Print Version|Feedback
Washington’s hypocrisy over the fall of Aleppo
அலெப்போ தோல்வி குறித்து வாஷிங்டனின் பாசாங்குத்தனம்
Bill Van Auken
15 December 2016
கிழக்கு அலெப்போவில் மோதல்கள் முந்தைய மீண்டும் வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து மேற்கத்திய-ஆதரவிலான கடைசி இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்கள்" வரையில் ஒவ்வொருவரையும் வெளியேற்றுவதற்கான ஓர் உடன்படிக்கை மீண்டும் நடைமுறைக்கு வருவதாக புதனன்று மாலை வெளியான செய்திகளுடன், சிரியாவில் வாஷிங்டனின் ஆட்சி மாற்றத்திற்கான ஐந்தாண்டு கால போரில் அது அடைந்துள்ள தோல்வியின் அளவு இன்னும் மிகத் தெளிவாக வெளிப்பட்டு வருகிறது.
அலெப்போவை மீண்டும் கைப்பற்றுவதில் நடந்த அட்டூழியங்கள் குறித்து, சிரிய அரசாங்கம் மற்றும் அதன் கூட்டாளிகளை, பிரதானமாக ரஷ்யா மற்றும் ஈரானைக் குற்றஞ்சாட்டி வெளியிடப்படும் அதிகரித்தளவில் மிரட்டும்ரீதியிலான கண்டனங்கள், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்க்கும் உந்துதலில் ஏற்பட்டுள்ள இந்த மூலோபாய பின்னடைவு மீது பிரதான ஏகாதிபத்திய சக்திகளது, குறிப்பாக அமெரிக்காவினது, ஆளும் வட்டாரங்களுள் நிலவும் ஏமாற்றம் மற்றும் கசப்புணர்விற்கு ஓர் அளவீடாகும். பகிரங்கமான ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் வெறித்தனமான கொடூர தொனி, உள்ளே திரைக்குப் பின்னால் நடந்து வரும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களின் தீவிரப்பாட்டுடன் பொருந்தி உள்ளது.
கிழக்கு அலெப்போவின் வீழ்ச்சியுடன், அல் கொய்தா தொடர்புபட்ட இஸ்லாமியவாதிகளை மேலாளுமையில் கொண்ட போராளிகள் குழுக்களது ஒரு கூட்டமான அமெரிக்க-ஆதரவு "கிளர்ச்சியாளர்கள்", அவர்களது கடைசி பிரதான நகர்புற மையத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்துள்ளனர், அதாவது டமாஸ்கஸ் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு இனி இத்தகைய பினாமி சக்திகளை வெற்றிகரமாக பயன்படுத்துவதை இது நடைமுறையளவில் தடுக்கிறது.
இப்போது அந்த நீடித்த மற்றும் இரத்தந்தோய்ந்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதால், அமெரிக்க அதிகாரிகளும் பெருநிறுவன ஊடகங்களும் சிரியா மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக வெள்ளமென குற்றச்சாட்டுக்களைப் பொழிந்து வருகின்றன. புதனன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஜோன் கெர்பி, “போர் குற்றங்கள்,” “அட்டூழியங்கள்,” “சேதங்கள்" மற்றும் "மனசாட்சியின்மை" குறித்து சிரியா மற்றும் ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டினார்.
“மனித உரிமைகள்" ஏகாதிபத்தியத்திற்கான வாஷிங்டனினது சுய-நீதிமான்களாக கூறிக்கொள்பவர்களில் முன்னணி நபரும், தார்மீக பாசாங்குத்தனத்தின் சர்ச்சைக்கிடமற்ற பாதுகாவலருமான அமெரிக்க தூதர் சமந்தா பௌவர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் ஒரு நாள் முன்னதாக வழங்கிய உரையின் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறு கெர்பி அழைப்பு விடுத்தார்.
