Print Version|Feedback
North Korean satellite launch heightens US-China tensions
வட கொரியா செயற்கைக்கோள் அனுப்பியமை அமெரிக்க-சீனப் பதட்டங்களை உயர்த்துகிறது
By Peter Symonds
8 February 2016
சீனா வெளிப்படுத்தி இருந்த கவலை உட்பட, சர்வதேச எதிர்ப்பைப் புறக்கணித்து வட கொரியா திட்டமிட்டவாறு அதன் செயற்கைக்கோள் அனுப்புதலை முன்னெடுத்துச் சென்றது. அந்த ஏவுதலை உடனடியாக அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகள் கண்டித்தன. வட கொரியா அதன் நான்காவது அணுகுண்டு பரிசோதனை நடத்தி ஒரே மாதத்திற்குப் பின்னர் வந்துள்ள இச்சம்பவம் வட கிழக்கு ஆசியாவில் பதட்டங்களைத் தீவிரப்படுத்தும்.
முன்னெடுப்பதென்ற பியொங்யாங்கின் முடிவு அதன் கூட்டாளி சீனாவின் முகத்தில் அறைவதாக உள்ளது, அது இந்த செயற்கைக்கோள் ஏவுதலை நிறுத்துவதற்கு வட கொரியாவின் தலைமையை இணங்கும்படி செய்ய கடந்த வாரம் தான் முன்னாள் தூதர் Wu Dawei ஐ வட கொரியாவிற்கு அனுப்பியது. அந்த ஆட்சி Wu ஐ நிராகரித்தது மட்டுமின்றி, மாறாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த திட்டமிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த செயற்கைக்கோளைப் புவிவட்டப்பாதைக்குள் அனுப்பியது. ஏற்கனவே பெய்ஜிங், பியொங்யாங் மீது கடுமையான புதிய தடையாணைகளை விதிக்க வாஷிங்டனின் தீவிர அழுத்தத்தின் கீழ் உள்ளது, ஆனால் அது வட கொரியாவில் ஒரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்திவிடுமென தயங்குகிறது.
அணுஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வது என வட கொரியாவின் இந்த முயற்சிகளில் எதுவும் முற்போக்கானது கிடையாது. அதன் சிறிய, அடிப்படை வசதிகளும் குறைந்த அணுஆயுத கிடங்கு மற்றும் அதேயளவிற்கு ஆரம்ப நிலையில் இருக்கும் ராக்கெட் தொழில்நுட்பம் அமெரிக்காவிற்கு எதிரான பாதுகாப்பு ஆகாது, வட கொரியாவின் இராணுவ மற்றும் தொழில்துறை ஆற்றல்களை விட பல மடங்கு அதிகமான அமெரிக்காவினால் அதை நிர்மூலமாக்கிவிட முடியும். அதற்கும் மேலாக பியொங்யாங்கின் தேசியவாத வீராவேச வாய்சவடால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், ஆசியாவில் வாஷிங்டன் அதன் இராணுவக் கட்டமைப்பைத் தீவிரப்படுத்துவதற்கு ஒரு வசதியான சாக்குபோக்கை வழங்க உதவுகிறது.
அமெரிக்காவும் ஜப்பானும் ஓர் அவசர ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கவும் மற்றும் வட கொரியாவைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்திற்கு அழுத்தமளிக்கவும் மற்றும் புதிய தடையாணைகளை முன்னறிவிப்பதற்கும் அந்த செயற்கைகோள் ஏவுதலைப் பற்றிக் கொண்டன. அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சுசன் ரைஸ் பியொங்யாங்கின் நடவடிக்கைகளை "ஸ்திரமின்மைக்கு உட்படுத்துபவையாக மற்றும் ஆத்திரமூட்டுபவையாக" முத்திரைக் குத்தியதுடன், அதன் தொலைதூர ஏவுகணை தொழில்நுட்பத்தைச் சோதனை செய்வதற்குத் தடைவிதித்த முந்தைய ஐ.நா. தீர்மானங்களை வட கொரியா மீறிவிட்டதாக அறிவித்தார்.
