Print Version|Feedback
Iran’s President Rouhani visits Italy, France as economic rivalries deepen
பொருளாதாரப் பகைமைகள் ஆழமடைகையில் ஈரான் ஜனாதிபதி ருஹானி இத்தாலி, பிரான்சுக்கு விஜயம்
By Kumaran Ira
5 February 2016
கடந்த ஜூலையில் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் மீதான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான் மீதான தடையை விலக்கிக் கொண்ட பின்னர், கடந்த வாரம் ஈரானிய ஜனாதிபதி ஹசான் ருஹானி இத்தாலி மற்றும் பிரான்சுக்கு நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டார். இத்தாலிக்கும் பிரான்சுக்கும் ருஹானி விஜயம் செய்த பின்னர், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இந்த வாரம் புதன்கிழமை அன்று தெஹ்ரானுக்கு விஜயம் செய்தார்.
அணுசக்தி உடன்படிக்கையில் ஈரானைக் கையெழுத்திடவும் மற்றும் தீர்மானிக்கபட்ட சலுகைகளை ஏற்கவும் அழுத்தம் கொடுத்த பின்னர், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் உலகின் 4வது எண்ணெய் இருப்புகளுடனும் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களின் நுகர்வு சந்தையைக் கொண்ட 400 பில்லியன் டாலர் பொருளாதாரத்திற்குள் மீண்டும் நுழைவதற்கு முண்டியடித்துக்கொண்டு செல்கின்றன. பொருளாதாரத் தடைகள் விதிக்கும் முன்னரே ஐரோப்பா ஈரானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளராக இருந்தது. 16 ஆண்டுகளில் முதலாவது ஈரானிய ஜனாதிபதியாக, ஐரோப்பாவிற்கான அவரது பயணத்தின்போது, ருஹானியுடன் அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் என 120 பேர் கொண்ட பேராளர் குழு சேர்ந்து கொண்டது.
திங்கள் இத்தாலிய விஜயத்திற்கு முன்பே, ருஹானி, “அணு சக்தி உடன்படிக்கையின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான, சிறப்பாக இத்தாலி மற்றும் பிரான்சுடன் எமது உறவுக்கான இடைக்கால மற்றும் நீண்டகால திட்டத்தை விரிவுபடுத்த நாம் விரும்புகிறோம்… கார் உற்பத்தி மற்றும் எமது உள்நாட்டு விமானப் போக்குவரத்தினை நவீனமயமாக்கல் போன்ற திட்டங்களை பற்றிப் பேசுவதற்கு பல்வேறு பொருளாதாரத் திட்டங்களில் ஸ்தூலமான முடிவுகளை வந்தடைவதற்கு நான் ரோம் மற்றும் பாரிசில் இருப்பேன்” என்றார்.
இத்தாலியில், ருஹானி ஜனாதிபதி சேர்ஜியோ மத்தரெல்லா மற்றும் பிரதமர் மத்தெயோ ரென்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் இத்தாலி – ஈரான் வர்த்தக் கூட்டத்தில் பங்கேற்றார். Eni SpA இன் கிளோடியோ டிஸ்கால்சி மற்றும் ஃபியட் கிறைஸ்லர் தலைமை செயல் அதிகாரி சேர்ஜியோ மார்ச்சியோன்னே, முக்கிய இத்தாலிய வர்த்தக மேலாண்மை அதிகாரிகள் உட்பட திங்கள் அன்று ருஹானியுடன் விருந்தில் பங்கேற்க இருந்தனர். ஒரு செய்தியாளர் மாநாட்டில் ருஹானியும் ரென்சியும் இத்தாலிக்கும் ஈரானுக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தங்களை புகழ்ந்தனர். ரென்சி இந்த இருநாடுகளையும் பொறுத்தவரை அவை “வெறும் ஆரம்பம் மட்டும்தான்” என்றார்.
இத்தாலிய நிறுவனங்கள் ஈரானுடன் 20 பில்லியன் யூரோ டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களுக்கு உடன்பட்டன. பெரிய உபகரணங்கள் வழங்கல் நிறுவனங்களில் ஒன்றான டானியெலி குழுமம் ஈரானில் எஃகு இரும்பு மற்றும் அலுமினிய ஆலைகளை நிறுவ எந்திரங்களை ஈரானுக்கு அனுப்பும் சுமார் 5.7 பில்லியன் டாலர்களுக்கு கையெழுத்திட்டது. சாய்பெம் எண்ணெய் நிறுவனம் மற்றும் இத்தாலிய அரசு இரயில்வேயும் கூட தெஹ்ரானுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கப்பல் கட்டும் நிறுவனமான ஃபிங்கன்தியெரி (Fincantieri), பாரசீக வளைகுடாவில் ஒரு புதிய கப்பல் தளத்தை அபிவிருத்தி செய்தல் உள்பட பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டது.
