Print Version|Feedback
Behind hacking allegations: Explosive conflict over US policy toward Russia
ஊடுருவல் குற்றச்சாட்டுகளின் பின்னால்: ரஷ்யா தொடர்பான அமெரிக்க கொள்கை குறித்த வெடிப்பான மோதல்
By Patrick Martin
12 December 2016
கடந்த மூன்று நாட்களாய், அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள்ளாக, ரஷ்யாவை மையமாகக் கொண்டு, வெளியுறவுக் கொள்கை விடயத்திலான ஒரு மோதல் பகிரங்கமான பதிலடி வாதங்களாய் வெடித்திருக்கிறது. குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படும் நோக்கத்துடன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து “ரஷ்யாவின் ஊடுருவல்” நடைபெற்றிருந்ததாக பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான ஊடகங்களில் அதிகரித்த வெறிகொண்ட கூற்றுகளின் வடிவத்தை அது எடுத்திருக்கிறது.
வெள்ளியன்று இரவு வாஷிங்டன் போஸ்டிலும் சனிக்கிழமை நியூயோர்க் டைம்ஸிலும் வந்த அடுத்தடுத்த கட்டுரைகளால் இந்தப் பிரச்சாரம் தூண்டப்பட்டிருந்தது, ரஷ்ய அரசாங்கம் ட்ரம்ப் ஜனாதிபதி பதவியை வெல்வதில் உதவ முயன்றதை ஒரு புதிய இரகசிய சிஐஏ மதிப்பீடு கண்டறிந்திருந்ததாக இக்கட்டுரைகள் கூறின. இதுவே பின்னர் பகிரங்கமாய் வெளியிடுவதற்காக விக்கிலீக்ஸுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு மற்றும் கிளிண்டன் பிரச்சாரத்தில் இருந்தான மின்னஞ்சல்கள் ஊடுருவல் செய்யப்பட்டிருந்ததன் நோக்கமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ட்ரம்ப்புக்கு ரஷ்யா ஆதரவாக செயல்பட்டது என்பதற்கான ஆதாரமாக, ஊடுருவல்கார்கள் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவின் கணக்குகளிலும் கூட ஊடுருவி விட்டிருந்தனர், ஆனாலும் குடியரசுக் கட்சி சார்பான மின்னஞ்சல்களை வெளியிடவில்லை ஏனென்றால் அவர்களின் நோக்கம் கிளிண்டனை மதிப்பிழக்கச் செய்வதாக இருந்ததே தவிர ட்ரம்பை மதிப்பிழக்கச் செய்வதல்ல என்பதான கூற்றை டைம்ஸ் முன்வைத்தது. இந்தச் செய்தியை குடியரசுக் கட்சியின் தேசியக் கமிட்டித் தலைவரான ரெய்ன்ஸ் ப்ரீபஸ் -வரவிருக்கும் ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை நிர்வாகத்தில் ஊழியர்களின் தலைவராக இவரே அறிவிக்கப்பட்டிருக்கிறார்- முற்றிலும் மறுத்திருக்கிறார்.
ட்ரம்ப்பே கூட ஞாயிறன்று ஃபாக்ஸ்நியூஸ் தொலைக்காட்சியில் தோன்றி, ரஷ்ய தலையீடு குறித்த செய்திகளை, ஜனநாயகக் கட்சியினர் தங்களது தேர்தல் தோல்வியை விளக்குவதற்காகப் பயன்படுத்தும் புளித்த திராட்சை கதை என்று கூறி கண்டனம் செய்தார். “இது அபத்தமானதாக கருதுகிறேன்” என்றார் அவர். “இது இன்னொரு நொண்டிச்சாக்கு என்று நான் நினைக்கிறேன். என்னால் நம்பமுடியவில்லை... ஜனநாயகக் கட்சியினர் நாட்டின் அரசியல் வரலாற்றின் மிகப்பெரும் தோல்விகளில் ஒன்றைக் கண்டிருப்பதால் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.”
அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள்ளாக இருக்கும் பிளவுகளின் தீவிரமானது, “இதே ஆட்கள் தான் சதாம் உசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறினர்” என்று நக்கலாகக் குறிப்பிட்டு, சிஐஏ இன் மதிப்பீடாகச் சொல்லப்படுவதற்கு ட்ரம்ப் இடைமருவல் அணி அளித்த ஆரம்ப பதிலிறுப்பில் எடுத்துக்காட்டப்படுகிறது.
The Intercept இல் கிளென் கிரீன்வால்ட் குறிப்பிட்டவாறாக: “இந்த கூற்றுகளில் எதற்கும் அத்தகைய ஆதாரம் ஏதுமில்லை. அதற்குப் பதிலாய், பெயர்கூறப்படாத மனிதர்களால், நிரூபணம் கூட வேண்டாம், எந்த ஆதாரமும் கூட முற்றிலும் இல்லாமல் பரப்பப்படுகின்ற திட்டவட்டங்கள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன. அதனால், ஆதாரமாகக் கூறப்படும் எதனையும் பொதுவில் பார்க்க முடியவில்லை, திறனாய்வு செய்ய முடியவில்லை, அல்லது விவாதிக்க முடியவில்லை. சிஐஏ என்ன நம்புகிறது என்பதாக பத்திரிகைகளுக்கு கசிய விடப்படும் விலாசமில்லாத கூற்றுகள் எல்லாம் நிரூபணமாகி விடாது; அத்துடன் திறனாய்வு செய்யத்தக்க உண்மையான ஆதாரத்துக்காய் பிரதியிடத்தக்க நம்பத்தகுந்த ஆதாரமாகவும் ஆகிவிடாது.”
பேர்னி சாண்டர்ஸின் முதனிலைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பலவீனப்படுத்துவதற்கு கிளிண்டன் பிரச்சாரத்திற்கும் ஜனநாயகக் கட்சியின் தேசிய கமிட்டிக்கும் இடையில் நடந்த ஒரு சதியை ஆவணப்படுத்துகிற கசிந்த மின்னஞ்சல்களின் உள்ளடக்கத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்புவது தான், ஜூலையில் நடந்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவு மாநாட்டின் சமயத்தில் கிளிண்டனாலும் ஜனநாயகக் கட்சியாலும் ரஷ்யா ஊடுருவல் செய்ததாக கூறப்பட்ட பிரச்சாரத்திற்கான உடனடியான நோக்கமாக இருந்தது.
ஆயினும் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள் குறித்த பகிரங்க மோதலின் பின்னால் வெளியுறவுக் கொள்கை குறித்த ஒரு ஆவேச மோதல் இருக்கிறது என்பது இப்போது தெளிவாகிறது. ஆளும் வர்க்கத்திற்குள்ளாக, சீனாவுக்கு எதிரான ஒரு கூடுதல் மூர்க்கமான இராணுவ, பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தாக்குதலை முன்னெடுக்கக் கூடிய ஒரு அமெரிக்கக் கொள்கை மீது கவனம்குவிக்க விரும்பும் ஒரு கன்னைக்காக ட்ரம்ப் பேசுகிறார். ரஷ்யாவை நோக்கிய மூர்க்கமான மற்றும் மோதல்நிரம்பிய நிலைப்பாட்டில் இருந்து எந்த மாற்றத்தையும் எதிர்க்கின்ற உளவு ஸ்தாபகம் மற்றும் இராணுவத்தின் ஒரு கன்னைக்காக ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற முன்னணி ஊடக நிறுவனங்களும் பேசுகின்றனர்.
