Print Version|Feedback
Trump’s phone call with Taiwan: A provocation against China
தாய்வான் உடனான ட்ரம்பின் தொலைபேசி உரையாடல்: சீனாவிற்கு எதிரான ஓர் ஆத்திரமூட்டல்
Peter Symonds
6 December 2016
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னிடம் (Tsai Ing-wen) இருந்து கடந்த வெள்ளியன்று ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம், தசாப்தகால இராஜாங்க நடைமுறையை தலைகீழாக்குவதற்கு, அவர் பதவி ஏற்கும் வரை கூட காத்திருக்கவில்லை. அந்த உரையாடல் 1979 க்கு பின்னர் அவ்விரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான முதல் கலந்துரையாடலாகும். அப்போது அமெரிக்கா, சீனா முழுவதற்கும் ஒரே சட்டபூர்வமான அரசாங்கமாக பெய்ஜிங்கை மட்டுமே அங்கீகரிக்கும் அதன் "ஒரே சீனா" (One China) கொள்கையின் பாகமாக தாய்வான் உடனான இராஜாங்க உறவுகளை நிறுத்தியது.
அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதென்ற ட்ரம்பின் தீர்மானம் தவறானது அல்லது மடத்தனமானது என்ற ஊடக அறிவுறுத்தல்களை ஞாயிறன்று வெளியான வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை ஒன்று மறுத்துரைக்கிறது. அதற்கு பதிலாக, அது, “தாய்வானுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான ஒரு புதிய மூலோபாயம் குறித்த ட்ரம்ப் ஆலோசகர்களது பல மாதகால சத்தமில்லா தயாரிப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் விளைவாகும்,” மேலும் "சீனாவுடன் ஒரு கடுமையான பாதையைத் திறப்பதற்கு ட்ரம்பை வலியுறுத்தும் கடுமையான ஆலோசகர்களின் கண்ணோட்டத்தை" அது பிரதிபலித்தது.
அவரது தேர்தல் வெற்றிக்காக ட்ரம்பை வாழ்த்துவதற்காக என்று பெயரளவிற்கு கூறப்படும் சாய் இன் தொலைபேசி அழைப்பை ஏற்பதென்ற முடிவு, இராஜாங்கரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியில் சீனாவுடனான ஓர் ஆக்ரோஷமான மோதலுக்கு களம் அமைக்க நோக்கம் கொண்ட ஒரு வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட மற்றும் கணக்கிட்ட ஓர் ஆத்திரமூட்டலாகும்.
ஞாயிறன்று ட்ரம்ப் பின்வருமாறு ட்வீட் செய்ததன் மூலமாக அது வெறுமனே ஒரு தொலைபேசி அழைப்பு சம்பந்தப்பட்டதல்ல அதைவிட கூடுதலானது சம்பந்தப்பட்டிருப்பதை தெளிவுபடுத்தினார்: “(நமது நிறுவனங்கள் போட்டியிடுவதைக் கடினமாக்கும் விதத்தில்) அவர்களது செலாவணியை மதிப்பிறக்கம் செய்வதோ, (அவர்கள் மீது அமெரிக்கா வரி விதிக்காத நிலையில்) அவர்களது நாட்டுக்கு அனுப்பப்படும் நமது பண்டங்கள் மீது பெரும் வரி விதிப்பதைதோ அல்லது தென் சீனக் கடலின் மத்தியில் ஒரு பாரிய இராணுவ அமைப்பை தான் கட்டமைப்பதையோ சரியென நம்மிடம் கேட்டுக் கொண்டிருக்குமா? அவ்வாறு செய்யுமென நான் நினைக்கவில்லை!” என்று குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப் அவரின் தேர்தல் பிரச்சாரத்தின் போக்கில் சீனாவை சாடியிருந்தார், அதையொரு செலாவணி திருகுதாளம் செய்யும் நாடாக முத்திரை குத்தி சீன இறக்குமதிகள் மீது 45 சதவீத வரி விதிக்க அச்சுறுத்தி இருந்தார். எவ்வாறிருப்பினும் ஒபாமா நிர்வாகம் சீனா மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்காக மூன்று முறை அதன் கட்டுப்பாட்டிலுள்ள தீவுக்குன்றுகளைச் சுற்றி பன்னிரெண்டு கடல் மைல் எல்லைக்குள் போர்க்கப்பல்களை அனுப்பி பதட்டங்களை தூண்டிய, அந்த தென் சீனக் கடல் குறித்து ட்ரம்ப் சில குறிப்புகளைக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் நிர்வாகம், “ஒரே