Print Version|Feedback
Nationalism and “Brexit”
தேசியவாதமும், “பிரிட்டனின் வெளியேறலும்"
Chris Marsden
23 February 2016
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக Grassroots Out பிரச்சாரத்தில் ஜோர்ஜ் ஹலோவே (George Galloway) கலந்து கொண்டமை, வெறுமனே வர்க்க நிலைப்பாட்டை மறைப்பதல்ல. அதை அது துடைத்தொழிக்கிறது.
ஹலோவேயை வெள்ளியன்று இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் QE II மையத்தில், வெளிநாட்டவர் விரோத வலதுசாரி இங்கிலாந்து சுதந்திர கட்சியின் (UKIP) தலைவர் நைஜல் ஃபாராஜ் (Nigel Farage) சிறப்பு பேச்சாளராக வியப்பூட்டும் வகையில் அறிமுகப்படுத்தினார். அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பில் காஷ், நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் மற்றும் நிழல் அமைச்சரவையின் முன்னாள் உள்துறை செயலர் டேவிட் டேவிஸ் போன்ற டோரி கட்சியின் பரம-தாட்சரிச அணியின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து அரங்கைப் பகிர்ந்து கொண்டார்.
ஹலோவேயை "பிரிட்டிஷ் அரசியலின் இடதில் முக்கிய பிரபலம்" என்று நைஜல் ஃபாராஜ் அறிமுகப்படுத்தினார். புரூசெல்ஸின் சர்வாதிகாரத்திலிருந்து நாடாளுமன்றத்தின் "இறையாண்மையை" பாதுகாக்கும் ஒரு பொதுவான இலட்சியத்திற்கு எதிராக பொருத்திப் பார்க்கையில், “இடது" மற்றும் "வலதிற்கு" இடையிலான வேறுபாடுகள் மிக மிக குறைவானது என்பதற்கு நிரூபணமாக அவரது பிரசன்னம் எடுத்துக்காட்டப்பட்டது.
ஹலோவே இன் உரை, வெட்கமின்றி ஃபாராஜ் மற்றும் டோரி வலதுகளுக்கு அரசியல் நற்சான்று வழங்குவதாக இருந்தது. “ஆனால் நைஜல் ஃபாராஜ் இல்லாதிருந்தால் இந்த விடயம் தொடர்பாக நமக்கு ஒரு வெகுஜன வாக்கெடுப்பு நடப்பது சாத்தியமில்லாதிருந்திருக்கும்” என்றவர் அறிவித்தார்.
அதைவிட மோசமாக அவரின் கருத்துக்கள், பிரிட்டிஷ் இறையாண்மையை பாதுகாப்பதற்குப் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்றியமையாதவை குறித்த கருத்துக்களுடன் ஒப்பிடுகையில், இடது மற்றும் வலதிற்கு இடையிலான பிளவுகளும், தொழிலாள வர்க்கம் மற்றும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்கு இடையிலான பிளவுகளும் மிகவும் குறைவே என்று கூறப்படும் வாதங்களின் மீதே முழுவதுமாக மையமிட்டிருந்தன.
ஃபாராஜ் இன் பிரிட்டனுக்கான வேலைத்திட்டத்துடன் தனக்கு பொதுவான கருத்துக்கள் மிகக் குறைவாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்ட போதினும், உண்மையில், “வெளியேற விரும்பும்" முகாம், தேர்ந்தெடுக்கப்படாத ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவவாதிகள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மீது அதிகாரம் செலுத்துவதை தடுக்க முனைகிறது என்ற வலதின் மைய வாதத்தை ஹலோவே முழுமையாக தழுவியிருந்தார்.