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அமெரிக்க கூட்டாளிகள் அனைவரும் அந்த கண்டனக் குரலில் இணைந்து கொண்டதுடன், அந்த ஏவுதல் "அச்சுறுத்தலை" முன்னிறுத்துவதாக பூதாகரமாக்கின. பிரான்சின் ஐ.நா. தூதர் Francois Delattre, சர்வதேச ஆயுதபரவல் தடை ஒப்பந்தமுறையின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் ஒரு "மூர்க்கத்தனமான ஆத்திரமூட்டலாக" வட கொரியாவைக் குற்றஞ்சாட்டினார். பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் பிலிப் ஹம்மாண்ட் நேற்று கூறுகையில் அவரது ஜப்பானிய சம்பலத்துடன் அவர் பேசியிருப்பதாகவும், பலமான ஐ.நா. நடவடிக்கை அவசியப்படுவதை இருவரும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒரு செயற்கைக்கோள் செலுத்த அவசியப்படும் ராக்கெட் தொழில்நுட்பம் தொலைதூரம் பாயும் ஏவுகணைகளை அபிவிருத்தி செய்ய உதவும் என்றபோதினும், அமெரிக்காவும் சர்வதேச ஊடகங்களும் வழமையாக அவ்விரண்டையும் ஒன்றோடொன்றை இணைத்துவிடுகின்றன. எவ்வாறிருப்பினும், ஆயுதப்பரவல் தடை குறித்து ஆராயும் ஜேம்ஸ் மார்ட்டீன் மையத்தின் மெலிஸ்சா ஹன்ஹாம் வாஷிங்டன் போஸ்டிற்கு விவரிக்கையில், “இந்த மாதிரியான ராக்கெட் விண்வெளி ஏவுகலமாக (space launch vehicle) வடிவமைக்கப்படுகின்றன. அதை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் தொலைதூர ஏவுகணையாக நாம் பாவிப்பதற்கு முன்னதாக, அதில் பல மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்,” என்றார்.
கடந்த காலத்தைப் போலவே, பெய்ஜிங் மீதான அழுத்தத்தைத் தீவிரப்படுத்த வாஷிங்டன் பியொங்யாங்கின் நடவடிக்கைகளைச் சுரண்டியுள்ளது. வட கொரியாவின் நான்காவது அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, வட கொரிய பொருளாதாரத்தை முடமாக்கும் வகையில் எண்ணெய் வழங்குவதன் மீதான தடைகள் உட்பட அதன் மீது நடவடிக்கை எடுக்க கோர சீனாவிற்கு விஜயம் செய்திருந்தார். அத்தகைய தடையாணைகள் அந்த ஆட்சியின் பொறிவைத் தூண்டிவிட்டு, பியொங்யாங்கில் அமெரிக்க-ஆதரவிலான அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் சீனாவின் பாதுகாப்பிற்குக் குழிபறிக்கும் என்பதால் பெய்ஜிங் அவற்றை நிராகரிக்கிறது.
கடந்த வெள்ளியன்று, ஜனாதிபதி பராக் ஒபாமா வட கொரியாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மீண்டும் வலியுறுத்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வட கொரியா செயற்கைக்கோள் ஏவியதை அடுத்து, சீனா பியொங்யாங்கின் நடவடிக்கைக்காக "வருந்துவதாக" குறிப்பிட்டதுடன், எல்லா விதத்திலும் நிதானமாக இருக்குமாறும், பேரம்பேசலுக்குத் திரும்புமாறும் முறையிட்டது. பெய்ஜிங் ஏற்பாடு செய்திருந்த ஆறு-தரப்பு பேச்சுவார்த்தைகள், வட கொரியாவின் அணுஆயுத கிடங்குகளைக் கடுமையாக சோதனையிட அமெரிக்கா ஒருதலைபட்சமாக கோரிய பின்னர் 2009 இல் முறிந்து போனது.
