Print Version|Feedback
Hillary Clinton’s dishonest, empty acceptance speech
ஹிலாரி கிளிண்டனின் நேர்மையற்ற, வெற்று ஏற்புரை
By David Walsh
29 July 2016
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பதவி வேட்பாளராக நிறுத்தப்படுவதை ஏற்றுக்கொண்டு ஹிலாரி கிளிண்டன் வியாழனன்று இரவு பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவில் இருக்கும் வெல்ஸ் ஃபார்கோ மையத்தில் ஏறக்குறைய ஒரு-மணி நேரம் வழங்கிய உரை ஆழமாய் நேர்மையற்றதாகவும், வெறுமையாகவும், நம்பிக்கையேற்படுத்தாத ஒன்றாகவும் இருந்தது.
ஜனநாயகக் கட்சியின் தேசிய தேர்ந்தெடுப்பு மாநாட்டின் இறுதிப் பகுதியில் ஒவ்வொன்றுமே போலித்தனத்துடன் இருந்தது. இந்த அவலமான வம்சம் ஏதோ அமெரிக்க அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைப் போன்று, பில் கிளிண்டன் பார்வையாளர்களிடையே செயற்கையான முகபாவங்களைக் காட்டிக் கொண்டும் மேடை நடிப்பை அரங்கேற்றிக் கொண்டும் இருக்க, மகள் செல்ஸியா கிளிண்டன் தனது தாயை அறிமுகம் செய்தார். கிளிண்டன் குடும்பம் பிரதானமாக அவர்களது இலஞ்ச இலாவண்யத்திற்கு இழிபுகழ் பெற்றதாகும். இந்தத் தம்பதி 2001 முதல் 2014 வரையான காலத்தில், எல்லாவற்றுக்கும் மேல் வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உடனான, தமது உறவுகள் மூலமாக, 230 மில்லியன் டாலர் செல்வத்தை திரட்டியிருந்தது.
ஹிலாரி கிளிண்டனை மனிதாபிமான முகத்துடனும் “மென்மைப்படுத்தியும்” காட்டுவதற்கான ஒரு முயற்சி வியாழனிரவு வெளிப்படையாகவே நடந்து கொண்டிருந்தது. 38.4 சதவீதம் ஆதரவு தரமதிப்பு மற்றும் 55.6 சதவீதம் எதிர்ப்பு தரமதிப்பு என கருத்துக்கணிப்பில் வெளிவந்த அவரது பரிதாபகரமான எண்ணிக்கை, டோனால்ட் ட்ரம்பைக் காட்டிலும் சற்று மேலான அளவிலேயே இருக்கிறது. இந்த இருவருமே பரவலாய் வெறுக்கப்படுகின்ற வேட்பாளர்களாகவும் நம்பிக்கையைத் தொலைத்த வேட்பாளர்களாகவும் இருக்கின்றனர் என்பதோடு மில்லியன் கணக்கான மக்களால் ஒரு வசதியான உயரடுக்கின் பிரதிநிதிகளாகவும் பார்க்கப்படுகின்றனர்.
செல்ஸியா கிளிண்டன் தனது தாய் குறித்து, “அருமையானவர், சிந்தனைமிக்கவர், உற்சாகமிக்கவர்” என்று புகழ்ந்துரைத்தார். இவர் யாரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தான் யாரும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள். இந்த மிகைபுகழ்ச்சியின் மட்டம் அந்தக் கருத்துக்களை அபத்தமானதாகவே ஆக்கியிருந்தது. அமெரிக்க அரசியலை மொன்னையாக்குவது ஒரு புதிய மட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் சிலரும் கூட இதில் உளைச்சலடைந்ததாகவே காணப்பட்டார்கள்.
