Print Version|Feedback
Japanese bond rate goes negative as bank shares tumble
வங்கி பங்குகள் வீழ்கையில், ஜப்பானிய பத்திரங்களின் வட்டிவிகிதம் எதிர்மறையாக செல்கிறது
By Nick Beams
10 February 2016
ஜப்பானிய 10 ஆண்டுகால அரசு பங்குப்பத்திரங்கள் மீதான இலாபங்கள் வரலாற்றில் முதல்முறையாக எதிர்மறையாக திரும்பியுள்ளன, இதற்கிடையே நிதியியல் சந்தைகளில் நிகழ்ந்துவரும் கொந்தளிப்பானது உலகளாவிய வங்கிகள் மீதான குறிப்பிடத்தக்க விளைவுகளுடன் விரிவடைந்து வருகிறது என்ற கவலைகளும் அதிகரித்துள்ளன.
உலகெங்கிலும் எதிர்மறை வட்டிவிகிதங்கள் பரவி வருகையில், ஜப்பான் அதன் 10 ஆண்டுகால கடன் மீது பூஜ்ஜியத்திற்குக் குறைவான கடன் விகிதத்தைக் கொண்ட முதல் பிரதான நாடாக மாறியுள்ளது. உலகளவில் சுமார் 7 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பிலான அரசு பத்திரங்கள் எதிர்மறை பகுதிக்குள் இருப்பதாக இப்போது மதிப்பிடப்படுகிறது. இதன் அர்த்தம், முதலீட்டாளர்கள் அவற்றை தற்போதைய விலையில் வாங்கி, அவற்றின் காலக்கேடு முடியும் வரையில் வைத்திருந்தால், அவர்கள் இழப்பைச் சந்திப்பார்கள் என்பதாகும்.
அரசாங்க பத்திரங்கள் வாங்குவதற்கான ஓட்டம், நிதியியல் அமைப்புமுறை பற்றிய முதலீட்டாளர்களின் கவலைகளுக்கு மற்றும் உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சங்களுக்கு ஓர் அறிகுறியும் அடையாளமும் ஆகும். இது அவற்றின் விலைகளை உயர்த்தி, அவற்றிலிருந்து கிடைக்கும் இலாபங்களைக் குறைகின்றன, அதாவது இவற்றிற்கு இடையிலான தொடர்பு எதிரெதிர் திசையில் இருக்கும். ஜப்பானிய பத்திரங்களின் இலாபங்கள் பூஜ்ஜியத்திற்குக் கீழே சரிந்துள்ள நிலையில், அமெரிக்க 10 ஆண்டுகால கருவூலப் பத்திரங்களின் இலாபங்கள் தொடர்ந்து 2 சதவீத வரம்பிற்கும் மிகக் குறைவாக தங்கியுள்ளது, இது மந்தநிலையின் ஓர் அறிகுறியாக கருதப்படுகிறது.
இலாப வரைவுகோடு (yield curve) என்றழைக்கப்படுவது கிடைமட்டமாகி வருவதுடன், நீண்டகால பத்திரங்கள் மீதான இலாபங்கள், 2 ஆண்டுகால பத்திரங்களில் இருந்து கிடைக்கும் இலாபங்களை விட மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது, இதுவும் மந்தநிலையின் ஓர் அறிகுறியாக கருதப்படுகிறது. இவ்விரண்டினது இலாபங்களுக்கு இடையிலான இடைவெளி ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளில் அதன் குறைந்தபட்ச மட்டங்களில் உள்ளது.
பேங்க் ஆஃப் ஜப்பான், புதிய வைப்புதொகைகளுக்கான வட்டிவிகிதங்களை எதிர்மறை பகுதிக்குள் நகர்த்த கடந்த மாதம் முடிவெடுத்தது, அதனுடன் சேர்ந்து அதே திசையில் கூடுதலாக நகர்வுகள் அவசியமென கருதினால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய வங்கி ஆளுனர் ஹருஹிகோ கரோடா அறிக்கைகள் வெளியிட்டார் இவற்றை தொடர்ந்து ஜப்பானிய பத்திரங்கள் மீதான இலாபம் சரிந்தது.
