Print Version|Feedback
Sri Lankan unions agree to impose share-cropper system on plantation workers
இலங்கை தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் மீது குத்தகை விவசாய முறையை திணிக்க உடன்படுகின்றன
By W.A. Sunil
15 December 2016
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சம்பந்தமாக சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம், தொழிற்சங்கங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தற்போதைய ஊதிய முறையை ஒழித்து, தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளை ஒத்த நிலைக்கு கீழ் இறக்குவதற்கான அடித்தளத்தை தயார் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இது 200,000க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரதான பகுதியினர் மீதான அடிப்படை தாக்குதலாக இருப்பதோடு, தசாப்த கால கடினமான போராட்டங்களின் மூலம் அவர்கள் வெற்றி கொண்ட உரிமைகளை அபகரிக்கும்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 380 ரூபா அதிகரிப்புடன் 1000 ரூபா நாள் சம்பளம் கோரி போராடி வந்த போதிலும், அக்டோபர் 18, பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தொழிலாளர்கள் வேலைச் சுமை அதிகரிக்கப்படுவதையும் எதிர்த்தனர். இந்த ஒப்பந்தம், நவம்பர் மாதக் கடைசியிலேயே வர்த்தமானி அறிவித்தலில் கிடைத்தது.
இந்த உடன்படிக்கை ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகியவற்றால் கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகியவை, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு ஆதரவு வழங்க வாக்குறுதியளித்தன.
* ஒப்பந்தத்தின் படி, கொடுப்பனவுகளுடன் சேர்த்து தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்களின் அன்றாட ஊதியம், தற்போதைய 620 ரூபாவில் இருந்து 730 ரூபா வரை, வெறும் 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பிரிவு, வேலைச்சுமையை அதிகரிப்பதாகும். இந்த பிரிவின் படி, “கடந்த கால நடைமுறைகளின் அடிப்படையில், தோட்ட மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கை குழுவுடனான ஆலோசனை மற்றும் உடன்பாட்டுடன், தற்போதைய வேலை முறைகளை/இலக்குகளை கம்பனிகளால் அதிகரித்துக்கொள்ள முடியும்.”
விளக்கம் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும், இந்த பிரிவுகளின் அர்த்தம் இவையே: ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிற்சங்க கிளைகள் நடவடிக்கை குழுக்களை அமைப்பதுடன், கம்பனி நிர்வாகிகள் வேலைச் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு முன் அதுபற்றி அவர்களுடன் கலந்துரையாடுவர். இந்த தொழிற்சங்க நடவடிக்கை குழுக்கள் என அழைக்கப்படுபவை, தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, வேலைச் சுமையை அதிகரிப்பதை அமுல்படுத்த தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்படும் தோட்ட மட்டத்திலான அதிகாரத்துவத்தினர் அடங்கிய ஒரு சபையாகும்.
* இந்த ஏற்பாட்டின் பிரதான இலக்கு, அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்குள் குத்தகை-விவசாய முறையை ஸ்தாபிப்பதற்கான அடித்தளத்தை தயார் செய்வதே ஆகும்.
ஆவணத்தில் இந்த மாற்றத்தை குறிக்கும் 3வது சரத்து கூறுவதாவது: "தொழிற் சங்கங்கள், தொழிற்துறையின் உற்பத்தி திறனை முன்னேற்றுவதற்கு ஆதரவளிக்க பொறுப்பேற்றுள்ளதோடு, அடுத்த ஒப்பந்தத்தின் மூலம், தோட்ட மட்டத்தில் வருவாய் பகிர்வு / வெளி உற்பத்தியாளர் மாதிரிகள் போன்றவையின் அடிப்படையில் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊதிய ஆட்சிக்கு மாறுவதன் மூலம் உற்பத்தியை முன்னேற்றுவதற்கு ஒத்துழைக்க உடன்பட்டுள்ளன. "
இந்த "வருவாய் பங்கு / வெளி உற்பத்தியாளர் முறை," 2015 மார்ச்சில் முந்தைய உடன்படிக்கை காலாவதியானது முதல், கம்பனிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் நிராகரித்து வலியுறுத்தி வந்த திட்டமாகும்.
18 மாதங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பின்னர், கம்பனிகளால் தமது புதிய சுரண்டல் முறைக்கு தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெற முடிந்தது. உண்மையில், ஆரம்பத்தில் இருந்தே கம்பனிகளின் திட்டத்தை ஆதரித்த தொழிற் சங்கங்கள், அற்ப ஊதிய உயர்வுடன் தொழிலாளர்களின் எதிர்ப்பை திசை திருப்புவதில் மட்டுமே அக்கறை காட்டின.