பல இடங்களில், ஹலோவே இன் மிகவும் பட்டவர்த்தனமான தேசியவாத கருத்துக்கள் —அதாவது, "பிரிட்டனுக்கு யார் வர வேண்டும், வாழ வேண்டும், வேலை செய்ய வேண்டும், பிரிட்டனிலிருந்து யார் வெளியேற வேண்டும், பிரிட்டனில் பற்றாக்குறை எந்த மட்டத்தில் இருக்கலாம், அல்லது பிரிட்டனில் நமது வெளியுறவு கொள்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான உரிமை" “ரூமேனிய அரசாங்கத்திற்கு உள்ஒப்பந்தத்தில்" கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் வலியுறுத்தியதைப் போன்ற கருத்துக்கள்— அங்கே அதிகளவிலிருந்த டோரி மற்றும் UKIP பார்வையாளர்களிடமிருந்து அவருக்குக் கரகோசத்தைப் பெற்றுத் தந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எதிர்ப்பை அவர் "சர்வதேசவாதம்" என்று வர்ணித்தார். பின்னர் அவர், இங்கிலாந்து "அணிசேரா நாடுகளுடன்" மற்றும் "பிரேசில் உடன், ரஷ்யாவுடன், இந்தியாவுடன், சீனாவுடன், தென் ஆபிரிக்காவுடன், ஈரானுடன் எங்கெல்லாம் சூரியன் உதிக்கிறதோ, அஸ்தமனம் இன்றி, சொல்லப்போனால் உலகின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையினர் வாழுகிறார்களோ அங்கெல்லாம்,” வர்த்தகம் மேற்கொள்ள சுதந்திரத்தைப் பெறுகிறது. … இப்போது அது தான் சர்வதேசவாதம்" என்று அந்த வார்த்தையை தெளிவாக முதலாளித்துவ வரையறைகளில் வரையறுத்தார்.
ஹலோவே, "நான் நேசிக்கும் மற்றும் மதிக்கும் ஒரு நபர்" என்று டேவிட் டேவிஸை வர்ணிக்குமளவிற்கு சென்றார். இவரது பேச்சும் மற்றும் அவரது பொறுப்பும் 2014 இல் இங்கிலாந்து சிரியாவிற்கு எதிராக போருக்குச் செல்வதை தடுத்ததாகவும் — "நாடாளுமன்ற இறையாண்மையின்” தகுதிப்பாடுகள் அவ்விதத்தில் நிரூபிக்கப்பட்டது, “...ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாம் வெளியேறினால் இதை நாம் பெற முடியும்,” என்று கூறுமளவிற்குச் சென்றார். சிரியாவில் இப்போது பிரிட்டன் இராணுவரீதியில் செயலூக்கத்துடன் இருக்கிறது என்ற உண்மைக்கு (இதற்காக இதே நாடாளுமன்றத்திற்கும் மற்றும் Cash, Bone மற்றும் ஏனையவர்களுக்கும்தான் நன்றி கூற வேண்டியிருக்கும்) இயல்பாக அவர் கண்களை மூடிக் கொள்கிறார்.
ஃபாராஜ் உம் டோரியின் வலதும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறது என்ற வாதம் அடிப்படையிலேயே பொய்யாகும்.
ஐரோப்பிய ஒன்றியம், நிதியியல் சந்தைகளின் கட்டளைகளுக்கு அக்கண்டத்தை அடிபணிய செய்வதற்கான ஒரு பிற்போக்குத்தனமான அமைப்பாகும், மற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய அரசுகள் தங்களுக்குள் மோதிக்கொள்கின்ற மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் செய்கின்ற ஒரு கூட்டுப்பேரவையாக இருப்பதால், அதை உழைக்கும் மக்கள் உறுதியாக எதிர்க்க வேண்டும். அது காட்டுமிராண்டித்தனமான சிக்கனக் கொள்கைகளை பின்பற்றுவதுடன், ரஷ்யாவிற்கு எதிரான போருக்காக அக்கண்டத்தை மீள்இராணுவமயப்படுத்தும் ஓர் இயங்குமுறையாக மாறியுள்ளது.