டைம்ஸில் ஞாயிறு இரவு பதிவிடப்பட்ட “அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் கை” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் இது அடிக்கோடிடப்பட்டது. ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக ரஷ்யா ஊடுருவல் செய்ததாக எந்த ஆதாரத்தையும் வழங்காமல் டைம்ஸ் மீண்டும் தெரிவிக்கிறது. தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், “சிரிய உள்நாட்டுப் போரில் இழைத்த போர்க் குற்றங்களுக்காகவும் உக்ரைன் மற்றும் மற்றைய அண்டை நாடுகளிடத்திலான மூர்க்கத்தனத்திற்காகவும் ரஷ்யாவை தண்டிப்பதற்கும் தனிமைப்படுத்துவதற்குமான முயற்சிகளை இரட்டிப்பாக்க” இருப்பதாக உறுதிபூண்டமைக்காக ஹிலாரி கிளிண்டனை அது பாராட்டியது. கிளிண்டன் வென்றிருந்தால், ரஷ்யாவுடன் ஒரு போரைத் தூண்டுவது தான் அவரது முதல் நடவடிக்கையாக இருந்திருக்கும் என்றும், அதற்கு டைம்ஸின் உற்சாகமான ஆதரவு கிட்டியிருக்கும் என்றுமான முடிவுக்கு ஒருவர் வரலாம்.
அசாதாரண மொழியைப் பயன்படுத்தி, இந்தத் தலையங்கம் தொடர்ந்து எழுதுகிறது: “தன்னைச் சுற்றிலும் கிரெம்ளின் எடுபிடிகளை சூழக் கொண்டிருந்த ஒரு வளைத்துவிடத்தக்க அரசியல் கத்துக்குட்டியை திரு.ட்ரம்பில் ரஷ்யர்கள் காண்பதற்கான காரணம் இருந்தது.” ரஷ்யத் தலையீட்டின் விளைவாக “உண்மையில் இத்தேர்தல் முறைகேடு நடந்திருந்த ஒன்று தான்” என்று சூசகம் செய்வதுடன் அது முடிகிறது.
பில்லியனர் பிற்போக்குவாதிகள் மற்றும் தளபதிகளின் ஒரு அமைச்சரவையை ஒன்றுதிரட்டுவதற்காகவோ அல்லது மெடிக்கேர், மெடிக்எய்ட், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுக் கல்வி ஆகிய திட்டங்களை இல்லாது செய்வதற்கும் சமூகச்சூழல் பெருநிறுவனங்களால் மாசுபடுத்தப்படுவதற்கு இருக்கும் அத்தனை இடையூறுகளையும் அத்துடன் வங்கிகள் மற்றும் பெருவணிகங்களுக்கென இருக்கும் அத்தனை நெறிமுறைகளையும் அகற்றுவதற்கும் அவர்கள் திட்டமிடுவதற்காகவோ டைம்சும் சரி ஜனநாயகக் கட்சியினரும் சரி ட்ரம்ப்பை கண்டனம் செய்யவில்லை.
ட்ரம்ப்பின் கீழ் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் இருந்து எந்த விலகலும் நடந்து விடுவதைத் தடுப்பதன் மீதே அவர்கள் முழுமையாக கவனம்குவிக்கின்றனர். கிளிண்டன் ஆதரவாளரான மைக்கல் தோமாஸ்கி என்பவர் டெய்லி பீஸ்ட் வலைத் தளத்தில் ”மூன்றாம் உலகப் போர்: ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அமெரிக்கா Vs ட்ரம்ப் மற்றும் ரஷ்யா” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு கருத்தில் இவர்களது பிரச்சாரத்தின் வெறித்தனமான மற்றும் நவ-மெக்கார்திய தன்மை சுருங்கக் கூறப்பட்டது. ட்ரம்ப் மற்றும் ரஷ்யா குறித்த வாஷிங்டன் போஸ்ட் செய்தியையும் அதனைத் தொடர்ந்து வந்திருந்த நியூ யோர்க் டைம்ஸ் செய்தியையும் ட்ரம்ப் மீதான “ஹிரோசிமா” என்று “நாகாசாகி” என்று சித்தரித்த தோமாஸ்கி, ட்ரம்ப்பை ஆதரித்த செனட் பெரும்பான்மை தலைவரான மிட்ச் மெக்கோனல் போன்ற நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சியினர் தேசத்துரோகம் இழைத்த குற்றஉணர்வுக்கு ஆளாகத்தக்கவர்கள் என்பதாகக் கூறியிருந்தார்.