புதிய முறையின் படி, ஒரு தொழிலாளியின் குடும்பத்துக்கு 1000 அல்லது அதற்கு மேற்பட்ட தேயிலைச் செடிகள் பராமரிப்புக்காக ஒதுக்கப்படும். கம்னிகள் உரம் மற்றும் விவசாய இரசாயனங்கள் போன்ற ஏனைய தேவைகளை வழங்கும். அந்த பொருட்களுக்கான செலவுகளை கழித்த பின்னர், தொழிலாளர்கள் அறுவடைக்கு பின் ஒரு "வருமானப் பங்கை” பெறுவர். அத்தகையதொரு முறை திணிக்கப்படும்போது, தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) போன்ற இப்போதுள்ள ஓய்வூதிய திட்டங்களை இழக்க நேரிடும்.
2018 அக்டோபர் வரையான அடுத்த இரண்டு ஆண்டுகளும், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கை குழுக்கள் என்று அழைக்கப்படுவதும், வேலைச் சுமை அதிகரிப்பை திணிக்கவும் மற்றும் தோட்டங்களில் உள்ள தற்போதைய நிலைமைகளை மாற்றுவதற்கும் செயற்படும் ஒரு இடைக்காலமாக இருக்கும். தொழிலாளர்கள் தங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட பலத்தை இழந்து, கம்பனிகள் சார்பாக காணித் துண்டுகளை பராமரிக்கும் தனிநபர்களாக மாற்றப்படுவர்.
இலங்கை அரசாங்கமும் கம்பனிகளும் உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, உலக சந்தையில் தேயிலை மற்றும் இறப்பருக்கான கடுமையான விலைச் சரிவை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, தேயிலை கம்பனிகள் இந்தியா, வியட்னாம், கென்யா, சீனா போன்ற ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளுடன் கழுத்தறுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர் செலவுகளை குறைப்பது மற்றும் சுரண்டலை உக்கிரமாக்குவதன் மூலம் கம்பனிகள் இலாபங்களை பாதுகாத்துக் கொள்ள தீவிரமாக முற்படுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், கம்பனிகள் தயாரித்த தாக்குதலை முழுமையாக ஆதரிக்கின்றது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை அறிக்கையை முன்வைத்த விக்கிரமசிங்க, "புதிய முதலீட்டை உட்செலுத்தியும் வினைத்திறன் மிக்க தொழிற்துறையை அறிமுகப்படுத்தியும் பிராந்திய தோட்டக் கம்பனிகளை மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளதாக" அறிவித்தார்.
கம்பனிகள் பிரேரித்துள்ள உற்பத்தித் திறனை அடிப்படையாகக் கொண்ட வெளி உற்பத்தியாளர் முறையை ஆதரிக்கும் அதேவேளை, அரசாங்கம் "நஷ்டத்தில் இயங்கும் தோட்டங்களை" மூடிவிடுமாறு கூறுவதோடு, ஏனைய தொழிற்துறைகளுக்கு மாறுவதற்கு ஊக்குவிக்கின்றது. பெருந்தோட்ட மாவட்டங்களில் சுதந்திர வர்த்தக வலயங்களை அமைப்பதும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.
இந்த அனைத்து செயல்வடிவங்களும் திட்டமிடல்களும், சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் முன்மொழிந்துள்ள வழியில், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அதன் உள்ளூர் வாடிக்கையாளர்களான பெரும் வர்த்தகர்களதும் நலன்களுக்காக "பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளின்" ஒரு பகுதியாகும்.
தொழிற்சங்கங்கள் இந்த திட்டங்களுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக உள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தின் 7வது பிரிவானது, தொழிற்சங்கங்களும் கம்பனிகளும், "தோட்டங்களின் இயங்கு திறன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக ஒத்துழைக்கவும் அதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ளவும் உடன்பட்டுள்ளதோடு, தோட்ட மட்டத்தில் செயல்பாட்டு பிரச்சினைகளை பற்றிய ஒத்திசைவான அதிக கலந்துரையாடல்களை ஊக்குவித்து தீர்வு காண்பதற்கும் இணங்கியுள்ளன," என்று அறிவிக்கின்றது.
"தோட்டங்களின் செயற்திறன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவே" தொழிற்சங்கங்கள் அர்ப்பணித்துக்கொண்டுள்ளன. அவர்கள் “தோட்ட மட்டத்திலான ஒத்திசைவை” பேணுவதற்காக தொழிலாளர்களை ஒடுக்க செயல்படுவர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது முதலே, கம்பனிகள் வேலைச் சுமையை அதிகரிக்கத் தொடங்கின. நுவரெலியா மாவட்டத்தில் டீசைட், பெல்மோரல், அக்கரப்பத்தனை மற்றும் ஃபோர்டைஸ் போன்ற தோட்டங்களில் தொழிலாளர்கள் அன்றாடம் பறிக்கும் கொழுந்தை 2 கிலோவால் அதிகரித்ததை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். தொழிற்சங்கங்களும், புதிய உத்வேகத்துடன் தங்கள் பொலிஸ் வேலையை ஆரம்பித்து, இந்த போராட்டங்களுக்கு எதிராக புதிய இலக்குகளை செயல்படுத்த கம்பனிகளுக்கு வழியமைத்துக் கொடுத்தன.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இந்தப் பிரச்சினை முழுவதிலும், தோட்டத் தொழிற்துறையிலான நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் அரசாங்கமும் சதி செய்கின்றன என்று தொழிலாளர்களுக்கு எச்சரித்தது. இந்த எச்சரிக்கை, ஒப்பந்தம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் மீதான தோட்டத் தொழிலாளர்களின் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பு, தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியை சமிக்ஞை செய்கின்றது. எனினும், அது மட்டும் போதுமானது அல்ல.
தொழிலாளர்கள், தமது உரிமைகளை அபகரிக்க வழி வகுக்கும் மற்றும் தங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட பலத்தை சிதைத்து விடும் பிற்போக்கான "வருவாய் பங்கு / வெளி உற்பத்தியாளர்" முறையை எதிர்க்க வேண்டும். இத்திட்டத்தினை முன்மொழிவதன் மூலம், இலாபத்தை கறந்தெடுப்பதை அடிப்படையாகக் கொண்ட உலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் ஒரு பாகமாக, தாமும் ஒரு முறையான நெருக்கடியில் மூழ்கியுள்ளதை கம்பனிகளும் அரசாங்கமும் காட்டியுள்ளன.
தொழிலாளர்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராகப் போராட தயாராக வேண்டும். அவர்களுக்கு வேலை பாதுகாப்பு, ஒழுக்கமான மாத ஊதியம், ஓய்வூதிய திட்டம், முறையான வீடு அமைப்பு, மருத்துவ நலன்கள், நல்ல கல்வி வசதிகள் வேண்டும்.
* இந்தப் போராட்டம், பெரும் வணிகங்களுக்கான பொலிஸ்காரனாக மாறிவிட்ட தொழிற்சங்கங்களில் இருந்து தொழிலாளர்கள் முறித்துக்கொள்வதை அவசியமாக்கியுள்ளது. தொழிற் சங்கங்கள் கம்பனிகளின் நலன்களுக்கு சேவை செய்யவே தங்கள் "நடவடிக்கை குழுக்களை" அமைக்க வாக்குறுதி கொடுத்துள்ளன.
அவர்களுக்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளுக்காக போராட, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களாலேயே ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும். பெருந்தோட்டங்களில், மஸ்கெலியாவில் சாமிமலையில் உள்ள டீசைட் தோட்டத்தின் தொழிலாளர்கள் அத்தகைய ஒரு குழுவை அமைப்பதில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளனர். இதைப் பின்பற்றுமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது.
* அரசாங்கத்தின் ஆதரவுடன் கம்பனிகள் மேற்கொள்ளும் இந்த தாக்குதல்களுக்கு எதிராகப் போராட, இதேபோன்ற தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஏனைய பகுதி தொழிலாளர்களின் பக்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திரும்புவதோடு பெரிய தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கு சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராட வேண்டும்.
தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
இத்தகைய திட்டத்தை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும். இந்த கொள்கைக்காகப் போராட முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவினரிடம் இருந்தும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தின் அனைத்து தரப்பையும் ஐக்கியப்படுத்த வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றது.
சோசலிச சமத்துவக் கட்சியும் டீசைட் நடவடிக்கை குழுவும் டிசம்பர் 18, சாமிமலை இந்து கலாச்சார மண்டபத்தில், மாலை 2 மணிக்கு ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கலந்துகொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.