவிலான கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு ரஷ்ய போர்விமானத்தை துருக்கிய அரசாங்கம் பொறுப்பின்றி சுட்டு வீழ்த்தியதற்குப் பின்னர், ஐரோப்பாவிற்குள் அது தன்னைத்தானே தனிமைப்படுத்தி இருப்பதாக கண்டது. கடந்த ஆண்டு நவம்பரில் அச்சம்பவத்திற்குப் பின்னர், துருக்கி சிரியாவில் அதன் இஸ்லாமிய பினாமிப் படைகள் தோற்கடிக்கப்படும் சாத்தியக்கூறை அதிகரித்தளவில் முகங்கொடுத்தது. அத்தகைய நிலைமைகளின் கீழ், அங்காரா இந்த வசந்தகாலத்தில் அதன் வெளியுறவு கொள்கையில் ஒரு பரந்த மாற்றத்தைத் தொடங்கியது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வாஷிங்டன் சிரிய போரைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே அதற்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டிருந்த நிலையில், இப்போது அது சிரிய போருக்கு ஆதரவளிப்பதைக் கைவிடக்கூடும் என்பதை சமிக்ஞை செய்தது.
மே மாதம் துருக்கிய பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் ஐ (Ahmet Davutoglu) வெளியேற்றி, அவரிடத்தில் பினாலி யெல்ட்ரிம் ஐ (Binali Yıldırım) கொண்டு வந்த பின்னர், துருக்கிய வெளியுறவு கொள்கையைத் திரும்பவும் "பழைய நாட்களுக்கு" கொண்டு வர முன்மொழிந்தது. அவர் "நண்பர்களை அதிகரிக்கவும், எதிரிகளைக் குறைக்கவும்" விரும்புவதாக தெரிவித்தார்.
ரஷ்யா "ஒரு நட்பு நாடு மற்றும் ஒரு மூலோபாய பங்காளி" என்று கூறி ஜூனில் எர்டோகன் மாஸ்கோவிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். கிரெம்ளின் தகவல்படி, “ரஷ்யாவிற்கு சொந்தமான ஒரு விமானத்தை வேண்டுமென்றே சுட்டுவீழ்த்தும் எண்ணமோ அல்லது விருப்பமோ எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை,” என்று அக்கடிதம் குறிப்பிட்டது.
தற்செயலாகவோ அல்லது வேறுவிதத்திலோ, தாவ்டோக் நவம்பரில் சுட்டுவீழ்த்தும் உத்தரவை வழங்கியதாகவும் (பின்னர் அவர் அவற்றிலிருந்து பின்வாங்கினார்), நவம்பரில் ரஷ்ய போர்விமானத்தைச் சுட்டுவீழ்த்திய அந்த விமானி தோல்வியடைந்த சதியின் வேளையில் அங்காரா மீது கிளர்ச்சியாளர்களின் F-16 போர்விமானத்தை பறக்க விட்டதாகவும் தாவ்டோக் அறிக்கைகளை வெளியிட்டார்.
ஜூலை 13 அன்று, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், துருக்கி எந்தெந்த நாடுகளுடன் அதன் உறவுகளை மேம்படுத்த விரும்புகிறதோ அந்நாடுகளின் பட்டியலில் யெல்ட்ரிம் சிரியாவையுமே கூட சேர்ந்திருந்தார். அவர் கூறினார், “சிரியா உடனான உறவுகளை நாங்கள் திரும்பவும் வழமையாக்குவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எங்களுக்கு அது அவசியம். இஸ்ரேல் மற்றும் ரஷ்யா உடனான எங்களின் உறவுகளை வழமையாக்கி உள்ளோம். சிரியாவுடனும் எங்களின் உறவுகளைத் திரும்பவும் வழமையாக்குவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்றார்.
2001 க்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க-ஆதரவிலான கைப்பாவை ஆட்சிகளை நிறுவ, ரஷ்ய செல்வாக்கை நசுக்க மற்றும் மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செலுத்துவதற்காக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவை ஒன்றுமில்லாமல் ஆக்கியுள்ளது. வரலாற்றுரீதியில் துருக்கியில் மூன்று வெற்றிகரமான ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளை (1960, 1971 மற்றும் 1980) ஆதரித்துள்ள அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள், ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையே அபிவிருத்தி அடைந்து வரும் உறவுகளை துண்டிப்பதற்காக குறைந்தபட்சம் கடந்த மாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை சகித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்பதை உணர மிக குறைவாக யோசித்தாலே போதுமானதாகும்.
