Print Version|Feedback
Millions demonstrate throughout Turkey against July 15 coup attempt
ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு எதிராக துருக்கியின் அனைத்து நகரங்களிலும் மில்லியன் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
By Halil Celik
9 August 2016
ஆகஸ்ட் 7 ஞாயிறன்று துருக்கியின் அனைத்து நகரங்களிலும் மில்லியன் கணக்கான மக்கள், தோல்வியடைந்த ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிரான இறுதி சுற்று ஆர்ப்பாட்டங்களில் ஒன்று திரண்டனர்.
முன்னொருபோதும் இல்லாதளவில் ஒற்றுமையை எடுத்துக்காட்டிய இந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில், ஆட்சியிலுள்ள நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP), பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) மற்றும் தீவிர வலது தேசியவாத இயக்க கட்சி (MHP) ஆகியற்றுடன் அவற்றைச் சார்ந்த அமைப்புகளும் மற்றும் எண்ணற்ற அரசு சாரா அமைப்புகளும் பங்கெடுக்க, அது இஸ்தான்புல்லின் Yenikapı அணிவகுப்பு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அழைப்பின் பேரில் அந்த "ஜனநாயகம் மற்றும் மாவீரர்கள் பேரணி" ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுதான் துருக்கிய வரலாற்றில் காணக்கூடியதாக இருந்த மிகப் பெரிய பேரணியாகும். அரசு நடத்தும் அனடோலியன் அமைப்பு (Anatolian Agency) மற்றும் இஸ்தான்புல் பொலிஸ் துறை ஆகியவை பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கையை ஐந்து மில்லியனுக்கு அண்ணளவாக மதிப்பிட்டன. அதேவேளையில் ராய்டர்ஸ் உம் மற்றும் பல ஐரோப்பிய செய்தி நிறுவனங்களும்"ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள்" பங்கெடுத்ததாக அறிவித்தன. அதிகாரிகளின் தகவல்படி, பங்கெடுப்பவர்களுக்கான இலவச போக்குவரத்து சேவைக்காக சுமார் 7,000 நகராட்சி பேருந்துகள் மற்றும் 200 க்கும் அதிகமான படகுகள் மற்றும் பயணியர் கப்பல்கள் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும் துருக்கியின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியான குர்திஷ் மக்களுக்கு சார்பான ஜனநாயக கட்சி (HDP), துருக்கிய அரசுக்கு எதிராக ஒரு கொரில்லா போர் நடத்தி வரும் பிரிவினைவாத குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி (PKK) உடன் தொடர்பு வைத்திருக்கிறது என்ற அடித்தளத்தில் அது பேரணிக்கு அழைக்கப்படவில்லை.
அந்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து ஓர் பேரணியில் துருக்கிய இராணுவத்தின் கட்டளை பிரிவு உயரதிகாரிகளும் பங்கெடுத்திருந்தமை, அப்பேரணியின் பிரதான அம்சங்களில் ஒன்றாக இருந்தது. துருக்கிய முப்படை தளபதிகளின் தலைமை தளபதி Hulusi Akar அப்பேரணியில் உரையாற்றுகையில், அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் இருந்த பெத்துல்லா பயங்கரவாத அமைப்பு அல்லது FETO க்கு, “கடுமையான தண்டனை" வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு எதிராக எர்டோகனை மற்றும் அவரது அரசாங்கத்தை முதன்முதலில் பகிரங்கமாக ஆதரித்த MHP தலைவர் Devlet Bahçeli, “Yenikapı இல் இருந்து ஒரு புதிய பயணம் தொடங்குவதாக" கூறி, அந்த பேரணியை "வரலாற்றின் புதிய அத்தியாயமாக" குறிப்பிட்டார்.
அப்பேரணியில் CHP தலைவர் Kemal Kilicdaroglu அவரது உரையில் குறிப்பிடுகையில், ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் தோல்வி அந்நாட்டிற்கு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பதாக தெரிவித்தார். “இந்த ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி சமரசத்திற்கான புதிய கதவைத் திறந்து விட்டுள்ளது. ஜூலை 15 க்குப் பின்னர் புதிய துருக்கி உருவாகியுள்ளது. நல்லிணக்கத்திற்கான இந்த பலம் மற்றும் கலாச்சாரத்தை நம்மால் இன்னும் மேற்கொண்டு முன்னெடுத்து செல்ல முடிந்தால், நம்மால் நம் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த துருக்கியை வழங்க முடியும்,” என்றார்.
இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் இருந்து எல்லா அரசியல் தலைவர்களும் படிப்பினைகளை பெற வேண்டுமென வலியுறுத்திய Kilicdaroglu, ஜூலை 24 அன்று இஸ்தான்புல் இல் அவரது "குடியரசு மற்றும் ஜனநாயகத்திற்கான பேரணியில்" அவர் குறிப்பிட்டிருந்த புள்ளிகளை மீண்டும் வலியுறுத்தினார். ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் முன்னால் சமத்துவத்திற்கும், நாடாளுமன்ற அமைப்புமுறையின் முக்கியத்துவத்திற்கும் பெயரளவிற்கு ஆதரவை தெரிவித்த அவர், ஊடகத்துறையின் சுதந்திரத்திற்கும் அழைப்புவிடுத்தார். மசூதிகள், இராணுவ முகாம்கள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிந்தைய துருக்கியின் நீதிமன்றங்களில் இருந்து அரசியல் விலக்கி வைக்கப்பட வேண்டுமென அவர் அறிவித்தார்.