சீனா" கொள்கையைக் கைவிடச் செய்ய தாய்வானுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தும் என்றும், சுட்டிக்காட்டியதன் மூலமாக, ட்ரம்ப் பொறுப்பற்ற விதத்தில் உலகின் மிகவும் அபாயகரமான மற்றும் கொந்தளிப்பான வெடிப்பு புள்ளிகளில் ஒன்றுக்கு நெரூப்பூட்டி, சீனாவுடனான மோதல் அபாயத்தை எடுத்துள்ளார். தாய்வானை பிரிந்துபோகவிரும்பும் பிரதேசமாக கருதும் பெய்ஜிங், தாய்வான் அரசாங்கம் உத்தியோகபூர்வ சுதந்திரத்தை அறிவிப்பதைத் தடுக்க அது போருக்குள் இறங்கும் என்று அறிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறை தலைமை தளபதியாக ட்ரம்ப் பதவி வழங்கியுள்ள ரியன்ஸ் பிரைபஸ் (Reince Priebus) உட்பட ட்ரம்பின் இடைக்கால குழு மற்றும் வரவிருக்கும் நிர்வாகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தாய்வானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. அவர் (ரியன்ஸ் பிரைபஸ்) குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் குழுவுடன் 2011 இல் மற்றும் மீண்டும் 2015 ஆக்டோபரிலும் தாய்வானுக்கு விஜயம் செய்து, சாய் இந்தாண்டு தாய்வான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே அவரை சந்தித்திருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. தாய்வான் வெளியுறவு அமைச்சர் டேவிட் லீ, ரியன்ஸ் பிரைபஸ் ஐ ஒரு நண்பராக குறிப்பிட்டுள்ளதுடன், அவரது நியமனத்தை அத்தீவுக்கான "நற்செய்தியாக" விவரித்தார்.
ட்ரம்ப்பின் கூட்டாளிகள் குடியரசுக் கட்சி தேர்தல் செயல்திட்டத்தில் தாய்வானுக்கு ஆதரவான ஒரு வகைமுறையை, அதாவது “ஜனநாயகம், மனித உரிமைகள், சுதந்திர சந்தை பொருளாதாரம், மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான மதிப்புகளை அதனுடன் [தாய்வானுடன்] நாம் பகிர்ந்து கொள்கிறோம்,” என்பதை, சேர்த்திருப்பதாகவும் போஸ்ட் குறிப்பிட்டது. வெளிப்படையாகவே பெய்ஜிங்கிற்கு விரோதமாக உள்ள அந்த செயல்திட்டம் “சீனாவுடனான நமது எதிர்கால உறவுகள் குறித்த நமது கடந்த செயல்திட்டத்தின் நம்பிக்கைதரும் வாசகங்களுடன் சீனாவின் நடவடிக்கை முரண்படுகிறது” என்று அறிவித்தது.
ட்ரம்ப் தாய்வானை அரவணைப்பதன் மூலமாக, ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ஹென்றி கிஸ்ஸிங்கர் நிலைநிறுத்திய "ஒரே சீனா" (One China) கொள்கையை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தி உள்ளார். 1972 இல் பெய்ஜிங்கிற்கான நிக்சனின் விஜயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வீழ்ச்சியின் ஒரு தீர்க்கமான அறிகுறியுடன் பொருந்தி இருந்தது —இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கமைப்பின் அச்சாணியாக இருந்த டாலர்-தங்கம் பரிவர்த்தனை, ஆகஸ்ட் 1971 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
பெய்ஜிங்கை அங்கீகரித்ததன் மூலமாக மற்றும் தைப்பேய் (Taipei) க்கான ஆதரவை திரும்ப பெற்றதன் மூலமாக, நிக்சன் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்தை பலவீனப்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியினது ஒத்துழைப்பை பெற்றது. வாஷிங்டன் உடனான சீனாவின் கூட்டணி, நடைமுறையில் 1991 சோவியத் ஒன்றிய பொறிவுக்குப் பின்னர் தீவிரமடைந்த முதலாளித்துவ மீட்சி நிகழ்முறைக்கு ஒரு முன்னறிவிப்பாக இருந்தது. இது மாபெரும் மலிவு உழைப்பின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய உற்பத்தி மையமாக சீனாவின் மாற்றுவதற்குகான பாரிய ஏகாதிபத்திய முதலீட்டிற்கு இட்டுச் சென்றது.