இந்த முடிவை 5-4 என்ற வாக்குகளில் ஒப்புதல் வழங்கிய பேங்க் ஆஃப் ஜப்பானின் நிர்வாகக் குழு அதன் விவாத குறிப்புரையில், இது உலகெங்கிலும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் நடவடிக்கையைத் தொடங்கி வைக்குமென குழு அங்கத்தவர்களின் கவலையைக் குறிப்பிட்டிருந்தது.
“முன்னோக்கி பார்க்கையில், எதிர்மறை பகுதியில் வட்டி விகித வெட்டுக்களை நிதியியல் சந்தைகள் கூடுதலாக எதிர்பார்க்கக்கூடும், இது நிதியியல் அமைப்புகள் மற்றும் சேமிப்பாளர்களிடையே குழப்பம் மற்றும் பயவுணர்வு ஏற்பட இட்டுச் செல்லுமென நான் கவலை கொள்கிறேன்,” என்று அக்குழு அங்கத்தவர்களில் ஒருவர் எழுதினார்.
அது தான் நடந்துள்ளது போல் தோன்றுகின்றது. வங்கி பங்குகள் சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளுக்கான முக்கிய பிரச்சினை என்னவென்றால் அவற்றின் வியாபார மாதிரி, பகுதியாக, அவை கடன் வாங்கும் வட்டிவிகிதத்திற்கும் மற்றும் அவை வழங்கும் கடனுக்கு விதிக்கக்கூடிய வட்டிவிகிதத்திற்கும் இடையிலான வித்தியாசத்திலிருந்து அவை எந்தளவிற்கு இலாபமீட்டுகின்றன என்பதன் மீது தங்கியுள்ளது. வட்டி விகித குறைப்புகள் இந்த இலாப வரம்பைக் குறைக்கின்றன.
அதன் விளைவாக, புத்தாண்டில் தொடங்கிய உலகளாவிய பங்குச்சந்தை விற்றுத்தள்ளலில் வங்கித்துறை பங்குகள் கடுமையாக அடிவாங்கியுள்ளன. பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் மோர்கன் ஸ்டான்லியின் பங்குகள், இரண்டு மிகப்பெரிய இழப்பாளர்களாக, முறையே 27 மற்றும் 28 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன.
வட்டி விகிதங்களை உயர்த்துவதென டிசம்பரில் பெடரல் எடுத்த முடிவு, அது மிகவும் மெதுமெதுவாக உயர்த்தப்படுவதாக இருந்தாலும், வங்கி இலாபங்களை உயர்த்துவதற்கு உதவும் வகையில் வழமையான வட்டி விகித முறைக்குத் திரும்புவதற்கான ஒரு நகர்வின் தொடக்கமாக கருதப்பட்டது. அது ஏனென்றால் அவை வாங்கும் வட்டி விகிதத்திற்கும் அவை வழங்கும் கடன்களுக்கான இலாப விகிதத்திற்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கும்.
ஆனால் இப்போது அடுத்த வட்டிவிகித உயர்வு மார்ச் மாதம் இருக்காதென பரவலாக கருதபடுகிறது, அத்துடன் பெடரல் இந்தாண்டில் ஏதேனும் அடுத்த உயர்வைச் செய்யுமா என்பதிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன.
ஆகவே, பெடரல் தலைமை பெண்மணி ஜெனெட் யெலென் இன்றும் நாளையும் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் அவரது அரையாண்டு விளக்கவுரையை வழங்கும் போது நிதியியல் சந்தைகளின் எல்லா பார்வைகளும் அவர் மீதே இருக்கும். பெடரல் அதன் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் வட்டி விகிதங்களை ஆராய்ந்து முடிவெடுக்கும் என்று அவர் கூறினாலும், அதுவும் குழப்பத்தையே உண்டாக்கும் என்ற மனோபாவமும் பரவலாக உள்ளது.
