Print Version|Feedback
Sri Lankan government sends navy to suppress striking port workers
இலங்கை அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்யும் துறைமுக தொழிலாளர்களை ஒடுக்க கடற்படையை அனுப்புகிறது
By our reporters
12 December 2016
இலங்கை அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கடற்படை சிப்பாய்கள், சனிக்கிழமை வேலை நிறுத்தம் செய்திருந்த அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தை வன்முறையில் தகர்த்தனர்.
புதன்கிழமை முதல், இலங்கையின் தெற்கில் உள்ள இந்த துறைமுகத்தில், 480 தொழிலாளர்கள், தனியார்மயமாக்கத்தை எதிர்த்தும் தம்மை அரசுக்குச் சொந்தமான துறைமுக அதிகாரசபையில் நிரந்தர ஊழியர்கள் ஆக்க வேண்டும் எனக் கோரியும், வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். துறைமுகத்தை அரசாங்கம் விற்பனை செய்வதற்கு எதிரான தொழிலாளர்களின் ஆழ்ந்த எதிர்ப்பு காரணமாக, மாகம்புர துறைமுக தொழிலாளர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தள்ளப்பட்டது.
மாகம்புர துறைமுக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
வேலைநிறுத்தம் நடைபெற்று கொண்டிருந்தபோது, வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பண நெருக்கடியில் மூழ்கியுள்ள அரசாங்கம், சீன அரசுக்கு சொந்தமான மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு துறைமுகத்தின் 80 சதவீத பங்குகளை விற்க ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. துறைமுக அதிகார சபை 20 சதவிகிதத்தை தன்வசம் வைத்திருக்கும். இதன் விளைவாக தங்களை வேலைகளை இழப்போம் என தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பின் பகுதியாக நிர்வாக கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ளமர்ந்திருந்தனர். அவர்கள், தளத்தில் 5000 மோட்டார் வாகனங்கள் ஏந்தி இருந்த, ஒரு ஜப்பனீய கே லைன் கொள்கலன் கப்பலான ஹைபெரையான் ஹைவே கப்பலையும் தடுத்த வைத்திருந்தனர். சீனவுக்கு சொந்தமான மற்றொரு சரக்கு கப்பலான எம்.வி. ஹொயங்கரும் பொருட்களை இறக்க முடியாமல் துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது.
கனமாக ஆயுதம் ஏந்தியிருந்த கடற்படை சிப்பாய்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தலைமையில் அங்கு சென்றிருந்தனர். இந்த தளபதி, தொழிலாளர்களை அச்சுறுத்துவதும், ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் ரொஷான் திலிப் குமாரவுடன் மல்லுகட்டுவதும் கமராவில் பதிவாகியுள்ளது. கடற்படையினர் படகு ஒன்றில் துறைமுகத்தை அடைந்து, தொழிலாளர்களை மிரட்டி ஆகாயத்தில் சுட்டனர். துறைமுகத்தை விட்டு வெளியேறாமல் கப்பல்களை தடுப்பதற்காக உயிர்காப்பு படகுகளில் ஏறி கடலில் இருந்த டசின் கணக்கான தொழிலாளர்கள் மர பொல்லுகளைக் கொண்டு கடற்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.
நிர்வாக கட்டிடத்தை ஆக்கிரமித்து, அதன் நுழைவு வாயிலில் மறியல் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தடிகள், துப்பாக்கிகள் கொண்டு தாக்கப்பட்டதுடன் கடற்படை சிப்பாய்களால் காலால் உதைக்கப்பட்டனர். நான்கு தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுர திசாநாயக்க, 49, மாரடைப்பால் அவதிப்பட்டார். தனுஷ்க ரிக்ஷான், 27, தம்மிக்க பிரசாத், 35, மற்றும் ஆர்.ஏ. ஜகத் பிரியசாந்த, 29, அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அனுர மருத்துவமனையில்
கடற்படையினரால் விரட்டப்பட்ட போதிலும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் தொடர்ந்தனர். நூற்றுக்கணக்கான கடற்படையினர் இப்போது ஜப்பானிய கப்பலை விடுவிப்பதற்காக துறைமுகத்தை ஆக்கிரமித்து உள்ளனர்.
