Print Version|Feedback
Trump endorses Duterte’s murderous drug war in the Philippines
பிலிப்பைன்ஸ் இல் டுரேற்றவின் கொலைகார போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கு ட்ரம்ப் ஆதரவு அளிக்கிறார்
By Joseph Santolan
13 December 2016
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் டிசம்பர் 2 அன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற உடன் நடத்திய ஒரு ஏழு நிமிட தொலைபேசி கலந்துரையாடலின்போது, டுரேற்ற இன் கொலைகார போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.
ஜுலை மாத தொடக்கத்தில் டுரேற்ற பதவியேற்றதிலிருந்து, மணிலாவுக்கும், வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் மிகப்பெரிய அளவில் மோசமடைந்துள்ளன. பெய்ஜிங் உடன் உறவுகளை மேம்படுத்துவதை நோக்கிய டுரேற்றவின் நகர்வுகளை குறைப்பதற்கான ஒரு வழிமுறையாக, ஒபாமாவின் வெள்ளை மாளிகை, அவரது நிர்வாகத்திற்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை பயன்படுத்த முயன்றது. தேசிய அரங்கத்துக்கு பழக்கமற்ற ஒரு உறுதியற்ற முன்னாள் மேயரான டுரேற்ற, பகிரங்கமாக ஒபாமாவை தூற்றியதுடன், பிலிப்பைன்ஸ் இலிருந்து அமெரிக்க படைகளை அகற்றுவதற்கு அச்சுறுத்தியும் வெடிப்புடன் இதற்கு பதிலளித்தார்.
டுரேற்ற இன் போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவழித்து, அவருடனான ட்ரம்பின் தொலைபேசி உரையாடல் மணிலாவுடன் உறவுகளை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகவே இருந்தது. பிலிப்பைன்ஸ் தேசிய பொலிஸ் அறிக்கையின்படி இப்போராட்டத்தின் அதிகாரபூர்வ இறப்பு எண்ணிக்கை, ஆறுமாத காலத்திற்குள் 6,000 ஐ தற்போது மீறியுள்ளது. இந்த தொலைபேசி உரையாடல் பற்றிய ட்ரம்பின் முகாம் உத்தியோகபூர்வமான அறிக்கை, இரு தலைவர்களும் "இரு நாடுகளுக்கு இடையிலுள்ள நீண்டகால வரலாறாக திகழும் நட்புறவையும், ஒத்துழைப்பையும் குறிப்பிட்டதுடன், அவர்கள் பகிர்ந்துகொண்ட நலன்கள் மற்றும் கவலைக்குரிய விடயங்கள் மீது இரு அரசாங்கங்களும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என்றும் ஒப்புக்கொண்டனர்" என்ற வகையில் தீங்கற்ற உரையாடலே எனத் தெரிவித்தது.
எனினும், டுரேற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தினை நடத்தி, அதில் இந்த உரையாடல் பற்றிய முழு விவரத்தினை அவர் விவரித்தார். நான் உட்பட பிலிப்பைன்ஸ் இல் நிச்சயமாக கொலைகாரர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று சித்தரித்து ஒபாமா ஆட்சேபனைகள் தெரிவித்தபோதும், இப்போது ட்ரம்ப் வந்ததும், நாங்கள் கலந்துரையாடினோம்," என்று டுரேற்ற அறிவித்தார். இந்த உரையாடலில், "அவர் 'ஓ, ஜனாதிபதி டுரேற்ற, நாம் நமது மோசமான உறவுகளை சீரமைக்கவேண்டும்... நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள். அமெரிக்கர்கள் தங்களை விமர்சிப்பது குறித்தே நீங்கள் வருத்தமடைகிறீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் நன்மையானதையே செய்கிறீர்கள், மேலும் தொடருங்கள்.' என்று ட்ரம்ப் உரையாடியதாக டுரேற்ற கூறினார்." மேலும் ட்ரம்ப், "(போதைப் பொருட்களுக்கு எதிரான) எனது பிரச்சாரத்தில் என்னை நன்கு வாழ்த்தியதுடன்", டுரேற்ற இன் அணுகுமுறை "சரியான வழிமுறையே" என்று குறிப்பிட்டதாகவும் டுரேற்ற கூறினார்.