சீனாவை உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ள அதன் விரிவாக்கமும், ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் வீழ்ச்சியும் அவற்றின் பங்காண்மையை துண்டு துண்டாய் கிழித்தெறிந்துள்ளது. பொருளாதார வழிவகைகளைக் கொண்டு இனியும் அதன் மேலாதிக்கத்தை பேண முடியாமல் அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்தின் முடிவுக்குப் பின்னர் இருந்து அதிகரித்தளவில் இராணுவ வழிவகைகள் மீது தங்கியுள்ளது. அமெரிக்க தலைமையிலான ஒரு கால் நூற்றாண்டு போர்கள் இப்போது அணுஆயுதமேந்திய சீனா மற்றும் ரஷ்ய ஆட்சிகளுடனான மோதல்களாக ஒன்று திரண்டு வருகின்றன மற்றும் இது ட்ரம்பின் கீழ் தீவிரப்படுத்தப்படும்.
“ஆசிய-பசிபிக்கிற்கான பலமான தொலைநோக்கு பார்வை மூலமாக டொனால்ட் ட்ரம்பின் சமாதானம்" என்று தலைப்பிட்டு நவம்பர் 7 அன்று Foreign Policy வலைத் தளத்தில் வெளியான ஒரு குறிப்பிடத்தக்க கருத்துரை, தாய்வான் சம்பந்தமாக மட்டுமல்ல, மாறாக அப்பிராந்தியம் முழுவதையும் சம்பந்தப்படுத்தி சீனாவை நோக்கிய ஒரு மோதல் கொள்கையை வரையறுக்கிறது. ட்ரம்ப் அவரது தனிமைப்படுத்திக் கொள்ளும் ஒரு நிலைப்பாட்டை ஏற்பதில் இருந்து விலகி, ஒபாமா நிர்வாகத்தின் ஆக்ரோஷமான "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" இரட்டிப்பாக்க விரும்புகிறார்.
“ட்ரம்பின் உயர்மட்ட பொருளாதார மற்றும் ஆசிய ஆலோசகர்களில் ஒருவராக" போஸ்ட் ஆல் வர்ணிக்கப்படும் பீட்டர் நவார்ரோ மற்றும் அலெக்சாண்டர் கிரே ஆல் எழுதப்பட்ட கருத்துரை, நிறைய வாக்குறுதியளித்த ஆனால் செயலில் செய்யத் தவறிய ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" சாடுகிறது. இந்த முன்னெடுப்பு "உரக்க பேசினாலும், ஆனால் அதற்கு பின்னால் ஒன்றுமே இல்லாதவாறு அப்பிராந்தியத்தில் நிறைய ஆக்ரோஷம் மற்றும் ஸ்திரமின்மைக்கு இட்டுச் சென்றுள்ள ஒரு புத்திசாலித்தனமற்ற விடயமாக மாறிவிட்டது," என்று அது அறிவிக்கிறது.
அமெரிக்க இராணுவத்தை குறிப்பாக கடற்படையை குறைத்து, அவ்விதத்தில் "கிழக்கு மற்றும் தென்சீனக் கடல்களில் சீனாவின் ஆக்ரோஷத்தை வரவேற்று" இருப்பதற்காக நவார்ரோ மற்றும் கிரே ஒபாமா நிர்வாகத்தைக் கடுமையாக கண்டிக்கிறார்கள். அவர்கள் ஒபாமாவினது "வடகொரியா உடனான 'மூலோபாய சகிப்புத்தன்மையின்' தோல்வியடைந்த கொள்கையையும்" தாக்குகிறார்கள், அது "ஸ்திரமின்மை மற்றும் அதிகரித்த அபாயத்தை உயர்த்திருப்பதை தவிர வேறொன்றையும் உருவாக்கவில்லை" என்று அறிவிக்கிறார்கள். அவர்களது கருத்துரை தாய்வானை "ஆசியாவினது ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக" பாராட்டுவதுடன், ஒபாமா அதை கையாண்ட விதம் "சம அளவில் அதிர்ச்சியூட்டுவதாக" உள்ளது என்று அறிவிக்கின்றனர்.