புதன் கிழமை அன்று ருஹானி பிரான்சுக்கு விஜயம் செய்தார், ஈரான் மீதான அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்களிலிருந்து மீட்சிபெறுவதற்கான ஆற்றொணா நிலையில் உள்ள உயர் பிரெஞ்சு அதிகாரிகளையும் வணிகத் தலைவர்களையும் சந்தித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானுடனான பிரான்சின் வர்த்தகம் சுமார் 4 பில்லியன் யூரோக்களாக இருந்தது 2013ல் 500 மில்லியன் யூரோக்களாக வீழ்ந்துவிட்டது.
எலிசே ஜனாதிபதி மாளிகை ஈரானிய தலைவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது, மாளிகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புடைய ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட், “எமது உறவுகளின் ஒரு புதிய அத்தியாயம் இன்று திறக்கிறது” என்று அறிவித்தார்.
பொருளாதாரத் தடைகளால் தடைசெய்யப்பட்டிருந்த வணிக விமானப் பயணங்களை தெஹ்ரான் மீண்டும் ஏற்படுத்தியிருப்பதால், பிரான்சுவா-ஜேர்மன் பயணிகள் விமான உற்பத்தியாளர் ஏர்பஸ் உடன் 23 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய 118 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் ஈரான் கையெழுத்திட்டது. கட்டுமான இராட்சத நிறுவனமான Bouygues மற்றும் Aeroports de Paris (ADP) ஆகியன தெஹ்ரான் விமான நிலையத்தை விவரிவாக்குவதற்கு உடன்பட்டன.
பிரெஞ்சு பெரும் எண்ணெய் நிறுவனமான Total, ஈரானிய கச்சா எண்ணெயை வாங்குவதை புதுப்பிப்பதற்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரெஞ்சு PSA Peugeot-Citroën கார் தயாரிப்பு நிறுவனம், ஈரானிய கார் உற்பத்தியாளர் Khodro உடன் சேர்ந்து ஈரானில் கார் உற்பத்தி செய்வதற்கு 430 மில்லியன் டாலர்கள் கூட்டுநிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவை தெஹ்ரான் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையை நவீனமயமாக்கும் மற்றும் 2017 நடுப்பகுதி அளவில் ஒரு ஆண்டிற்கு 200,000 வாகனங்கள் என்ற உற்பத்தி இலக்குடன் கார் தயாரிப்பை தொடங்கிவிடும். விவசாயம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மற்ற உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன.
ஈரானுடனான பிரான்சின் பேரங்கள் ஐரோப்பிய வெளிவிகார கொள்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தையும் பிற்போக்கு தன்மையையும் கோட்டிட்டுக் காட்டுகின்றன. அணுசக்தி பேரத்திற்கு முன்னர், பாரிஸ் ஆனது குறிப்பாக ஒரு போர்வெறி நிலைப்பாட்டை எடுத்து, அணுசக்தி பேச்சுவார்த்தையில் மேற்கத்திய அரசுகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறும், அத்துடன் அல்கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய குடிப்படையை பாரிஸ் ஆதரிப்பதன் மூலம் ஈரானின் முக்கிய கூட்டாளிகளுள் ஒன்றான சிரிய ஜனாதிபதி பாஷார் அல்-அசாத் ஆட்சியை அழிப்பதற்கும் முயன்றது.
இப்பொழுது, சிரியாவில் ஆட்சி மாற்றத்தை அது தொடர்ந்து விரும்பும் அதேவேளை, பாரிஸ், ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமியவாத அரசை (ISIS) எதிர்த்துப் போராடுவதாக கூறப்படும் அதேவேளை, குர்திஷ் படைகளை ஆதரிக்கிறது, அது ஈரான் மற்றும் அசாத்தின் இன்னொரு கூட்டாளியான ரஷ்யாவாலும் ஆதரிக்கப்படுகிறது, ஈரானுடனான பொருளாதார நல்லிணக்கத்தை நாடுகிறது.
இறுதி ஆய்வில், ஈரானிய அணுசக்தி ஒப்பந்தமானது இன்னொரு வழிமுறைகளின் மூலம் இந்த பிராந்தியத்தை தொடர்ந்து ஏகாதிபத்தியம் சூறையாடுவதற்கான ஒரு இயங்குமுறை ஆகும். தெஹ்ரானில் அடிப்படை நுகர்வுப் பொருட்கள் மீதான விலைவாசி உதவிக்கொடைகளை வெட்டுவதற்கும் ஈரானிய தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை வெட்டுவதற்கும் அதன் வர்த்தகப் பங்காளர்களிடமிருந்தும் அதேபோது ஈரானின் இறையாட்சிக்குள்ளிருந்தும் அழுத்தம் குவிந்து வருகிறது.
ஈரானிலும் மேற்கத்திய இராணுவத் தலையீடுகளால் சூறையாடப்பட்டு வரும் மத்திய கிழக்கு முழுவதிலும் சந்தைகளுக்காக முண்டியடித்துக்கொண்டு ஓடுவது இந்த பிராந்தியத்தை யார் மேலாதிக்கம் செய்வது என்பதன் மீதாக ஏகாதிபத்தியங்களுக்கிடையில் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் இடம்பெறுகிறது.
