Print Version|Feedback
A new stage in the global economic breakdown
உலகளாவிய பொருளாதார நிலைமுறிவில் ஒரு புதிய கட்டம்
Nick Beams
9 February 2016
சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த மாதம் ஏறத்தாழ 100 பில்லியன் டாலர் வீழ்ச்சி அடைந்தது, அதற்கு முன்னதாக டிசம்பரில் 108 பில்லியன் டாலர் வீழ்ச்சி அடைந்திருந்தது. அந்நாடு மூலதன வெளியேற்றத்தை அனுபவித்து வருவதுடன், ரென்மின்பியின் (இது யுவான் என்றும் அறியப்படும்) வேகமான வீழ்ச்சியைத் தடுக்கும் போராட்டத்தில் நிதியியல் ஆணையங்கள் தோல்வியடைந்து வருகின்றன என்ற அச்சங்களும் சேர்ந்து கொண்டன. சர்வதேச பங்குச் சந்தைகளில் நடந்துவரும் சரிவுடன் சேர்ந்து, 2008 இல் தொடங்கிய பொருளாதார நிலைமுறிவு ஒரு புதிய மற்றும் வெடிப்பார்ந்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதால் இந்த தகவல்கள் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
முன்பில்லாதளவில் டிசம்பரில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய மாதாந்தர வீழ்ச்சியைத் தொடர்ந்து, இந்த 99.5 பில்லியன் டாலர் வெளியேற்றம், அந்நாட்டின் கையிருப்புகளை மூன்றாண்டுகளுக்குச் சற்று கூடுதலான காலத்தின் மிகக்குறைந்த அளவான $3.23 ட்ரில்லியனாக குறைத்துள்ளது. முதல் பார்வையில் இந்த தொகை சீனாவின் கைகளில் இன்னமும் போதிய கையிருப்பு இருக்கிறது என்ற தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கணக்கீடுகளின்படி, சீனா அதன் செலாவணி மற்றும் நிதியியல் அமைப்புமுறையை வளைந்துகொடுப்புடன் நிர்வகிப்பதை பேணுவதற்கு சுமார் 2.75 ட்ரில்லியன் டாலரைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீனா சிக்கல்களை எதிர்கொள்வதற்கு முன்னதாக வெறும் 500 பில்லியன் டாலரைத் தான் இடைத்தாங்கி தொகையாக அதனிடத்தில் கொண்டுள்ளது, மேலும் இப்போதைய விகிதத்திலேயே பணம் வெள்ளமென வெளியேறினால் இந்த இடைத்தாங்கி தொகையும் வேகமாக தீர்ந்து போகும்.
தற்போதைய இந்த நிலைமையை கடந்த கால் நூற்றாண்டின் பொருளாதார வரலாற்று கட்டமைப்பிற்குள் ஆராயும் போது தான், அதிகரித்துவரும் சீன நிதியியல் பிரச்சினைகளின் உலகளாவிய முக்கியத்துவம் வெளிப்படும். 1991 இன் இறுதியில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகெங்கிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி பிரவாக அலையும் மற்றும் "சுதந்திர சந்தை" கொண்டாட்டங்களும் இருந்தன, அதில் சீன ஆட்சியும் இணைந்திருந்தது.
முதலாளித்துவ மறுபுனருத்தானத்தை ஏற்கனவே தொடங்கியிருந்த நிலையில் மற்றும் ஜூன் 1989 இல் தியானென்மென் சதுக்க படுகொலையில் தொழிலாள வர்க்கத்தின் மீதான இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை ஒழுங்கமைத்திருந்த நிலையில், அந்த ஆட்சி 1992 இன் தொடக்கத்திலிருந்தே முதலாளித்துவ உலக சந்தைக்குள் சீனாவை இன்னும் நேரடியாக ஒருங்கிணைப்பதை மற்றும் அதை உலகளாவிய மூலதனத்திற்கான மலிவு உழைப்பு தளமாக உருவாக்குவதை நோக்கி நகர்ந்திருந்தது.
அதற்கடுத்து வந்த ஆண்டுகளில், இது, "முன்னோக்கி உந்தக்கூடிய" பொருளாதார சுழற்சி (“virtuous” economic circle) என்றழைக்கப்பட்ட ஒன்றை ஏற்படுத்தியது. உலகளாவிய பெருநிறுவனங்களைப் பொறுத்த வரையில், சீனாவைத் திறந்துவிட்டமையும்—ஒரு கட்டத்தில் அங்கே சம்பள விகிதங்கள் அமெரிக்காவின் மட்டங்களை விட பதிமூன்றில் ஒரு பங்காக இருந்தன என்ற நிலையில்—அதன் மலிவு உழைப்பு சக்தியும் அமெரிக்க நிதியியல் சந்தைகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்த இலாபங்கள் மற்றும் சலுகைகளை வழங்கின.
