Print Version|Feedback
Geneva talks begin as US-backed war in Syria expands
சிரியாவில் அமெரிக்க-ஆதரவிலான போர் விரிவாக்கப்படுகையில், ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன
Bill Van Auken 2 February 2016
மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக ஆக்கியதும், 260,000க்கும் மேற்பட்ட சிரியர்களைக் கொன்றதுமான நான்காண்டு கால போர் குறித்து சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் திங்களன்று பேச்சுவார்த்தைகள் தொடங்கின. ஐக்கிய நாடுகள் மத்தியஸ்தம் செய்கின்ற இந்நிகழ்முறையானது, மனிதயினப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று நம்புவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை.
ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நாளுக்கு சரியாக ஒரு வாரம் கடந்து அந்த அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன, ஏனென்றால் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்களும் மற்றும் இதர அரசியல் சக்திகளையும் யார் பிரதிநிதித்துவம் செய்ய இருக்கிறார்கள் என்பதன் மீது கடுமையான பிளவுகள் இருந்தன.
இறுதியில் சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபை தூதர் ஸ்ராஃபன் டு மிஸ்துரா, சவூதி முடியாட்சியால் ஒன்றுதிரட்டப்பட்ட ஓர் அணியான "உயர் பேச்சுவார்த்தைக் குழுவை" (High Negotiation Committee” - HNC) அனுமதிக்க ஒப்புக்கொண்டு, அந்த எதிர்த்தரப்பின் பிரத்யேக பிரதிநிதித்துவமாக சேவையாற்றுவதற்கு வாஷிங்டன் மற்றும் அதன்பிராந்திய கூட்டாளிகளான சவூதி அரேபியா, துருக்கி மற்றும் கட்டாரின் அழுத்தத்திற்கு அடிபணிந்தார். இந்த முடிவுக்குப் பின்னரும் கூட, ஜெனிவாவிற்குச் செல்வதா வேண்டாமா என்பதன் மீது இந்த அமைப்பிற்குள் நடந்த சூடான விவாதங்கள் குறித்த செய்திகளுக்கு இடையே, அங்கே மேற்கொண்டும் தாமதம் ஏற்பட்டது.
அந்த HNC பிரதிநிதிகள் குழுவின் தலைவர், முன்னாள் சிரிய பிரதம மந்திரி ரியத் ஹிஜாப் ஆவார். இவர் கொள்கை மாறும் பச்சோந்திகளை "ஊக்குவிக்கும்" ஒரு மேற்கத்திய திட்டத்தின் கீழ், கொள்கை மாறிய உயர்மட்ட சிரிய அதிகாரிகளில் ஒருவராக கருதப்படுபவராவர். இந்த விடயத்தில் பிரெஞ்சு உளவுத்துறையால் ஒரு சூட்கேஸ் நிரம்ப பணம் வழங்கப்பட்டிருந்தது.
அதன் முதன்மை மத்தியஸ்தர் மொஹம்மத் அல்லொஷ், இஸ்லாம் இராணுவத்தின் (ஜாய்ஷ் அல்-இஸ்லாம்) தலைவராவார். இவ்வமைப்பு அல் கொய்தாவின் சிரியா துணை அமைப்பான அல்-நுஸ்ரா முன்னணியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வரும் ஒரு சலாபிஸ்ட் ஜிஹாதி போராளிகள் குழுவாகும். சவூதி முடியாட்சியின் பிரதான ரட்சகராக சேவையாற்றும் அதன் வாஹ்ஹாபி வெறித்தனத்திலிருந்து தூண்டுதல் பெற்ற இதன் வெறிபிடித்த குறுங்குழுவாத சித்தாந்தம், உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான ஷியா முஸ்லீம்களை நிர்மூலமாக்க மற்றும் ஏழாம் நூற்றாண்டு கலிபாவை மீட்டமைக்க அழைப்புவிடுக்கிறது. இந்த அல்லொஷைத் தான் அமெரிக்க அதிகாரிகள் மனமார ஒரு "மிதவாதி" என்று குறிப்பிடுகின்றனர்.
இவ்விருவரும் மேற்கத்திய ஆதரவிலான "கிளர்ச்சியாளர்களின்"—மற்றும் பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் அமெரிக்க சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) போன்ற போலி-இடது குழுக்கள் எதை "சிரிய புரட்சியாக" பாராட்டுகின்றனவோ அதற்கும்—பிரதிநிதிகளாக உள்ளனர் என்பது மறுக்க முடியாதது. எவ்வாறிருந்தாலும் இந்த மேற்கின் உளவுத்துறை உடைமையும், அதிதீவிர-பிற்போக்குவாதிகள் மற்றும் மதவெறியர்களின் இந்த கூட்டு, சிரியா மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற வேஷம் மிகவும் வெறுப்பூட்டுகின்றது.
