Print Version|Feedback
Pentagon inflates “China threat” to justify massive build-up in Asia
ஆசியாவில் பாரிய இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்துவதற்கு, பெண்டகன் "சீன அச்சுறுத்தலை" ஊதிப் பெரிதாக்குகிறது
By Peter Symonds 27 February 2016
இந்தோ-பசிபிக்கில் பெண்டகன் தீவிரப்படுத்தி வரும் இராணுவ கட்டமைப்பை நியாயப்படுத்த மற்றும் இராணுவ வரவு-செலவு திட்டத்தை விரிவாக்குவதற்கு அழுத்தமளிக்க, உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இவ்வாரம் தொடர்ச்சியான பல ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டனர். இதிலிருந்து, சீனாவுடனான போருக்கு முன்கூட்டிய தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன என்ற ஒரேயொரு முடிவுக்கு மட்டுமே வர முடியும்.
வியாழனன்று பிரதிநிதிகள் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழு முன் பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர் பேசுகையில், தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவ பிரசன்னத்தால் அங்கே பிராந்திய நாடுகளுக்கு இடையே "தவறான கணக்கீடு அல்லது மோதலுக்கான" அபாயத்தை சீனா அதிகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். “சீனாவின் நடவடிக்கை தன்னைத்தானே தனிமைப்படுத்தும் விளைவை ஏற்படுத்தக்கூடும், மேலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மற்றவர்களையும் அது செயலாற்ற தூண்டுகிறது,” என்று அவர் அறிவித்ததுடன், அமெரிக்காவின் கூட்டாளிகளும் பங்காளிகளும் அதிகரித்தளவில் இணைந்து இயங்கி வருவதாக தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன் 2010 இன் மத்தியில் அந்த போட்டிமிகுந்த கடற்பிரதேசத்தில் "சுதந்திர கடல் போக்குவரத்தை" உறுதிப்படுத்துவதில் அமெரிக்காவின் "தேசிய நலன்கள்" இருப்பதாக அறிவித்ததில் இருந்து, ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" ஒருங்குவிப்பு மையமாக தென்சீனக் கடல் ஆகியுள்ளது. பெய்ஜிங் மற்றும் அங்கே உரிமைகோரிவரும் அதன் போட்டியாளர்களுக்கு, மிக குறிப்பாக வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் க்கு இடையே ஒரு பிளைவை உண்டாக்க, அங்கே நீண்டகாலமாக நிலவி வரும் கடற்போக்குவரத்து பிரச்சினைகளை கைப்பற்றி வாஷிங்டன் வேண்டுமென்றே பதட்டங்களை தூண்டிவிடுகிறது.
அமெரிக்கா "சீனாவை கீழ்படிய வைக்க முனையாது" ஆனால் "அப்பிராந்தியத்தில் யாரும் மேலாதிக்கம் செலுத்துவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, நிச்சயமாக அமெரிக்காவை யாரும் வெளியே தள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது,” என்று கார்டர் வாதிட்டார். எவ்வாறிருப்பினும் அந்த "முன்னிலையின்" நோக்கம் துல்லியமாக ஆசியாவில் நடந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைப்பதற்காக ஆகும். அதற்காக சீனாவை வாஷிங்டனின் நலன்களுக்கு அடிபணிய வைப்பது அவசியப்படுகிறது. “நாம் தான் பசிபிக் இன் சக்தி. அங்கே நாம் தங்கியிருக்க வேண்டும்,” என்றவர் ஆணித்தரமாக அறிவித்தார்.