முதலில் உலகளவில் முதன்மை மலிவு உழைப்பு தளமாக ஸ்தாபித்துக் கொண்டு பின்னர் அதன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியில், சீன ஆட்சி அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய சந்தைகளுக்கான ஏற்றுமதிகளிலிருந்து கிடைத்த டாலர்களை அமெரிக்க கருவூலப் பத்திரங்களை வாங்கியதன் மூலமாக அமெரிக்க நிதியியல் அமைப்புமுறைக்குள் மறுசுழற்சி செய்தது. இது ரென்மின்பியின் மதிப்பு உயர்வதைத் தடுத்திருந்தது.
இது, பதிலுக்கு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிவிகிதங்களை 1990களின் பின்பகுதி முழுவதும் மற்றும் புதிய நூற்றாண்டின் முதல் ஆண்டுகளிலும் வரலாற்றுரீதியில் குறைந்த மட்டங்களில் பேணுவதற்கு உதவியது, இது "பிரமாண்ட நிதானத்தன்மையாக" (great moderation) குறிப்பிடப்பட்டது.
குறைந்த வட்டி விகிதங்களோ நிதியியல் சொத்துக்கள், நிலம், வீடு, பங்குகள், இன்னும் இதர பிறவற்றில் ஊக வணிகத்திற்கு எரியூட்டியதுடன் அதுவே அதிகரித்தளவில் அமெரிக்காவில் இலாப திரட்சியின் மேலோங்கிய வடிவமாக மாறியது. நிஜமான கூலி மட்டங்கள் சரிந்த போதும், இந்த நிதியியல் வளர்ச்சி மற்றும் வீட்டு மதிப்புகளின் அதிகரிப்பு அமெரிக்காவில் நுகர்வு செலவினங்களைப் பேணுவதற்கும் உதவின, இது சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களுக்கு சந்தைகளை வழங்கி, மேற்கொண்டு வர்த்தக உபரிகளை உருவாக்கின. பின்னர் அது அமெரிக்க கருவூலப் பத்திரங்களாக மறுசுழற்சி செயயப்பட்டு, வட்டி விகிதங்களைக் குறைத்தது.
இந்த சீட்டுக்கட்டு மாளிகை, வீட்டு அடமானக் கடன் திட்டங்களது நெருக்கடி 2008 இல் அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதியியல் நிலைகுலைவுக்குக் களம் அமைத்த போது உடைந்தது.
அந்நெருக்கடி சீன ஏற்றுமதி வளர்ச்சின் முடிவை எடுத்துரைத்தது. 2008-2009 இல் 20 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளின் இழப்பிற்கு விடையிறுப்பாக, அந்த ஆட்சி அரை ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு நிதி ஊக்கப்பொதி வழங்கலை ஆரம்பித்தது மற்றும் நிதியியல் ஆணையங்கள் ஒரு பரந்த கடன் வழங்கல் விரிவாக்கத்தில் ஈடுபட்டன. இந்நடவடிக்கைகள் கடன்வாங்கிய நிதியின் அடிப்படையில் அமைந்த ஓர் உள்கட்டமைப்பு மற்றும் சொத்து முதலீட்டு வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது.
இது, பதிலுக்கு, எண்ணெய் மற்றும் ஏனைய தொழில்துறை பண்டங்களின் விலைகளை அதிகரித்தது, அது "பண்டங்களின் பெருஞ்சுழற்சி" (commodities supercycle) என்று அறியப்பட்டது. எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் அவற்றின் பண்ட ஏற்றுமதிகளுக்கான அதிகரித்த தேவையிலிருந்து ஆதாயமடைந்த நிலையில், உயர் இலாபங்களை எதிர்பார்த்து நிதியியல் அமைப்புகள் கடன் அடிப்படையிலான திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக பணத்தைப் பாய்ச்சின.
