Print Version|Feedback
No “Peace on Earth” in 2016
2016 இல் "பூமியில் சமாதானம்" இல்லை
Andre Damon
23 December 2016
“பூமியில் சமாதானம், மனிதர்களிடையே நல்லெண்ணம்" என்று அதிகளவில் பாடப்படும் ஒரு கிறிஸ்துமஸ் பாடல் வரி இவ்வாறு செல்கிறது. இந்தாண்டின் இறுதி விடுமுறை நாட்களில், அரசியல் ஸ்தாபகத்தின் பல்வேறு பிரமுகர்களால் ஆனமட்டும் எரிச்சலும் பாசாங்குத்தனமும் எடுத்துக்காட்டப்படுகின்ற நிலையில், மக்களின் பரந்த அடுக்களால் பொதுவாக இதுபோன்ற உணர்வுகள் தான் உண்மையாக வெளியிடப்படுகின்றன.
எவ்வாறிருப்பினும் உலக அரசியலின் உண்மையான போக்கு, ஏறத்தாழ முழுமையாக விரைவில் அமெரிக்க ஜனாதிபதியாக ஆகவிருப்பவரிடம் இருந்து வந்த ஒரு ட்வீட் செய்தியில் பிரதிபலித்தது. “அமெரிக்கா அதன் அணுஆயுத தகைமைகளைப் பிரமாண்டமாக பலப்படுத்தி, விரிவாக்க வேண்டும்,” ட்ரம்ப் வியாழனன்று அறிவித்தார். MSNBC நிகழ்ச்சி தொகுப்பாளர் Mika Brzezinki இன் அறிக்கை ஒன்று இதை தொடர்ந்து வெள்ளியன்று வெளியானது: “அது ஆயுத போட்டியாகவே இருக்கட்டும். நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களைக் கடந்து சென்று, அவர்கள் அனைவரையும் தோற்கடிப்போம்,” என்றார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் ட்ரம்ப் இருவருமே அவரவர் நாடுகளது அணுஆயுத தளவாடங்களைக் குறித்து பெருமைபீற்றியதில், புட்டின் உடனான பரிவர்த்தனையின் பாகமாக ட்ரம்பிடம் இருந்து வந்த இந்த கருத்துக்கள், இரத்தக்களரியான ஓர் ஆண்டை அதற்கு பொருத்தமான முறையில் நிறைவு செய்வதாக தெரிகிறது.
2016 இல், உலகின் பெரும்பாலான பகுதிகள் இராணுவ மோதலால் சூழப்பட்டிருந்தன. பெயரளவில் சமாதானத்திற்காக நின்ற அரசுகள், போருக்கு தயாரிப்பு செய்வதில் அவற்றின் நேரத்தை செலவிட்டதுடன் ஆயுத மோதலில் இருந்து தப்பி வந்த அகதிகளைக் கடுமையாக கையாண்டன.
முடிவான புள்ளிவிபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்றாலும், 2016 இல் உலகெங்கிலுமான ஆயுத மோதலில் குறைந்தபட்சம் 150,000 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். 2016 இல் 100,000 க்கு அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கையுடன் அங்கே மூன்று "பிரதான போர்கள்" நடைபெற்று இருந்தன:
· சிரிய உள்நாட்டு போர், இதில் 46,442 பேர் இந்தாண்டு கொல்லப்பட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. 2011 இல் இஸ்லாமிய கிளர்ச்சிகளை அமெரிக்கா ஆதரிக்க தொடங்கியதில் இருந்து, 470,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போர் 4.9 மில்லியன் மக்களை வெளிநாடுகளுக்கு வெளியேற நிர்பந்தித்துள்ளது மற்றும் 6.6 மில்லியன் பேரை சிரியாவிற்குள்ளேயே இடம்பெயர்த்தி உள்ளது.