கம்யூனிச-விரோத சூழ்ச்சி-வேட்டை முறைகளுக்கு புத்துயிர் கொடுக்கின்ற இந்தப் பிரச்சாரமானது, ட்ரம்ப்பை மட்டுமல்லாது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளை எழுப்பும் எவரொருவரையும் ரஷ்ய முகவர்களாக மறைமுகமாக முத்திரை குத்துவதற்காக, குறிவைக்கிறது.
ஃபாக்ஸ்நியூஸில் ஞாயிறன்று பேசியபோது, ட்ரம்ப், வாஷிங்டன் பல தசாப்தங்களாய் பின்பற்றி வருகிற தைவான் ஒரு இறையாண்மை கொண்ட தனிதேசமல்ல, மாறாக சீனாவின் பகுதியே என்பதை ஒப்புக் கொள்ளும் ”ஒரே சீனா” கொள்கை மீது கேள்வி எழுப்பியதன் மூலம் தான் முன்நிறுத்தவிருக்கும் வெளியுறவுக் கொள்கை நோக்குநிலையை சுட்டிக்காட்டினார்.”ஒரே சீனா கொள்கை எனக்கு முழுதாகப் புரிகிறது” என்றார் ட்ரம்ப். ஆனால், வர்த்தகம், நாணயமதிப்பு, தென் சீனக் கடல் மற்றும் வட கொரியா உள்ளிட்ட ”மற்ற விடயங்களில் சீனா செய்ய வேண்டியவை குறித்து அதனுடன் நாம் ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியாத போது ஒரே சீனா கொள்கைக்கு நாம் ஏன் இணங்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.”
ரஷ்யாவுடனான மோதலில் இருந்து ட்ரம்ப் விலகுவதாகத் தெரிவதில் துளியும் அமைதிவாதமோ அல்லது “சாந்தப்படுத்தலோ” இல்லை. அவரது இராணுவவாதத்தின் அதிதீவிர தேசியவாத வகையானது வேறுபட்ட இலக்குகளின் ஒரு தொகுப்பின் மீது, இன்னும் துல்லியமாகச் சொன்னால், ஒபாமாவின் அதே இலக்குகள் தான் ஆனால் மாறுபட்ட ஒரு வரிசையில் இருப்பதான ஒரு தொகுப்பின் மீது கவனம் குவிக்கிறது, அவ்வளவே. ட்ரம்ப், அமெரிக்காவின் பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தத்திற்கான இலக்காக ரஷ்யாவுக்கும் அதிகமாய், சீனாவை முன்னுரிமையாக்குகிறார்.
உளவுமுகமைகள் ஊடகங்களுக்கு தீனி போடுவதும் ஊடகங்கள் பொதுக் கருத்தை மிதித்துத்தள்ள முனைவதுமாய் துரிதகதியில் நடக்கும் இந்த நிகழ்வுகள், ஒட்டுமொத்தமாக தேர்தல் நிகழ்முறையின் கைப்புரட்டு செய்யும் தன்மையையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஆளும் உயரடுக்கிற்குள்ளாக மோதலுக்குள்ளாகி இருக்கும் உண்மையான பிரச்சினைகள் -தனது உலகளாவிய எதிரிகளுக்கு எதிராய் என்ன தந்திரோபாயங்கள் மற்றும் வழிமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தவை- மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்படுகின்ற அதேநேரத்தில் வலது நோக்கிய ஒரு மேலதிக நகர்வுக்கான அரசியல் மூடிமறைப்பை வழங்குவதற்காக சரமாரியான அவதூறுகளும் ஊழல்களும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.