யதார்த்தத்தில், ஒபாமாவின் "முன்னெடுப்பு", புஷ் நிர்வாகத்தின் வெளியுறவு மற்றும் மூலோபாய கொள்கையிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக இருந்தது, அது ஆசிய பசிபிக்கை நடைமுறையளவில் தவிர்க்கும் வகையில் மத்திய கிழக்கு மீது ஒருமுனைப்பட்டிருந்தது. ஒபாமா நிர்வாகம் சீனாவை தனிமைப்படுத்த, அதை பொருளாதாரரீதியில் பலவீனப்படுத்த மற்றும் இராணுவரீதியில் சுற்றி வளைக்க ஒரு பரந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தென் சீனக் கடலில் இராணுவ ஆத்திரமூட்டல்கள், வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுப்பு, மற்றும் தாய்வானுக்கு கடந்த ஆண்டு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை ஆகியவை இதில் உள்ளடங்கும்.
ஜனாதிபதி ரீகனின் சோவியத் ஒன்றியத்தை நோக்கிய ஆத்திரமூட்டும் மற்றும் ஆக்ரோஷமான கொள்கையை எதிரொலிக்கும் விதத்தில், ட்ரம்பின் "பலத்தின் மூலமாக சமாதானம்" என்ற அழைக்கப்படுவதன் இதயதானத்தில் இருப்பது, ஆசியா எங்கிலுமான கூட்டணிகளை மற்றும் மூலோபாய பங்காண்மைகளை பலப்படுத்துதலும் அத்துடன் சேர்ந்து சீனாவிற்கு எதிரான வர்த்தக போர் நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு பாரிய இராணுவ விரிவாக்கமாகும். ஆசிய பசிபிக்கில், சீனாவை விட அதிக இராணுவ மேலாதிக்கத்தை பேணுவதற்காக, அமெரிக்க கப்பற்படையின் 274 கப்பல்களை 350 கப்பல்களாக விரிவாக்குவதற்கு அவர் சூளுரைத்துள்ளார்.
இந்த நிலைநோக்கு, தளபதி "வெறிபிடித்த மனிதன்" (Mad dog) மாட்டிஸ் ஐ பாதுகாப்பு செயலளராக ட்ரம்ப் தேர்ந்தெடுத்திருப்பதில் எடுத்துக்காட்டப்படுகிறது, இவர் அமெரிக்க கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கும் மற்றும் பெய்ஜிங்கின் "ஆக்கிரமிப்பு" என்றழைக்கப்படுவதை எதிர்கொள்ள ஆசியாவில் மிக அதிநவீன இராணுவ தளவாடங்களை நிலைநிறுத்தவும் அழைப்புவிடுத்துள்ளார். சீனாவுடன் நல்லுறவுகளை பேணுவதற்கான முயற்சிகள், "தென் சீனக் கடலிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் அதன் பயமுறுத்தும் விதமான பாத்திரத்தை விரிவாக்குவதை சீனா தொடர்ந்து கொண்டிருந்தால், அதற்கு எதிர்பலத்தை கட்டமைக்கும் ஒரு கொள்கையோடு சமாந்தரப்படுத்தப்பட வேண்டும்,” என்று மாட்டிஸ் சமீபத்தில் அறிவித்தார்.
ஆசிய-பசிபிக்கில் “பலத்தின் மூலமாக சமாதானம்" எனும் ட்ரம்பின் கொள்கை சமாதானத்திற்காக அல்ல, மாறாக போருக்கான ஒரு மூலோபாயமாகும். தாய்வானிய ஜனாதிபதி உடனான அவரது தொலைபேசி உரையாடலுடன், ட்ரம்ப், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் முன்வந்த அபாயங்களை குறைத்துக் காட்டுவதற்கான ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முயற்சிகளை அம்பலப்படுத்தி உள்ளார்.
அவரது நிர்வாகம், அதன் போட்டியாளர்களை குறிப்பாக சீனாவை விலையாக கொடுத்து "அமெரிக்காவை தலைச்சிறந்ததாக ஆக்குவதற்கான" சகல வழிவகைகளையும் மற்றும் எந்தவொரு வழிவகையையும் பயன்படுத்தும், அதீத தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தின் ஒரு நிர்வாகமாக இருக்கும். ட்ரம்பின் "படையரண் அமெரிக்கா" என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னும் கூடுதல் வெடிப்புக்கு வெள்ளோட்டமாகும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீடு இல்லையானால், இது தவிர்க்கவியலாமல் உலக போருக்கு இட்டு செல்கிறது.