Print Version|Feedback
White House, Clinton campaign intervene in conflict over Russian hacking charges
ரஷ்ய ஊடுருவல் குற்றச்சாட்டுகள் தொடர்பான மோதலில் வெள்ளை மாளிகையும், கிளிண்டன் பிரச்சாரமும் தலையிடுகின்றன
By Andre Damon
13 December 2016
அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ததான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் மற்றும் உளவு எந்திரத்திற்குள்ளான மோதலானது திங்களன்று வெள்ளை மாளிகை மற்றும் கிளிண்டன் பிரச்சாரத்தின் நேரடியான தலையீட்டை அடுத்து மேலும் தீவிரமடைந்தது.
தேர்தலில் கைப்புரட்டு செய்வதற்காக ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்களை ரஷ்யா ஊடுருவல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக வெள்ளியன்று வெள்ளை மாளிகை அறிவித்தது முதலாக, அரசின் எதிரெதிர் கன்னைகள், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான மோதல்களுடன் பிணைந்ததாக இருக்கின்ற, மேலும் மேலும் அதிக சமரசமற்ற நிலைப்பாடுகளை கைக்கொண்டிருக்கின்றன.
திங்களன்று செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளரான ஜோஷ் இயர்னஸ்ட், தேர்தலில் ரஷ்ய அரசாங்கத்தின் தலையீட்டால் ட்ரம்ப்பின் பிரச்சாரம் அனுகூலம் பெற்றதாக அறிவித்தார். “துஷ்டநோக்கம் கொண்ட ரஷ்ய இணையசெயல்பாட்டின் மூலமாக ஆதாயமடைந்தது யார் என்பதைக் கண்டுகொள்ள சல்லடை போட்டெல்லாம் நீங்கள் தேட வேண்டியதில்லை.”
ட்ரம்ப் குறித்து பேசிய இயர்னஸ்ட் இவ்வாறு சேர்த்துக் கொண்டார்: “செயலர் கிளிண்டனது மின்னஞ்சல்களை ஊடுருவல் செய்ய அவர் ரஷ்யாவை அழைத்தார். ஆகவே இந்த இணையசெயல்பாடுகள் யாருக்கு பயனளித்திருக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியக் கூடும்.”
ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத் தலைவரான ஜோன் போடிஸ்டாவும் திங்களன்று, தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ததாகக் கூறப்படுவது குறித்த சிஐஏ இன் விசாரணை பற்றிய உளவுத்துறையின் விவரிப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி தேர்வு சபையின் பத்து உறுப்பினர்கள் -பெரும்பாலானோர் ஜனநாயகக் கட்சியினர்- விடுத்திருக்கும் கோரிக்கைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.
”டொனால்ட் ட்ரம்ப்பைத் தேர்வு செய்யும் நோக்கத்தோடு நமது தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்பதை சிஐஏ கண்டறிந்திருக்கிறது என்பது இப்போது நமக்குத் தெரியும்” என்றார் போடெஸ்டா. “தேர்வுசபை அங்கத்தவர்களுக்கு அரசியல்சட்டத்தின் கீழான ஒரு உன்னதமான பொறுப்பு உள்ளது, தங்களது கேள்விகளுக்கு விடையளிக்கப்படுவதற்கு அவர்கள் செய்யும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.”
அமெரிக்கத் தேர்தலில் கைப்புரட்டு செய்ததாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைக் குற்றம்சாட்டுவதும், ட்ரம்ப்பை அவரது முகவராகச் சித்தரிப்பதுமாய் ஜனநாயகக் கட்சி தலைமையிலான பிரச்சாரம் எத்தனை வெறித்தனமாய் இருக்கிறது என்பது சிஐஏ இன் முன்னாள் செயல் இயக்குநரான மைக்கல் மோரெல்லின் கூற்றில் சுருங்க வெளிப்பட்டது, இவர் ரஷ்யாவின் தலையீடாக சொல்லப்படுவதை “அரசியல்ரீதியாய் 9/11க்கு நிகரான ஒன்று” என்று அழைத்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, பல முன்னாள் உளவு அதிகாரிகளைப் போலவே, மோரெல்லும் ட்ரம்ப்பை பகிரங்கமாக எதிர்த்தவரும் கிளிண்டனை ஆதரித்தவருமாவார்.