தொழிலாளர்களை அச்சுறுத்திய பிறகு, கடற்படையினர் தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான போராட்டத்தை "பயங்கரவாத நடவடிக்கை" என முத்திரை குத்த முயன்றனர். கடற்படை பேச்சாளர் கப்டன் வாசிம் அக்ரம் அலவி, ஏ.எஃப்.பி. செய்திக்குத் கூறியதாவது: "துறைமுகத் தொழிலாளர்களின் நடவடிக்கை கடற் கொள்ளையை ஒத்ததாக இருந்ததால் நாம் அழைக்கப்பட்டோம். வெளிநாட்டு கப்பல்களை சுதந்திரமாக பயணிப்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது." கப்பல்களை தடுத்து வைப்பது சர்வதேச சட்ட மீறலாகும், கடற்படை அங்கு தலையீடு செய்யவதற்கு தகுதிவாய்ந்த அதிகாரம் கொண்டிருக்கின்றது என்று அவர் மேலும் கூறினார்.
வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கம் அவர்களை மலிவு உழைப்புத் தொழிலாளர்களாக சேர்த்துக் கொண்டதாக உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்.
2013 மார்ச்சில், அவர்கள் பயிற்சிக்கு அமர்த்தப்பட்டு, மாதம் வெறும் 10,000 ரூபாய் ($ US83) ஊதியம் பெற்றுள்ளனர். ஒன்றரை ஆண்டு கால பயிற்சியின் பின்னர், அவர்கள் புதிதாக நிறுவப்பட்ட தனியார் நிறுவனமான மாகம்புர போர்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியில் துறைமுக வேலைக்கு உள்வாங்கப்பட்டனர். இந்த நிறுவனம் அவர்களை வாடகைக்கே எடுத்துக்கொண்டுள்ளது. தற்போது அவர்களது மாத சம்பளம், அனைத்தும் உள்ளடக்கப்பட்டு வெறும் 24,500 ரூபா ($167) தான்.
ஒமேஷ் என்பவர் 18 மாத குழந்தைக்கு தந்தை. "நான் என் நிறுவன சம்பளத்தை காண்பித்து கடன் பெற்றேன். இப்போது, நான் வேலையை இழந்தால், எப்படி என் கடனை கட்ட முடியும்? என் முழு எதிர்காலமே ஆபத்தில் உள்ளது," என்று விளக்கினார்.
மற்றொரு தொழிலாளி ஆத்திரத்துடன் கூறியதாவது: "கடற்படைத் தளபதி எங்கள் நடவடிக்கையை ஒரு பயங்கரவாத செயலாக முத்திரை குத்தி அதை அழிக்க முயற்சிக்கின்றார். எமது போராட்டம் நியாயமான ஒன்றாகும். துறைமுகங்கள் அமைச்சர், துறைமுக அதிகார சபை எங்களை சேர்த்துக்கொள்ளவில்லை என்கிறார். எமது வேலையை இழந்தால் நாம் என்ன செய்ய முடியும்?"
"இந்த வேலைநிறுத்தத்தின் தலைவர்களை கைது செய்ய திட்டம் உள்ளதாக தகவல் உள்ளது. எனினும், தலைமையை எடுக்க தயாராக இருக்கும் மற்றவர்களை உள்ளனர். எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்டத்தை நாம் தொடர வேண்டும்,” என மூன்றாவது தொழிலாளி கூறினார். வேலைநிறுத்தம் செய்யும் இன்னொரு தொழிலாளி குறிப்பிட்டதாவது: “அனைத்து தொழிலாளர்களும் பயிற்சி பெற்று, தொழில்நுட்ப படிப்புகளையும் கற்றுள்ளனர். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எங்களுக்கு துறைமுக அதிகார சபையின் கீழ் வேலைகள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது ஆனால் தரவில்லை. நாம் தனியார்மயமாக்குவதை எதிர்க்கின்றோம். இது தனியார்மயத்துக்கு எதிரான ஒரு போராட்டமாகும்."
"வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலிவு உழைப்பை சுரண்டுவதற்காக இங்கே வருகிறார்கள். நாம் அவர்களின் கைகளில் எங்கள் எதிர்காலத்தைக் கொடுக்கத் தயாராக இல்லை. துறைமுக அதிகார சபையும் அரசாங்கமும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எங்களை கொடூரமாக சுரண்டிக் கொள்ள அனுமதிக்க முயற்சிக்கின்றன, அதனால் அவை எங்களை நிரந்தரமாக்க தயாராக இல்லை. நாம் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்," என மற்றொரு தொழிலாளி குறிப்பிட்டார்.