அனைத்திற்கும் மேலாக அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், ரஷ்யா மற்றும் ஈரானுடன் அவர் ஒரு கூட்டணியைப் பரிசீலித்து வருவதாக எர்டோகன் குறிப்பிட்டு அவரால் விவரிக்கப்பட்ட கொள்கைகளால் அமெரிக்க வெளியுறவு கொள்கை ஸ்தாபகம் ஆழமாக தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளது. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒருசில நாட்களுக்குப் பின்னர், ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி உடனான ஒரு தொலைபேசி அழைப்பில் எர்டோகன் கூறுகையில் "அப்பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டைத் திரும்ப கொண்டு வருவதற்கான எங்களின் முயற்சிகளைப் பலப்படுத்த மற்றும் பிராந்திய பிரச்சினைகளைத் தீர்க்க, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் கைகோர்த்து இயங்க" துருக்கி இப்போது "முன்பினும் அதிக தீர்க்கமாக" இருப்பதாக தெரிவித்தார். எர்டோகன் இப்போது ஆகஸ்ட் 9 இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் இல் சந்திக்க உள்ளார்.
அத்தகைய கூட்டணிகளை வாஷிங்டனால் ஏற்றுக் கொள்ள முடியாதென ஆஸ்பெனில் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். “துருக்கி மற்றும் மேற்குக்கு இடையே, மிக குறிப்பாக துருக்கி மற்றும் நேட்டோவிற்கு இடையே ஒரு பிளவை உண்டாக்க" முயன்று வருவதாக கிளாப்பர் மாஸ்கோவைக் குற்றஞ்சாட்டினார்.
ஸ்காபர்ரோட்டியைப் பொறுத்த வரையில், “இந்த உறவு எவ்வாறு அபிவிருத்தி அடைகிறதென நாங்கள் நெருக்கமாக பார்த்து வருவோம். [நேட்டோவை ஸ்தாபித்த] வாஷிங்டன் உடன்படிக்கையின் அஸ்திவார மதிப்புகளில் இருந்து —சட்டத்தின் ஆட்சி— அவர்கள் விலகினால் நான் அக்கறை எடுக்க வேண்டியிருக்கும்,” என்று அறிவித்தார்.
இத்தகைய நிலைமைகளின் கீழ், அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் குறித்து வாஷிங்டனுக்கு எந்த முன்கூட்டிய எச்சரிக்கையும் கிடைத்திருக்கவில்லை என்ற அமெரிக்காவின் வாதங்கள் மேலோட்டமாக கூட நம்புவதற்குரியதாக இல்லை. 5,000 க்கும் அதிகமான அமெரிக்க சிப்பாய்களைக் கொண்டுள்ளதும் சிரியா மற்றும் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான குண்டுவீச்சு நடவடிக்கைக்கு பிரதான விமானத்தளமாக இருப்பதுமான துருக்கியின் இன்செர்லிக் விமானப்படைத்தளம் தான் அந்த சதியின் ஒழுங்கமைப்பு மையமாக இருந்தது. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்தபோது அதற்கு-ஆதரவான போர்விமானங்கள் இன்செர்லிக் தளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பறந்து கொண்டிருந்தன. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்து சிறிது நேரத்திற்குப் பின்னர், அத்தளத்தின் தளபதி ஜெனரல் Bekir Ercan Van அத்தளத்தில் இருந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆதரவான சிப்பாய்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார்.