ஆயிரக் கணக்கான அமெரிக்க படையினரை கொண்டுள்ளதும், சிரியா மற்றும் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான குண்டுவீச்சு தாக்குதலுக்கு பிரதான இராணுவ தளமாக இருந்ததுமான துருக்கியின் இன்செர்லிக் விமானத்தளம் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஒழுங்கமைப்பு மையமாக இருந்த நிலையில், ஐயத்திற்கிடமின்றி வாஷிங்டனின் ஒப்புதலுடன் இராணுவ பிரிவுகளால் நடத்தப்பட்ட அந்த தோல்வியடைந்த பதவிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், AKP அரசாங்கம் 60,000 க்கும் அதிகமான அரசியல் எதிர்ப்பாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. குறைந்தபட்சம் 15 பல்கலைக்கழகங்களையும் மற்றும் 1000 க்கும் அதிகமான தனியார் பள்ளிகளை மூடியுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான செய்தி நிறுவனங்களும், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களும், செய்தி பத்திரிகைகளும் மற்றும் இதழ்களும் மற்றும் பிரசுரங்களும் FETO க்கு நெருக்கமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு மூடப்பட்டுள்ளன.
ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியையும் மற்றும் அதற்கு எதிரான மக்கள் எதிர்ப்பையும் "துருக்கியின் இரண்டாவது சுதந்திர போர்" என்று வர்ணித்து துருக்கிய பிரதம மந்திரி பினாலி யெல்ட்ரிம் (Binali Yildirim) “தேசிய விருப்பம் மற்றும் ஜனநாயகத்திற்கு அவர்கள் ஆதரவளித்தமைக்காக" CHP மற்றும் MHP இன் தலைவர்களைப் பாராட்டினார். பிரபல வலது-சாரி, இடது-சாரி மற்றும் இஸ்லாமிக் துருக்கிய கவிஞர்களின் கவிதைகளில் இருந்து மேற்கோள் காட்டிய அவர், அரசாங்கத்திற்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே நல்லிணக்கமான சூழலைப் பேணி வளர்ப்பதற்கு சூளுரைத்தார். “இந்த வரலாற்று ஒற்றுமையை பேணுவதற்கு நாங்கள் எங்களால் இயலுமான அனைத்தையும் செய்வோம்,” என்றவர் தெரிவித்தார்.
கூட்டத்தினருக்கு துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் சமரசம் மற்றும் ஐக்கியத்திற்கான ஒரு தொனியை முன்வைக்க முயற்சித்ததுடன், “ஜூலை 16 அன்று காலை நடந்ததைப் போலவே இன்று நமது பிரசன்னம் நமது எதிரிகளை நிலைகுலைய செய்கிறது,”என்ற கடுமையான வார்த்தைகளை துருக்கியின் மேற்கத்திய கூட்டாளிகளுக்கு விடுத்தார்.
துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியைக் கண்டிக்க கடந்த வாரம் ஜேர்மனியின் கொலோன் நகரில் ஒன்றுகூடிய சுமார் 40,000 பேரின் ஒரு கூட்டத்தில் வீடியோ இணைப்பினூடாக உரையாற்றுவதில் இருந்து அவரை தடுத்த ஜேர்மன் அரசாங்கத்தை எர்டோகன் கடுமையாக சாடினார். “[ஜேர்மனியில்] எங்கிருக்கிறது ஜனநாயகம்?” என்ற கேள்வி எழுப்பிய அவர், ஈராக்கின் Qandil மலைகளில் இருந்து ஒரு ஒளிக்காட்சி மாநாட்டை ஒளிபரப்புவதற்கு PKK ஐ ஜேர்மன் அதிகாரிகள் அனுமதித்திருந்தனர் என்றார். “பயங்கரவாதிகளை அவர்கள் ஊட்டி வளர்க்கட்டும், அவர்கள் பூமராங்கைப் போல திரும்பி வந்து அவர்களேயே திருப்பி தாக்குவார்கள்,” என்றார்.
துருக்கியில் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதென்ற அவரின் முடிவு துருக்கிய சட்ட வல்லுனர்களிடம் விடப்பட்டுள்ளதாக அவரது நிலைப்பாட்டை வலியுறுத்திய அவர், “நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கு நான் ஒப்புதல் வழங்குவேன்,” என்றுரைத்தார்.
இஸ்தான்புல் இன் “ஜனநாயகம் மற்றும் மாவீரர் பேரணி” அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இருந்தபோதினும் ஊடகங்கள் அவற்றின் அரசாங்கங்களின் வரிசையில் நின்று, பெரிதும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பிந்தைய விசாரணைகள் மற்றும் வேலைநீக்கங்கள் மீதும் மற்றும் "ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்குப் பின்னர்" எர்டோகனின் "பலத்தை எடுத்துக்காட்டுவதிலும்" (ராய்டர்ஸ்) ஒருங்குவிந்திருந்தன. நூற்றுக் கணக்கான படைத்துறைசாரா மக்கள் கொல்லப்பட்ட மற்றும் பாரிய மக்கள் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்ட அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கார காரணங்களைக் குறித்தோ மற்றும் நீண்டகால பாதிப்புகளைக் குறித்தோ சர்வதேச ஊடக நிறுவனங்கள் பெரிதாக ஒன்றும் எடுத்துக்காட்டவில்லை.
எர்டோகனும் அவரின் அரசாங்கமும் பெரிதும் அவர்களது மேற்கத்திய கூட்டாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வெளிப்படையாகவே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை ஆதரித்திருந்த சக்திகளான அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கு எதிராக தங்களின் நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதற்காக, தேசியவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமாக அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிரான பெருந்திரளான மக்கள் எதிர்ப்பை நடைமுறையளவில் சாதகமாக்கி வருகின்றனர். இதற்கேற்ப பிரதம மந்திரி பினாலி யெல்ட்ரிம் குறிப்பிடுகையில், அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி அந்நாட்டை ஐக்கியப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். “ஒவ்வொரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியும் எங்களை அழித்துவிடுவதில்லை, எங்களைப் பலப்படுத்துகிறது. இப்போது இங்கே நடப்பதைப் போல,” என்றார், அதேவேளையில் எர்டோகன் "இந்நாட்டின் நம்பிக்கை மற்றும் மன உறுதியை" மேற்கோளிட்டு பேசினார்.
கடந்த நவம்பரில் துருக்கிய போர்விமானங்களால் ஒரு ரஷ்ய இராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னர் முதல்முறையாக, இன்று (ஆகஸ்ட் 9) எர்டோகன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்திக்க இருக்கிறார்.
மே மாத இறுதியில் பினாலி யெல்ட்ரிம் ஐ கொண்டு அப்போதைய பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் ஐ பிரதியீடு செய்த பின்னர், AKP அரசாங்கம் நாட்டின் வெளியுறவு கொள்கையை குறிப்பாக மத்திய கிழக்கு கொள்கையின் நிலைநோக்கை மாற்றுவதற்கு முனைந்துள்ளது. அவர் பதவியேற்ற பின்னர் விரைவிலேயே, துருக்கியின் எதிரிகளைக் குறைத்து, அதன் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே அவர் நோக்கம் என்று யெல்ட்ரிம் தெரிவித்திருந்தார்.
ஜூன் மாத இறுதியில் உடனடியாக ரஷ்யா மற்றும் இஸ்ரேல் உடனான துருக்கியின் உறவுகளை முன்னேற்றமடைய செய்ய முயன்ற அவர், ஈராக், எகிப்து மற்றும் சிரியா உடன் கூட அவ்வாறே செய்ய அவரின் விருப்பத்தை தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இஸ்தான்புல், மாஸ்கோவ் மற்றும் டமாஸ்கஸ் க்கு இடையிலான ஒரு சாத்தியமான சமரசம் மேற்கத்திய சக்திகளால் ஏற்கப்படக்கூடிய ஒன்றல்ல. சமீப காலங்களில், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க ஆதரவிலான போரிலும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் ஆக்ரோஷத்திலும் துருக்கி ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது.
“அந்த ஆதரவு இப்போது அச்சுறுத்தப்படுகிறது,” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு சமீபத்திய கட்டுரையில் எச்சரித்தது. அப்பத்திரிகை தகவலின்படி, சிரியாவில் மிகப் பெரியளவில் இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காக பணம் மற்றும் ஆயுதங்களைப் பாய்ச்சுவதில், சிரியா மற்றும் ஈராக் உடனான எல்லைகளுக்குப் பொறுப்பான துருக்கியின் 2வது இராணுவ தளபதி உட்பட உயர்மட்ட துருக்கிய இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளில் பலர் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் சம்பந்தப்பட்டு இருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
“துருக்கி-சிரியா கொள்கைக்கும் மற்றும் சிரிய குர்தியர்கள் தொடர்பான துருக்கிய கொள்கைக்கும் தலைமை கொடுத்து வந்த தளபதிகள் இப்போது சிறையில் இருக்கிறார்கள், துருக்கிய பாதுகாப்பு ஸ்தாபகம் இப்போது முடமாகி இருப்பதை நாம் பார்க்கிறோம்,” என்று வாஷிங்டனை மையமாக கொண்ட மத்திய கிழக்கு அமைப்பின் துருக்கிய ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குனர் Gonul Tol தெரிவித்தார். “இது துருக்கியை மிகவும் பலவீனமாக மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குவதுடன், குறைந்த-எதிர்ப்பு திறன் கொண்டதாக அதை செய்கின்றது,” என்றார்.