மாகம்புர துறைமுகத் தொழிலாளர் சங்கமானது வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் ஊடாக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தை இணங்க வைக்க அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை பரப்புகின்றது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் லால் காந்த, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து, அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்தி வரும் அதே அரசாங்கத்துக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை காக்கவும், தனியார்மயத்தை எதிர்த்துப் போராடவும் முடியாது. லால் காந்த, வேலைநிறுத்ததை ஆதரிக்குமாறு ஜே.வி.பி. தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு கூட அழைப்பு விடுக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி காணும் எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. வேலைநிறுத்தம் செய்தவர்களை நிரந்தரமாக்கி துறைமுக அதிகார சபைக்குள் உள்வாங்குமாறு ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஆனால், தனது அரசாங்கம் அதைச் 'செய்யாமல், ஒரு தனியார் கம்பனிக்குள் அவர்களைத் தள்ளிவிட்டது ஏன் என அவர் விளக்கவில்லை.
நாமல் ராஜபக்ச மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்படையை அனுப்பி தொழிலாளர்களை தாக்கியதற்காக அரசாங்கத்தை விமர்சித்தனர். எனினும், அதே பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிலாளர்களின் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை நசுக்குவதற்கு இராணுவத்தையும் பொலிசாரையும் அனுப்பிய முன்னைய இராஜபக்ஷ அரசாங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர்.
2011ல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில், பொலிஸ் ஒரு ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். 2012ல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் ஒரு மீனவரைக் கொன்றது. 2013ல், கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள வெலிவேரிய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவத்தினரால் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
கடற்படையை ஈடுபடுத்தியதன் மூலம், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், அது தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்காது, மாறாக அவர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு பொலிஸ்-இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்தும் என்ற செய்தியை, மாகம்புர தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி முழு தொழிலாள வர்க்கத்திற்கும் அனுப்பியுள்ளது. இந்த வழிமுறைகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பது ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போதே உருவாக்கப்பட்டன.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ஆணவத்துடன் தொழிலாளர்களின் உரிமைகளைத் தாக்கினார். துறைமுகத் தொழிலாளர்கள் முன்னாள் இராஜபக்ஷ நிர்வாகத்தின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதால் "அவர்களை நீக்க" அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கின்றது என்று அவர் கூறினார். அரசாங்கம், இந்த தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ளுமாறு சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்னர் விரும்பியதாக தெரிவித்த அவர், "இந்த வேலை நிறுத்தத்தின் பின்னர், என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது," என்று அறிவித்தார்.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது ஏற்றுமதி வீழ்ச்சி, கடன்கள் மற்றும் அந்நிய செலாவனி பற்றாக்குறையுடன் ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றது. அரசாங்கம், முக்கிய துறைகளை தனியார்மயமாக்கல் உட்பட அரச செலவீனத்தைக் குறைப்பது மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை "மறுசீரமைப்பு" செய்வதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் படி, நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்துகிறது.
மாகம்புர துறைமுகம் விற்கப்படுவது இந்த தாக்குதலின் பாகமாகவே ஆகும். இது ஒரு 1.4 பில்லியன் டொலர் சீனாவிடம் இருந்து கடன் பெற்று கட்டப்பட்டுள்ளதுடன் இந்த விற்பனை எஞ்சிய கடனை சரிசெய்வதாக அமையும். நிலம், மலிவு உழைப்பு மற்றும் பிரமாண்டமான வரி குறைப்பு சலுகைகள் உட்பட, வளங்களைக் கொடுப்பதன் மூலம், அரசாங்கம் சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து முதலீடுகளை நாடுகிறது.
இலவச கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகளையும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை மூலம் மட்டுமே பாதுகாக்க முடியும்.
முழுத் தொழிலாள வர்க்கமும், இப்போதைய அடக்குமுறை மற்றும் வேட்டையாடலை எதிர்த்து, மாகம்புர துறைமுக தொழிலாளர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மிகவும் அத்தியாவசியமானதாகும்.
இந்த தாக்குதலானது தொழில் மற்றும் தொழிலாளர்களின் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் சோசலிச கொள்கைகளுக்காகவும் போராட வேண்டியதன் தேவையை மீண்டும் வலியுறுத்துகிறது.