அதிகரித்துவரும் உலகளாவிய வங்கியியல் மற்றும் நிதியியல் சீற்றத்தின் பார்வையில் மிகப்பெரிய ஜேர்மன் வங்கியான Deutsche Bank சிக்கியுள்ளது. முதலீட்டாளர்களுக்கான அதன் கடமைப்பாடுகளை வழங்குவதில் அதன் தகைமை குறித்த மற்றும் அதன் ஸ்திரப்பாடு குறித்த அச்சங்களும், அத்துடன் போதியளவில் அதனிடம் மூலதன அடித்தளம் இருக்கிறதா என்பதன் மீதான நீண்டகால கவலைகளும் சேர்ந்து, அதன் பங்கு விலைகளை வீழ்ச்சிக்கு அனுப்பியுள்ளது. ஒப்பீட்டளவில் அதன் முதலீட்டாளர்கள் அது வெளியிட்டுள்ள அபாயகரமான பத்திர வகைகளை வைத்திருக்கிறார்கள்.
அந்த வங்கியின் பங்குகள் நேற்று 4.7 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து, இப்போது இந்தாண்டு ஆரம்பித்ததற்குப் பின்னரில் இருந்து 46 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கும் அதிகமான காலத்தில், அவை 58 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. 2015 ஐ பொறுத்த வரையில், அந்த வங்கி 6.8 பில்லியன் யூரோ இழப்பை அறிவித்தது. சுவிஸ் வங்கியான Credit Suisse இன் பங்குகளும் வேகமாக சரிந்து வருகின்றன, அவை செவ்வாயன்று 7.7 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.
Deutsche Bank இன் பலமான மூலதனம் மற்றும் அபாய நிலைமையைப் பொறுத்த வரையில் "முற்றிலும் திடமாக" இருப்பதாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்குமாறு Deutsche Bank தலைமை நிர்வாகி ஜோன் க்ரெயன் பணியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார், மேலும் “சந்தைகளின் சமீபத்திய கவலைக்குரிய விடயமாக” உள்ள அபாயகரமான பத்திரங்கள் குறித்து குறிப்பிடுகையில் அதை வைத்திருப்பவர்களுக்கு கூப்பன்களை வங்கி வழங்குமென்றும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள இன் பக்கத்திலிருந்து ஓர் அசாதாரண நடவடிக்கை வந்தது. “Deutsche Bank குறித்து" அவருக்கு "எந்த கவலையும் இல்லை" என்று அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அத்தகைய அறிக்கைகள் கவலைகளைப் போக்குகிறதோ இல்லையோ, ஆனால் வெளிப்படையான விடயம் என்னவென்றால் அனைத்தும் "திடமாக" இருக்கிறதென்றால், இம்மாதிரியான அறிக்கைகளை வெளியிட வேண்டிய அவசியமே இல்லையே என்பது தான்.
Deutsche Bank பத்திரங்கள் மீதான திருப்பி செலுத்தவியலா கடன்களுக்கான காப்பீடுகள் (Credit default swaps), இவை சாத்தியமான இழப்புகளை மூடிமறைக்க பயன்படுத்தப்படும் ஒரு நிதியியல் வழிமுறையாகும். 2008-2009 நிதியியல் நெருக்கடியின் போது எந்தவொரு நேரத்திலும் இருந்ததை விட அதிக அபாயகரமாக திவாலாகக்கூடிய நிலையைக் காட்டுகிறது.
சந்தை கவலைகளை தணிக்கும் ஒரு முயற்சியில், அவ்வங்கியின் நிர்வாகம் 50 பில்லியன் யூரோ கடன்களைத் திரும்பவாங்கும் நடவடிக்கையைத் தொடங்க பரிசீலித்து வருவதாக செய்தி வெளியானது. ஆனால் இத்திட்டம் "முதிர்ந்த பத்திரங்களுடன்" மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கும், அபாயகரமான சொத்துக்களுக்குப் பொருந்தாது.
