Print Version|Feedback
South Korean President Park impeached
தென் கொரிய ஜனாதிபதி பார்க் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்
By Ben McGrath and Peter Symonds
10 December 2016
தென் கொரிய தேசிய பாராளுமன்றத்தில் நேற்று அந்நாட்டின் ஜனாதிபதி பார்க் குன் ஹை இனை பதவி நீக்கம் செய்வதற்கான முதல் அடியாக வாக்களிப்பு செய்தனர். 300 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 234 ஆதரவாகவும் 56 எதிராகவும் வாக்களிக்கப்பட்டு, தேவைப்படுகின்ற மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலாக இருந்ததுடன், பார்க் மீதான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு அவரது சொந்த வலது-சாரி செனூரிக் கட்சியின் கணிசமான பிரிவுகளின் ஆதரவு இருப்பதையும் சுட்டிக்காட்டியது.
பார்க்கின் நெருங்கிய தனிப்பட்ட நம்பிக்கைக்குரிய நபரான சோய் சூன்-சில் ஈடுபட்டிருந்த பெரும் ஊழல் நடவடிக்கைகளையொட்டி, அவரை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்து பலவார காலமாக மில்லியன் கணக்கிலான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் இந்த பதவி நீக்கம் தொடர்கிறது. சோய், அரசாங்கத்தில் எந்தவொரு அதிகாரபூர்வமான பதவியினை வகிக்காதபோதும், அரசாங்கம் எடுத்த முடிவுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தார். அவர் மீதான குற்றச்சாட்டின்படி இரகசிய ஆவணங்களை அவர் பார்வையிட்டது உள்ளடங்கலாக தென் கொரிய நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள் கோருவதற்கு பார்க் உடனான அவரது உறவுகளை பயன்படுத்தியிருந்தார்.
செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் மத்தியிலான இடைவெளியை ஆழமாக்குவது, அத்துடன் அவரது நிர்வாகத்தின் ஜனநாயக-விரோத வழிமுறைகள் மூலமாக விமர்சகர்களை மவுனத்தில் ஆழ்த்துவது, ஒரு எதிர்கட்சியை கலைப்பது மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவது போன்ற பரந்த பிரச்சனைகள் தொடர்பாக பார்க்கை நோக்கிய மிகப்பரவலான எதிர்ப்பையும், ஆத்திரத்தையும் பிரதிபலிக்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள் தென் கொரியாவின் சரித்திரத்தில் மிகப்பெரியதாக உள்ளது.
வாக்களிப்புக்கு பின்னர், பார்க் அவரது "கவனக்குறைவுகள் மற்றும் தவறுகள்" மூலமாக உருவாக்கியிருந்த "கடுமையான தேசிய கொந்தளிப்புக்கு" மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோரினார், ஆனால் இராஜினாமா செய்வது பற்றி எந்தவொரு சமிக்ஞையும் அவர் காட்டவில்லை. சட்ட நடவடிக்கைகளை முன்வைத்து பார்க் ஒரு குற்றவியல் சந்தேகத்திற்குரிய நபர் என்று கருதப்படுகின்றபோதும், பதவியில் இருக்கும்போது அவர் மீது குற்றம்சாட்ட முடியாது.
நேற்றைய பாராளுமன்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி அதிகாரமும், கடமைகளும் பிரதம மந்திரி ஹ்வாங் ஜியோ-அன் க்கு மாற்றம் செய்யப்பட்டு அவர் இடைக்கால ஜனாதிபதியாகிறார். இந்த பதவிவிலகல் விசாரணை விவகாரம் தற்போது அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு செல்கிறது. பார்க்கிற்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்கள் மூலமாக அவரை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்க ஆறு மாத கால அவகாசத்தினை நீதிமன்றம் கொண்டுள்ளது.
பார்க்கின் பதவி நீக்கத்திற்கு ஒன்பது நீதிபதிகளுள் ஆறு பேர்களின் ஆதரவு இருக்கவேண்டும், அதனைத் தொடர்ந்து இரண்டு மாத காலத்திற்குள் ஒரு புதிய ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். இந்த ஆறு நீதிபதிகளுமே பார்க் மற்றும் அவருக்கு முன்பு பதவி வகித்தவரும், செனூரிக் கட்சியை சார்ந்தவருமான லீ மியுங்-பாக் இன் மூலமாகத்தான் நியமிக்கப்பட்டனர். எனினும், ஒரு நீதிமன்ற தீர்ப்பினை முன்வைத்து பார்க்கின் பதவி தக்கவைக்கப்படுவது என்பது எதிர்ப்பு இயக்கத்தை மீண்டும் தூண்டிவிடுவதாகவும், இன்னும் ஆழ்ந்த நெருக்கடிக்குள் நாட்டை மூழ்கடிப்பதாகவும் அமையும்.
