Print Version|Feedback
Two workers killed as government seeks to crush Pakistan airline strike
பாகிஸ்தான் விமான நிறுவன வேலை நிறுத்தத்தை அரசாங்கம் நசுக்க முயன்றபோது இரு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்
By Sampath Perera
4 February 2016
செவ்வாய் கிழமையன்று நடந்த பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன (PIA) ஊழியர்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை அரசாங்க பாதுகாப்புப் படையினர் தடியடி பிரயோகம் செய்தோ, தண்ணீர் துப்பாக்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தியோ முறியடிக்க இயலாத நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட விமான நிறுவன ஊழியர்களில் இருவரை உயிர்போக்கிவிடத்தக்க வகையில் சுட்டனர். அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதை எதிர்த்து கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது இத்துப்பாக்கி சூடு நிகழ்ந்தது.
உள்ளூர் போலீஸ் மற்றும் கராச்சி துணை இராணுவ ரேஞ்சர்களால் செவ்வாய்கிழமையன்று நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலினால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் குண்டடிபட்ட 3 பேர் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர், அதில் பலரது நிலைமை கவலைக்கிடமானது. இந்நிலையில், ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை நாடு முழுவதிலுமாக விரிவுபடுத்தி இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். புதன் கிழமையன்று, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தினை காலவரையின்றி நிறுத்திவைக்கும் அறிவிப்பினை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. "எங்களது ரொட்டி மற்றும் வெண்ணெயை நீங்கள் பறித்துவிட முடியாது" என்றும், "நாங்கள் எங்களது கடைசி துளி இரத்தம் உள்ளவரை போராடுவோம்" என்றும் PIA வேலைநிறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்லாமாபாத்தில் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தனர்.
கராச்சி ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினர்களின் தாக்குதலில் மூன்றாவது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டிருக்கலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தேசிய விமான நிலையங்களில் அரசாங்கம் கூடுதலாக பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்தியிருந்தபோது, வேலை நிறுத்தத்தை ஒருங்கிணைப்பு செய்த கூட்டு நடவடிக்கை குழு செவ்வாய்கிழமை இரவு முதல் அதன் நான்கு உறுப்பினர்களை காணவில்லை என அறிவித்தது.
பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது முஸ்லீம் லீக் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ள தனியார்மயமாக்கல் திட்டத்தின் மீதான அவர்களது உறுதிப்பாட்டினை நிரூபணம் செய்ய ஆயுதமற்ற ஊழியர்களை கொல்வதன் மூலமாகக்கூட இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை உடைக்க தீர்மானித்து உள்ளனர். 2013ம் ஆண்டு சர்வதேச நாணய நிதிய பிணையத் தொகுப்பு நிதியாக அமெரிக்க 6.64 பில்லியன் டாலர்கள் வழங்குவதற்கான நிபந்தனையாக தனியார்மயமாக்கத்திற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்களின் பட்டியலில் PIA முன்னிலை வகிக்கிறது.
செவ்வாய்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, ஒட்டுமொத்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட விமான நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், மேலும் அவர்களுக்கு ஓராண்டு சிறைதண்டனை அளிக்கவும் ஷெரீப் உறுதிகொண்டார். தங்களது சக ஊழியர்களின் உறவை முறித்துக் கொண்டு மறியல்களில் ஈடுபடாத PIA ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக, காவல் துறையினர் மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்களின் மாபெரும் அணிதிரள்வு தொழிலாள வர்க்கத்தை கடுமையாக அச்சுறுத்தும் எச்சரிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் வணிக மையமாகத் திகழும் கராச்சியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு போலித்தனமான பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கையாக ரேஞ்சர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கம் மற்றும் இராணுவ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை அதிகரித்த அளவில் பகிரங்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற அரசாங்கத்தின் உண்மையான நோக்கமானது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரசாங்கத்தின் ஒடுக்கும் படைகளை பலப்படுத்துவதே என செவ்வாய்கிழமை PIA ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின்போது நிகழ்ந்த தாக்குதல் சுட்டிக்காட்டுகின்றது.