இத்தகைய கூறுபாடுகளின் அரசியல் நிகழ்ச்சிநிரல், அந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக சிரியா தலைநகருக்கு சற்று வெளியே ஒரு ஷியா மத வழிபாட்டு இடத்தில் நடந்த ஒரு பயங்கரவாத குண்டுவீச்சால் எடுத்துக்காட்டப்பட்டது. அதில் குறைந்தபட்சம் 72 பேர் கொல்லப்பட்டனர், அதைவிட அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
அந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியதும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி காணொளி அறிக்கை ஒன்றில்: “ஏறத்தாழ ஐந்தாண்டுகள், சிரியா ஒரு மூர்க்கமான மோதலில் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உலகம் பயங்கரங்களைக் கண்டுள்ளது, அதில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மில்லியன் கணக்கானவர்கள் நாட்டுக்குள்ளேயே மற்றும் நாட்டை விட்டு வெளியே இடம் பெயர்க்கப்பட்டுள்ளனர்,” என்று அறிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகள், "வன்முறையைக் குறைக்க, டயஷ் (Daesh) போன்ற பயங்கரவாத குழுக்களைத் தனிமைப்படுத்த, மற்றும் நாம் அனைவரும் விரும்பும் ஓர் ஒற்றுமையான, சமாதானமான மற்றும் பன்முக சிரியாவிற்கான அடித்தளத்தை உருவாக்க" வழிவகைகளை வழங்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
கெர்ரி யாரை அவர் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்? வாஷிங்டன், சிரியாவின் "பயங்கரமான" சீரழிவைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெறுமனே ஏதோ அப்பாவி பார்வையாளர் கிடையாது. அந்த இரத்தசிந்தலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமே முதன்மை பொறுப்பாகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரில் துருக்கிய அரசாங்கம் மற்றும் சவூதி மற்றும் கட்டார் முடியாட்சிகளுடன் சேர்ந்து, இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி சிஐஏ பின்னணியில் இருந்துள்ளது.
உண்மையில் வாஷிங்டன் நூற்றுக் கணக்கான கூடுதல் துருப்புகளை அனுப்ப அறிவித்தும், வான்வழி தாக்குதல்களை அதிகரித்தும் மற்றும் "கிளர்ச்சியாளர்களுக்கு" உதவிகளை விரிவாக்கியும், ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முந்தைய வாரங்களில் சிரியாவில் அதன் இராணுவ வன்முறையைத் திட்டமிட்டு தீவிரப்படுத்தி உள்ளது.
Daesh அல்லது ISIS ஐ பொறுத்த வரையில், ஒவ்வொரு விதத்திலும் அது வாஷிங்டனின் பிரங்கன்ஸ்ரைன் அசுரனாகும். அது ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் அடுத்தடுத்த அமெரிக்க ஆக்கிரமிப்பில் பயன்படுத்தப்பட்ட பிரித்தாளும் அணுகுமுறைகளால் தூண்டிவிடப்பட்ட குறுங்குழுவாத கொந்தளிப்பின் துணைவிளைவாக உள்ளது. அது லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போரால் படிப்படியாக பலப்படுத்தப்பட்டது, அங்கே இதேபோன்ற அல் கொய்தா தொடர்புபட்ட இஸ்லாமிய போராளிகள் பினாமி துருப்புகளாக பயன்படுத்தப்பட்டனர். அந்த போருக்குப் பின்னர், இத்தகைய போராளிகளையும் மற்றும் சிரியாவிற்குள் பெரும் எண்ணிக்கையிலான லிபிய ஆயுதங்களையும் அது பாய்ச்சியது.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் பேரம்பேசல் இல்லா கோரிக்கையாக சிரியா ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திடமிருந்து அதிகாரம் உடனடியாக மாற்றப்பட வேண்டுமென கோரி Montreux இல் நடந்த இரண்டாம் ஜெனிவா பேச்சுவார்த்தைகள் என்றழைக்கப்பட்டதைத் தோல்வியடையச் செய்தனர். ஒபாமா நிர்வாகம் சிரியாவில் உள்ள அதன் இஸ்லாமிய பினாமிகளை ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் பங்குபற்ற செய்ய அழுத்தமளிக்கிறது என்றால், அதற்கு காரணம் ஆயுத பலத்தைக் கொண்டு ஆட்சி மாற்ற நோக்கத்தை அவர்களால் எட்ட முடியவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது, மேலும் ரஷ்ய விமானத் தாக்குதல்களின் ஆதரவுடன் சிரிய அரசாங்க படைகளின் கரங்களில் அவை அதிகளவில் தோல்விகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அமெரிக்க நோக்கங்கள் மாற்றமின்றி அப்படியே உள்ளன. ஓர் "ஒற்றுமையான, சமாதானமான மற்றும் பன்முக சிரியா" குறித்து கெர்ரி பேசுகையில், அவர் டமாஸ்கஸில் அமெரிக்க கைப்பாவை அரசாங்கம் ஒன்றை நிறுவுதலை அர்த்தப்படுத்துகிறார். ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஒத்துழைப்பைப் பெற அச்சுறுத்தல்கள், அழுத்தம் மற்றும் இலஞ்சம் ஆகிய வழிவகைகளைக் கொண்டு—சிரியாவின் தேசிய முதலாளித்துவத்தின் மற்றும் அசாத் ஆட்சியிலேயே உள்ள கூறுபாடுகளுடன் சேர்ந்து—அத்தகைய ஒரு பலனை அடைய முடியுமென வாஷிங்டன் நம்புகிறது.
