Print Version|Feedback
Trump picks oil mogul as secretary of state
ட்ரம்ப் எண்ணெய் நிறுவன அதிபரை வெளியுறவுத்துறை செயலராக தேர்ந்தெடுக்கிறார்
Patrick Martin
14 December 2016
டொனால்ட் ட்ரம்பின் வெளியுறவுத்துறை செயலர் வேட்பாளராக எக்சன்மொபில் தலைமை செயலதிகாரி றெக்ஸ் ரில்லர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் மைல்கல்லாகும். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக, ஒரு பெருநிறுவன தலைமை செயலதிகாரி அமெரிக்க அரசின் வெளியுறவு கொள்கைக்கு பொறுப்பாக கொண்டு வரப்பட்டிருக்கிறார். இவர் வெறுமனே ஏதோவொரு நிர்வாகி மட்டுமல்ல, மாறாக உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான பெருநிறுவனங்களில் ஒன்றின் தலைமை செயலதிகாரியாவார். அமெரிக்க செல்வந்த ஆட்சியின் இலாபங்கள் மற்றும் செல்வ வளத்தை அதிகரிப்பதே ட்ரம்ப் நிர்வாகத்தின் மைய இலக்கு என்பதை இதை விட வேறெதுவும் தெளிவாக வரையறுக்க முடியாது.
எக்சன்மொபிலில் ரில்லர்சனின் தலைமை செயலதிகாரி பாத்திரம் குறித்து கூறாமல், ரஷ்யாவுடனான அவரின் தொடர்புகளைக் கண்டித்து, ஜனநாயக கட்சி அந்த முன்நிறுத்தலுக்கு விடையிறுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். குடியரசு கட்சியினரைப் போலவே பில்லியனர்களுக்கு அடிபணிந்து நடக்கும் ஜனநாயகக் கட்சியினர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான ட்ரம்பின் தொடர்புகள் குறித்து கூறப்படும் அவர்களது பிரச்சாரத்திற்கு அழுத்தமளிக்க, உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா உடனான ரில்லர்சனின் எண்ணற்ற வியாபார நடவடிக்கைகளைக் கைப்பற்றி உள்ளனர்.
இந்த பிரச்சாரம், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் “ரஷ்ய இணையவழி ஊடுருவல்" மேலோங்கி இருந்தன மற்றும் ஜனாதிபதி தேர்வு சபையில் ட்ரம்ப் சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற அவை உதவின என்ற போலி வாதங்களைச் சுற்றி சுழன்று வருகிறது. உலக சோசலிச வலைத் தளம் விளங்கப்படுத்தியதைப் போல, தேர்தலில் அளவுக்கு மிஞ்சிய ரஷ்ய செல்வாக்கு இருந்ததாக கூறப்படும் கூற்றுகள் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் வெளியுறவு கொள்கை மீது நிலவும் கருத்துவேறுபட்ட மோதலின் விளைபொருளாகும், இது சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அனுபவித்துள்ள மூலோபாய தோல்வியாலும் மற்றும் வாஷிங்டனின் உலகளாவிய இராணுவ கட்டமைப்பு முதலில் ரஷ்யா இலக்கில் வைக்க வேண்டுமா அல்லது சீனாவை இலக்கில் வைக்க வேண்டுமா என்பதன் மீதான பிளவுகளாலும் உந்தப்பட்டுள்ளது.
ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரம் ஓரளவிற்கு கட்சிகளின் எல்லைகளை கடந்து செல்கின்றது. பெரும்பாலான செனட் ஜனநாயகக் கட்சியினர் ரில்லர்சன் கொண்டு வரப்படுவது குறித்து கருத்து பேதங்களை வெளியிட்டுள்ள போதினும், பெண்டகனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள குடியரசு கட்சியினரிடம் இருந்தே மிகவும் சீற்றமான கண்டனங்கள் வந்துள்ளன.
மிகப்பெரிய ரஷ்ய எண்ணெய் நிறுவனமான Rossneft உடனான ஒரு பெரும் எண்ணெய் உடன்படிக்கைக்குப் பின்னர் 2011 இல் ரில்லர்சன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் இருந்து ஒரு விருது பெற்றார் என்று செனட்டர் ஜோன் மெக்கெயின் சாடினார். “ஒரு கொலைகாரரிடம் இருந்து அவர் நட்புறவு விருது பெறுகிறார் என்றால், வெளிப்படையாகவே, அதுவொரு பிரச்சினை தான், அது ஆராயப்பட வேண்டுமென நான் நினைக்கிறேன்,” என்றார்.
ட்ரம்பை குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை எதிர்த்த புளோரிடாவின் செனட்டர் மார்க்கோ ரூபியோ, “ஒரு #வெளியுறவுத்துறை செயலர் 'விளாடிமீர் இன் நண்பராக' இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று எழுதி, ஆரம்பத்தில் அதேபோன்றவொரு கண்ணோட்டத்தை ட்வீட் செய்திருந்தார்.
நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இல் வெளியான தலையங்கங்களும் அவர் வேட்பாளராக நிறுத்தப்படுவதை அதேபோன்ற தொனியில் தாக்கின. டைம்ஸ் எழுதியது, “வெளியுறவுத்துறைக்கு தலைமை கொடுக்க திரு. ரில்லர்சனையும் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கல் ஃபிளின் ஐ அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பெயரிட்டு, திரு. ட்ரம்ப் இரண்டு உயர்மட்ட தேசிய பாதுகாப்பு பதவிகளுக்கு ரஷ்ய-ஆதரவு அனுதாபிகளை நிறுத்தியுள்ளார்.”
“[ரில்லர்சனை] வேட்பாளராக நிறுத்தியதென்பது ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஏனைய இடங்களிலும் முக்கிய அமெரிக்க நலன்களை திரு. ட்ரம்ப் விற்றுதள்ளக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்,” என்று போஸ்ட் எச்சரித்தது. “ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து அவர் நிறுவனங்கள் பெற்றுள்ள எந்தவொரு முதலீடுகள் அல்லது கடன்களை" வெளியிடுவதற்கு ட்ரம்ப் நிர்பந்திக்கப்பட வேண்டுமென அப்பத்திரிகை அறிவுறுத்தியது.
ரில்லர்சனை வேட்பாளராக நிறுத்தியதன் மீதான வெளிப்படையான மோதல்கள் உட்பட அதில் உள்ளடங்கியுள்ள அம்சங்கள் பற்றி இவ்விடயத்தில் ஜனநாயகக் கட்சியினரும் அந்த தாராளவாத பத்திரிகையாளர்களும் ஒருமுகப்பட குறிப்பிடாமல் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ExxonMobil மிகப்பெரும் இலாப நலன்களைக் கொண்டுள்ள பல பகுதிகளில் வெளியுறவுத்துறை செயலராக ரில்லர்சன் முக்கிய பாத்திரம் வகிக்கக்கூடும்:
* Calgary இல் உள்ள (Exxon பெரும்பான்மை கொண்டுள்ள) Imperial Oil நிறுவனம் உலக சந்தையை எட்டும் வகையில், கனடாவின் எண்ணெய் நிலங்களை அமெரிக்க சுத்திகரிப்பு ஆலைகளுடன் இணைக்கும் Keystone எரிவாயு குழாய் இணைக்கப்படும்.
* பாக்தாத்தில் அமெரிக்க ஆதரவிலான மத்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை மதியாமல், ஈராக்கின் வடக்கு பகுதியில் எண்ணெய் வயல்களை அபிவிருத்தி செய்ய குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துடன் Exxon இலாபமுள்ள ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
* பில்லியன் கணக்கான டாலர்களுக்காக சர்வதேச தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளுக்காக ExxonMobil வெனிசூலாவை இலக்கில் வைத்துள்ளது.
* பாரசீக வளைகுடாவில், குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் கட்டாரில் ExxonMobil அதன் மிகப் பெரிய சில உடன்படிக்கைகளைக் கொண்டுள்ளது.
* மெக்சிகோ, இது சமீபத்தில் தான் அதன் மிகப்பெரிய எண்ணெய் தொழில்துறையை அன்னிய முதலீட்டுக்கு திறந்து விட்டுள்ள நிலையில், அமெரிக்க அரசின் பலமான அழுத்தத்தின் கீழ் உள்ளது. இதில் ExxonMobil முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தில், இவையெல்லாம் முரண்பாடுகளாக கருதப்படுவதில்லை, மாறாக சாதக அம்சங்களாக கருதப்படுகின்றன. நாடுகளை மிரட்டுவது மற்றும் ஜனாதிபதிகள் மற்றும் பிரதம மந்திரிகளை விலைக்கு வாங்குவது ஆகியவற்றில் ரில்லர்சனின் அனுபவம்தான் துல்லியமாக வெளியுறவுத்துறைக்கு தேவைப்படுகிறது போலும். இதனால் தான், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர்கள் ஜேம்ஸ் பேக்கர் மற்றும் கொண்டாலிசா ரைஸ், முன்னாள் துணை ஜனாதிபதி டிக் ஷென்னி, மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ரோபர்ட் கேட்ஸ் போன்ற, (எண்ணெய் தொழில்துறையில் நெருங்கிய தொடர்புகள் கொண்டுள்ள) தேசிய பாதுகாப்பு ஸ்தாபகத்தின் இதுபோன்ற பிரமுகர்களால் அவர் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.
ரில்லர்சன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது இன்னுமொரு அர்த்தத்திலும் ஒரு மைல்கல்லாகும். இலட்சாதிபதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் மேலாளுமை கொண்ட ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அது இறுதி உருவடிவத்தை கொடுக்கிறது. ட்ரம்ப் இல் இருந்து ஆரம்பித்த பில்லியனர்களில், வர்த்தகத்துறை செயலர் வில்பர் ரோஸ்(நிலக்கரி சுரங்கங்கள், எஃகு ஆலைகள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களது தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கி மூடியதில் இருந்து திரட்டிய 3 பில்லியன் டாலருடன்), Amway fortune இன் 5 பில்லியன் டாலர் உரிமையாளரான பெட்சி டிவோஸ் கல்வித்துறை செயலாளராக, சிறு வணிக நிர்வாக தலைவர் லின்டா மக்மஹோன் (World Wrestling Entertainment நிறுவனத்தின் துணை-உரிமையாளரும் பில்லியனருமான) ஆகியோரும் இணைந்தனர். வர்த்தகத்துறையில் ரோஸ் இன் துணை செயலரும், TD Ameritrade சொத்து நிறுவனத்திற்கு வாரிசும் மற்றும் Chicago Cubs நிறுவனத்தின் உரிமையாளருமான Todd Ricketts உம் ஒரு பில்லியனர் ஆவார்.
