ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Biden’s blank check to the Baltic states: US will wage war on Russia in your defense

பால்டிக் நாடுகளுக்கு பைடெனின் நிபந்தனையில்லா ஆதரவு: உங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்கா ரஷ்யா மீது போர் தொடுக்கும்

Andre Damon
24 August 2016

மாஸ்கோ மற்றும் பால்டிக் நாடுகளுக்கு இடையிலான ஒரு மோதல் உருவாகுமானால் ரஷ்யாவுடன் போரில் இறங்குவதற்கான அமெரிக்காவின் கடமைப்பாட்டை மீளவலியுறுத்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பைடென் செவ்வாயன்று லாட்வியா பயணித்தார்.

லித்துவேனிய ஜனாதிபதி டாலியா க்ரேபௌஸ்கைய்ட் (Dalia Grybauskaite) மற்றும் ஏனைய பால்டிக் தலைவர்களை சந்தித்த பின்னர், பைடென் கூறுகையில், “அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியங்கள் நேட்டோ உடன்படிக்கை மற்றும் 5 ஆம் ஷரத்துக்கு…, எங்களது பரிசுத்தமான மதிப்பை கொடுக்கின்றோம் என நான் பால்டிக் நாடுகளது மக்கள் அனைவருக்கும் பரிபூரணமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.

வெறித்தனமான ரஷ்ய-விரோத ஆட்சிகளது தலைமையிலான இத்தகைய சிறிய நாடுகளில் ஏதேனும் ஒன்று, ஒரு பரந்த மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடிய ரஷ்யாவிற்கு எதிரான ஓர் ஆத்திரமூட்டலை நடத்தினால், ஐக்கிய இராஜ்ஜியங்களின் "பரிசுத்தமான மதிப்பு" உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணுஆயுத சக்திக்கு எதிராக அமெரிக்க மக்களை போரில் மூழ்கடிக்க கோருகிறது என்பது தான் பைடென் வார்த்தைகளது வெளிப்படையான அர்த்தம்.

திரு. பைடெனால் பயன்படுத்தப்படும் இந்த "பரிசுத்தமான மதிப்பு" என்பது எது? இது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் சட்டவிரோதமாக படையெடுக்கவும் மற்றும் அவற்றை மரணங்கள் மற்றும் சீரழிவுகளின் பயங்கர காட்சிக்களமாக மாற்றுவதற்கும் அமெரிக்காவை இட்டுச் சென்ற அதே "மதிப்பா"? இது, லிபியா மற்றும் சிரியாவை அழித்துள்ள பினாமி போர்களைத் தூண்டிவிடுவதில் எடுத்துக்காட்டப்பட்ட உயர்-சிந்தனையா? அல்லது குண்டூஸ் இல் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பை சாம்பலாக்கியமை, டிரோன் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் நிர்மூலமாக்கியமை, சிஐஏ இரகசிய இடங்களில் நடத்தப்பட்ட கொடூர சித்திரவதை, அபு கிரைஃப் (Abu Ghraib) மற்றும் குவண்டனாமோ வளைகுடாவின் கொடுஞ்சிறைக்கூடங்களை துணை ஜனாதிபதி நினைவில் வைத்திருக்கிறாரா?

மனித நாகரீகத்தையே பல மடங்கு அழித்துவிடும் ஆற்றல் வாய்ந்த அணுகுண்டு தாங்கிய நாடுகளுக்கு இடையிலான ஒரு போருக்குள் உலக மக்களை ஆழ்த்தி, எல்லாவற்றையும் விட மிகப் பிரமாண்டமான போர் குற்றங்களுக்கு தயாரிப்பு செய்வதைத்தான், போர் குற்றவாளியான பைடென் ஒரு "மதிப்பான" விடயமாக குறிப்பிடுகிறார்.

ரஷ்யா உடனான ஓர் இராணுவ மோதல் பற்றி ஊடகங்கள் அல்லது அரசியல் ஸ்தாபகங்களுக்குள் நடக்கும் ஏதேனும் விவாதத்தைப் பொறுத்த வரையில், அது "மனித உரிமைகளைப்" பாதுகாக்கும் மோசடியான நிலைப்பாட்டில் இருந்து அல்லது அமெரிக்க கூட்டாளிகளது இறையாண்மையை நிலைநிறுத்துவது என்ற மோசடியான நிலைப்பாட்டில் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. போருக்கான நிஜமான காரணங்கள் அல்லது அதன் விளைவுகளை குறித்த எந்தவித பரிசீலனையும் அனுமதிக்கப்படுவதில்லை.  