ஆனால் அமெரிக்கா ஒரு நிரந்தரமான வாடிக்கையாளர் ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான ஒரு மூலோபாயத்தின் புறவடிவத்தைக் கூட தெளிவாக்கவில்லை. கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்களில் எவரொருவரும் சிரியாவில் ஆட்சி அமைக்க தகைமை கொண்டவர்கள் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. அதன் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்த்தப்பட்டதையும் மற்றும் அதன் அடிப்படை உள்கட்டமைப்பு பெரிதும் சீரழிந்து போயுள்ளதையும் கண்டுள்ள ஒரு நாட்டை மீண்டும் புதுப்பிப்பதற்கான ஒரு திட்டம் அல்லது ஒரு கொள்கையின் எந்தவொரு அறிகுறியும் கூட அங்கே இல்லை.
ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடுகளால் உண்டாக்கப்பட்ட அழிவுகள் இறுதியில் நம்பகமான கைப்பாவை ஆட்சிகளை நிறுவுவதில் அல்ல, மாறாக ஒட்டுமொத்த சமூகங்களையும் அழிப்பதில் தான் முடிவடைந்துள்ளது.
அமெரிக்க முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத முரண்பாடுகள் மற்றும் உலக அரங்கில் சரிந்துவரும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கை இராணுவ வழிவகைகளைக் கொண்டு திரும்ப்பெறுவதற்கான அதன் பெரும்பிரயத்தன முயற்சிகளால் உந்தப்பட்டு, தொடர்ச்சியான போர்களில் ஒன்று தான் வாஷிங்டன் பின்பற்றி வரும் ஒரே கவனத்திற்குரிய கொள்கையாக உள்ளது. பூமியின் எந்தவொரு மூலையிலேனும், அமெரிக்காவை மையமாக கொண்ட வங்கிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரம் தகமைகொண்ட எந்தவொரு உலகளாவிய அல்லது பிராந்திய போட்டியாளரின் எழுச்சியை தடுப்பதே அதன் நோக்கமாகும். அதற்காக அது மனித உயிர்களில் என்ன விலையும் கொடுக்கும்.
கொல்லப்பட்ட, காயப்பட்ட மற்றும் இடம்பெயர்த்தப்பட்ட மில்லியன் கணக்கான ஈராக்கியர்கள், ஆப்கானியர்கள், லிபியர்கள் மற்றும் சிரியர்கள் இந்த முடிவில்லா மற்றும் தீவிரப்பட்ட அமெரிக்க போர் உந்துதலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் பல மில்லியன் கணக்கானவர்கள் இதற்கு பலியாக உள்ளார்கள். இந்த மனிதயின படுகொலையை ஜெனிவா சமாதான பேச்சுவார்த்தைகளோ அல்லது பேரம்பேசல்களோ நிறுத்த முடியாது, அது புதிய இரத்தந்தோய்ந்த மோதல்களுக்கு ஒரு முன்னேற்பாடாக மட்டுமே சேவை செய்யும். சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீட்டை தவிர்த்து, உலக போரை நோக்கிய இந்த உத்வேகத்தைத் தடுக்க அங்கே வேறெந்த வழிவகையும் இல்லை.