Print Version|Feedback
SEP/IYSSE public meeting in Colombo to introduce Sinhala edition of The Russian Revolution and the Unfinished Twentieth Century
ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் சிங்கள ஆக்கத்தை அறிமுகப்படுத்த சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ கொழும்பில் பொதுக் கூட்டம்
22 February 2016
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.), டேவிட் நோர்த் எழுதிய ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் சிங்கள ஆக்கத்தை வெளியிடுவதற்காக மார்ச் 15 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகின்றன. சோ.ச.க. வெளியீட்டகமான தொழிலாளர் பாதை பிரசுரித்துள்ள இந்த சிங்கள மொழிபெயர்ப்பை கூட்ட மண்டபத்திலும் சோ.ச.க.விடமும் கொள்வனவு செய்ய முடியும்.
டேவிட் நோர்த், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவினதும் (அமெரிக்க) சோ.ச.க.வினதும் தலைவராவார். அவரது புத்தகம், சோவியத் ஒன்றியத்தின் பொறிவின் பின்னரான முதலாளித்துவ வெற்றி ஆரவாரங்களுக்கு எதிராகவும், திரிபுபடுத்தல்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்களுக்கு எதிராக வரலாற்று உண்மையை பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யப்பட்ட விரிவுரைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
சோசலிசம் முடிந்துவிட்டது என்று பிரகடனம் செய்தவர்களுக்கு, அல்லது, பிரான்சிஸ் புகுயாமா கூறிய வரலாற்று முடிவு என்பதற்கும் எதிராக, நோர்த், “சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது நிச்சயமாக பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக இருக்கும் அதே வேளை, அது சோசலிசத்தின் அதிர்ச்சிகரமான முடிவைக் குறிக்கவில்லை” என்று வாதிட்டார். “வரலாறு தொடரும். மற்றும், இருபதாம் நூற்றாண்டானது முதலாளித்துவ நெருக்கடி உக்கிரமடையும் சகாப்தமாக, போர்கள் மற்றும் புரட்சிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சகாப்தமாக விவரிக்கப்படும் அளவுக்கு, அது மிகவும் பொருத்தமாக ‘முடிவுறாத’ நூற்றாண்டாக வகைப்படுத்தப்படும் என்றார்.
முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி மோசமடைந்து வருகின்ற மற்றும் ஏகாதிபத்திய உலகப் போர் ஆபத்து உக்கிரமடைந்து வருகின்ற நிலைமைகளின் கீழ், முன்வரவுள்ள புரட்சிகர போராட்டங்களுக்கு தயாராவதில், 20ம் நூற்றாண்டின் முக்கிய மூலோபாய அனுபவங்களை, குறிப்பாக 1917 ரஷ்யப் புரட்சியை பற்றி புரிந்துகொள்வது இன்றியமையாதது ஆகும், என நோர்த் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வரலாற்று உண்மைகளை பாதுகாப்பது, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சோசலிச நனவின் மறுமலர்ச்சிக்கு அத்தியாவசியமானதாகும்.
ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலானது ரஷ்யப் புரட்சி, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவு, ஸ்ராலினிசத்துக்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டம், நிரந்தரப் புரட்சி தத்துவம், பாசிசத்தின் எழுச்சி, இரண்டாம் உலக யுத்தத்தின் தோற்றம் மற்றும் தொழிற்சங்கங்களின் வரலாற்றுப் பரிணாமம் பற்றியும் விவாதிக்கும் வளமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிக்கொண்டுள்ளது.
கொழும்பு நிகழ்வானது இந்தப் புத்தகத்தைப் பற்றி நாடு முழுவதும் சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ நடத்தவுள்ள தொடர் கூட்டங்களில் முதலாவதாகும். நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் கூட்டத்திற்கு வருகை தந்து இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நாள் மற்றும் நேரம்: செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, மாலை 4.00 மணி
இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்.