டுரேற்ற உடனான ட்ரம்பின் தொலைபேசி அழைப்பு, சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணி நாடுடன் நிலவுகின்ற பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு முட்டுகொடுக்கின்ற மற்றுமொரு முயற்சியாகவே அது இருந்தது. அது அமெரிக்காவில் உள்ள பொலிஸ்-அரசு வழிமுறைகள் குறித்த ட்ரம்ப் இன் சொந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியது. ட்ரம்ப், பிலிப்பைன்ஸ் இன் போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்தை, ஆவணமற்ற அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான அவரது சொந்த பிரச்சாரத்துடன் வெளிப்படையாக ஒப்பிட்டதுடன், "இந்த நாசமாய்போன மனிதர்களால் தான்" "மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்க எல்லையில் பிரச்சனை" என்று விவரித்தாக டுரேற்ற அறிவித்தார். மேலும், "வாஷிங்டன் DC அல்லது நியூயோர்க் நகரத்திற்கு நீங்கள் விஜயம் செய்யும்போது என்னை வந்து பாருங்கள், நாம் காப்பி அருந்துவோம், அச்சமயம் நீங்கள், இந்த நாசமாய்போன வேசி மக்கள் மீதான பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று எனக்கு ஒன்றிரண்டு ஆலோசனைகளை வழங்கலாம்." என்று உரையாடலை ட்ரம்ப் நிறைவு செய்ததாக டுரேற்ற கூறினார்.
ஏழு நிமிட உரையாடல் குறித்த டுரேற்ற இன் விளக்கம் எவ்வளவு துல்லியமாக இருந்தது? கடந்த ஒன்பது நாட்களுக்கும் மேலாக, இந்த விளக்கத்தின் மீது எவ்வித மறுப்போ அல்லது மாற்று கருத்தோ தெரிவிக்க ட்ரம்பின் குழு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. ட்ரம்ப் இடைக்கால குழுவின் ஒரு ஆலோசகர், இப்பொழுது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரின் நோக்கம் டுரேற்ற உடன் "ஒரு தூய்மையான புத்தகத்தினை" தொடங்குவதுதான் என்று அறிவித்ததாக Reuters குறிப்பிட்டது. மூலோபாயம் மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான மையத்தின் (CSIS) ஏர்னி போவர், இந்த தொலைபேசி உரையாடல் பெரும்பாலும் பிலிப்பைன்ஸில் உள்ள ட்ரம்பின் வர்த்தக பங்காளர்களுக்கும், மற்றும் "ஒரு ஆலோசகர்களின் மைய குழுவிற்கும் (அவர்களது குழந்தைகளும் உள்ளடங்கும்)" மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்திருக்கலாம், என்று கருத்து தெரிவித்தார்.
வேறுவார்த்தைகளில் சொல்வதானால், இதுவொரு பெயரளவிற்கான இராஜதந்திர அழைப்பாக இல்லை, ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தால் கவனமாக கணக்கிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உபாயமாகவும், 1979 க்கு பின்னர் அமெரிக்கா மற்றும் தாய்வான் தலைவர்களிடையே நிகழ்ந்த முதல் நேரடி தொடர்பாக அதே நாளில் (டிசம்பர் 2 அன்று) தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் உடனான கிட்டத்தட்ட இதேபோன்று குணாம்சத்தை கொண்ட அவரது தொலைபேசி உரையாடலை இது ஒத்திருந்தது.
டுரேற்ற உற்சாகத்துடன் ட்ரம்பின் சமிக்ஞைகளை வரவேற்றதுடன், செய்தி ஊடகத்தில் பின்வருமாறு தெரிவிக்கிறார்: "நீங்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். நீங்கள் ஒரு ஒபாமாவாக இருக்க விரும்பினால், அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும். நீங்கள் ட்ரம்பாக இருக்க விரும்புங்கள், நீங்கள் எனது தோழர் என்று நான் கூறினேன். அதற்கு ட்ரம்ப், 'நீங்கள் சரியாகத்தான் செய்கிறீர்கள், சர்வதேச செய்தி ஊடகத்தினை அசட்டை செய்துவிடுங்கள். எந்தவொரு ஊடகமும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை, நான் எனது சொந்த கருத்தின்படி செயல்பட்டேன்." என்று என்னிடம் தெரிவித்தார்.
டுரேற்ற, தனது போதைப்பொருள் மீதான போராட்டம் என்ற போர்வையின்கீழ் பிலிப்பைன்ஸில் வறிய சமூகத்தினருக்கு எதிராக நடத்துகின்ற அவரின் கொலைகார பிரச்சாரத்தினால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 உடல்களை தெருவில் வீசுவது தொடர்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2000க்கும் மேற்பட்டோர் நேரடியாக பொலிசாரால் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலானோர் "கைதுசெய்வதை எதிர்த்து" வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். மீதமுள்ள 4000 பேர் கண்காணிப்பு படையினரால் கொல்லப்பட்டனர், இவர்கள் கொலையில் பலியானவர்களின் சடலங்களை பிளாஸ்டிக்கில் வைத்து அதன்மீது, "நான் ஒரு போதைப்பொருள் வியாபாரி, என்னை பின்பற்ற வேண்டாம்." என்ற அடையாள குறிகளையும் இடுகின்றனர். போதைபொருள் விற்பனையாளர் மற்றும் குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கொல்வதற்கு டுரேற்ற மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் பொலிஸுக்கு அழைப்புவிடுத்ததுடன், அவர்களுக்கு இந்த கொலைகள் மீதான தண்டனைகளிலிருந்து விலக்கீட்டிற்கும் வெளிப்படையான வாக்குறுதி அளித்தார்.