அதேவேளையில், பெடரலும், ஏனைய மத்திய வங்கிகளும், அதனதன் உரிய "பணத்தைப் புழக்கத்தில் விடும்" திட்டங்களின் கீழ், வரலாற்றில் இல்லாதளவில் வட்டி விகிதங்களைக் குறைவாக வைத்ததன் மூலமாகவும் மற்றும் அரசு பத்திரங்கள் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்களை வாங்கி பண ஓட்டத்தை அதிகரித்ததன் மூலமாகவும் வட்டிகுறைவான பணம் தொடர்ந்து உள்ளே பாய்வதை உறுதிப்படுத்தின.
எவ்வாறிருப்பினும் இந்த நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தை திரும்பவும் 2008 க்கு முந்தைய மேலோங்கிய நிலைமைகளுக்குத் கொண்டு வரவில்லை. “மீட்சி" என்பது நன்றாக இரத்தசோகை பிடித்ததைப் போல இருந்தது, அதில் முதலீடு—அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்தில் நிஜமான வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்தியான இது—வரலாற்றளவில் மிகக் குறைந்த மட்டங்களில் இருந்தன, அதேவேளையில் பெருநிறுவனங்களோ ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மற்றும் பங்கு வாங்கிவிற்றல்கள் போன்ற ஊகவணிக நடவடிக்கைகளில் பயன்படுத்த பணத்தைக் கொட்டின.
சீனக் கடன் வழங்கலின் பாரிய விரிவாக்கத்தின் முக்கியத்துவம் உலகளாவிய பொருளாதாரத்தில் வெறுமனே சீனாவின் அதிகரித்த பங்குவகிப்பால் மட்டும் எடுத்துக்காட்டப்படவில்லை, மாறாக அது உருவாக்கிய "பண்டங்களின் பெருஞ்சுழற்சி" என்பது சீனாவைச் சார்ந்திருந்த எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் 2008 க்குப் பின்னர் உலகளாவிய வளர்ச்சியில் சுமார் 40 சதவீத பங்களிப்பை அளித்தன என்ற உண்மையாலும் எடுத்துக்காட்டப்பட்டது.
ஆனால் நெருக்கடியைக் கடந்து வருவதிலிருந்து வெகுதூரம் விலகி, 2008 க்குப் பின்னர் எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் மற்றொரு நிதியியல் மற்றும் பொருளாதார நிலைகுலைவுக்கான நிலைமைகளை மட்டுமே உருவாக்கி உள்ளன.
நியூ யோர்க் டைம்ஸில் கடந்த வாரம் வெளியான ஒரு பகுப்பாய்வு, நிலுவையில் உள்ள கடன்கள்—திரும்பிவாராக் கடன்கள்—பாரியளவில் தேங்கி கிடப்பதைச் சுட்டிக்காட்டியது. இவை ஒட்டுமொத்த வங்கியியல் அமைப்புமுறைக்கும் ஓர் அதிகரித்த அச்சுறுத்தலை முன்னிறுத்தி வருகின்றன. சீனாவில், “தொந்தரவுக்குட்பட்ட கடன்" (troubled credit) 5 ட்ரில்லியன் டாலரை விஞ்சக்கூடுமென மதிப்பிடப்படுகிறது, இது அந்நாட்டின் வருடாந்தர பொருளாதார உற்பத்தியின் பாதிக்குச் சமமாகும்.
அதே கட்டுரையில் மேற்கோளிடப்பட்ட நிதியியல் பகுப்பாய்வாளர் Charlene Chu கருத்துப்படி, சீனாவின் நிதித்துறையினது கடன்கள் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்கள் கடந்த ஏழாண்டுகளுக்கு முன்னர் $9 ட்ரில்லியனாக இருந்ததுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டின் இறுதியில் 30 ட்ரில்லியன் மதிப்பில் இருக்கும். “இந்தளவுக்குக் குறைந்த காலத்தில் இந்தளவிலான அதிக கடன் அதிகரிப்பை உலகம் ஒருபோதும் பார்த்ததில்லை,” என்று அப்பெண்மணி தெரிவித்தார். “அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அண்மித்து உலகின் ஒவ்வொரு சொத்து விலையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தான் சந்தை, சீனாவின் கடன் பிரச்சினைகள் வெடிக்கக்கூடும் என்ற யோசனையால் இந்தளவுக்குப் பதட்டத்துடன் உள்ளது,” என்றார்.
நிலுவையில் உள்ள கடன்களின் நிகழ்வுபோக்கு சீனா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ஐரோப்பாவில் திரும்பவாராக் கடன்களின் அளவு சுமார் 1 ட்ரில்லியன் டாலராக இருக்குமென மதிப்பிடப்படுகிறது, எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் சுமார் 3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிக-கடன் வாங்கியிருப்பதாக கணக்கிடப்படுகிறது.