கார்ட்டரின் கருத்து, முப்படைகளது தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் ஜோ டன்போர்ட்டால் மீளவலியுறுத்தப்பட்டது. “பசிபிக்கிற்குள் செல்வதற்கான அல்லது பசிபிக்கிற்குள் சுதந்திரமாக செயல்படுவதற்கான நமது ஆற்றலை மட்டுப்படுத்தும் விதத்தில்" சீனா அதன் தகைமைகளை அபிவிருத்தி செய்து வருவதாக அவர் அக்குழுவின் முன் தெரிவித்தார். அமெரிக்கா "சீனாவிற்கு எதிராக அதன் போட்டித்தன்மை மிகுந்த அனுகூலங்களைக்" காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது, இதனால் தான் "நாம் [பாதுகாப்பு] துறையின் மிகவும் அதிநவீன இராணுவ தளவாடங்களைப் பசிபிக்கிற்குள் முதலில் நிலைநிறுத்தி வருகிறோம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த "முன்னிலையின்" பாகமாக, பெண்டகன் 2020 க்குள் அதன் விமானப்படை மற்றும் கடற்படை இருப்புகளில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக்கிற்குள் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் உடன் புதிய இராணுவத் தள ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டமை, அத்துடன் ஜப்பான், தென் கொரியா மற்றும் குவாம் இல் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை மறுகட்டமைப்பு செய்வது உள்ளடங்கலாக அமெரிக்க இராணுவ கட்டமைப்பு ஏற்கனவே வேகமாக நடந்து வருகின்றன. வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக என்ற சாக்கில், பெண்டகன் கொரிய தீபகற்பத்தில் "மூலோபாய உடைமைகளின்" அடித்தளத்தை, அதாவது அணுஆயுதமேந்த கூடிய விமானம் மற்றும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புமுறைக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.
அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் (PACOM) தளபதி அட்மிரல் ஹேரி ஹேரீஸ், செவ்வாய் மற்றும் புதனன்று முறையே, செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவை குழுவிற்கு விளக்கமளிக்கையில், மற்றும் வியாழனன்று பெண்டகனில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், இன்னும் அதிகமாக ஆத்திரமூட்டும் கருத்துக்களைக் கூறினார்.
கடந்த மே மாதம், PACOM தலைவராக பொறுப்பேற்ற ஹேரீஸ், "கடற்போக்குவரத்து சுதந்திர" நடவடிக்கைகளுக்காக என்று கூறி தென் சீனக் கடலில் சீனாவின் கடல்எல்லை உரிமைகோரல்களுக்கு நேரடியாக சவால் விடுக்க ஆக்ரோஷமாக அழுத்தமளிக்கிறார். கடந்த அக்டோபரில் மற்றும் மீண்டும் ஜனவரியில், அமெரிக்க போர்க்கப்பல்கள் வேண்டுமென்றே சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திட்டுக்களை சுற்றி 12 கடல்-மைல் தொலைவுக்குள் ஊடுருவின.
பெண்டகன் பத்திரிகையாளர் கூட்டத்தில், ஹேரீஸ், தென் சீனக் கடலில் சீன நடவடிக்கைகளால் முன்வைக்கப்பட்ட "அச்சுறுத்தலை" ஒட்டுமொத்தமாக ஊதிப் பெரிதாக்கினார். “அவர்கள் தென் சீனக் கடலை இராணுவமயப்படுத்தி வருகிறார்கள் என்பதே என் கருத்து. அவர்கள் தென் சீனக் கடலில் இராணுவ தளங்களுக்காக ஏறக்குறைய 3,000 ஏக்கரை உரிமைக் கோரியுள்ளனர்,” என்றவர் அறிவித்தார். ஒரு விரல்விட்டு எண்ணக்கூடிய ஸ்ப்ராட்லி கடல்குன்றுகள் மீது சீனா பரவலாக நில உரிமைகோரலில் ஈடுபட்டுள்ளது என்றாலும், அது "இராணுவ தளங்களுக்காக 3,000 ஏக்கர்கள்" என்று கூறுவது அர்த்தமற்றதாகிறது.
ஒரு வாரகால காங்கிரஸ் விளக்க உரையை அடுத்து, பாரசீல்களில் சீனாவின் நிர்வாக மையமாக உள்ள வூடி தீவில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு ஏவுகணை கலங்கள் (missile batteries) மற்றும் போர் விமானங்களை, அத்துடன் ஸ்ப்ராட்லி தீவுகளில் அனேகமாக ராடார் நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியமும் இருப்பதாக குறிப்பிடும், கட்டுரைகள் அமெரிக்க ஊடகங்களில் நிரம்பி வழிந்தன. இத்தகைய வெகுவாக-உயர்த்திக்காட்டப்பட்ட கதைகள் கூட ஹேரீஸின் உயர்வு நவிற்சிக்குக் குறைவாகவே இருந்தன.