வட்டி விகிதங்கள் எதிர்மறை மட்டங்களுக்கு சரிவது என்பது கொந்தளிப்புக்கான ஒரேயொரு மூலகாரணம் அல்ல. எழுச்சிபெற்றுவரும் சந்தைகளில் முதலீடு செய்துள்ள தனியார் முதலீட்டு நிதியங்களை பற்றி பிரதான வங்கிகளால் விளங்கிக்கொள்ள முடியாமலிருப்பதும் அதனுடன் சேர்ந்துள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சியை முதன்மையாக கொண்ட பண்டங்களது விலை வீழ்ச்சியின் காரணமாக, எழுச்சிபெற்றுவரும் சந்தைகளில் கடன் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
நிதித்துறை விமர்சகர் Robert Gottliebsen திங்களன்று பிசினஸ் ஸ்பெக்டேடர் இல் பதிந்த ஒரு கருத்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “உண்மையில் நிதி அமைப்புகளுக்குள் என்ன நடந்து வருகிறது என்பதைக் குறித்து வங்கிகளுக்கு முழுமையாக தெரியாது. உலகில் எங்கோ ஓரிடத்தில் உள்ள எழுச்சிபெற்றுவரும் ஒரு நாட்டின் கடன்களாலும் மற்றும் எரிசக்தித்துறை கடன்களால் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற சேதியை மட்டும் உலகளாவிய சந்தை தெரிந்து கொள்கின்றன. ஆனால் அந்த இழப்புகள் எந்தளவுக்கு பெரியது, உண்மையில் யார் வசம் அந்த பொதி உள்ளது என்பதெல்லாம் சந்தைக்குத் தெரியாது. தெரியாததைக் குறித்த பயமே, சந்தைகளில் ஓர் அபாயகரமான சக்தியாகும்.”
அவர் தொடர்ந்து குறிப்பிட்டார், என்ன தெரியும் என்றால், எண்ணெய் விலை இன்னும் சரிந்தால் எரிசக்தித்துறை இழப்புகள் மோசமடையும், ஆகவே எழுச்சிபெற்றுவரும் நாட்டு பிரச்சினைகள் பெருகும் என்பது தான் தெரியும்.
உலகளாவிய எண்ணெய் உபரி இருப்பு முன்னர் கருதியதை விடவும் மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் விலைகளின் சமீபத்திய சிறிய உயர்வு அனேகமாக ஒரு "பொய்யான விடியல்" என்று அறிவித்த சர்வதேச எரிசக்தித்துறை அமைப்பின் (IEA) ஓர் அறிக்கையால், எண்ணெய் விலைகள் நேற்று இன்னுமொரு பாதிப்பை அனுபவித்தது.
நிலத்தின்கீழான கற்களில் இருந்து எடுக்கும் எண்ணெய் விலை 6.5 சதவீத அளவுக்குச் சரிந்து $30.78 ஐ எட்டியது, மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் 4.5 சதவீத அளவுக்குச் சரிந்து 28.34 டாலரை எட்டியது.
சர்வதேச எரிசக்தித்துறை அமைப்பினது (IEA) கண்ணோட்டங்கள் பிரதான எண்ணெய் உற்பத்தியாளர்களது நிலைப்பாட்டு முரணாக உள்ளன, இவை இந்தாண்டின் இறுதியில் விலைகள் உயருமென எதிர்பார்ப்பதாக பங்குதாரர்களுக்குத் தெரிவிக்கின்றன. “சந்தை ஏற்கனவே எண்ணெய்யில் நிரம்பி உள்ள நிலையில், இந்த குறுகிய காலத்தில் எண்ணெய் விலைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயருமென காண்பது மிகவும் கடினமானது,” என்று IEA குறிப்பிட்டது.
விலைகள் அவற்றின் தற்போதைய மட்டத்திலேயே இருந்தால், அது விலை உயர்வை எதிர்பார்த்து பந்தயம் கட்டிக் கொண்டிருக்கும் தனியார் முதலீட்டு நிதியங்களுக்கும் மற்றும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் பெரும் பிரச்சினைகளைக் கொண்டு வரும். “என்ன நிலைபாடு எடுப்பது என்பதன் மீதான பதட்டம் உணரக் கூடியதாக உள்ளது,” என்று ஒரு பெரிய வங்கியின் எண்ணெய் வர்த்தகர் ஒருவர் பைனான்சியல் டைம்ஸிற்குத் தெரிவித்தார்.