பியொங்யாங்கின் அணுகுண்டு சோதனைகள் மற்றும் ராக்கெட் ஏவுதல்கள், 1953 கொரிய போர் முடிந்ததற்குப் பின்னரில் இருந்து அந்நாட்டின் மீது கொண்டு வரப்பட்டுள்ள வாஷிங்டனின் நீடித்த தடைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்கு வாஷிங்டனை நிர்பந்திப்பதற்கான அதன் பெரும்பிரயத்தன மற்றும் பயனற்ற முயற்சியின் பெரிய நடவடிக்கையாகும். வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை முன்கூட்டியே கலைந்தால் ஒழிய அதனுடன் பேச்சுவார்த்தைக்கு வர அதற்கு எந்த விருப்பமும் இல்லை என்பதை ஒபாமா நிர்வாகம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
புதிய ஐ.நா. தடையாணைகள் மீது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே இதுவரையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இருப்பினும் அமெரிக்க காங்கிரஸ் சபை தற்போது ஒருதலைபட்சமான சட்டமசோதா மீது வேலை செய்து வருகிறது, அது வட கொரியாவை மட்டுமல்ல, மாறாக சீனாவையும் பாதிக்கும். ஈரான் மீது திணிக்கப்பட்ட முடமாக்கும் அமெரிக்க தடையாணைகளின் மாதிரியில், இந்த நடவடிக்கைகள் வட கொரிய நிறுவனங்களையும் தனிநபர்களையும், அத்துடன் அவற்றோடு வியாபாரம் செய்யும் எந்தவொரு நாட்டையும் தண்டிக்கும். சீனா நீண்டகாலமாகவே வட கொரியாவின் வர்த்தக பங்காளி என்ற நிலையில், அதுபோன்ற தடையாணைகள் சீன நிறுவனங்களை அமெரிக்காவுடன் வியாபாரம் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் அவற்றை பலமாக வீழ்ச்சிக்கு உட்படுத்தும்.
மிகவும் அச்சுறுத்தும் வகையில், அமெரிக்கா அதன் தீவிரப்படுத்திவரும் இராணுவ விரிவாக்கம் மற்றும் அதன் இந்தோ-பசிபிக் பிராந்திய மறுகட்டமைப்பை நியாயப்படுத்த, இச்சமீபத்திய அணுகுண்டு சோதனை மற்றும் ராக்கெட் செலுத்தியமையைச் சுரண்டி வருகிறது. இந்த கட்டமைப்பானது, சீனாவை அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு அடிபணிய செய்ய மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பேண நோக்கம் கொண்ட ஒபாமா நிர்வாகத்தினது "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" பாகமாகும்.
கடந்த மாத அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து, பெண்டகன் அணுகுண்டு ஏந்தும் B-52 மூலோபாய போர்விமானம் ஒன்றை தென் கொரியாவுக்கு அனுப்பி, அந்நாட்டில் “மூலோபாய இராணுவ உடைமைகளை” நிலைநிறுத்த தென் கொரிய அதிகாரிகளுடன் விவாதங்கள் நடந்து வருவதைச் சுட்டிக்காட்டியது. அத்தகைய இராணுவ உடைமைகள்—அணுகுண்டு தாக்குதலுக்குத் தகைமை கொண்ட போர்விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள்—வட கொரியாவிற்கு மட்டுமல்ல, அண்டையில் உள்ள சீனாவிற்கும் ஓர் இராணுவ அச்சுறுத்தலாகும்.