PIA ஊழியர்களின் கொலை பாகிஸ்தான் முழுவதிலும் பெரும் சீற்றத்தை தூண்டியுள்ள நிலையில், செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸ் மற்றும் ரேஞ்சர்கள் உண்மையான தோட்டாக்களை கொண்டு துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அவர்கள் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியதாகக் கூறி தங்களது அவசர மறுப்புக்களை வெளியிட்டனர். இக்கூற்றுக்கள் அவ்வளவு எளிதாக நம்பத்தகுந்தாகவும் இல்லை.
ஆள்கடத்துதல், சித்திரவதை செய்தல், நீதிக்குப்புறம்பான கொலைகள் அல்லது விசாரணையின்றி மரணதண்டனைகளை விதித்தல் போன்ற மனித உரிமைகளை பெரிதும் அத்துமீறும் செயல்கள் புரிவதில் பாகிஸ்தான் போலீஸ் மற்றும் ரேஞ்சர்கள் ஆகிய இருவருமே பேர்போனவர்கள்.
செவ்வாய்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகை, தண்ணீர் துப்பாக்கி மற்றும் தடியடி பிரயோகம் போன்றவற்றை போலீஸ் மற்றும் துணை இராணுவத்தினர் பயன்படுத்தியது உட்பட்ட அவர்களது மிருகத் தன்மைகளை பற்றி வெளியிடப்பட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆவணப்படுத்தியுள்ளன. இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை பதிவு செய்த, முன்னணி செய்தி ஊடகங்களைச் சார்ந்த மூன்று செய்தியாளர்கள் மீதும் கூட பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலுக்குப் பின்னர், உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான் பாதுகாப்பு படையினரை பாதுகாக்க விரைந்தார். வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தினை "சட்டவிரோத"மானது என முத்திரை குத்தியதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் "அவர்களது உயிரை பணயம் வைத்து பொது மக்களை காப்பாற்றவும், அமைதியை நிலைநாட்டவும் செய்கின்றனர்" என பாராட்டவும் முனைந்தார். "துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று போலீஸும், ரேஞ்சர்களும் மறுத்துவிட்டபோது, துப்பாக்கியை பயன்படுத்தியது யார்?" என கான் கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு சிறு ஆதாரம் கூட இல்லாத நிலையில், PIA ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் சிலரே "துப்பாக்கிச் சூட்டினை நிகழ்த்தியிருக்க வேண்டும்" என "சூழ்நிலை காட்டுவதாக" தெரிவித்தார்.
இத்தகைய பொய்கள், செவ்வாய்கிழமை வெளிநடப்பினை மிருகத்தனமான ஒடுக்க உயர் மட்டத்திலிருந்து ஆணையிடப்பட்டது மற்றும் அதில் அரசாங்கத்தின் சொந்த பாத்திரத்தை மூடிமறைப்பதை நோக்கமாக கொண்டவை. திங்கட்கிழமை மாலையில், ஷெரீப், அடுத்த நாள் தொடங்கவிருந்த தனியார்மயமாக்க-எதிர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தடைசெய்ய அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை செயல்படுத்தினார் அது அரசாங்கத்தின் வன்முறையுடன்கூடிய அடக்குமுறைக்கு ஒரு சட்டபூர்வ மூடுதிரையாகும்.
திங்கட்கிழமை முன்னதாகவே, PIA தனியார்மயமாக்கம் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது என்ற அரசாங்கத்தின் கடைசி நிமிட போலியான அறிவிப்பினை ஊழியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான கண்டன அச்சுறுத்தல்களை மத்திய அரசாங்கம் தொடர்ந்து விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், PIA தலைவர் பதவி விலகிக் கொண்டார். மேலும், கராச்சி அமைந்துள்ள சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான மாகாண அரசாங்கம், இறந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு இழப்பீட்டினை அறிவித்து உள்ளது.
சிந்து மாகாண முதலமைச்சர் சையத் குயாம் அலி ஷா தொழிலாளர்களின் குறைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்லவிருப்பதாக தெரிவித்தார். ஆனால், PIA. கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் உடனான கூட்டத்தினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதில் இருந்த தனது ஆதரவான போக்கை மூடிமறைக்க அவர் சிறிதும் முயலவில்லை, மேலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது, "நமது நாடு, அதன் மதிப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு நன்மையானது அல்ல" எனவும் தெரிவித்தார். அவர் ஷெரீபை "நல்ல முன்மாதிரி"யானவர் என பாராட்டியதுடன், நியாயமான தொழிலாளர் குறைகளை பிரதமர் நிவர்த்தி செய்வார் என தானே நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அறிவித்தார்.
PIA மற்றும் அரசாங்கம் நடத்தும் மற்ற மூன்று நிறுவனங்கள் ஜுன் மாதத்திலும், இன்னும் ஆறு நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதியிலுமாக தனியார்மயமாக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு ஷெரீப் அரசாங்கம் உறுதியளித்து உள்ளது. இவைகளில், தொழிலாளர்களின் எதிர்ப்பால் வெகுகாலமாக தனியார்மயமாக்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வந்த, உயர் ரக இலக்கு நிறுவனங்களான பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் மற்றும் நீர் மற்றும் மின்சார அபிவிருத்தி ஆணையத்தைச் (WAPDA) சார்ந்த மின்சார விநியோக நிறுவனங்கள் போன்றவை அடங்கும்.
PIA ஊழியர்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் சர்வதேச செய்தி ஊடகங்களில் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. PIA ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் விளைவாக அரசாங்கத்திற்கு சொந்தமான மற்ற நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதை தடுக்கவும் எதிர்ப்புக் குரல்கள் எழும்பும் என "பகுப்பாய்வாளர்கள்", லண்டனில் வெளிவரும் ஃபினான்ஸியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆணையின்படி, பல கடுமையான பொருளாதார "சீர்திருத்தங்களில்" தனியார்மயமாக்கங்களும் ஒன்றாக இருக்கின்றது. 2013 முதல், மின்சார மானியங்களில் கடும் குறைப்புக்களைத் திணித்தது, வரி அதிகரிப்பு, மற்றும் பிற கடும் சிக்கன நடவடிக்கைகளின் மூலம் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) 8.4 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக குறைக்கப்பட்டது. அரசாங்கத்தின் அபிவிருத்தி வரவு செலவுத் திட்டங்களில் 27 சதவீதத்தைக் குறைக்க சர்வதேச நாணய நிதியம் தற்போது வலியுறுத்தி வருகிறது.
தொழிலாள வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் மீதான இதன் தாக்கம் அழிவுகரமாக உள்ளது. ஆசிரியர்கள் முதல் நகராட்சி மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் வரையிலான தொழிலாளர் வர்க்க பிரிவினர் அவர்களது வழங்கப்படாத சம்பள தொகையினை அரசாங்கம் திரும்பித்தரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து சாலை மறியல்கள் அல்லது வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்தாமல் ஒரு வாரம் கூட கடக்கவில்லை. இவ்வாறாக சமூக எதிர்ப்பு வளர்ந்துவரும் சூழலில், சமீபத்திய வருடங்களில் அரசாங்கம் அதன் தனியார்மயமாக்கத் திட்டங்களை பின்பக்கமாக ஒதுக்கிவைக்கும் நிலைக்கே தள்ளப்பட்டது.
இருப்பினும், அரசாங்கம் தனது தனியார்மயமாக்கத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் சதி செய்து கொண்டிருக்கிறது என்பதையும் மற்றும் எதேனும் அரசாங்க நிறுவனங்கள், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டால், அத்துடன் சேர்ந்து வேலை மற்றும் சம்பளத்தின் மீதும் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்பதையும் தொழிலாளர்கள் நன்கு அறிந்துள்ளனர். தனியார்மயமாக்கத்தின் விளைவு முக்கிய பொதுப் பணிகளின் குறைப்பில் போய் முடியும் என்பதிலும் அவர்கள் விழிப்புடன் இருக்கின்றனர். நீர் மற்றும் மின்சார அபிவிருத்தி ஆணைய (WAPDA) தொழிலாளர்கள் தங்களது தனியார்மயமாக்க-எதிர்ப்பு பிரச்சாரங்களின்போது, கராச்சி மின்சார விநியோக நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்ட பின்பு அதன் மின்சார உற்பத்தித் திறனை குறைத்துக்கொண்டது, மேலும் அதன் காரணமாக தனது இலாப விகிதத்தை அதிகரிக்கவேண்டி கிராமப்புற மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்கான மின்சாரத்தைக்கூட அவர்களுக்கு விநியோகிக்க மறுக்கின்றது என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றனர்.