ஆனால் பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் மற்றும் அதன் கட்சிகளும் நிதியியல் மூலதனத்தின் விருப்பங்களைத் திணிப்பதற்கு ஒரு கருவியாக இருக்காது என்று கூறுவது, ஒரு வெளிப்படையான மோசடியாகும். டோரி வலது மற்றும் UKIP இன் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு முற்றிலும் பிற்போக்குத்தனமான குணாம்சத்தில் உள்ளது. இலண்டன் நகரம் குறைந்தபட்ச நிபந்தனைகளிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும், தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதன் மீதிருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும் அதனிடமிருந்து நீக்கப்பட வேண்டும் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் என்ன விலை கொடுக்க நேரிட்டாலும் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடித்தளத்தில் அது உள்ளது.
ஹலோவே அவரது புதிதாக கண்டுபிடித்துள்ள கூட்டாளிகளுடன் அவருக்குள்ள ஆழ்ந்த உடன்பாடின்மையை அறிவிக்கும் சந்தர்ப்பத்தைப் பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களில் பலர் முன்னரே ஈராக், லிபியா மற்றும் சிரியா மீதான அவரது நிலைப்பாடுகள் மற்றும் ஏனைய பொது நிலைப்பாடுகளுக்காகவும் அவரை கண்டித்துள்ளனர். அத்தகைய நிலைப்பாடுகளுக்காக உலக சோசலிச வலைத் தளமே அவரைப் பாதுகாத்த தருணங்களும் இருந்தன. ஆனால் அவரது இந்த நிலைப்பாடு அவரை இன்னும் மோசமாக மட்டுமே ஆக்குகிறது. அவர் என்னவெல்லாம் அரசியல் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கிறாரோ அதை அவர் ஃபாராஜ் மற்றும் அவரது அணியினரின் சேவைக்காக வழங்கி வருகிறார். அனைத்திற்கும் மேலாக, வர்க்கம் மற்றும் அரசியல் பிளவுகளை விட தேசிய இறையாண்மையை பிரதானமாக அவர் வலியுறுத்துவது, ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்புக்கும் அப்பால் மிக அபாயகரமான தாக்கங்களைக் கொண்டதாகும்.
இது, ஐரோப்பிய ஒன்றிய வெகுஜன வாக்கெடுப்பை, இரண்டாம் உலக போருடன் அவர் ஒப்பிட்டுக்காட்டுவதிலேயே எடுத்துக்காட்டப்படுகிறது. “திரு சேர்ச்சில் கூறியவாறு, அது நமது அருமையான தருணமாக இருந்தது. அப்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து முன்னேறினோம் — திரு. சேர்ச்சில், திரு. அட்லி மற்றும் திரு. பேவன்… அதைத்தான் இந்த இரவில் நாம் செய்து கொண்டிருக்கிறோம். நானும், திரு. ஃபாராஜ் உம். திருமதி. கோனி உம் மற்றும் திரு. டேவிஸூம். இடது, வலது, இடது, வலது என்று முன்னோக்கி அணிவகுத்து செல்வோம்,” என்றவர் அறிவித்தார்.
ட்விட்டரில், பின்னர் அவர் ஃபாராஜ் குறித்து குறிப்பிடுகையில், “நாங்கள் நண்பர்கள் கிடையாது. நாங்கள் ஒரே காரணத்திற்காக ஒன்றுகூடியுள்ள கூட்டாளிகள். சேர்ச்சில் மற்றும் ஸ்ராலினைப் போல...”
ஸ்ராலினை முன்மாதிரியாக முன்வைப்பதே ஹலோவே இன் அரசியலைப் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் கூட்டணி அமைப்பதற்காக அவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை வைத்து பார்த்தால், ஹிட்லர்-ஸ்ராலின் உடன்பாடு தான் மிகவும் சரியான ஒப்பீட்டாக இருக்கும்.