தவிர்க்கவியலாமல் நடிகர் மோர்கன் ஃப்ரீமன் வருணனையில், ஹிலாரி கிளிண்டனின் கதையைச் சொல்ல விழைந்த, ஒரு விஷமமான காணொளிச் சித்திரம் இந்த மோசடியைத் தொடர்ந்தது. 2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களையும் ஒஸாமா பின் லாடனின் படுகொலையையும் குறிப்பிட்ட அது, ஆனால், ஹிலாரி கிளிண்டன் ஒரு பெரும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதாய் இருந்த ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, மற்றும் சிரியாவிலான மில்லியன் கணக்கான மக்களின் இறப்பைக் குறித்து எங்கும் குறிப்பிடவில்லை.
கிளிண்டன் சமாளித்து வழங்கிய 56 நிமிட உரையில் ஒரேயொரு நினைவுகூரத்தக்க சொற்றொடரோ அல்லது வாக்கியமோ கூட இல்லை. அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையானது, அவரை விடவும் கூடுதல் புத்திக்கூர்மையுடைய மற்றும் திறமிக்க மனிதர் எவரையும் குழப்பியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரத்தக்கறை படிந்த இந்த பெருவணிகக் கட்சி, மக்களைக் குறித்த கவலைகளையே தனது மனதில் கொண்டிருந்தது என்று அமெரிக்க மக்களை, அல்லது இதனை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் பிரிவினை, நம்பச் செய்வது தான் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வேலை.
“பொருளாதார மற்றும் சமூக நீதிப் பிரச்சினைகளை முன்னிலையிலும் மையத்திலும், அவற்றுக்கு உரிய இடத்தில் வைப்பது” குறித்து சம்பிரதாயமாக பல்வேறு முறைகள் அவர் குறிப்பிட்டார். அரங்கத்தில் தனது இருக்கையில் அமர்ந்தவாறு பணிவுடனும் ஆமோதிப்புடனும் உடல்மொழியை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பேர்னி சாண்டர்ஸிடம் கிளிண்டன் பின்வருமாறு உறுதியளித்தார்: “உங்களது லட்சியம் எங்களது லட்சியம். நமது நாட்டிற்கு உங்களது சிந்தனைகளும், ஆற்றலும், உணர்வுபூர்வமான ஈடுபாடும் அவசியமாயிருக்கிறது. அந்த வகையில் மட்டுமே நமது முற்போக்கான தளத்தை அமெரிக்காவுக்கான உண்மையான மாற்றமாக நம்மால் மாற்ற இயலும்.”
ஒரு சமயத்தில் அவர் தணிந்த தொனியில் அறிவித்தார்: “அளவுக்கதிகமான சமத்துவமின்மை இருக்கிறது. சமூக நகர்நிலை மிகவும் குறைவாய் இருக்கிறது.” பின்னொரு புள்ளியில், “வெறுமனே உயரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் பொருளாதாரம் வேலை செய்கின்றபடியான ஒரு நாட்டிற்கு” தான் ஆதரவாய் இருப்பதாக அவர் கூறினார். “நீங்கள் எந்த பிராந்திய குறியீட்டு எண்ணில் வாழ்ந்தாலும் உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கின்ற, உங்களது குழந்தைகளை ஒரு நல்ல பள்ளிக்கு அனுப்ப இயலுகின்ற நாடாக அது இருக்க வேண்டும். நமது குழந்தைகள் அனைவரும் கனவுகாண இயலும்படியாய், அந்தக் கனவுகள் எட்டும் தூரத்தில் இருக்கின்ற வகையான ஒரு நாடாக இருக்க வேண்டும்.” பார்வையாளர்களில் எவரொருவரும், அல்லது பிலடெல்பியா அரங்கத்தில் இருந்த எவராவது கூட, இதில் ஒரு வார்த்தையைக் கூட நம்பியிருக்க முடியுமா?