ஹேரீஸ் சீனாவை எதிர்க்க, அது உரிமைகோரும் கடல் எல்லைகளில் இன்னும் அதிகமாக "கடற்போக்குவரத்து சுதந்திரம்" மீது சவால்களை விடுக்க அழைப்புவிடுத்தார். "அதே எண்ணம் கொண்ட" ஏனைய நாடுகளும் அவ்வாறே செய்ய அவர் வலியுறுத்தினார். தற்போது, அதேபோன்ற அதன் சொந்த நடவடிக்கைகளை நடத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் கணிசமான அளவிற்கு வாஷிங்டனின், மற்றும் அத்துடன் உள்நாட்டில் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் அழுத்தத்தின் கீழ் உள்ளது.
தென் சீனக் கடலில் சீனா ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை (ADIZ) அறிவிக்கக்கூடும் என்றும் வாதிட்டார், அதை அவர் "ஸ்திரமின்மைப்படுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும்" நடவடிக்கையாக முத்திரை குத்தினார். பெய்ஜிங் மீதான மற்றொரு கணக்கிட்ட அவமதிப்பில், “அவர்கள் கிழக்குச் சீனக் கடல் பகுதியில் கொண்டு வந்த வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை புறக்கணித்ததைப் போல இதையும் நாம் புறக்கணிக்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். 2013 இன் இறுதியில் கிழக்குச் சீனக் கடலில் சீனா ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை அறிவித்தபோது, பெண்டகன் அறிவிப்பின்றி இரண்டு B-52 மூலோபாய குண்டுவீசிகளை அனுப்பி, வேண்டுமென்றே ஒரு மோதல் அபாயத்தை உருவாக்கியது.
ஆசிய பசிபிக்கில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கம் பலவீனப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, ஹேரீஸ், சீனா உடன் போருக்கான தயாரிப்பின் அவசியத்தை வெளிப்படையாக எழுப்பினார். “தென் சீனக் கடலில் அவர்கள் உரிமைகோருகின்ற இடங்களின் சகல இராணுவ தளங்களையும் சீனா தொடர்ந்து ஆயுதமயப்படுத்தினால், அவர்கள் அப்பிராந்தியத்தில் செயல்பாட்டுக் களத்தை மாற்றிவிடுவார்கள். அமெரிக்கா உடனான போர் தறுவாயில், சீனா தென் சீனக் கடலில் நடைமுறையளவில் கட்டுப்பாட்டை பெற்றிருக்கும்,” என்றவர் தெரிவித்தார்.
ஆச்சரியத்திற்கிடமின்றி, பெய்ஜிங் ஹேரீஸின் கருத்துக்களுக்குக் கடுமையாக எதிர் செயலாற்றியது. சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், அட்மிரல் "தென் சீனக் கடலில் சீனாவின் நியாயமான மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு அழுக்குபூச மற்றும் முரண்பாடுகளை விதைக்க" விரும்புகிறார் என்று அறிவித்தார். “அவர் அக்கடல் பகுதியில் அமெரிக்க கடற்போக்குவரத்து மேலாதிக்கத்திற்காக இராணுவ பலத்தைப் பிரயோகிக்க ஒரு சாக்குபோக்கைத் தேடி வருகிறார்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
சீனா மீதான போருக்குப் பெண்டகனின் வான்வழி-கடல்வழி போர் மூலோபாயம், தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது, அது ஒரு கடற்படை முற்றுகையுடன் சேர்ந்து, சீனப் பெருநிலத்தின் மீது ஒரு பாரிய வான்வழி தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலைக் கொண்டு வரும் என்பது சீன ஆட்சிக்கு நன்கு தெரியும். எவ்வாறிருந்த போதினும், பெய்ஜிங்கின் விடையிறுப்பில் அங்கே எந்த முற்போக்குத் தன்மையும் இல்லை. ஒருபுறம் அது வாஷிங்டனுடன் சமரசம் கோருவதில் ஈடுபடுகிறது, மறுபுறம், அமெரிக்காவின் பாரிய இராணுவ கட்டமைப்புக்கு அதற்கு ஒரு போலிக்காரணத்தை மட்டுமே வழங்கும் வகையில், அது ஆயுத போட்டியில் இறங்குகிறது.