எப்படி வைத்து பார்த்தாலும், ஹலோவே இன் கருத்துக்களது விளைவுகள் அரசியல்ரீதியில் நச்சுத்தன்மையானது. போர் மற்றும் போர்க்கால தியாகங்களைக் காட்ட முயலும் அதுபோன்றவொரு உவமை இங்கிலாந்தில் கூறப்படுவது, பாசிசவாத-எதிர்ப்புணர்வுக்காக அல்ல, மாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஐரோப்பிய-விரோதத்திற்கான, அதுவும் குறிப்பாக ஜேர்மன்-விரோதத்திற்கான ஒரு முறையீடாகும். சேர்ச்சிலின் படமும் ஐக்கிய இராச்சியத்தின் கொடியும் ஒவ்வொரு தீவிர-வலது ஒன்றுகூடல்களிலும் ஓர் அம்சமாக ஆகியுள்ளது. இதில், முன்னாள் UKIP தேர்தல் வேட்பாளர் போல் வெஸ்டன் தலைமையில் நடந்த சமீபத்திய இங்கிலாந்து பெகிடா (Pegida) புலம்பெயர்வோர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் உள்ளடங்கும்.
மிகப் பரந்தளவில், ஹலோவே இன் நடவடிக்கைகள், பல்வேறு தொழிற் கட்சிவாதிகள், போலி-இடது குழுக்கள், இரயில், கடல்வழி மற்றும் தரைவழி போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் இரயில் ஓட்டுநர்களின் தொழிற்சங்கம் Aslef ஆகியவை எடுத்த நிலைப்பாட்டின் அரசியல் தாக்கங்களைக் கூர்மையாக கவனத்திற்குக் கொண்டு வருகிறது. அவை அனைத்தும் ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்பில் "வெளியேறுவதற்கான" பிரச்சாரத்தை —அந்த வெகுஜன வாக்கெடுப்பின் உண்மையான தோற்றுவாய்கள் மற்றும் அதன் தலைமையின் குணாம்சத்தைப் பொருட்படுத்தாமல்— ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான "ஜனநாயக," “முற்போக்கான" மற்றும் "சோசலிச" எதிர்ப்பு என்பதாக அதற்கு வேஷமிடுகின்றன. உண்மையில் அவை அனைத்தும், தேசிய இறையாண்மையை மீளப்பெறுதல் என்ற அடித்தளத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை ஏற்றுள்ளன.
ஒரு சோசலிசவாதியின் முதல் பொறுப்பு, வர்க்க பதாகைகள் ஒன்றுகலப்பதை எதிர்ப்பதாகும். அதாவது இந்த வெகுஜன வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களை எந்த மூலோபாயம் சிறப்பாக தாங்கிப் பிடிக்கும் என்பதற்காக தங்களுக்குள் முழுமையாக சண்டையிட்டு வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதோவொரு கன்னைக்குப் பின்னால் உழைக்கும் மக்களை அணித்திரட்டுவதற்காக அழைப்புவிடுக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிப்பதை இது அர்த்தப்படுத்துகிறது.
தேசியவாதம், புலம்பெயர்வோர்-எதிர்ப்பு வெளிநாட்டவர் விரோத உணர்வு மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றின் நச்சுப் புகைமூட்டம் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் ஒட்டுமொத்த உலகையும் அசுத்தப்படுத்தி வரும் ஒரு காலகட்டத்தில், “நீடிப்பது" மற்றும் "வெளியேறுவது" இரண்டிலும் உள்ள தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு நிகழ்ச்சிநிரல்களை ஏதேனும் வழியில் ஒப்புக் கொள்வதும், வேறுவிதமாக செய்வதும், அபாயகரமான அரசியல் குழப்பத்திற்கு விதை தூவி, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்திவிடும்.
சிக்கனத் திட்டம் மற்றும் போரால் முன்னிறுத்தப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மற்றும் நடந்து வரும் ஜனநாயக உரிமைகளின் சீரழிவைக் கடந்து வருவதற்கு, பிரிட்டனின் தொழிலாளர்கள், முதலாளித்துவ உயரடுக்குகளுக்கு எதிராகவும் மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கட்டமைக்கவும், ஐரோப்பிய தொழிலாளர்களுடன் ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி திங்களன்று பிரிட்டிஷ் வெகுஜன வாக்கெடுப்பின் மீது ஒரு விளக்கமான அறிக்கையைப் பிரசுரிக்கும்.