அமெரிக்க-பிலிப்பைன்ஸ் உறவுகளில் நெருக்கடிகள், இந்த சிலுவை போர் போன்ற கொலைகார போராட்டத்திலிருந்து எழவில்லை. ஒபாமா நிர்வாகம் ஆரம்பத்தில் டுரேற்றவின் போதைபொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஜோன் கெர்ரி ஜுலை மாதம் மணிலாவிற்கு விஜயம் செய்திருந்தபோது, 32 மில்லியன் டாலருக்கு நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தார். டுரேற்றவின் நடவடிக்கைகள் மீதான ஒபாமாவின் பிந்தைய பொது விமர்சனங்கள் இருந்தபோதும், வாஷிங்டன் நிதியளிப்பை தொடர்வதுடன், பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் எதிர்ப்புக்கு பயிற்சியும் அளிக்கின்றனர். இந்த நாட்டில் அமெரிக்க ஆயுதப்படைகளின் நிலைநிறுத்தலை தக்கவைப்பதற்கு மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான ஒரு முயற்சியாக, வாஷிங்டன் Blaikatan என்று குறிப்பிடுகின்ற எதிர்கால கூட்டு இராணுவ பயிற்சியில் போதைப்பொருள் எதிர்ப்பினையும் ஒரு முக்கிய கூறாக உட்படுத்தி விவாதித்து வருகிறது.
பெய்ஜிங் உடன் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிப்பதற்கான டுரேற்றவின் நகர்வுகளுக்கு மாறாக பிலிப்பைன்ஸில் உள்ள மனித உரிமை மீறல்கள் குறித்த வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடு பிணைந்துள்ளது. ஹேக் நகரில் உள்ள நிரந்தர நீதிமன்றம் (Permanent Court of Arbitration) மூலம் சீனாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஜுலை தீர்ப்பினை புறக்கணித்து, டுரேற்ற தென் சீனக் கடல் பகுதியில் உள்ள அழுத்தங்களை குறைப்பதன் மூலம் சீனாவுடனான உறவுகளை ஒழுங்கமைக்க முயன்றதுடன், தென் சீனக் கடல் பகுதியில் வாஷிங்டன் உடனான கூட்டு இராணுவ பயிற்சிகளையும் இரத்து செய்கிறது.
இந்த பிரச்சனைகள் ட்ரம்பின் தொலைபேசி உரையாடல் மூலமாக அகன்றுவிடவில்லை. டுரேற்ற சீனாவில் இருந்து ஆயுதங்களை பெறும் தன்னுடைய விருப்பத்தையும் அறிவித்துள்ளார். 25 ஆண்டுகளில் செலுத்தப்படவேண்டிய ஒரு சீன கடன் மூலம் வாங்கப்பட்ட ஆயுதங்களை மணிலாவுக்கு வழங்க பெய்ஜிங் முன்வந்துள்ளதாக அவர் செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய அவர் பாதுகாப்பு செயலாளர் டெல்பின் லோரென்ஷானாவை சீனாவுக்கு அனுப்பபோவதாக தெரிவித்தார். அப்பொழுதுதான் மாஸ்கோவிலிருந்து மணிலாவுக்கு லோரென்ஷானா திரும்பியிருந்ததுடன், 1976 க்கு பின்னர் பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் ஒரு தலைவராக முதல்முறையாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்ததுடன், ரஷ்யாவுடனான அதிகரிக்கப்பட்ட இராணுவ உறவுகள் குறித்து அங்கு அவர் உரையாடினார்.
போதைப்பொருள் எதிர்ப்பின் கீழ் உள்நாட்டு அடக்குமுறை ஈடுபடுத்தபடவுள்ள நிலையில், சீனாவில் இருந்து ஆயுதங்களை பெறுவதற்கான ஒரு நகர்வினை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் தேசிய பொலிஸுக்கு 26,000 துப்பாக்கிகள் விநியோகிக்கபோவதாக இருந்த அமெரிக்க ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது. வாஷிங்டன் இந்த ஏற்பாடுகளை நிறுத்திவைத்தது, குற்றஞ்சாட்டப்பட்ட மனித உரிமை பிரச்சனைகளை சுட்டிக்காட்டி சீனாவிலிருந்து டுரேற்ற விலகியிருப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தை கொண்டதாகும்.