ரஷ்யா ஊடுருவல் செய்ததாக சிஐஏ கூறுவதையும், தனது சார்பாக தலையீடு செய்யப்பட்டதாக கூறப்படுவதையும் மீண்டும் நிராகரித்து இந்த புதுப்பித்த தாக்குதலுக்கு ட்ரம்ப் பதிலிறுப்பு செய்தார். “தேர்தல் முடிவுகள் தலைகீழாய் இருந்து நாங்கள் ரஷ்யா/சிஐஏ துருப்புச்சீட்டை விளையாடுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?” என்று அவர் வினவினார். “அப்போது அது சதி சித்தாந்தம் என்பதாய் அழைக்கப்பட்டிருக்கும்!”
அரசுக்குள்ளான பிளவுகள் வெறுமனே கட்சி வரிசைப்படியானதாக இல்லை. ஊடுருவல் செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து இருகட்சி விசாரணைக்கு ஜனநாயகக் கட்சியினர் விடுத்திருக்கும் அழைப்புகளில் செனட்டர்களான லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜோன் மெக்கெயின் உள்ளிட்ட காங்கிரசின் முன்னணி குடியரசு கட்சி அங்கத்தவர்களும் இணைந்து கொண்டனர். முன்னதாக மெக்கெயின் புட்டினை ஒரு “ரவுடி, வம்பர் மற்றும் கொலைகாரர்” என்று அழைத்தார்.
இந்த இருதரப்பு மோதலின் தீவிரப்படலானது கடந்த பல நாட்களின் இரண்டு அபிவிருத்திகளுடன் தொடர்புபட்டதாய் இருக்கிறது. முதலாவதாய், எக்ஸான் மொபில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரெக்ஸ் டில்லர்சனை ட்ரம்ப் வெளியுறவுச் செயலராக நியமிக்கக் கூடும் என சென்ற வாரத்தின் பின்பகுதியில் வந்த அறிவிப்பு. இந்த நியமனம் ட்ரம்ப்பின் இடைமருவல் அணியால் திங்களன்று இரவு ஊர்ஜிதம் செய்யப்பட்டதோடு இன்று காலை முறைப்படி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டில்லர்சன் புட்டினுடன் நட்புறவு கொண்டவராக இருப்பதற்காகவும் மாஸ்கோவுடன் விரிவான வணிகத் தொடர்புகள் கொண்டவராக இருப்பதற்காகவும் மெக்கெயின் மற்றும் புளோரிடா செனட்டர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட சில குடியரசுக் கட்சியினராலும், ஏராளமான ஜனநாயகக் கட்சியினராலும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்திருப்பவராவார். செனட்டில் அவரது உறுதிப்படுத்தலை தடுத்து நிறுத்துவதற்காக ஜனநாயகக் கட்சியினருடன் தாங்கள் கைகோர்க்கக் கூடும் என்பதை மெக்கெயின் உள்ளிட்ட ஏராளமான குடியரசுக் கட்சியினர் சூசகம் செய்திருக்கின்றனர்.
ஒரு எண்ணெய்துறை குழும நிறுவனத்தின் பலமில்லியன் ஊதிய நிர்வாகியை வெளியுறவுத் துறையின் தலைமையில் அமர்த்துவதற்கு ஜனநாயகக் கட்சியினர் எந்த ஆட்சேபத்தையும் எழுப்பவில்லை. டில்லர்சன் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகள் கொண்டிருப்பதாக கூறப்படுவதன் மீதே அவர்கள் தமது எதிர்ப்பு முழுமையையும் குவிக்கின்றனர்.
இரண்டாவது அபிவிருத்தி என்னவென்றால் அமெரிக்க ஆதரவு சிரிய எதிர்ப்புப் படைகள் நிச்சயமான படுதோல்வியை எதிர்நோக்கியிருப்பதாகும், இப்படைகள் முன்னதாக அவற்றின் கோட்டையாக இருந்த அலெப்போவில் இருந்து ரஷ்ய உதவியுடன் சிரிய அரசாங்கப் படைகளால் துரத்தியடிக்கப்படும் விளிம்பில் இருக்கின்றன. குறிப்பாக, சிஐஏ, சிரிய ஜனாதிபதியும் ரஷ்யாவின் கூட்டாளியுமான பஷார் அல்-அசாத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஆட்சிமாற்ற நடவடிக்கையில் பிரம்மாண்டமான வளங்களை முதலீடு செய்திருக்கிறது. ட்ரம்ப் நியமனம் செய்திருப்பவர்களில், அவரது தேசியப் பாதுகாப்புச் செயலராக நியமனமாகியிருக்கும் மைக்கல் ஃபிளின் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் தோல்வியடைந்த சிஐஏ-தலைமையிலான நடவடிக்கையை விமர்சனம் செய்திருக்கின்றனர்.
நியூ யோர்க் டைம்ஸ், ஞாயிறன்றான ஒரு தலையங்கத்தில், கிளிண்டன் கன்னையின் இலக்குகளை தெளிவாக்கியது. “ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், சிரியாவின் உள்நாட்டுப் போரில் இழைத்த போர்க் குற்றங்களுக்காகவும் உக்ரேன் மற்றும் பிற அண்டை நாடுகளை நோக்கிய அதன் மூர்க்கத்தனத்திற்காகவும் ரஷ்யாவை தண்டிப்பதற்கும் தனிமைப்படுத்துவதற்குமான முயற்சிகளை தனது தலைமையிலான நிர்வாகம் இரட்டிப்பாக்கும் என்பதைத் தெளிவாக்கினார்” என்று அந்த செய்தித்தாள் எழுதியது. “புட்டினை ஒருகை பார்ப்பேன்” என்றும் “ஜனாதிபதியாக அங்ஙனம் செயல்படுவேன்” என்றும் பிரசாரத்தின் போது கிளிண்டன் கூறியிருந்த வசனங்களை அது அனுதாபத்துடன் மேற்கோளிட்டது.
கிளிண்டனுக்குப் பின்னாலிருக்கும் சக்திகள் ரஷ்யா மீதான தங்கள் மிரட்டல்களின் மீது கவனம் குவிக்கின்ற நிலையில், ட்ரம்ப், சீனா மீதான இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை தீவிரப்படுத்துவதன் மீது உடனடிக் கவனம் குவிப்பதை நோக்கிய ஒரு நகர்வை சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த மாதத்தின் ஆரம்பத்தில், தைவான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியிருந்த ட்ரம்ப், முப்பது ஆண்டுகளாய் அமெரிக்க-சீன உறவுகளின் அடித்தளமாக இருந்து வருகின்ற “ஒரே சீனா” கொள்கையில் திருத்தம் செய்ய தான் விரும்புவதாக பின்னர் தெரிவித்தார்.
ட்ரம்ப்புக்கு எதிரான தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்ற ஜனநாயகக் கட்சியினரும் அவர்களை ஆதரிக்கும் ஊடக நிறுவனங்களும் -மிகக் குறிப்பிடத்தக்கதாய் நியூ யோர்க் டைம்ஸ்- ட்ரம்ப் மக்கள் வாக்களிப்பில் தோல்வி கண்டிருந்தார் (கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வாக்குகளில்) என்ற உண்மையை ஏறக்குறைய குறிப்பிடுவதே கிடையாது. அதேபோல ட்ரம்ப், பில்லியனர்கள், பெருநிறுவன அதிகாரிகள் மற்றும் முன்னாள் தளபதிகளைக் கொண்ட ஒரு அதி-வலதுசாரி அமைச்சரவையை அணிதிரட்டிக் கொண்டிருப்பதைக் குறித்தும் அவர்களுக்குப் பிரச்சினை ஏதும் இல்லை.