நேற்று ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர், பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்து, அடுத்த ஐரோப்பிய வருகையின் போது ஜேர்மனிக்கும் வருகைதருமாறு ருஹானியை அழைத்தார். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டதுடன், ஜேர்மன் வர்த்தக சமூகம் ஈரானுக்கான அதன் ஏற்றுமதியை அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 பில்லியன் யூரோக்களிலிருந்து 10 பில்லியன் யூரோக்களாக இரட்டிப்பாகுவதை எதிர்பார்க்கிறது.
“ஈரானுடனான 10 ஆண்டுகளுக்கும் மேலான கசப்பான உறவுகளுக்கு பின்னர், இறுதியில் “நிறுத்துங்கள்” என்று நாம் சொன்னோம் என்று ஜேர்மன் தொழில் மற்றும் வர்த்தக பேரவையின் Volker Treier கூறினார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் மூர்க்க நிலைப்பாடும் கடுமையான பொருளாதாரத் தடைகளும் முக்கியமாக தங்களின் புவிசார் அரசியலை கீழறுப்பதாக ஐரோப்பிய அரசுகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. ஈரானிய மற்றும் ஈராக்கிய சந்தைகளை அணுகுவது தொடர்பாக அமெரிக்க-ஐரோப்பிய பகைமை போட்டி அதிகரித்து வரும் அறிகுறிகள் தெரிகின்றன, இது 1990ல் வெளிப்பட்டது 2003ல் ஈராக் மீதான தன்னிச்சையான அமெரிக்க படையெடுப்புக்கு இட்டுச்சென்றது, அது மீண்டும் வெடிக்கக்கூடும்.
அமெரிக்க அரசாங்கம் எதிர்காலத்தில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தால், ஐரோப்பா அமெரிக்காவுடன் ஒரு மோதலுக்கு செல்லக்கூடும் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்களில் ஏற்கனவே விவாதம் இருக்கிறது. 2014ல் ஈரான் பொருளாதாரத் தடைகளுடன் இருக்கையில் அதனுடன் வேலை செய்வதற்கு திட்டமிட்ட பிரெஞ்சு நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் வெளிப்படையாக அச்சுறுத்தியது.
கடந்த ஆண்டு அணுசக்தி பேரம் ஆரம்பத்தில் விலக்கப்பட்ட பின்னர், வெளியுறவுகள் மீதான ஐரோப்பிய கவுன்சில் ஆகஸ்ட் 26, 2015 அன்று அதன் பத்திரிகையில், “அமெரிக்க காங்கிரசின் ஈரான் எதிர்ப்பு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பா தலை வணங்காது” என்று தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது.
சிந்தனைக்குழாம் அப்பட்டமாக குறிப்பிட்டது, “ஐரோப்பியர்கள் ஈரானின் அணுசக்தி – மையப்படுத்தப்பட்ட கண்ணோட்டத்திற்கும் அப்பால், ஈரானிய ஜனாதிபதி ஹசான் ருஹானி நிர்வாகத்துடன் ஈடுபடுவதற்கு திறந்தவிடப்பட்ட வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதன் மேல் இப்பொழுது குவிமையப்படுத்துகின்றனர், ஈரான் மற்றும் ஐரோப்பா இரண்டும் ஒருதரம் முன்னேற்றகரமாக இருந்த தங்களின் வர்த்தக உறவுகளை மீண்டும் பற்றவைக்க ஆர்வமுடன் உள்ளனர், மற்றும் மத்திய கிழக்கில் மோதல்களை தணிக்க மிகவும் ஆக்கபூர்வமாக ஈரானுடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு ஐரோப்பியர்களும் கூட விரும்புவர். இவ்வகையான முன்னேற்றத்தை எளிதில் செய்துவிட முடியாது, அப்படியானால், ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள் உடன்பாடானது முன்னரே தடம்புரள்வதற்கு தெஹ்ரானைவிடவும் வாஷிங்டனையே குற்றம்சாட்டுவர், அது உண்மையில் ஏறத்தாழ உலகே ஏற்றுக்கொண்டதாக வழங்கப்படும்”.
ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் சீனாவிலிருந்தும் போட்டியை எதிர்கொள்கின்றனர், ருஹானியின் ஐரோப்பிய விஜயத்திற்கு முன்னரே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஈரானுக்கு விஜயம் செய்திருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவும் ஈரானும் 600 பில்லியன் டாலர்களுக்கும் மேலான மதிப்புடைய பொருளாதார உறவுகளைக் கட்டியமைக்க நோக்கங்கொண்டுள்ளதாக செய்தி அறிவிக்கப்படுகிறது. ஜி இன் விஜயத்தின்போது சீனாவும் தெஹ்ரானும் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் சுமார் 17 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன.