Print Version|Feedback
இலங்கை: போலி இடது சம உரிமை இயக்கம் போரில் பாதிக்கப்பட்டவர்களின் கோபத்தை சுரண்டிக்கொள்கின்றது
Subash Somachandran
21 February 2016
இலங்கையில் போலி இடது “முன்னிலை சோசலிசக் கட்சியின்” துணை அமைப்பான சம உரிமை இயக்கம், இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போனோரின் உறவினர்களுடன் இணைந்து யாழ்ப்பாண மாநகர பஸ் நிலையத்தில் ஜனவரி 25ம் திகதி ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டது. ஏற்பாட்டாளர்கள் உட்பட 60 பேர் வரை கலந்துகொண்டனர். சம உரிமை இயக்கத்தின் இத்தகைய பிரச்சாரத்தில் இது அண்மையதாகும்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கோபமும் பதட்டமும் நிறைந்ததாக இருந்தது. கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள், செய்தியாளர்கள் முன்னிலையில் கூக்குரலிட்டு அழுதனர். எமது பிள்ளைகள் எங்கே? ஜனாதிபதியே பிரதமரே எமது பிள்ளைகளை தாருங்கள், எங்களின் பிள்ளைகளை தராவிட்டால் நாங்கள் தீக்குளித்தோ அல்லது உண்ணாவிரதம் இருந்தோ மரணிப்போம். எங்களுக்கு வீடு, காணி, நிவாரணம் எதுவும் வேண்டாம். எங்கள் பிள்ளைகளை மட்டும் தந்தால் போதும் என தமது ஆதங்கங்களை கூறி கதறியழுதனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில், “சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்”, “பயங்கரவாத தடைச் சட்டத்தினை இரத்துச் செய்”, “சகல காணாமல் ஆக்கலையும் வெளிப்படுத்து” என மூன்று கோரிக்கைகள் எழுதப்பட்ட பனர் கட்டப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைகள் ஒரு அரசியல் மோசடியாகும்.
கடந்த ஒரு வருடமாக அமெரிக்க-சார்பு சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியை பாதுகாத்துவரும் தமிழ் தேசியவாதிகளால், காணாமல் போனோர், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான விடையங்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், அரசாங்கத்தின் மீதான தமிழ் வெகுஜங்களின் நியாயமான கோபத்திற்கு வடிகால் அமைக்க சம உரிமை இயக்கம் முன்வந்துள்ளது.
கடந்த மாதங்களில் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வழங்கும் பேட்டிகளிலும் தாம் உரையாற்றும் நிகழ்வுகளிலும் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை, காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே என்று வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசாங்கம் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றது.
“எம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட இந்த அரசாங்கம் ஜனநாயக சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது” என தமிழ் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கடந்த 14ம் திகதி பிரதமர் கலந்துகொண்ட “தேசிய பொங்கல்” நிகழ்வில் அறிவித்தார். விக்னேஸ்வரன் அரசாங்கத்திற்கு தனது ஆதரவை இவ்வாறு தெரிவித்த அதேவேளை, பிரதமர் தன்பங்கிற்கு, “காணாமல் போனவர்கள் எவரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை” எனவும், பயங்கரவாத தடைச் சட்டம் ஒரு காலாவதியான சட்டம் என்றும், பிரிட்டனில் இன்னமும் நடைமுறையில் உள்ள புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளுக்கு 10 நாட்களுக்கு பின்னர், சம உரிமை இயக்கம் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வைத்து “எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்” ஒன்றை நடத்தியிருந்தது. என்ன அரசியல் மோசடி! அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என அழைக்கப்படுவதில், சம உரிமை இயக்கத் தலைவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, “காணாமல் போனோர் இறந்தார்கள் என்றால், எப்படி இறந்தார்கள்? யார் கொன்றார்கள்? என்பதை இந்த அரசாங்கம் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.” என அழைப்பு விட்டனர்.
சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழான அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் தலைமையில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரமாக்கியதோடு 2009 மே மாதம் கடுமையான இராணுவத் தாக்குதல்களுடன் போரை முடிவுக்கு கொண்டுவந்தது. இதன் போது ஆயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதோடு கொல்லப்பட்டனர். ரணில் விக்கிரமசிங்கவின் யு.என்.பி. அரசாங்கமே இனவாத போரை தொடக்கிவைத்து அதை தசாப்தத்துக்கும் மேலாக கொடூரமாக முன்னெடுத்தது.
போர் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களே உண்மையை “கண்டுபிடித்து சொல்ல வேண்டும்” என சம உரிமை இயக்கம் ஆலோசனை வழங்குகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்கங்களுக்கு ஏற்ப உருவாக்கிய அரசாங்கத்தை பாதுகாப்பதே இந்த “எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்” பின்னணியில் உள்ள இலக்காகும்.
முதலாளித்துவ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஜனநாயக உரிமைகளையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்ற பிரமைகளை பரப்பி, மக்களின் சீற்றத்தை திசைதிருப்புவதற்காக முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) அதன் துணை அமைப்புகள் ஊடாக முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் இந்த ஆர்ப்பாட்டமும் ஒன்றாகும். சம உரிமை இயக்கத்தின் இந்த ஆர்ப்பாட்டம் முற்றிலும் வஞ்சகத்தனமானது.
2012ம் ஆண்டு சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியில் (ஜேவிபி) இருந்து பிரிந்த ஒரு குழுவினரால் அமைக்கப்பட்ட மு.சோ.க. இடதுசாரி வாய்ச்சவடால்களை விடுப்பதன் மூலம் தன்னை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக காட்டிக்கொள்கின்றது. மு.சோ.க. தலைவர்கள் ஜே.வி.பி.யில் இருந்த போது, இராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவர பாடுபட்டதோடு, இனவாத யுத்தத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்பாவித் தமிழ் இளைஞர்களை புலி சந்தேக நபர்களாக கைது செய்து தடுத்து வைப்பதற்கு முழுமையாக ஒத்துழைத்தனர்.
தற்போது அவர்கள் “ரோஹண விஜேவீரவின் பக்கம் மீண்டும் திரும்புவதாக” கூறிக் கொள்கின்றனர். இது, ஜே.வி.பி.யின் மார்க்சிச விரோத, தொழிலாள வர்க்க விரோத அரசியலை இன்னொரு வழியில் தொடர்வதாகும். மு.சோ.க. மற்றும் சம உரிமை இயக்கத்தினதும் கொள்கைகள் சலுகை படைத்த நடுத்தர வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
காணாமல் போனோரின் உறவினர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் தாங்கள் முகங்கொடுத்த அவலங்களை வெளிப்படுத்தினர்.
ரூபிமாலா: ஊர்காவற்றுறை கரம்பொனைச் சேர்ந்த மகேந்திரன் ரூபிமாலாவின் கணவர் கணபதி மகேந்திரன், 2006 டிசம்பரில் வேலணைத் துறையூரில் காணாமல் போனார். “எனது கணவரை கடற்படையும், ஈபிடிபியும் தான் பிடித்திருப்பார்கள் என நான் நம்புகின்றேன். ஊர்காவற்றுறைப் பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு என்பவற்றுக்கு அறிவித்தோம் எந்த பலனும் கிடைக்கவில்லை. கொழும்பு சென்று சிறைச்சாலைகள் பலவற்றில் தேடினோம் எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. எமக்கு நான்கு பிள்ளைகள். பிள்ளைகளின் படிப்புக்கா பெரும் கஸ்ட்டப்படுகின்றோம். கூலி வேலையே செய்து சீவிக்கின்றோம். அந்த வேலைகூட அடிக்கடி கிடைக்காது” எனக் கூறினார்.
திவாகரனின் தாய்: கந்தையா திவாகரனை 1996ல் ஜூன் மாதம் கனகம்புளியடி சந்தியில் வைத்து இராணுவம் பிடித்ததாக அவரது தாயார் கூறினார். “எனது மகன் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் தான். மருமகள் கர்ப்பவதியாக இருந்தார். அவரது மகள் இப்போது வளர்ந்து அப்பா எங்கே என்று கேட்கிறாள். அப்பாவை நாங்கள் எங்கே போய் தேடுவது. யுத்தம் முடிந்து விட்டது என்று கூறுகின்றீர், பிள்ளைகளை ஏன் இன்னும் தடுத்து வைத்திருக்கின்றீர்கள்?” என அவர் கேட்டார்.
ஜெயசீலிமலர்: “நாங்கள் யாழ்ப்பாணத்தில் வாழந்தோம், எனது மகனான இருதயநாதன் இங்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாத நிலையில் 2004ம் ஆண்டு வன்னிக்கு சென்று அங்கு புலிகளுக்கு சொந்தமான கராஜ் ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். 2006ல் போர் மீண்டும் தொடங்கியபோது அவரால் வீட்டுக்குத் திரும்ப முடியாமல் போய்விட்டது. 2009 இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்காலில் எனது மகனை உறவினர்கள் கண்டு கதைத்துள்ளார்கள். ஆனால் சண்டை முடிந்த பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை. எனது மகனை இராணுவம் பிடித்துள்ளது. நாங்கள் கொழும்பு மற்றும் திருகோணமலை போன்ற இடங்களில் தேடினோம். ஒரு பலனும் கிட்டவில்லை.” எனக் கூறினார்.
பரமேஸ்வரி: பாலச்சந்திரன் பரமேஸ்வரியின் பிள்ளைகளை 1996ல் இராணுவத்தினர் பிடித்ததாக அவர் கூறினார். “கனகம்புளியடியில் வைத்து இராணுவம் பிடித்ததாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள். நாங்கள் உடனடியாக கனகம்புளியடி இராணுவ முகாமுக்குப் போனோம். உள்ளே எமது பிள்ளகளைச் சித்திரவதை செய்யப்பட்டதால் பலத்த குரலில் கத்தியழுத சத்தம் எமக்கு கேட்டது. நாமும் கத்திக் குழறினோம். பின்னர், உங்கள் பிள்ளைகளை பலாலிக்கு அனுப்பிவிட்டோம் என்று கூறினார்கள். பல இடங்க்களில் தேடி அலைந்தோம். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் சந்தித்தோம். ஆனால் பலன் இல்லை” என அவர் கூறினார்.
“குமாரதுங்கவின் ஆட்சியில் தானே எமது பிள்ளைகள் 600க்கு மேற்பட்டோர் காணாமல் போனார்கள். அவளின் பிள்ளைக்கு ஒன்று நடந்தால் எப்படிப் பொறுப்பாள்? எமது பிள்ளைகளை மட்டும் ஏன் அப்படிச் செய்தாள்? அவரையும் சிலர் நல்லவள் என்று சொல்கின்றனர். சிறிசேன ‘நல்லாட்சி’ மற்றும் ‘100 நாள் வேலைத்த திட்டம்’ என்று கூறிக்கொண்டு வந்தார். ஒன்றும் எமக்கு செய்யவில்லை. கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் பாராளுமன்றம் போனவுடன் உங்களின் பிர்ச்சினையைத் தான் முதலில் கதைப்போம் என்றனர். அவர்களைக் காணக் கிடைக்கவில்லை. எமது பிள்ளைகள் இல்லை என்று ரணில் சொன்னதை நாங்கள் ஏற்கவில்லை. எமது பிள்ளைகள் உயிருடன் இருப்பதாகவே நாங்கள் நம்புகின்றோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.