ரஷ்ய ஊடுருவல் குறித்த ஊர்ஜிதப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை முடிவற்றுத் திரும்பத் திரும்பக் கூறி வரும் ஜனநாயகக் கட்சியினர், தேர்தலை ட்ரம்பை நோக்கி மாற்றுவதற்கு FBI என்ற ஒரு அரசு முகமை தெளிவுபடத் தலையிட்டது குறித்த எந்த பேச்சையும் பெரும்பாலும் கைவிட்டிருக்கின்றனர். கிளிண்டன் மின்னஞ்சல்கள் தொடர்பான விவகாரத்தில் FBI இயக்குநரான ஜேம்ஸ் கோமீ தலையிட்டது கிளிண்டன் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்று தேர்தலுக்குப் பிந்தைய உடனடிக் காலத்தில், கிளிண்டன் பிரச்சாரம் மேற்கோளிட்டிருந்தது. ரஷ்யாவை கண்டனம் செய்வதற்கு வசதியாக இது இப்போது தணித்துக் காட்டப்படுகிறது.
அமெரிக்கத் தேர்தலின் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ரஷ்ய அரசாங்கம் முயற்சி செய்திருக்குமாயின், அவை எத்தகைய முயற்சிகளாய் இருந்தாலும் கூட, FBI போன்ற அமெரிக்க உளவு முகமைகள் ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்துடன் சேர்ந்து கொண்டு செய்த திட்டமிட்ட மற்றும் இரகசியமான சூழ்ச்சிகளின் முன்னால் அவை கடுகளவாகி விடும். விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட ஜனநாயகக் கட்சியின் உள்முக விவகாரங்கள் -கசிவுகளுக்கு ரஷ்யாவின் மீது பழிபோட்டு கிளிண்டன் பிரச்சாரம் புதைத்து விட முனைபவை- பேர்னி சாண்டர்ஸின் முதனிலைத் தேர்தல் சவாலுக்கு குழிபறிப்பதற்காக கிளிண்டன் அணிக்கும் ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபகத்திற்கும் இடையில் நடந்த ஒரு சதியை வெளிக்கொண்டுவந்தன. மற்ற வெளியீடுகளில், கிளிண்டனுக்கு பெரும்தொகையளிக்கப்பட்டு வோல் ஸ்டிரீட்டின் வங்கிகளுக்கு தலைவணங்கி ஆற்றிய உரைகள் இடம்பெற்றிருந்தன.
ஒரு உலகளாவிய போரின் தீவிரப்படுத்தலுக்கான தொலைநோக்குத் தயாரிப்புகள் மற்றும் வாஷிங்டனின் வேட்டையாடும் வெளியுறவுக் கொள்கையின் திசை குறித்த கூர்மையான கருத்துவேறுபாடுகள் ஆகிய 2016 தேர்தலின் இரண்டு பிரச்சாரங்களுமே மறைப்பதற்கு முனைந்த உண்மையான பிரச்சினைகள் தான் இப்போது வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அரசு மற்றும் உளவு எந்திரத்தின் எந்தக் கன்னையின் நிலைப்பாட்டிலும் ஜனநாயக உள்ளடக்கம் என்பது துளியும் இல்லை; பரம-பிற்போக்குத்தனமான ட்ரம்புக்கும் அனுபவம் வாய்ந்த போர்வெறியரான ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையில் தெரிந்தெடுப்பதற்கு ஒன்றுமில்லை. இந்த சண்டைகள் எப்படித் தீர்க்கப்பட்டாலும், விளைவென்னவோ வெளிநாடுகளிலான போரும் அமெரிக்காவிற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலும் பாரிய அளவில் தீவிரப்படுவதாகத் தான் இருக்கப் போகிறது. தொழிலாள வர்க்கம் ஆழமடைந்து செல்லும் நெருக்கடிக்கான பதிலிறுப்பில் இரண்டு கட்சிகள் மற்றும் அவை பாதுகாக்கின்ற உயரடுக்கிற்கு எதிரான விதத்தில் தனது சொந்த அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கான அவசியத்தையே சமீபத்திய நாட்களின் நிகழ்வுகள் வெட்டவெளிச்சமாக்கியிருக்கின்றன.