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ஒரு போர் எவ்வாறு இருக்கும்? அணு ஆயுதங்களை "முதல் தாக்குதலுக்கு" பிரயோகிக்க அதற்கு உரிமை இருப்பதாக அமெரிக்காவும், அணுகுண்டுகளைப் பயன்படுத்துவது உட்பட அது தீர்மானிக்கக்கூடிய எல்லா வழிவகைகளையும் கொண்டு அதன் பிராந்தியத்திற்குள் நடக்கும் ஊடுருவலுக்கு விடையளிக்கும் என்று ரஷ்யாவும் கூறியுள்ள உண்மைகளுக்கு இடையே, அத்தகையவொரு மோதல் அணுஆயுதங்களைப் பிரயோகிக்க தொடங்கினால் என்னாகும்? ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் எத்தனை மில்லியன் மக்கள் அத்தகையவொரு மோதலில் கொல்லப்படுவார்கள்? 

இதில் எதுவுமே 2016 தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டது கூட கிடையாது. அந்தளவிற்கு அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க நிதிய செல்வந்த தட்டுக்கள் அமெரிக்காவினது பத்திரிகை மற்றும் அரசியல் வாழ்வில் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன மற்றும் தேர்தல் நடைமுறைகளில் உண்மையான ஜனநாயக உள்ளடக்கம் இல்லவே இல்லை.


நேட்டோ விரிவாக்கம்

நேட்டோ சாசனம் (ஷரத்து 5) இன் கூட்டு பாதுகாப்பு வகைமுறையைப் பொறுத்த வரையில், சோவியத் ஒன்றிய கலைப்பிற்குப் பின்னர் ரஷ்யாவைச் சுற்றி வளைக்கும் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற நேட்டோ எல்லைகளை தயவுதாட்சண்யமின்றி கிழக்கு நோக்கி விரிவாக்குவதற்காக மட்டுமே பால்டிக் நாடுகள் அந்த இராணுவ கூட்டணியின் பாகமாக உள்ளன. லாட்வியா, லித்துவேனியா மற்றும் எஸ்தோனியா என பிரச்சினையில் உள்ள இந்த மூன்று நாடுகளும் ஒட்டுமொத்தமாக சுமார் ஆறு மில்லியன் மக்களைக் கொண்டுள்ளன, இது அண்ணளவாக மிசொரி அமெரிக்க மாநிலத்திற்கு சமமானதாகும். 1917 ரஷ்ய புரட்சிக்கு முன்னர் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் பாகமாக இருந்த இந்நாடுகள், 1939 ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கைக்குப் பின்னர் இருந்து 1990 இல் சோவியத் ஒன்றியத்திலிருந்து சுதந்திர பிரகடனம் அறிவிப்பதற்கு முன்னர் வரையில் சோவியத் ஒன்றியத்துடன் இணைந்திருந்தன.

1999 இல் செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் போலந்தையும், 2004 இல் பால்டிக் நாடுகள், பல்கேரியா, ருமேனியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவற்றையும், 2009 இல் அல்பேனியா மற்றும் குரேஷியாவையும் உள்ளடக்கி நேட்டோ விரிவடைந்தது. இந்நாடுகளில் பெரும்பாலானவை சோவியத் தலைமையிலான வார்சோ உடன்படிக்கையின் அங்கத்துவ நாடுகளாகும்.

இந்த விரிவாக்கங்கள் நேட்டோவின் எல்லைகளை 800 மைல்களுக்கும் அதிகமாக விரிவாக்கி, அதன் இராணுவ படைகளை செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கின் 100 மைல்களுக்குள், அதாவது சூப்பர்சோனிக் போர்விமானத்தால் ஐந்து நிமிடத்திற்கும் குறைந்த நேரத்தில் சென்றடையக்கூடிய தூரத்திற்குள் நேட்டோவைக் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்க ஆதவைக் கொண்டுள்ள பால்டிக் நாடுகள் அதீத வேகத்தில் ஆயுதமயமாக்கி வருகின்றன. 2014 மற்றும் 2015 க்கு இடையே, எஸ்தோனியா 6.6 சதவீத அளவிற்கும், லாட்வியா 13.7 சதவீத அளவிற்கும் மற்றும் லித்துவேனியா 32.7 சதவீத அளவிற்கும் அதன் பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கி உள்ளன. பைடெனின் விஜயத்திற்கு முதல் நாள், லித்துவேனியா 88 கவச போர் வாகனங்களை வாங்குவதற்காக அரை பில்லியன் டாலர் செலவிட்டு, அதன் வரலாற்றிலேயே மிக அதிகளவிலான ஆயுத கொள்முதல் செய்துள்ளது.

பெரிதும் ஸ்திரமற்ற, சமூக மற்றும் இன பதட்டங்களால் பிளவுபட்ட இந்நாடுகளின் அமெரிக்க-ஆதரவிலான கைப்பாவை அரசாங்கங்கள், ரஷ்ய-விரோத இனவெறுப்பு மற்றும் இராணுவவாதத்தை தழுவுவதில் குணாம்சப்படுத்தப்படுகின்றன.

“லித்துவேனிய இரும்பு பெண்மணி" என்று குறிப்பிடப்படும் லித்துவேனிய ஜனாதிபதி டாலியா க்ரேபௌஸ்கைய்ட் ரஷ்யாவை ஒரு "பயங்கரவாத அரசு" என்று குறிப்பிட்டு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை அடோல்ஃப் ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார். வாஷிங்டன் டி.சி. இல் படிப்பை முடித்த க்ரேபௌஸ்கைய்ட் அங்கே லித்துவேனிய தூதரகத்தில் முழு அதிகாரமளிக்கப் பெற்ற தூதர அமைச்சராக சேவையாற்றினார்.

முன்னர் பாதுகாப்பு மந்திரியாக இருந்த லாட்விய ஜனாதிபதி றைமொன்ட்ஸ் வேஜோனிஸ் ரஷ்ய எல்லையில் இராணுவமயப்படுத்த வக்காலத்துவாங்குபவர்களில் தீவிரமான ஒருவராக இருந்தார். கடந்த ஆண்டு அவர் அறிவிக்கையில், “ஏதேனும் நடந்தால், கூடுதல் தளவாடங்களுக்காக எங்களால் நாட்கணக்கில் வாரக்கணக்கில் காத்திருக்க முடியாது. நாங்கள் உடனடியாக எதிர்நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

2016 ஜனாதிபதி தேர்தல் முடிவு பால்டிக் ஐ சார்ந்த அமெரிக்க கொள்கையை பாதிக்காது என்பதே செவ்வாய்கிழமை பைடென் அறிவித்த அவரது கருத்துகளில் அனேகமாக மிகவும் முக்கியமான பகுதியாக இருந்தது.

பால்டிக் நாடுகளை பாதுகாப்பதற்கான போரில் இறங்கும் வாஷிங்டனின் கடமைப்பாடு மீது கேள்வி எழுப்பிய குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் இன் கருத்துக்களை பைடென் குறிப்பிடுகிறார். இது பைடெனுக்கும் அவர் யாருக்கு பரிந்து பேசுகிறாரோ அந்த இராணுவ/உளவுத்துறைக்கும் ஏற்புடையதல்ல. செவ்வாயன்று துணை ஜனாதிபதி அறிவிக்கையில் ட்ரம்ப் இன் கருத்துக்களில் "ஆழமாக எடுத்துக் கொள்ள ஒன்றும் இல்லை" என்றார். குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு "அவர் என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை," என்று கூறிய பைடென் தொடர்ந்து கூறுகையில், “அவர் ஷரத்து 5 ஐ புரிந்து கொண்டிருக்கிறார் என்று கூட நான் நினைக்கவில்லை,” என்றார்.

பைடெனின் அறிக்கைகள் பெயரளவிற்கு ட்ரம்ப் க்கு எதிராக திரும்பி இருந்தாலும், அவற்றின் நிஜமான உள்ளடக்கம் என்னவென்றால் தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் உளவுத்துறை அமைப்புகள்தான் கொள்கையை கட்டளையிடும் என்ற வலியுறுத்தலாகும்.

இத்தகைய கருத்துக்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் "சைபீரிய வேட்பாளராக" ட்ரம்ப் ஐ சித்தரிக்க முயலும் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முயற்சிகள் மீது கூடுதலாக வெளிச்சமிடுகிறது. பாசிசவாத ட்ரம்ப் க்கு எதிரான மக்கள் கோபத்தை போருக்கான ஒரு உத்தரவாணையை பெறுவதற்கு கட்டமைப்பதே இதன் நோக்கமாகும். இது மாஸ்கோ உடன் வாஷிங்டனின் மிகப்பெரிய மோதலை தீவிரப்படுத்துவதற்கு களம் அமைக்கிறது.