இன்செர்லிக் விமானப்படைத்தளம் டஜன் கணக்கான அமெரிக்க அணுஆயுதங்களுக்கான வைப்பிடமாக உள்ள நிலையில், அங்கிருந்து எர்டோகனுக்கு எதிரான ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஒழுங்கமைக்கப்பட்டு வந்ததை அமெரிக்க உளவுத்துறை அறிந்திருக்கவில்லை என்ற வாதங்களுக்கு எந்த நம்பகத்தன்மையும் வழங்க முடியாது. அவ்விதமாகவே இருந்தாலும் கூட, அது அதிர்ச்சிகரமான விகிதத்தில் சிஐஏ உளவுத்துறை உடைந்து போயிருப்பதையே பிரதிநிதித்துவம் செய்கிறது.
அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்து அங்காரா எச்சரிக்கை பெற்றிருந்ததாகவும், அமெரிக்கா-தொடர்புபட்ட படுகொலையாளர்கள் அவரைக் கொல்ல வந்து கொண்டிருப்பதாக ரஷ்ய படைகள் அளித்த செய்திகளால்தான் எர்டோகன் படுகொலை செய்யப்படுவதிலிருந்து தப்பினார் என்றும் இப்போது செய்திகள் வருகின்றன.
சிரியாவின் Khmeimim விமானப் படைத்தளத்திற்கு அருகில் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான தயாரிப்புகளைக் குறித்த தகவல்களுடன் குறியீடு செய்யப்பட்ட ரேடியோ சமிக்ஞைகளை ரஷ்ய படைகள் குறுக்கீடு செய்து பெற்று, துருக்கிய அரசாங்கத்திடம் பகிர்ந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மர்மாரிஸ் இல் எர்டோகன் இருந்த விடுதிக்குள் 25 கிளர்ச்சி தரப்பு சிப்பாய்கள் நுழைந்து சுடத் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் எர்டோகன் அங்கிருந்து வெளியேறி இருந்தார். இறுதியில் கிளர்ச்சி இராணுவப் பிரிவுகள் துருக்கிய நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீசி, எர்டோகனுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் மற்றும் விசுவாசமான இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவுகளைத் தாக்கியதில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள், ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தார்கள்.
துருக்கிய அரசாங்கத்திடம் பிடிப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புக்கு சார்பான அதிகாரி ஒருவர், லெப்டினென்ட் கேர்னல் முரத் போலட் (Murat Bolat) பழமைவாத Yeni Safak பத்திரிகைக்கு கூறுகையில் அமெரிக்க ஆதார நபர்களிடம் இருந்து எர்டோகன் இருந்த இடம் குறித்த துல்லியமான தகவல் வந்ததும், அவரைக் கைது செய்ய அல்லது சாத்தியமானால் படுகொலை செய்ய அவர் பிரிவு நியமிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
“கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர், அவர் சிறப்புப்படையின் அதிகாரி என நான் நினைக்கிறேன், அவர் கூறுகையில், 'நமது கரங்களில் இருந்து ஜனாதிபதியைக் காப்பாற்ற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,' என்று கூறியதாக" அவர் தெரிவித்தார். அதாவது எர்டோகன் படைகளால் கைது செய்யப்படும்போது ஏதாவது எதிர்தாக்குதலை முகங்கொடுத்தால் அவர் சுட்டுத் தள்ளப்பட இருந்தார் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.
அமெரிக்க தளபதி ஜோன் எஃப். காம்ப்பெல் "அந்த தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் இருந்த மனிதராக" Yeni Safak அடையாளம் காட்டியது. பத்திரிகை செய்திகளின்படி, உறுதியான ஆதரவு செயல்திட்டத்திற்கான மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கான முன்னாள் தளபதி அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு தயாரிப்பு செய்வதற்காக துருக்கிய இராணுவத்திற்குள் இருந்த அமெரிக்க-ஆதரவு மற்றும் கூலன்-ஆதரவு கூறுபாடுகளுக்கு 2 பில்லியன் டாலர்களை வளங்கி, 80 சிஐஏ நடவடிக்கையாளர்களின் ஒரு குழுவுடன் வேலை செய்திருந்தார்.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:
தோல்வியடைந்த இராணுவ சதியின் பின்னால் அமெரிக்க தளபதி இருந்ததை துருக்கிய செய்தித்தாள் அடையாளம் காண்கிறது
[28 July 2016]
துருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியும், அமெரிக்க இராணுவவாதமும், ஜனநாயகத்தின் பொறிவும்
[22 July 2016]