Print Version|Feedback
China reproaches Trump over Taiwan stance
தாய்வான் நிலைப்பாடு மீது சீனா ட்ரம்பைக் கண்டிக்கிறது
By Peter Symonds
13 December 2016
நான்கு தசாப்தங்களுக்கு அதிகமாக அமெரிக்க-சீன உறவுகளின் அடித்தளமாக இருந்துள்ள "ஒரே சீனா" கொள்கையை கேள்விக்குட்படுத்திய அவரது ஞாயிற்றுக்கிழமை கருத்துக்கள் குறித்து, சீன ஆட்சி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்பை விமர்சித்துள்ளது. 1972 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் பெய்ஜிங்கிற்கான முன்னொருபோதுமல்லாத விஜயத்தின்போது அவரால் ஏற்படுத்தப்பட்ட இக்கொள்கை, தாய்வான் தீவு உள்ளடங்கலாக சீனா முழுமைக்கும் பெய்ஜிங்கையே ஒரே சட்டபூர்வ அரசாக அங்கீகரிக்கிறது.
ட்ரம்ப் Fox News இல் பேசுகையில், “வர்த்தகம் உட்பட சீனாவுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களில் நாம் ஓர் உடன்பாட்டிற்கு வராமல்,” அமெரிக்கா ஏன் "ஒரே சீனா கொள்கையில் பிணைந்திருக்க வேண்டும்" என்று பார்ப்பதாக அவர் அறிவித்தார். அவரது ஆத்திரமான பேச்சுக்களில், வர்த்தகம் மற்றும் பொருளாதார கொள்கை தொடங்கி வட கொரியா மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் வரையில் ஒவ்வொன்றின் மீதும் சீனாவிடம் ஒரு விட்டுக்கொடுப்புகளுக்கான கோரிக்கை பட்டியல் இடம் பெற்றிருந்தன.
1979 இல் தாய்வானுடன் அமெரிக்கா உத்தியோகபூர்வ இராஜாங்க உறவுகளை முறித்துக் கொண்டதற்குப் பின்னர் முதலாவது தொடர்பாக, டிசம்பர் 2 அன்று தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்றதன் மூலம், ட்ரம்ப் ஏற்கனவே ஒரே சீனா கொள்கை மீது ஒரு கேள்விக்குறி இட்டுள்ளார். அவரது ஆலோகசர்களால் பல வாரங்களுக்கு முன்னரே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த தொலைபேசி உரையாடலை அவர் மீண்டும் ஞாயிறன்றும் நியாயப்படுத்தினார். அதை ஏற்றிருக்காவிடில், அது "மிகவும் அவமதிப்பதாக" ஆகியிருக்கும் என்றவர் தெரிவித்தார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் Geng Shuang, ட்ரம்பின் கருத்துக்கள் குறித்து நேற்று சீனாவின் "தீவிர கவலைகளை" வெளியிட்டார். “தாய்வான் பிரச்சினை சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை கவலைக்குட்படுத்துகிறது,, மேலும் அதில் சீனாவின் முக்கிய நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்” என்றார். “ஒரே சீனா கொள்கையை நிலைநிறுத்துவது, அபிவிருத்தி அடைந்து வரும் சீன-அமெரிக்க உறவுகளுக்கான அரசியல் அடித்தளமாகும்,” என்றார்.
“இந்த அடித்தளத்தில் குறுக்கீடு செய்தாலோ அல்லது அதை சேதப்படுத்தினாலோ பின் சீன-அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான அபிவிருத்தி மற்றும் முக்கிய துறைகளில் உள்ள இருதரப்பு கூட்டுறவு ஆகியவை கேள்விக்கிடமற்றதாக ஆகிவிடும் … சீன-அமெரிக்க உறவு உலகளாவிய மூலோபாய முக்கியத்துவம் கொண்டதாகும். இது இவ்விரு நாடுகள் மற்றும் அவற்றினது மக்களின் நல்வாழ்வு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இது ஆசிய பசிபிக் மற்றும் சர்வதேச அளவில் சமாதானம், ஸ்திரப்பாடு, அபிவிருத்தி மற்றும் வளமை சம்பந்தப்பட்டதாகும்,” என்று Geng எச்சரித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) எப்போதுமே தாய்வானை அதன் மிகவும் "அதிமுக்கிய நலனாக" கருதி வந்துள்ளதுடன், பிரதான பெருநிலத்திலிருந்து தைப்பெய் உத்தியோகபூர்வ சுதந்திரத்தை எப்போது அறிவித்தாலும் அது அத்தீவை பலவந்தமாக கைப்பற்றும் என்பதையும் எச்சரித்துள்ளது. ஜனாதிபதி சாய் இன் கட்சி அதிக சுதந்திரமான தாய்வானை ஆதரிக்கும் நிலையில், அவருக்கு உதவி வழங்குவதன் மூலம் ட்ரம்ப் சீனாவின் ஏனைய இடங்களிலும், குறிப்பாக திபெத் மற்றும் ஜின்ஜியாங்கில், மறைமுகமாக பிரிவினைவாத உணர்வை ஊக்குவித்து வருகிறார்.