கடந்த கால் நூற்றாண்டை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும் பிரகடனப்படுத்தப்பட்ட "சுதந்திர சந்தையின்" வெற்றியிலிருந்து வேறுவிதமான சித்திரமே வெளிப்படுகிறது. வளர்ச்சியின் முதல் கட்டத்தில், சீனாவிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் மலிவு உழைப்பு சுரண்டல் இலாபங்களின் அதிகரிப்பை கொடுத்தது. இது நிதியியல் பேரழிவாக போய் முடிந்ததும், கடுமையாக உருக்குலைந்த உலக பொருளாதாரம், பிரதான மத்திய வங்கிகளால் நிதியியல் அமைப்புமுறைக்குள் பாய்ச்சப்பட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் சீனாவின் பாரியளவிலான கடன் வழங்கல் விரிவாக்கத்தால் மட்டுமே முட்டுக்கொடுக்கப்பட்டது.
இப்போது இந்த நடைமுறையும் முடிவுக்கு வந்துள்ளதால், இது ஆழமடைந்துவரும் மந்தநிலை போக்குகளை மற்றும் ஒரு புதிய நிதியியல் நெருக்கடிக்கு எழுச்சி கொடுத்து வருகிறது. இதன் விளைவுகள் 2008 ஐ விட இன்னும் அதிகமாக நீண்டகால தாக்கமுடையதாக இருக்குமென அச்சுறுத்துகிறது.
சீனாவில் ஆழமடைந்துவரும் நெருக்கடி மற்றும் அதன் உலகளாவிய துணைவிளைவுகள் ஒரு கூர்மையான உண்மையை வெளிப்படுத்துகின்றன: அதாவது, உலகளாவிய பொருளாதார விரிவாக்கத்திற்கு எந்தவொரு பொருளாதாரமோ அல்லது பொருளாதாரங்களின் குழுவோ ஓர் அடித்தளத்தை வழங்க முடியாது. சமீபத்தில் வரையில் ஒரு "பிரகாச புள்ளியாக" பார்க்கப்பட்ட அமெரிக்கா, 10 ஆண்டுகால கருவூலப் பத்திரங்களின் இலாப வீழ்ச்சியில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல மந்தநிலை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அனேகமாக உற்பத்தித்துறை ஏற்கனவே அந்த இடத்தை அடைந்துவிட்டது. நேற்று முதலீட்டாளர்கள் ஒரு "பாதுகாப்பான புகலிடத்தை" நோக்கி முண்டியடித்து ஓடியதால், 10 ஆண்டுகால கருவூலப் பத்திரங்கள் வெறும் 1.7 சதவீதத்திற்குச் சற்று அதிகமான நிலையில் நிறைவுற்றன.
வேலைவாய்ப்பின்மை காலவரம்பின்றி இரட்டை-இலக்க மட்டங்களில் இருக்கும் என்ற முன்கணிப்புகளுடன் மற்றும் வங்கியியல் அமைப்புமுறையில் வாராக் கடன்களின் மட்டங்கள் பற்றிய அதிகரித்த கவலைகளோடு, ஐரோப்பிய பொருளாதாரம் தொடர்ந்து தேக்கநிலையில் உள்ளது. கூடுதலாக பணத்தைப் புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் ஜப்பானிய மத்திய வங்கி, ஜப்பானிய பொருளாதாரத்திற்கு ஏதேனும் ஊக்கத்தை வழங்குவதற்கான "அபினோமிக்ஸ்" தோல்வியடைந்ததன் காரணமாக எதிர்மறை வட்டிவிகிதங்களுக்கு நகர்ந்துள்ளது.
வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத நிலைமையாக உலகின் ஒரு கால் பகுதிக்கும் அதிகமானவை இப்போது எதிர்மறை வட்டி விகிதங்களின் கீழ் செயல்படுகிறது என்றளவுக்கு மந்தநிலை அழுத்தங்கள் தீவிரமாக உள்ளன.
அதிகரித்துவரும் நெருக்கடிக்கு எந்த பொருளாதார தீர்வும் இல்லாததால், உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்களின் விடையிறுப்பு மும்முனையானதாக இருக்கும்:
சர்வதேச தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையை தூக்கிவீசி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கமாகக்கொண்டு ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் அடித்தளத்தில், அது இறுதியில் வெற்றியளிக்கும், அதன் சொந்த மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.