செவ்வாயன்று செனட் சபையின் ஆயுதச் சேவை குழுவின் முன்னால் விளக்கமளிக்கையில், ஹேரீஸ் இந்தோ-பசிபிக்கில் ஒரு மிகப்பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கிற்கான அவரது கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்தார். அவர் பாதுகாப்புத்துறை செயலர் கார்ட்டரின் கருத்துக்களை மேற்கோளிட்டார்: “ஆத்திரமூட்டும் நடவடிக்கை எடுப்பதிலிருந்து அவர்களைத் தடுக்க வேண்டும் அல்லது அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அதற்காக அவர்கள் மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும் விதத்தில், ஏற்றுக்கொள்ள முடியாதளவில் விலை கொடுக்கச் செய்யும் ஒரு முன்கூட்டிய ஆக்ரோஷ நடவடிக்கைக்கான ஆற்றலை நாம் கொண்டிருக்க வேண்டும், அவ்விதமான ஆற்றலை நாம் கொண்டிருப்பதாக பார்க்கப்பட வேண்டும்,” என்றார்.
“அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும், குறிப்பாக வேகமான, மிகவும் பயங்கரமான, மிகவும் பலமான ஆயுத அமைப்புமுறைகளைக் கொண்ட போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள்" PACOM க்கு அவசியப்படுவதாக ஹேரீஸ் வலியுறுத்தினார். “ஒவ்வொரு தளத்திலும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் நமக்கு வேண்டும். இறுதியாக நமக்கு ஒரு வலையமைப்பு கொண்ட படை அவசியப்படுகிறது, இது நடவடிக்கை அல்லது விடையிறுப்புக்கு பெரியளவில் விருப்புரிமைகளை வழங்கும்,” என்றார்.
குறிப்பாக, தாக்கும் திறனுள்ள கண்காணிப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் அவருக்கு தேவைப்படுவதில் சுமார் 62 சதவீதத்தை மட்டுமே அமெரிக்க கடற்படை அவருக்கு வழங்குவதாக அட்மிரல் குறைகூறினார். “பற்றாக்குறையில் இருக்கும் அதிமுக்கிய வெடிப்பொருட்கள் முக்கிய முன்னுரிமை மற்றும் கவலைக்குரியதாகும்,” என்றார். “தாக்குதலுக்கான தயார்நிலையினது ஒரு பிரதான கூறுபாடு வெடிப்பொருட்களாகும். வெடிப்பொருள் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, மற்றும் முன்கூட்டிய நிலைநிறுத்தல் ஆகியவற்றில் USPACOM படைகளுக்கு அபிவிருத்தி தேவைப்படுகிறது, ஆனால் நிதிய அழுத்தங்கள் இதை அபாயத்தில் நிறுத்தி உள்ளன,” என்றார்.
பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவை குழுவின் முன்னால் புதனன்று அவரது விடயத்திற்கு அழுத்தமளிக்கையில், ஹேரீஸ், அதிக ஆயுதங்கள் மற்றும் நிதிகளுக்கான அவரது கோரிக்கைகளின் உள்நோக்கத்தை குறித்து பின்னடிக்கவில்லை. “இன்று நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அங்கே சௌகரியமாக இருக்கிறோம், ஆனால் இன்று நாம் போரில் இல்லை, [இது] ஒரு முக்கியமான புள்ளி என்றே நான் கருதுகிறேன்,” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துல்லியமாக சீனா உடனான ஒரு போருக்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.