பார்க் மீதான குற்றப் பிரேரணை தென் கொரியாவின் ஆளும் உயர்மட்டத்தினர் இடையே ஆழ்ந்த பிளவுகளை பிரதிபலிக்கின்றன, அத்துடன் முழு அரசியல் ஸ்தாபகத்திலிருந்து பொது மக்களின் விரோத போக்கிற்கு தீவிரப்படுத்துகிறது. Yonsei பல்கலைகழக பேராசிரியர் மூன் சுங்-இன் கடந்த மாதம் Financial Timesல் பின்வருமாறு தெரிவித்தார்: "தென் கொரியா மொத்த நெருக்கடி நிலையில் உள்ளது. நாம் அரசியல், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் பின்னிப் பிணைந்து இருக்கிறோம்... ஏற்பட்டிருக்கும் உடைவுகளை ஒழுங்கமைக்கவோ அல்லது சமூகத்தை வழிநடத்தவோ ஒரு தலைமையும் இல்லை."
பார்க், மற்ற ஆசிய தலைவர்களைப் போன்றே, தென் கொரியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரரான சீனாவிற்கும், மற்றும் அதனுடைய ஒரு நீண்டகால இராணுவ நட்பு நாடான அமெரிக்காவுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்துள்ளார். தென் கொரியா முக்கிய அமெரிக்க இராணுவ தளங்களுக்கும், மற்றும் தற்போது கிட்டதட்ட 30,000 அமெரிக்க துருப்புக்களுக்கும் ஆதரவு அளிக்கிறது. பார்க் 2013ல் அதிகாரத்திற்கு வந்த பின்னர், சீனாவுடனான உறவுகளை அதிகரிக்க முயன்றதுடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்யன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் இணைந்து கடந்த ஆண்டு பெய்ஜிங் இல் நடைபெற்ற ஒரு இராணுவ அணிவகுப்பில் அவரும் கலந்துகொண்டதனால் அமெரிக்காவின் அதிருப்தியையும் சம்பாதித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில் சொல்வதானால் ஒபாமா நிர்வாகம் சிக்கலுக்குள்ளாகியிருக்கும் பார்க்கிற்கு எந்தவித ஆதரவினையும் வழங்கவில்லை. அமெரிக்க தூதரகம் கூட சியோல் எதிர்ப்புக்கள் குறித்து, ஆர்ப்பாட்டத் தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அருகிலுள்ள பிற கட்டிடங்களுடன் இணைந்து அதன் விளக்குகளை அணைப்பதன் மூலம் வெறும் அனுதாபங்களையே அடையாளமாக காட்டியது. "கொரியாவின் இந்த அரசியல் மாற்றம் மற்றும் திருப்பத்திற்கு உள்ளாகின்ற நிலையில் அதனுடன் அமெரிக்காவும் அதனுடன் உள்ளது" என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் நேற்று அறிவித்தார். அதன்மூலம் பார்க் அதிகார நீக்கம் செய்யப்படுவதை மறைமுகமாக ஒத்துக்கொள்கிறது.
அதே நேரத்தில், வாஷிங்டனின் அழுத்தத்தின்கீழ், பெய்ஜிங் ஐ ஆத்திரமூட்டுகின்ற வகையில் ஜுலையில் பார்க் நிர்வாகம் தென் கொரியாவில் அமெரிக்காவின் ஒரு முனைய அதி உயர பகுதி பாதுகாப்பு (Terminal High Altitude Area Defense-THAAD) எதிர்ப்பு ஏவுகணை முறைமை பயன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டது. பெயரளவிற்கு வட கொரியாவிற்கு எதிராக இயக்கப்படுவது போன்று இருந்தாலும், கொரிய தீபகற்பத்தில் இந்த THAAD நிர்மாணிப்பு என்பது, ஆசியா முழுவதிலும் சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளாக அமெரிக்க இராணுவத்தின் கட்டியெழுப்புதல்களின் ஒரு அங்கமாகவே இது உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன் தேர்வு தென் கொரிய ஆளும் உயர் அடுக்குகள் எதிர்கொள்கின்ற இரண்டுகெட்டான் நிலையினை இன்னும் உயர்த்திக்காட்டுகின்றது. Financial Times இன் கருத்தின்படி, ட்ரம்ப் இன் தேர்தல் வெற்றி குறித்த நனவுடன் சியோலில் நிதிய அதிகாரிகள், "Blue House (ஜனாதிபதி வாசஸ்தலம்) இல் ஒரு தேசிய பாதுகாப்பு சபை அமர்வினை கூட்டியிருந்தபோது வெளிப்புற அதிர்ச்சிகள் குறித்து வங்கிகள் தயாராக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினர்."
ட்ரம்ப் தனது தேர்தல் வெற்றியை தொடர்ந்து, "100 சதவீதம்" அமெரிக்க-தென் கொரிய கூட்டணியை ஒப்புக்கொண்டதாக பார்க்கிடம் தெரிவித்தபோதிலும், அவரது பிரச்சாரத்தின்போது, அமெரிக்க இராணுவ தளங்களை நோக்கி தென்கொரியா இன்னும் அதிக கவனம் செலுத்தத்தவறினால் அதனுடனான கூட்டணி திரும்பபெறப்படும் என்றும் அவர் அச்சுறுத்தி உள்ளார். ட்ரம்பின் மறுஉத்திரவாதம் இருந்தபோதிலும், கூட்டணி குறித்து அவர் ஒரு கேள்விக்குறியே வைத்துள்ளமை சியோலில் நிச்சயமற்ற தன்மையினை மோசமடைய செய்வதுடன் மேலும் தென் கொரியாவின் மூலோபாய நோக்குநிலை தொடர்பாக ஆளும் வர்க்கத்தினரிடையே உள்ள பிளவுகளையும் அதிகளவில் தூண்டிவிடலாம்.
ட்ரம்பின் அதிதீவிர பொருளாதார தேசியவாதம் தென் கொரிய அரசியலில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகிறது. அவர் பசிபிக் இடையிலான பங்காளித்தனம் (Trans Pacific Partnership-TPP) ஐ கிழித்து எறிய போவதாக அறிவித்ததுடன், தென் கொரிய பொருளாதாரத்தின் மீது அதிகளவு தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற நோக்கத்துடன் சீனாவுக்கு எதிராக வர்த்தக போர் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அச்சுறுத்தினார். தென் கொரியா TPP இன் ஒரு அங்கமாக இல்லாதபோதும், அமெரிக்கா உடனான தென் கொரியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க வர்த்தகங்களுக்கு நியாயமற்றதாகவே உள்ளது என்றும் ட்ரம்ப் விமர்சித்து உள்ளார்.
ட்ரம்பின் நிலைப்பாடு, Minjoo (ஜனநாயக) கட்சி, மக்கள் கட்சி மற்றும் நீதி கட்சி ஆகிய எதிர் கட்சிகளை ஊக்குவிப்பதாகவும், பாதுகாப்பவாதத்திற்காக அவர்களது அழைப்புகளை அதிகரிக்க செய்வதாகவும் உள்ளது. ஜனநாயகவாதிகள் அமெரிக்கா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை கடுமையாக எதிர்த்தனர், மேலும் அவர்கள் ஏனைய எதிர்கட்சிகளுடன் இணைந்து பெரும் மக்கள் எதிர்ப்பினை ஒரு பொருளாதார தேசியவாத திசையில் வழிப்படுத்திட முயன்று வருகிறார்கள். தொழிற்சங்கங்களும், விவசாயிகளின் குழுக்களும் அரிசி போன்ற பொருட்கள் மீது வர்த்தக கட்டுப்பாடுகளுக்கும், மற்றும் அரசு மானியங்களுக்கும் கோரிக்கைகளை முன்வைத்து பார்க்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
தென் கொரிய பொருளாதாரம், சமீபத்திய OECD முன்கணிப்பின்படி 2017ம் ஆண்டில் வெறும் 2.6 சதவீதம் வளர்ச்சியினை கொண்டிருக்கும் என்ற குறிப்புடன் தேக்கநிலையிலுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 45 சதவீதத்தினை ஏற்றுமதி உள்ளடக்கியுள்ளது, செப்டம்பரில் ஒரு 5.9 சதவீத வீழ்ச்சியடைந்ததுடன், கடந்த அக்டோபருடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீத அளவிற்கு சுருங்கியது. ஒரு காலத்தில் தென் கொரியாவின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமாக இருந்த ஹன்ஜின் கப்பல் நிறுவனம் (Hanjin Shipping) ஆகஸ்டில் தனது திவால் நிலையை அறிவித்தது. மக்களின் கடன் ஆண்டின் மத்தியில், ஒரு சாதனையாக உலகின் எட்டாவது மிக உயர்ந்த நிலையாக 1.15 டிரில்லியன் டாலருக்கு அதிகரித்து.
குறிப்பாக இளைஞர்களிடையே வறுமையும், வேலையின்மையும் உயர்ந்துவருகின்ற நிலை சமூக அதிருப்தியை எரியூட்டுகின்றது, இந்த நிலைமையினை எதிர்கட்சிகளும் தமக்கு சாதகமாக சுரண்ட முனைகின்றனர். எனினும், அவர்களில் எவராலும் சமூக நெருக்கடிக்கு ஏதாவதொரு தீர்வினை வழங்க முடியாது. உண்மையில் ஜனநாயக கட்சி ஜனாதிபதிகள் கிம் டே-ஜங் மற்றும் ரோ மூ-ஹ்யுன் இருவரும் வாழ்நாள் முழுவதும் பணிபுரியக்கூடியதாக இருந்த அமைப்புமுறையை உடைத்தன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளில் ஆழ்ந்த தாக்கங்களை உருவாக்கியதுடன், பாரியளவில் நிரந்தர தொழிலாளர்களை தற்காலிக தினக்கூலிகளாக மாற்ற பாதைகளை திறந்துவிட்டனர்.
வியாழனன்று Bloomberg இல் வெளியான ஒரு கட்டுரை, பார்க் பதவி விலகவேண்டும் என்று அழைப்புவிடுத்த ஆர்ப்பாட்டங்களை உலகம் முழுவதிலுமான அரசியல் கொந்தளிப்புகளுடன் ஒப்பிட்டது. மேலும் "Brexit ஐ எரியூட்டிய ஜனரஞ்சக அலை, டொனால்ட் ட்ரம்பின் எழுச்சி, மற்றும் இத்தாலிய தலைவர் மாத்தேயோ ரென்சியின் வீழ்ச்சி போன்று தென் கொரியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன, அதனால் பார்க் குன் ஹை இனை அடையாளபடுத்திய ஸ்தாபகத்தை கவிழ்ப்பதன் முதல் படியாக, அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வெள்ளியன்று பாராளுமன்றத்தில் வாக்களிப்பு நடைபெற்றதை தெரு ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்த்தார்கள்.
எதிர் கட்சிகளும் வளர்ந்துவரும் போர் அச்சங்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றனர். Minjoo கட்சி இதை விமர்சித்தபோதும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எந்தவொரு போருக்கும் தென் கொரியா இலக்கு ஆக்கப்படுவதற்கு THAAD எதிர்ப்பு ஏவுகணை முறைமை நிறுவப்பட்டது குறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மக்கள் கட்சியும், நீதி கட்சியும், சீனாவின் பொருளாதார பதிலடி குறித்து வணிக வட்டாரங்களில் அச்சங்கள் பிரதிபலித்து பொருளாதார காரணங்களுக்காக இந்த நகர்வினை எதிர்த்தனர்.
பார்க்கின் பதவி நீக்கம், வட கொரியாவையும், சீனாவையும் நோக்கி ஒரு கூடிய மிதவாத நிலைப்பாட்டை பின்பற்றக்கூடிய ஒரு எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கு வெற்றியை கொடுக்கின்ற விளைவினை ஏற்படுத்தலாம் என்ற வகையில் சியோலில் உள்ள அரசியல் கொந்தளிப்புகள் வாஷிங்டனில் அச்சங்களை எழுப்பியுள்ளன. அத்தகைய நிர்வாகம் தென் கொரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டை மட்டுப்படுத்தவும், மேலும் பாதுகாப்புவாத நடவடிக்கைகளையும் எடுக்கவும் முயலலாம்.