· ஈராக் போர், இதில் இந்தாண்டு மட்டும் 23,584 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2003 இல் அமெரிக்கா இந்நாட்டின் மீது படையெடுத்ததில் இருந்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நவம்பர் வரையில், 3.1 மில்லியன் மக்கள் இந்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர், மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி இருந்தனர்.
· ஆப்கானிஸ்தான் போர், இதில் இந்தாண்டு 21,932 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1978 இல் தாலிபான்களின் முன்னோடிகளான முஜாஹிதீன்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்க தொடங்கியதில் இருந்து, அந்நாட்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அந்நாடு 2001 படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.
இராணுவ சண்டைகளில் உலகளாவிய உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கை இந்த மூன்று போர்களும் கணக்கில் கொண்டுள்ளன. இவை இரண்டாம் உலக போருக்குப் பின்னர், சமாந்தரத்தில் இல்லாதளவிற்கு ஓர் அகதிகள் நெருக்கடிக்கும் இட்டுச் சென்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, 2015 இன் முடிவில் 65.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர், இது 2014 க்குப் பின்னர் இருந்து 5 மில்லியன் அளவிற்கு அதிகமாகும் மற்றும் 2011 க்குப் பின்னர் இருந்து அண்மித்து 25 மில்லியன் அதிகமாகும்.
அகதிகளின் அதிகரிப்பானது, அவர்கள் சென்றடையும் நாடுகளில் அதிகரித்தளவில் அவர்கள் குரூரமாக கையாளப்படுவதுடன் சேர்ந்து, புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பினால் இதுவரையில் பதிவு செய்திராத அளவில் பெரும்தொகையான அகதிகள் உயிரிழப்புக்கும் இட்டுச் சென்றுள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 7,100 அகதிகள் உயிரிழந்தனர், இது 2015 இல் இறந்த 5,740 பேரை விட அதிகமாகும். இந்த உயிரிழப்புகளில் பாதிக்குப் பாதி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் போர் மற்றும் நாசப்படுத்தலில் இருந்து அகதிகள் மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற போது ஏற்பட்டதாகும்.
இந்தாண்டு, ஐரோப்பா அகதிகளுக்கு அதன் கதவுகளை மூடியது. அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைவதைத் தடுத்து, ஐரோப்பாவின் வாயில் காவலனாக சேவையாற்ற துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் பணம் வழங்க ஒப்புக் கொண்டது, அதேவேளையில் அது அதன் எல்லை ரோந்து நடவடிக்கையை இராணுவமயப்படுத்தியதுடன், “மக்கள் கடத்தல்களை" தடுப்பதற்காக அதன் அங்கத்துவ நாடுகளின் கடற்படைகளை நிலைநிறுத்தியது.
இந்த மாற்றம், அப்பிராந்தியத்தின் மிகவும் சக்தி வாய்ந்த அரசான ஜேர்மனியால் மிகச் சிறந்த முறையில் எடுத்துக்காட்டப்படுகிறது, தன்னைத்தானே மேலாதிக்க ஐரோப்பிய சக்தியாக வலியுறுத்துகின்ற அது துரிதமாக இராணுவமயப்பட்டு வருகிறது. 2015 இல் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் பாசாங்குத்தனமாக அகதிகளை "வரவேற்கும் கலாச்சாரத்தை" பிரகடனப்படுத்திய போதினும், அவர் இம்மாதம் முழுமையாக முகத்தை மறைக்கும் முக்காடுக்கு தடைவிதிப்பதற்கு அழைப்புவிடுத்தும் மற்றும் அகதிகளை கூடுதலாக ஒடுக்குவதற்குக் கோரியும், பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியின் வேலைத்திட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை ஏற்று கொண்டார்.