நேற்றைய செயற்கைக்கோள் ஏவுதலை அடுத்து, அமெரிக்காவும் தென் கொரியாவும் "கூடிய விரைவில்" தென் கொரியாவில் அதிஉயர் பிராந்திய பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை (Terminal High Altitude Area Defence - THAAD) நிலைநிறுத்துவதன் மீது உத்தியோகப்பூர்வ விவாதங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தன. இந்த நிறுவுதல் ஜப்பானில் நிலைநிறுத்தப்படும் இரண்டு பீரங்கிப்படைகளுடனும், அத்துடன் ஏனைய ஏவுகணை-எதிர்ப்பு அமைப்புமுறைகளுடனும் ஒருங்கிணைக்கப்படும். இந்த THAAD அமைப்பு உள்வரும் தொலைதூர ஏவுகணைகளைக் குறுக்கிட்டுத் தடுத்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
தென் கொரியா அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவைக் காயப்படுத்த வேண்டாம் என்பதற்காக THAAD அமைப்பை நிறுவுவதற்கான அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்த்து வந்தது. வட கிழக்கு ஆசியாவில் THAAD ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்துவதென்பது சீனாவுடனான ஓர் அணுஆயுத போர் சண்டைக்கான பெண்டகன் திட்டங்களின் பாகமாகும். தற்காப்பு குணாம்சத்திலிருந்து வெகுதூரம் விலகி, இந்த தொலைதூர ஏவுகணை-தடுப்பு அமைப்புகள் அமெரிக்காவால் முதலில் அணுஆயுத தாக்குதல் நடத்தப்படும் ஒரு சம்பவத்தில் பதிலடி கொடுப்பதற்கான சீனாவின் ஆற்றலைச் செயலிழக்கச் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் துணை வெளியுறவுத்துறை மந்திரி Liu Zhenmin நேற்று கூறுகையில் அந்த THAAD அறிவிப்பைக் குறித்து சீனா ஆழமாக கவலை கொண்டிருப்பதாக தெரிவித்தார். அமெரிக்க-தென் கொரிய கூட்டறிக்கை குறிப்பிடுகையில் THAAD ஏவுகணை அமைப்பு, நிறுவப்பட்டால், வட கொரியாவிற்கு எதிராக மட்டுமே இலக்கில் வைக்கப்படும் என்று குறிப்பிட்டது. ஆனால் அத்தகைய உறுதிமொழிகள் அர்த்தமற்றவை. கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்பட்டால், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு இடையிலான நீண்டகால இராணுவ நடவடிக்கை திட்ட (OPLAN) ஏற்பாடுகளின் கீழ், THAAD ஏவுகணை அமைப்பு உட்பட தென் கொரிய இராணுவத்தின் மீது அமெரிக்கா அதன் முழு செயல்பாட்டு கட்டுப்பாட்டை ஏற்கும்.
2013 இல் வட கொரியாவின் மூன்றாவது அணுகுண்டு சோதனைக்குப் பின்னர், அமெரிக்கா கொரிய தீபகற்பத்தின் மீது படிப்படியாகப் பதட்டங்களைத் தீவிரப்படுத்தியது. அந்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் வருடாந்தர கூட்டு இராணுவ ஒத்திகைகளின் போது, பெண்டகன் பியொங்யாங்கிற்கு, மற்றும் சீனாவிற்கும் தான், ஓர் அச்சுறுத்தலான எச்சரிக்கை அனுப்புவதற்காக அணுகுண்டு ஏந்தக்கூடிய B-52 மற்றும் B-2 குண்டுவீசிகளை தென் கொரியாவிற்கு அனுப்பியது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர், ஆசியாவில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகமாக வளர்ந்துள்ளது மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியமும் அதிக பதட்டத்தில் உள்ளது. இது அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு போராக கட்டுப்பாட்டை இழந்து வடிவெடுக்கக்கூடிய ஒரு மோதலை விரைவுபடுத்தும் ஒரு சம்பவத்தின் அல்லது தற்செயலான நடவடிக்கையின் அபாயத்தை கொரிய தீபகற்பத்தில் உயர்த்தி வருகிறது.