“உள்ளதைக் கொண்டு நம்மில் யாரும் திருப்தியடைய முடியாது.” ஆனால் உள்ளதைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு கிளிண்டனைப் போன்ற ஒருவர் பூமியில் இல்லை. பெரு நிதியின், இராணுவத்தின் (”நமது தேசிய கருவூலம்” என்று அவர் அதனை அழைத்தார்), மற்றும் பாதுகாப்புப் படைகளின், அத்துடன் மிக சொகுசான உயர் நடுத்தர வர்க்க அடுக்குகளின் வேட்பாளராகவே அவர் இருக்கிறார்.
“இங்கே நான் நம்புவதைச் சொல்கிறேன். நடுத்தர வர்க்கம் செழிக்கும் போதுதான் அமெரிக்கா செழிக்கிறது என்று நான் நம்புகிறேன். ஜனநாயகம் அது எப்படி வேலை செய்ய வேண்டுமோ அப்படி செய்யாததால்தான் நமது பொருளாதாரமும் அது வேலைசெய்ய வேண்டிய விதத்தில் வேலை செய்வதில்லை என்று நான் நம்புகிறேன்.” ஆனால் இதில் எதன் மீதும் அவருக்கு உண்மையில் நம்பிக்கையில்லை என்பதையே அவரது ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு அசைவும் கூக்குரலெடுத்துக் கூறின. மொத்தமும் அது செயற்கையாக, பின்னப்பட்டதாக, மேனிலையை வெளிப்படுத்துவதாக இருந்தது. சிந்தனைமிக்க, சமூகக் கவனமிக்க எந்தவொரு பார்வையாளரும் இந்த அப்பட்டமான போலித்தனத்தில் நெகிழ்ந்திருக்க முடியாது.
வோல் ஸ்ட்ரீட் “மீண்டும் இனியொருமுறை பிரதான வீதியை நாசம் செய்ய அனுமதிக்கப்படாது” என்று வாக்குறுதியளித்த ஹிலாரி, “வோல் ஸ்ட்ரீட்டையும், பெருநிறுவனங்களையும், மற்றும் பெரும் பணக்காரர்களையும்” தங்களது “நியாயமான வரிகளை” செலுத்தச் செய்வதன் மூலமாக பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் நிதியாதாரம் தேடப் போவதாகவும் கூறினார். ஆனால் நிதியப் பிரபுத்துவத்தின் இந்த கைப்பாவை, பணக்காரர்களுக்கு எதிராக சுண்டுவிரலையும் கூட உயர்த்தப் போவதில்லை.
இந்த உரை அயற்சி தருவதாகவும் கீழ்த்தரமானதாகவும், யதார்த்தத்திற்கு - ஒபாமா நிர்வாகமானது சமூக சமத்துவமின்மை மட்டங்களிலான ஒரு வேகஅதிகரிப்புக்கு தலைமை கொடுத்திருந்தது என்ற செயல்வரலாறும் இதில் அடங்கும் - முழுமையாக தொடர்பில்லாததாகவும் இருந்தது. உரைக்கு செவிமடுத்ததை சிறுமைப்படுத்தப்பட்டதாகவே எவரொருவரும் உணர முடியும்.
எதிர்பார்க்கத்தக்கவாறு தேசப்பற்று, பேரினவாதம் மற்றும் பொருளாதார தேசியவாதம் ஆகியவற்றுக்கு கிளிண்டன் விண்ணப்பங்கள் செய்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளுக்கு எதிரான முன்னேறிய போர் தயாரிப்புகள் என்னும் உண்மையான அச்சுறுத்தலை மறைத்து, ”சீனாவுக்கு எதிராக எதிர்த்து நிற்க”வும் மற்றும் “ரஷ்யாவிடமிருந்து உட்பட, நேட்டோ எதிர்கொள்கின்ற எந்த அச்சுறுத்தலிலும் நமது நேசநாடுகளின் பக்கம் நிற்க”வும் அவர் உறுதிபூண்டார். நமது “தீரமான” போலிஸ் குறித்து அவர் ஏராளமான முறை குறிப்பிட்டார்.