“உலகை மேலாதிக்கம் கொள்வதற்கான அமெரிக்க ஆற்றலை ட்ரம்ப் அதிகமாக மதிப்பிடுகிறார்" என்று தலைப்பிட்டு, வெறித்தனமான சீன அரசு பத்திரிகை குளோபல் டைம்ஸ் இல் நேற்று வெளியான ஒரு தலையங்கம், ஓர் ஆக்ரோஷமான, இராணுவவாத விடையிறுப்பைக் காட்ட சீன அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தது. “மேற்கு பசிபிக் பெருங்கடல் நாடுகளில் சீனா குறிப்பிடத்தக்க பலத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாடாகும்,” என்றது பெருமைபீற்றியது. “மிகக் குறிப்பாக தாய்வான் நீர்சந்தியில், அமெரிக்காவுடன் ஆயுத-மோதலில் இறங்க சீனா இப்போது போதியளவிற்கு நம்பத்தகுந்த நிலையில் உள்ளது,” என்று குறிப்பிட்டது.
குளோபல் டைம்ஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ட்ரம்ப் குழுவால் சீனா மதிக்கப்பட வேண்டும் … ஒரு சாந்தப்படுத்தும் கொள்கை குறித்து கற்பனை செய்வது ஒரு வாய்ப்பல்ல. இரு நாடுகளுக்கும் இடையே காய்நகர்த்தும் ஒரு சுற்றுக்கு, அவர்களின் பலத்தின் அடிப்படையில் இருவரும் ஒருவரையொருவர் எந்தளவிற்கு மதிக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்க்க வேண்டியிருக்கும்,” என்றது. “சமாதானம்-அல்லாத வழிவகைகளைக் கொண்டும் மற்றும் மறுஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு நடைமுறை விருப்பத்தேர்வாக இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதன் மூலமாகவும்" தாய்வானில் உள்ள சுதந்திரத்திற்கு ஆதரவான சக்திகளைக் "கடுமையாக தண்டிக்குமாறு" பெய்ஜிங்கை குறிப்பாக அது வலியுறுத்தியது.
அமெரிக்காவால் முன்னிறுத்தப்படும் அதிகரித்த அச்சுறுத்தல்களுக்கு, அதுவும் அவை ட்ரம்ப் பதவியேற்கையில் தீவிரமடையக்கூடிய நிலையில், ஒருபுறம் வாஷிங்டனை சமாதானப்படுத்தும் முயற்சிளுடனும் மறுபுறம் அமெரிக்காவுடன் "ஆயுதங்களைக் கொண்டு மல்லுக்கட்டுவது” என்ற பெய்ஜிங் விடையிறுப்பின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தையே அத்தலையங்கம் அடிக்கோடிடுகிறது.
பெரும் செல்வந்த ஆதிக்கக்குழுவின் ஒரு சிறிய அடுக்கைச் சார்ந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி, சீனாவிலோ, தாய்வானிலோ அல்லது சர்வதேச அளவிலோ தொழிலாளர்களுக்கு எந்தவொரு முறையீடும் செய்ய இயல்பிலேயே இலாயக்கற்றதாகும். சீன தேசியவாதம் மற்றும் அதன் இராணுவ கட்டமைப்பை அது கையிலெடுப்பது, நேரடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாகி, மோதல் அபாயத்தை உயர்த்தி, போருக்குள் வீழ்வதை தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவே சேவையாற்றுகிறது.
இராஜாங்கரீதியிலும், பொருளாதார மற்றும் இராணுவரீதியிலும் எல்லா தரப்பிலிருந்தும், சீனாவிற்கு எதிரான ஒபாமா நிர்வாகத்தினது ஆக்ரோஷமான "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" ட்ரம்ப் தீவிரப்படுத்த இருப்பதை அவர் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளார். அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போக்கில், அவர் சீனாவை ஒரு செலாவணி மோசடியாளராக அறிவித்தது மற்றும் சீன பண்டங்கள் மீது 45 சதவீத வரிவிதிப்புகளைத் திணிப்பது உட்பட அதற்கு எதிராக வர்த்தக போர் நடவடிக்கைகளைக் கொண்டு அவர் அச்சுறுத்தினார். ட்ரம்ப் அவரது மோதல் போக்கு கொள்கைக்குப் பக்கபலமாக, அமெரிக்க இராணுவத்தின் அளவை, குறிப்பாக சீனாவிற்கு எதிரான பெண்டகனின் போர் திட்டங்களில் முக்கிய கூறுபாடாக உள்ள அதன் கடற்படை பலத்தைத் துரிதமாக அதிகரிக்கவும் சூளுரைத்துள்ளார்.