கடந்த வாரம் டுரேற்ற அரசாங்கம், தென் சீனக் கடல் பகுதிகளில் அமெரிக்காவின் தடையற்ற கப்பல் போக்குவரத்திற்குச் சுதந்திர நடவடிக்கைகளுக்கு (Freedom of Navigation Operations-FONOP) பிலிப்பைன்ஸ் இராணுவ தளங்களை அமெரிக்க கப்பல்களின் ஒத்திகை பார்ப்பு தளங்களாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காது என்று அறிவித்தது. விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் (EDCA) பிலிப்பைன்ஸில் அமெரிக்க படைகள் தளம் அமைத்துக்கொள்ள டுரேற்ற உறுதியாக உள்ளபோதும், சீனாவுடனான அழுத்தங்களை குறைப்பதற்கும் அதே நேரத்தில் முயன்றுவருகின்றார். இந்த தடையற்ற கப்பல் போக்குவரத்திற்குச் சுதந்திர நடவடிக்கைகள் மூலம் சீனா உரிமை கோரும் நீர்நிலைகளில் வெளிப்படையான ஆத்திரமூட்டல்களாக நடத்தப்படும் கப்பல்படையின் நேரடி ஊடுருவல்கள் இந்த பிராந்தியம் முழுவதிலும் பதட்டங்களை அதிகரித்துவிட்டன. தடையற்ற கப்பல் போக்குவரத்திற்குச் சுதந்திர பயன்பாட்டிற்கான கப்பல்களுக்கு குவாம் அல்லது ஜப்பானில் உள்ள அதன் இராணுவ தளங்களை வாஷிங்டன் பயன்படுத்தலாம் என்று டுரேற்ற அறிவித்தார்.
சீனாவுடனான உறவுகளை அதிகரிப்பதற்கும், வாஷிங்டன் உடனான உறவுகளை தக்கவைத்துக்கொள்வதற்கும் டுரேற்ற எடுக்கும் முயற்சிகள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. பிலிப்பைன்ஸ் அரசியல் நெருங்கிய கூட்டணி வைத்துள்ள அதன் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான அமெரிக்கா நெருக்கடியில் உள்ளது. முந்தைய ஜனாதிபதி பெனிக்னோ அக்கினோவுடன் தொடர்புடைய தாராளவாத கட்சியின் (Liberal Party) துணை ஜனாதிபதி லெனி ரொப்ரேடோ இந்த நெருக்கடிகளின் விளைவாக டுரேற்ற அமைச்சரவையினை பதவி விலகச்செய்தார். ரொப்ரேடோ, டுரேற்ற இன் கொள்கைகள் குறித்து அதிகரித்தளவில் எதிர்ப்புக்கு தொடர்புடையவராக இருந்தார், மேலும், முன்பு மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தற்போதிருக்கும் அமைச்சரவை செயலாளரான லியான்சியோ எவாஸ்கோ மூலமாக அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்க அவர் அறிவுறுத்தப்பட்டார். மேலும், அவர் இராஜினாமா செய்தார்.
டுரேற்ற மீதான எதிர்ப்பு, அமெரிக்காவை தளமாக கொண்ட ஃபிலிபினோ அமெரிக்கன் பில்லியனர் லொய்டா நிக்கோலஸ் லூயிஸ் இடமிருந்து பாரிய நிதியளிப்பினை பெற்றுள்ளது, மேலும் இவர் அவரது US Pinoys for Good Government (USP4GG) நிறுவனத்தின் மூலமாக டுரேற்றவின் இராஜினாமாவுக்கும் அழைப்புவிடுத்தார். USP4GG 2010ல் அக்கினோவின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு நிதியளித்ததுடன், போலி-இடது அமைப்பான Akbayan மூலமாக தென் சீனக் கடல் பகுதிகளுக்கு ஆத்திரமூட்டும் விஜயம் செய்தது உட்பட, ஆவேசமான ஆதரவுடன் நடாத்தப்பட்ட சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் அவரது நிர்வாகத்தின்போது பெரும்பங்கு நிதியளிப்பினை வழங்கியது. அமெரிக்காவில் சீன நிதி நலன்கள் குறித்த எதிர்ப்பினை பற்றி விவாதிப்பதற்கு பெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கே இனை பல சந்தர்ப்பங்களில் லூயிஸ் சந்தித்தார்.