தனது ஜனாதிபதி வேட்புநிலையை ஒரு வரலாற்று நிகழ்வாக அறிவிப்பதையும், எதிர்பார்க்கத்தக்கவாறே, கிளிண்டனால் தவிர்க்க முடியவில்லை: “ஒரு மிகச்சிறந்த ஒன்றியத்தை நோக்கிய நமது தேசத்தின் பயணத்தில் இன்றிரவு நாம் இன்னுமொரு மைல்கல்லை எட்டியிருக்கிறோம்: முதன்முதலாக ஒரு பெரிய கட்சி ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது.” “எவரொருவருக்கும் அமெரிக்காவில் எந்தவொரு தடையும் வீழும்போது, அது ஒவ்வொருவருக்குமான தடையையும் அகற்றி விடுகிறது. கூரைகள் இல்லாத சமயத்தில், வானமே எல்லை” என்று பிதற்றுமளவுக்கு அவர் சென்று விட்டார்.
இது ஒரு பொய். கிளிண்டன் நிறுத்தப்பட்டிருப்பதில் இம்மியளவும் சமூக முற்போக்குத்தனமான ஏதொன்றுமில்லை. ஒட்டுமொத்தமாக மக்களுக்கு - அல்லது பெண்களுக்கு - இது எந்த விதமான முன்னேற்றத்தையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. பெண்களிடையான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியானது ஆண்களிடையான சமத்துவமின்மையைக் காட்டிலும் மிக வேகமாய் அதிகரித்துச் சென்றிருக்கிறது. பெண்களின் மொத்த வருவாயில் மேலிருக்கும் ஒரு சதவீத பெண்கள் கொண்டிருக்கும் விகிதமானது 1980களுக்குப் பிந்தைய காலத்தில் இருமடங்காகியிருக்கிறது. அந்த வசதியான உயரடுக்கின் பிரதிநிதியே ஹிலாரி கிளிண்டன். இந்த உயரடுக்கின் வாழ்க்கை நிலைமைகளுக்கும், பெரும்பாலும் மிகப் பரிதாபகரமான குறைந்த ஊதியங்களிலும், சுகாதாரப் பராமரிப்பு மையங்களிலும், உணவகங்களிலும், அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் மற்றும் கடைகளிலும் வேலைசெய்யக் கூடிய பத்து மில்லியன் கணக்கான பெண்களுக்கும் பொதுவானதென்று ஏதுமில்லை. இவரது அரசியல் மேலேற்றம், அவர்களது வாழ்க்கையில் முற்றிலும் எந்த நன்மையையும் கொண்டிருக்கப் போவதில்லை.
முதலாளித்துவ அரசியல்வாதிகள், அவர்களது பாலினம் அல்லது நிறம் என்னவாயினும், ஆளும் வர்க்கத்தின் நலன்களையே அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். மார்கரெட் தாட்சர், கோல்டா மேர், இந்திரா காந்தி, சிறிமாவோ பண்டாரநாயக, இஸபெல் பெரோன், கோரசன் அகினோ, அங்கேலா மேர்க்கெல், ஜூலியா கிலார்ட் மற்றும் டில்மா ரூசெப் - இவர்கள் அனைவருமே தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளாகவே இருந்தனர் - ஆகியோரது அணியில் இணைவதற்கு தான் கிளிண்டன் அவாக்கொள்கிறார்.
ஜனநாயகக் கட்சியின் தேர்ந்தெடுப்பு மாநாடும், குடியரசுக் கட்சியினது போலவே, பிற்போக்குத்தனத்தின் ஒரு கண்காட்சியாகவே இருந்தது. அது, இன மற்றும் பாலின அரசியலை, இராணுவவாதத்துடனும் தேசியவாதத்துடனும் இணைத்தது. பாரிய மக்களுக்கு கொடுப்பதற்கு சமத்துவமின்மை, எதேச்சாதிகாரம் மற்றும் போர் ஆகியவற்றைத் தவிர இந்த இரு கட்சிகளிடமும் வேறெதுவொன்றும் இல்லை.