Print Version|Feedback
New York Times vents Washington’s rage over debacle in Syria
சிரிய தோல்வி குறித்த வாஷிங்டனின் கோபத்திற்கு நியூயோர்க் டைம்ஸ் வடிகால் அளிக்கிறது
By Bill Van Auken
30 November 2016
வார இறுதி முதலாய் சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் அமெரிக்க ஆதரவு “கிளர்ச்சியாளர்கள்” பெற்றிருக்கும் அதிர்ச்சிகரமான இராணுவத் தோல்விகள், அமெரிக்காவின் அரசியல் ஸ்தாபகம், இராணுவ மற்றும் உளவு எந்திரம் அத்தோடு பெருநிறுவன ஊடகங்கள் இடையே —இவையே அங்கு ஐந்தரை ஆண்டு காலமாக ஜனாதிபதி பஷார்-அல்-அசாத்திற்கு எதிராய் குருதிகொட்டும் ஆட்சி மாற்ற நடவடிக்கை போரை தூண்டிவிட்டு பாதுகாத்திருந்தன— மாறிமாறியான குற்றங்கூறல்களுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாய் ”கிளர்ச்சியாளர்களின்” —சிரியாவின் அல்கெய்தா இணைப்பான அல்-நுஸ்ரா முன்னணி ஆதிக்கம் செலுத்துகின்ற ஆயுதக்குழுக்களின் ஒரு அணி— கைவசத்தில் இருந்த அலெப்போவின் கிழக்குப் பகுதியின் கிட்டத்தட்ட பாதியை, சிரியத் துருப்புகள், லெபனானின் ஹெஸ்போல்லா போராளிகள் மற்றும் ஈராக்கின் ஷியா ஆயுதக் குழுக்கள் உதவியுடன் மீட்டன.
அலெப்போ முழுமையிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாடு வலுப்பெறுவதானது —இது தவிர்க்கமுடியாதது என இப்போது ஏறக்குறைய உலகம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது— அமெரிக்க ஆதரவுப் படைகளுக்கு அவற்றின் கடைசி நகர்ப்புற அமைவிடத்தையும் இல்லாது செய்திருப்பதோடு சிரியாவின் முக்கியமான மக்கள்தொகைமிக்க பகுதிகள் அனைத்தையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறது.
இந்த அபிவிருத்திக்கு கிட்டிய மிகக் கடுமையான பதிலிறுப்புகளில் ஒன்றாக, நியூ யோர்க் டைம்ஸ் “அசாத் தப்பித்து விடுவாரானால் அவருக்குக் கிடைக்கவிருப்பது : சிரியா நொருங்கிக் கிடக்கிறது” என்ற தலைப்பில் செவ்வாயன்று முதல் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது, “ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் மிகக் கடுமையான எதிரிகள் சிலரின் மதிப்பீட்டின் படியும் கூட, அவர் இந்த எழுச்சிக்குத் தப்பி விடுவார் என்பதைப் போன்றே தென்படத் தொடங்குகிறது” என்று முனகலுடன் இது ஒப்புக்கொண்டது.
டைம்ஸை பொறுத்தவரை, இது உண்மையில் ஒரு மோசமான அடியாகும். 2011 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா “அசாத் அகல வேண்டும்” என்று அறிவித்தது முதலாகவும், சிஐஏ யும் பென்டகனும் மத்திய கிழக்கில் இருக்கும் மிகப் பிற்போக்கான முடியாட்சி சர்வாதிகாரங்களுடன் —சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்— கைகோர்த்துக் கொண்டு ஜிகாதிய கூலிப்படைகளுக்கு ஆதரவாக ஆயுதங்களும் பணமுமாக பில்லியன் கணக்கான டாலர்களை இறைக்கத் தொடங்கியது முதலாகவும், அமெரிக்காவின் இந்த “ஆவணப்பதிவான செய்தித்தாள்” சிரிய ஆட்சி-மாற்றத்திற்கான முன்னணி பிரச்சாரகராக வேலை செய்து வந்திருக்கிறது.
அதன் தலையங்க பக்கங்கள் அரசு எந்திரத்துடனும் ஜனநாயகக் கட்சியின் உயர் மட்டங்களுடனும் நெருக்கமான தொடர்புகள் கொண்டவரான ஜேம்ஸ் பெனெட் இனால் மேற்பார்வை செய்யப்படுகிறது. (இவரது தந்தை சிஐஏ இன் ஒரு முன்னணி அமைப்பான USAID இன் முன்னாள் தலைவராக இருந்தார், இவரது சகோதரர் கொலராடோவின் மூத்த செனட்டர் ஆவர்). சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்ட இரத்தஆற்றினை ”மனித உரிமைகளுக்கான” சிலுவைப் போராக நியாயப்படுத்தியும் சிரியாவின் பிரதான கூட்டாளியான ரஷ்யாவுடன் ஒரு மோதல் உள்ளிட இன்னும் கூடுதல் மூர்க்கமான ஒரு தலையீட்டை ஊக்குவித்தும் பொய்களைக் கூறுகின்ற கபடமான எண்ணற்ற தலையங்கங்களையும், நிக்கோலஸ் கிறிஸ்டோப் மற்றும் ரோஜர் கோஹென் போன்றவர்கள் எழுதும் பத்திகளையும் டைம்ஸ் வெளியிட்டு வந்திருக்கிறது.
தலையங்க பிரச்சாரத்திற்கும் செய்திப் பக்கங்களில் வரும் செய்தியளிப்புக்கும் இடையில் வித்தியாசம் என்பதே மறைந்து விட்டிருக்கிறது என்ற உண்மையையே சமீபத்திய முன்-பக்கக் கட்டுரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஈராக்கிலும் லிபியாவிலும் அமெரிக்காவின் வலிந்து தாக்கிய போர்களுக்கு ஆதரவாய் பொதுக் கருத்தை தயாரிப்பு செய்வதற்காக சதாம் ஹுசைன் மற்றும் மும்மார் கடாபி விடயத்தில் —இரண்டிலுமே குறிவைக்கப்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்— நடந்து கொண்ட அதேவிதத்தில் அசாத்தையும் சாத்தானாக சித்தரிக்கின்ற அதேநேரத்தில், சிஐஏ-ஆதரவு இஸ்லாமியவாதிகளால் நடத்தப்படுகின்ற பயங்கரவாதத் தாக்குதல்களையும், குறுங்குழுக்களுக்கு இடையேயான அட்டூழியங்களையும், ஜனநாயகப் புரட்சியாளர்களது நியாயமான செயல்பாடுகளாகக் கூறி நியாயப்படுத்துவதற்கு டைம்ஸ் தனது செய்திகளை வெட்கமின்றி பயன்படுத்தி வந்திருக்கிறது.
செவ்வாய்கிழமை வந்த கட்டுரையை எழுதியவர் அலிசா ரூபின். இவர் முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிலும் அதன்பின்னர் நியூ யோர்க் டைம்ஸில் 2003 முதல் 2009 வரையான காலத்திலும் —சட்டவிரோதமான அமெரிக்க படையெடுப்பானது ஈராக்கின் சுமார் ஒரு மில்லியன் ஆண்,பெண், மற்றும் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாக மதிப்பிடப்பட்ட ஒரு காலகட்டம்— பாக்தாத் செய்திப்பிரிவுக்கான தலைவராக இருந்துள்ளார்.
அசாத்தின் இராணுவம் “பேரல் குண்டுகளை” பயன்படுத்துவது குறித்தும் மக்கள் அடர்த்தி மிகுந்த நகர்ப்புறப் பகுதிகளில் இருக்கும் அல்கெய்தா நிலைகளின் மீது ரஷ்யா குண்டுவீசுவதன் மீதும் ரூபின் போன்ற டைம்ஸின் செய்தியாளர்களது அறநெறி ஆவேச சீற்றத்தை காணும் ஒருவர், இதே செய்தித்தாள்தான் ஈராக்கில் இதனினும் மிகப்பெரும் குற்றங்களைக் கொண்டிருந்த ஒரு போரையும் அத்துடன் சிரியாவில் படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட்ட அமெரிக்காவின் ஆட்சி-மாற்ற நடவடிக்கையையும் ஊக்குவித்தது என்பதை ஒருபோதும் ஊகித்து விட முடியாது.
ரூபினின் கட்டுரையின் பெரும்பகுதி, சிரியாவில் ஆட்சி-மாற்றத்திற்கான தலையீடு மற்றும் அதன் தீவிரப்படுத்தலுக்கு நன்கறிந்த வக்காலத்துவாதிகளாக இருந்து வருகின்ற முன்னாள் அமெரிக்கத் தூதர்களான ராயன் குரொக்கர் மற்றும் ராபர்ட் ஃபோர்ட் போன்றவர்களிடம் இருந்தான மேற்கோள்களைக் கொண்டிருக்கிறது.
அலெப்போ முழுமையையும் அரசாங்கம் மீண்டும் தன்வசம் கொண்டுவந்து விட்டாலும் கூட, சிரியாவில் சண்டை “பல வருடங்கள் நீளும்” என குரொக்கர் கணிக்கிறார். அருகிலிருக்கும் லெபனானின் 15 ஆண்டு கால உள்நாட்டுப் போருடன் இதனை ஒப்பிடும் அவர், சிரியாவின் இரத்தக்களரி அதனை விடவும் நீளக் கூடும் என்றும் தெரிவிக்கிறார்.
ஃபோர்ட் தன் கருத்தில், அரசாங்கம் சிரியா முழுமையிலும் தனது ஆட்சியை வலுப்படுத்தினாலும் கூட, நாடு “நடைப் பிண” நிலைக்கு குறைக்கப்பட்டு விடும், “கண்கொண்டு பார்க்கக் கூடிய இடங்கள் முழுமையிலும் இந்த பெரும் காயங்கள் தென்படுகின்றன” என்றார்.
ரூபின் எழுதுகிறார்: “அசாத், வெற்றிபெறும் பட்சத்தில், அவரது வெற்றி மிதமிஞ்சிய விலை கொடுத்ததாக இருக்கும். முடிவுதென்படாத, குறைந்த மட்டத்திலான கிளர்ச்சியால் சூழப்பட்ட ஒரு பொருளாதார தரிசையே அவர் ஆட்சி செய்வார்.” ஆட்சி-மாற்றத்திற்கான போர் அழித்து விட்டிருக்கக் கூடியவற்றை மறுகட்டுமானம் செய்வதற்கு பொருளாதார வளங்கள் இல்லாமல் நாடு திண்டாடும் என்றும் அவர் கணித்திருக்கிறார்.
“அமெரிக்க நாடாளுமன்றம் உதவி செய்வது அநேகமாக சாத்தியமில்லை, அதேபோல அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா போன்ற திரு.அசாத்தின் எதிரிகள் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருக்கக் கூடிய உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற ஸ்தாபகங்கள் உதவி செய்வதும் சாத்தியமில்லை” என்று அவர் எழுதுகிறார்.
இந்தக் கணிப்புகள் எல்லாம் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் சிஐஏ இனால் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்ற சில குறிப்பிட்ட கொள்கைத் தெரிவுகளுக்கு பொருந்திச் செல்வதற்குரியவை என்பதில் சந்தேகமில்லை. அசாத்தை தூக்கியெறிவதற்கு இப்போது அமெரிக்கா செய்து வரும் முயற்சிகளில் அவர் தப்பிவிட்டாலும் கூட, நாட்டை இரத்தம் கொட்டி நொடிக்கச் செய்வதற்கான ஒவ்வொரு முயற்சியும் செய்யப்படவிருக்கிறது.
"மனித உரிமைகள்” மற்றும் “ஜனநாயகம்” குறித்த கபடத்தனமான வாய்வீச்சைக் கொண்டு சிரியாவில் ஏகாதிபத்திய தலையீட்டை ஊக்குவிப்பதற்கு டைம்ஸ் நடத்திய பிரச்சாரம் ஒரு தோல்வியாக நிரூபணமாகியிருப்பதை அறிந்து விட்டிருப்பது தான் ரூபினின் இந்தக் கட்டுரையின் மறைக்கமுடியாத கோபத்திற்கும் பழிவாங்கல் தொனிக்கும் பின்னால் அமைந்திருப்பதாகும். இதே மனோநிலை தான் போலி-இடது சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு மற்றும் இன்ன பிற போன்ற போக்குகளின் ஒட்டுமொத்த பிரிவினாலும் —ஆட்சி-மாற்றப் போருக்கு ஆதரவான இவற்றின் வாதங்கள் சிஐஏ மற்றும் டைம்ஸ் ஆசிரியர் குழு உத்தரவிடும் நிலைப்பாட்டில் இருந்து ஏறக்குறைய பிரித்தறிய சிரமமானதாக இருந்தது— வெளிப்படுத்தப்படுகிறது.
இஸ்லாமிய “கிளர்ச்சியாளர்”களுக்கு ஆயுதமளிப்பதை கேள்விக்குள்ளாக்கியிருப்பவரும், சிரியாவில் ISIS மற்றும் அல்கெய்தாவை ஒடுக்குவதில் தனது நிர்வாகம் ரஷ்யாவுடன் நெருக்கமான ஒத்துழைப்புக்கு முயற்சி செய்யும் என்பதாகக் கூறிவந்திருப்பவருமான டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு உயரவிருப்பது இந்த அடுக்குகளின் விரக்தி நிலையை இன்னும் ஆழப்படுத்தியிருக்கிறது.
ஆயினும், ட்ரம்ப்பின் கருத்துக்களை, மத்திய கிழக்கில் அல்லது இந்த பூமிக்கோளத்தின் வேறெங்கும் அமைதியின் ஒரு புதிய சகாப்தத்திற்கான முன்னறிவிப்பாக எவரேனும் பொருள்புரிந்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு மிக விரைவில் கடும் அதிர்ச்சிகளே கிட்டும். அமெரிக்க முதலாளித்துவத்தின் நாள்பட்ட நெருக்கடியானாலும் சரி அத்துடன் ட்ரம்ப்பின் சொந்த ”முதலில் அமெரிக்கா” கொள்கையானாலும் சரி இவற்றின் புறநிலைத் தர்க்கம் அமெரிக்க இராணுவவாதத்தின் ஒரு வெடிப்பான தீவிரப்படலுக்கே இட்டுச் செல்கிறது.
சிரியா குறித்து இந்த மோசடி பில்லியனர் அரைகுறை இணக்கமாக என்ன கருத்துகளை உதிர்த்தாலும், ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராய் உள்ளிட, இந்தப் பிராந்தியம் முழுமையாக போரைத் தொடர்கின்ற தீர்மானத்துடன் உள்ள வலது-சாரி போர்வெறியர்களைத்தான் அவர் தனனைச் சுற்றிலும் அமர்த்திக் கொண்டிருக்கிறார். இது தவிர, அமெரிக்க இராணுவம் மற்றும் கடற்படை அத்துடன் அமெரிக்காவின் அணுஆயுதத் திறன் ஆகியவற்றிலான ஒரு பெரும் விரிவாக்கத்திற்கான திட்டங்களையும் அவர் ஏற்கனவே முன்வைத்திருக்கிறார்.
வரவிருக்கும் நிர்வாகம் இத்தகைய இராணுவத் தீவிரப்படுத்தலுக்கான நியாயப்படுத்தல் சொல்லாடல்களை ஒபாமா ஆண்டுகளின் “மனித உரிமைகள்” மற்றும் “ஜனநாயகம்” ஆகியவற்றில் இருந்து மீண்டும் “பயங்கரவாதத்தின் மீதான போர்”க்கு மாற்றப் போகிறதோ, அல்லது பகிரங்கமாகவே அமெரிக்க நலன்களை பாதுகாக்கவிருக்கிறதோ எப்படியிருந்தாலும், டைம்ஸ் அதன் பத்திரிகை பிரச்சாரத்தில், அவசியமான இணக்கங்களை செய்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.