இந்த பில்லியனர்களோடு அவர்களை விட சற்று குறைந்த செல்வந்தர்களான வங்கியாளர்கள் மற்றும் தலைமை செயலதிகாரிகளும் இணைந்துள்ளனர்: நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் ($50–$100 மில்லியன்) மற்றும் தேசிய பொருளாதார குழுவிற்குத் தலைமை தாங்கும் கேரி கோஹ்ன் ($300 மில்லியன்), இவர்கள் இருவரும் கோல்ட்மன் சாக்ஸ் இல் இருந்து வந்தவர்கள்; அவரது Carl’s Jr. மற்றும் Hardee இன் பல உணவுவிடுதிகளில் குறைந்தபட்சம் 30 மில்லியன் டாலர் பங்குகள் வைத்துள்ள தொழிலாளர் துறை செயலர் ஆன்ட்ரூ புஜ்டர்; மற்றும் இப்போது ரில்லர்சன், ExxonMobil பங்குகளில் 238 மில்லியன் டாலர் மற்றும் 70 மில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்பில் ஓய்வூதிய வருமானம் பெறவுள்ள இவரின் தனிப்பட்ட சொத்துக்கள் 300 மில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.
ஒரு அமெரிக்க ஜனாதிபதி இந்தளவிற்கு செல்வவள திரட்சியைக் கொண்ட ஒரு மந்திரிசபையை தேர்ந்தெடுப்பதில் இதற்கு முன்னுதாரணமே இல்லை. ட்ரம்பின் நிர்வாகம் ஒரு வரலாற்று விபத்து அல்ல, மாறாக ஒவ்வொரு அமெரிக்க அமைப்பையும் மேலாளுமை செய்ய வந்துள்ள ஒரு சிறிய, ஒட்டுண்ணித்தனமான நிதிய பிரபுத்துவம் எந்த ஒரு நீடித்த அரசியல் நடைமுறைகளினூடாக வந்ததோ அதன் விளைவாகும். அமெரிக்க சமூகம் பெருஞ்செல்வந்தர்களின் பிடியில் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது.
இந்த பில்லியனர்களோடு சேர்ந்து, சமூக திட்டங்கள் மற்றும் அவற்றை நெறிமுறைப்படுத்தும் அமைப்புகளைக் உடைப்பதுடன் அடையாளம் காணப்படும் வலதுசாரி அரசியல் பிரமுகர்களை, அத்துறைகளையே மேற்பார்வையிடுவதற்காக, ட்ரம்ப் கொண்டு வந்துள்ளார். மருத்துவக் கவனிப்பு (Medicare) மற்றும் மருத்துவ சிகிச்சை உதவி (Medicaid) க்கு எதிரியான, சுகாதார மற்றும் மனிதவள சேவைகளுக்கான துறைக்கு தலைமை தாங்க உள்ள பிரதிநிதி டோம் பிரைஸ்; வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறைக்கு தலைமை தாங்க உள்ள அதிதீவிர வலது முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் பென் கார்சன்; எரிசக்தித்துறையை நிர்வகிக்க உள்ள முன்னாள் டெக்சாஸ் ஆளுநர் ரிக் பெர்ரி; மற்றும் மாசு-கட்டுப்பாட்டு விதிமுறைகளை முடக்குவதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் மீது இப்போது வழக்கு தொடுத்துள்ள, அதையே நிர்வகிக்க உள்ள ஒக்லஹாமா அட்டார்னி ஜெனரல் Scott Pruitt ஆகியோர் இதில் உள்ளடங்குவர்.
மூன்று உயர்மட்ட தேசிய பாதுகாப்பு பதவிகளுக்கு, ட்ரம்ப் ஓய்வுபெற்ற தளபதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்: மைக்கல் ஃபிளினை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, பாதுகாப்புத்துறையை நிர்வகிக்க ஜேம்ஸ் மாட்டிஸை, உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு தலைமை கொடுக்க ரோபர்ட் கெல்லியை தேர்ந்தெடுத்துள்ளார்.
இவற்றில் எதுவுமே தற்செயலாக நடந்ததில்லை. ட்ரம்ப் நிர்வாகம், பில்லியனிய செல்வந்த ஆதிக்கக்குழு, அதிதீவிர வலது சித்தாந்தவாதிகள் மற்றும் இராணுவ உயரடுக்கு ஆகியவை ஒன்றிணைந்து வரவிருப்பதை பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த வரிகளின் முழு அர்த்தத்தில், இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் ஜனநாயக விரோத அரசாங்கமாக உள்ளது.