அக்டோபரில் சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தான் அரசாங்கம் அது கோரும் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் எதிர்கொள்ளும் "அரசியல் தடைகள்" மற்றும் "சட்ட சவால்களை" ஏற்றுக்கொண்டது. எனினும், கடன் இலக்குகள், காலம் கடந்தவைகளாக இருக்கின்றன என அது ஏற்கனவே முறையிட்டுள்ளது. டிசம்பரில், PIA தனியாருக்குச் சொந்தமாவதை தடைசெய்யும் ஒரு சட்டத்தினை ஒரு அவசரகால ஆணையைப் பயன்படுத்தி அரசாங்கம் செல்லாததாக்கியது, அதே மாதத்தில் பாராளுமன்றத்தில் அதற்கான சட்ட மசோதாவையும் இயற்றியது.
தொழிலதிபர்களின் குடும்பத்தின் வாரிசான ஷெரீப், சர்வாதிகாரி தளபதி ஜியா உல் ஹக்கின் நம்பிக்கைக்கு உரியவராக அரசியலுக்குள் நுழைந்தார். முந்தைய பாகிஸ்தான் மக்கள் கட்சி, சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்களை திணித்தல், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கிளர்ச்சி எதிர்ப்பு போருக்கு அளித்த ஆதரவு, பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தது ஆகியவற்றினால் அக்கட்சி மீதான பொது மக்களின் சீற்றத்தை பயன்படுத்தியும், முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்தும் ஷெரீப் ஆட்சிக்கு வந்தார். அமெரிக்க நெருக்குதலின் கீழ் ஆப்கான் போருக்கு இன்னும் அதிகம் துணைபுரியும் வகையில், அவரது அரசாங்கம் இராணுவத்திற்கு வடக்கு வஜ்ரிஸ்தானை ஆக்கிரமிக்க ஆணையிட்டது, மேலும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அதிகப்படியான அதிகாரத்தையும் இராணுவத்திற்கு விட்டுக்கொடுத்தது.
உலகெங்கிலும் நடப்பது போன்று, முதலாளித்துவ உயர்மட்டத்தினர் ஜனநாயக உரிமைகள் மீதான கடும் தாக்குதல்கள், மற்றும் அவர்களது முக்கிய இலக்கான தொழிலாள வர்க்கத்தினரை ஒடுக்க ஒரு கருவியை உருவாக்குவது போன்றவற்றை நியாயப்படுத்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற வாசகத்தை பயன்படுத்துகின்றனர். கூடுதலாக, டிசம்பர் 2014ல் பெஷாவர் பள்ளியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் கொடுமையைத் தொடர்ந்து, இராணுவ நீதிமன்றங்களில் பொது மக்களை விசாரணை செய்வது உட்பட உரிமையளித்தது, மேலும் இராணுவத்திற்கு பெரும்வாரியான புதிய அதிகாரங்களையும் அளித்து, ஷெரீப் அரசாங்கம் சிறப்பு அதிகாரங்கள் கொண்ட ஆயுதம் தரித்த துணை இராணுவ படையினரையும் பணியமர்த்தியது.
ஒரு டிசம்பர் ராய்ட்டர்ஸ் அறிக்கை, புதிய பயங்கரவாத சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்ட 100, 000 பேரில், 2000 பேர் மட்டுமே பாகிஸ்தான் தாலிபான் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் மற்ற அனைவரும் கிளர்ச்சிக் குழுக்களைச் சார்ந்தவர்களே எனத் தெரிவித்தது. கராச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முத்தாஹிதா குவாமி இயக்கம் மற்றும் பிற நடைமுறைக் கட்சிகள், அவர்களது ஆர்வலர்களை "பயங்கரவாத எதிர்ப்பு" நடவடிக்கையில் ஈடுபடுத்திட இராணுவத்தினரால் குறிவைக்கப்படுவதாக முறையீடு செய்து உள்ளனர்.
திங்கட்கிழமை நடக்கவிருந்த PIA ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை குற்றத்தன்மை உடையதாக்கியது மற்றும் செவ்வாய்கிழமை நடந்த கொலைகாரத் தாக்குதல் எடுத்துக்காட்டுவது என்னவென்றால் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைப்படியான சமூக கெடுநோக்குகளுக்கு தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்க பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் கோழைத்தனமான முதலாளித்துவ மேற்தட்டினர், இரத்தக்களரியான வன்முறையை பயன்படுத்த, அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பக்கமும் திரும்பியுள்ளனர்.