ஒரே சீனா கொள்கை மீது ஒரு கேள்விக்குறி இட்டு, தாய்வான் உடனான நெருங்கிய அமெரிக்க உறவுகளுக்கு சமிக்ஞை செய்ததன் மூலமாக, ட்ரம்ப் வேண்டுமென்றே உலகின் மிக அபாயகரமான வெடிப்புப்புள்ளிகளில் ஒன்றை கிளறி விட்டுள்ளார். 1972 இல் சீனாவுடனான நிக்சனின் நல்லிணக்கம் வரையில், அமெரிக்கா, சீனக் குடியரசு என உத்தியோகபூர்வமாக அறியப்பட்ட தாய்வானில் இருந்த கோமின்டாங் (KMT) சர்வாதிகாரத்தின் உரிமைகோரல்களை ஆதரித்ததுடன், புலம்பெயர்ந்து வாழும் அனைத்து சீனர்களுக்குமான சட்டபூர்வ அரசாக ஏற்று அதை இராணுவரீதியில் ஆதரித்தது. 1979 தாய்வானுடனான உறவுகள் சட்டத்தின் கீழ், அமெரிக்கா தாய்வானுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி, அதன் இராணுவத்துடன் தொடர்புகளைப் பேணி வருகிறது.
மிக சமீபத்தில், 1996 இல் பெய்ஜிங் மற்றும் தைப்பெய் க்கு இடையே பதட்டங்கள் தீவிரமடைந்தபோது, வியட்நாம் போருக்குப் பின்னர் அப்பிராந்தியத்தில் கடற்படையின் மிகப்பெரிய காட்சிப்படுத்தலாக கிளிண்டன் நிர்வாகம் அதன் அண்டை கடற்பகுதிக்குள் இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் குழுக்களை அனுப்பியது. தாய்வான் சுதந்திரத்திற்கு ஆதரவாளரான தாய்வானிய ஜனாதிபதி லீ தெங்-ஹூ (Lee Teng-hui) அவர் கல்வி பயின்ற கொர்னெல் பல்கலைக்கழகத்தில் ஓர் உரை வழங்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதென்று முடிவு செய்ததால் அந்த நெருக்கடி தூண்டிவிடப்பட்டிருந்தது. ஆத்திரமூட்டும் வகையில் ஜனாதிபதி கிளிண்டன், தாய்வான் மற்றும் சீன பெருநிலத்தை பிரிக்கும் குறுகலான தாய்வான் நீர்சந்தி வழியாக USS Nimitz மற்றும் அதன் போர் குழுவை அனுப்பினார்.
ட்ரம்ப் என்ன செய்ய அச்சுறுத்திக் கொண்டிருக்கிறாரோ அது 1996 அத்தியாயத்தை முக்கியத்துவமற்றதாக செய்யுமளவிற்கு தாய்வான் நீர்சந்தியில் ஒரு நெருக்கடியைத் தூண்டிவிடும். அவர் கருத்துக்கள் ஒபாமா நிர்வாகத்தால் கண்டிக்கப்பட்டன. ஒரே சீனா கொள்கை சீனாவுடன் பேரம்பேசுவதற்கான துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ட்ரம்பின் கருத்தை வெள்ளை மாளிகை பத்திரிகைதுறை செயலர் ஜோஷ் எர்ன்ஸ்ட் நேற்று நிராகரித்தார். “தாய்வான் ஓர் அழுத்தம் கொடுக்கும் கருவி அல்ல,” என்றவர் தெரிவித்தார். “அது அமெரிக்காவின் ஒரு நெருங்கிய கூட்டாளியாகும்.”
ஒரே சீனா கொள்கையைக் கைவிடுவதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தலை எதிர்க்கும் ஒபாமாவின் எதிர்ப்புக்கும், சீனாவுடனான போர் எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது—அவர் நிர்வாகம் கடந்த எட்டாண்டுகளாக அந்த அசம்பாவிதத்திற்கு தான் தயாரிப்பு செய்து வைத்துள்ளது. அதற்கு மாறாக அது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக மேலாளுமை செலுத்துவதை "ரஷ்ய இணையவழி ஊடுருவல்" நோக்கமாக கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் மீது அமெரிக்க ஆளும் உயரடுக்கில் வெடித்துள்ள அசாதாரண மோதலின் பாகமாகும். சீனா மற்றும் ரஷ்யாவை அமெரிக்கா இலக்கில் வைக்க வேண்டுமா, அல்லது முதலில் எதனுடன் மோத வேண்டும் என்பதே இந்த தீவிரமடைந்து வரும் உள்மோதலில் உள்ள பிரச்சினையாக உள்ளது.