ஈராக், சிரியா மற்றும் லிபியாவின் "கடுமையான போர்களுக்கு" அப்பால், சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் உந்துதல் உலகின் பிராந்திய வெடிப்பு புள்ளிகளுக்கு எரியூட்டியுள்ளது. இரண்டு அணுஆயுத சக்திகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லையோரங்களில் நடந்த தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுக்களில் இந்தாண்டு சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையிலான இராணுவ பதட்டங்கள், இதுவும் அணுஆயுத போருக்குள் தீவிரமடைய அச்சுறுத்துகின்ற நிலையில், மிக வேகமாக தீவிரமடைந்துள்ளன.
முடிவின்றி விரிவடைந்து வந்துள்ள போர்களின் ஒரு கால் நூற்றாண்டு, இன்னும் அதிக வெடிப்பார்ந்த ஒரு கட்டத்தை எட்டி வருகிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு நேரடியாக வழிவகுத்த, 1991 இல் முதல் வளைகுடா போருடன் தொடங்கி, அமெரிக்கா அடுத்தடுத்த வெளிநாட்டு தலையீடுகள் மூலமாக அதன் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்துகொள்ள முயன்றது.
இரண்டு பதவிகாலங்கள் முழுவதிலும் தொடர்ச்சியான போரில் சேவையாற்றிய முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா வெளியேறவிருக்கிறார். விசாரணையின்றி அமெரிக்க குடிமக்களைப் படுகொலை செய்யும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு என்று பிரகடனப்படுத்திய ஒரு மனிதராக, ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற டிரோன் "தாக்குதல்களுக்கு" தனிப்பட்டரீதியில் அனுமதி வழங்கியவராக, அவர் வரலாற்றில் தரந்தாழ்ந்து போகவிருக்கிறார்.
எவ்வாறிருப்பினும் இந்த முடிவில்லா போர்கள் அவை விரும்பிய விளைவை அடைவதில் தோல்வியடைந்துள்ளன. கடந்த பதினைந்து ஆண்டுகளில், உலக ஏற்றுமதி சந்தையில் சீனா அதன் பங்கை மூன்று மடங்காக்கி உள்ளது, அதேவேளையில் அமெரிக்காவின் ஏற்றுமதி பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வரையில் லிபியா வரையில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள், புதைகுழிகளாக மற்றும் தோல்விகளாக திரும்பியுள்ளன. இம்மாதம் சிரியாவில் சிஐஏ இன் இஸ்லாமிய பினாமிகளது தோல்வி, மத்திய கிழக்கிலும் மற்றும் உலகெங்கிலும் அதன் விருப்பத்தை திணிப்பதற்கான அமெரிக்காவின் தோல்வியை உள்நாட்டில் திருப்பி தாக்கியுள்ளது.
ஆனால் இத்தகைய தோல்விகள் அமெரிக்காவின் போர்வெறி கொண்ட ஆளும் உயரடுக்கை சமாதானவாதிகளாக மாற்றிவிடும் என்று ஒரு முட்டாள் தான் நம்புவார். அதற்கு மாறாக, அவை அமெரிக்க ஆளும் வர்க்கத்தை அதன் மிகப்பெரிய போட்டியாளர்கள் மீது இன்னும் அதிக நேரடியாக ஒருமுனைப்பட இட்டுச் சென்றுள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் வரவு, உலக மோதலின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. சீனாவிற்கு எதிரான ட்ரம்பின் ஆத்திரமூட்டல்களும் மற்றும் ரஷ்யாவுடன் அவர் ஒரு புதிய ஆயுத போட்டியை வரவேற்பதாக அறிவிப்பதும், அமெரிக்க செல்வந்த அதிகார அடுக்குகளின் நலன்களைப் பேணுவதற்கு அவர் நிர்வாகம் எந்தளவிற்கு தயாராக இருக்கிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் மட்டுமேயாகும்.
1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நிறைவான 2017 ஆம் ஆண்டு, போருக்கு எதிரான போராட்டத்தை மனிதகுலம் முகங்கொடுக்கும் மிக உயர்ந்த மற்றும் மிக அவசர அரசியல் பணியாக மீண்டுமொருமுறை முன்வைக்கின்றது.