“அவற்றின் நடவடிக்கைகளில் எத்தனை அப்பாவி மக்களின் உடல்கள் குவிந்தாலும் அதுகுறித்து கவலையின்றி, அசாத் ஆட்சியும் ரஷ்யாவும், படைபலத்தைக் கொண்டு அலெப்போவின் ஒவ்வொரு கடைசி சதுர அங்குலத்தையும் கைப்பற்றுவதற்கு விடாப்பிடியாக இருப்பதாக தெரிகிறது,” என்றவர் அறிவித்திருந்தார். “பல தசாப்தங்களுக்குப் பின்னர் நமது மனசாட்சியை உறுத்தும் விதத்தில், நவீன கொடூரத்தை விவரிக்கும் உலக வரலாற்று சம்பவங்களின் பட்டியலில் அலெப்போ இணையும். ஹலாப்ஜா, ரவாண்டா, ஸ்ரீபெரெனிகா, இப்போது அலெப்போ,” என்றார்.
தன்னைத்தானே சிரியா, ரஷ்யா மற்றும் ஈரானை நோக்கி திருப்பிய அப்பெண்மணி, “அங்கே சொல்லக்கூடிய அளவில் உங்களுக்கு வெட்கக்கேடானது எதுவுமே இல்லையா? … அது குறித்து உங்களால் பொய் உரைக்காமல் இருக்க முடியுமா அல்லது நியாயப்படுத்த தான் முடியுமா?” என்றார்.
வெட்கக்கேடு, பொய்கள் மற்றும் நியாயப்படுத்தல்கள் என்று வரும்போது, திருமதி. பௌவருக்கு ஈடு இணையே இல்லை. “படைபலத்தைக் கொண்டு அலெப்போவின் ஒவ்வொரு கடைசி சதுர அங்குலத்தையும்" எடுக்கும் முயற்சிக்காக அவர் டமாஸ்கஸ் மற்றும் மாஸ்கோ மீது கொந்தளிப்பான கண்டனங்களை வீசுகின்ற வேளையில், கிழக்கே முண்ணூறு மைல்களுக்கு சற்று அதிக தூரத்தில் ISIS வசமிருக்கும் ஈராக்கிய நகரமான மொசூலில், ஈராக்கிய இராணுவம் மற்றும் பல்வேறு போராளிகள் குழுக்களுடன் அமெரிக்க இராணுவம் கூட்டு சேர்ந்து, துல்லியமாக அதையே தான் செய்ய தயாரிப்பு செய்து கொண்டிருந்தது. ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க விமானப்படை தாக்குதல்களில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஊனமாக்கப்பட்டுள்ளனர், கிழக்கு அலெப்போவை விட மிக பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ள மொசூல் மீதான தாக்குதல் இன்னும் ஆயிரக் கணக்கானவர்களை கொல்லும் என்றும், அதேவேளையில் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை இடம்பெயர்த்தும் என்றும் அனுமானிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அவையில் பௌவர் உரை நிகழ்த்திய போதே கூட, வாஷிங்டன் மத்திய கிழக்கின் மிக வறிய நாடான யேமன் மக்களுக்கு எதிராக ஒரு ஈவிரக்கமற்ற போர் நடத்த, அதன் முக்கிய அரபு கூட்டாளியான சவூதி முடியாட்சிக்கு உதவும் விதத்தில் ஆயுதங்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள் மற்றும் உளவுத்துறை ஆதரவைத் தொடர்ந்து வழங்கியது. வெறும் இருபது மாத இடைவெளியில் அமெரிக்க குண்டுகளும் ஏவுகணைகளும் 11,000 க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்ற போதும், அதேவேளையில், சமீபத்தில் நிவாரண உதவி அமைப்பான ஆக்ஸ்ஃபோம் குறிப்பிட்டதைப் போல, அந்த ஒட்டுமொத்த நாடும் அமெரிக்க ஆதரவிலான முற்றுகையால் "மெதுவாக பட்டினியில் கொல்லப்பட்டு" வருகிறது என்ற போதும், அதைக் கண்டித்து அவர் ஒரேயொரு வார்த்தை கூட கூறவில்லை.
“நவீன கொடூரத்தை விவரிக்கும் உலக வரலாற்று சம்பவங்களின்" அவரது பட்டியலில் இருந்து, பௌவர், அமெரிக்க போர் ஆக்ரோஷத்தால் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட ஈராக் மற்றும் லிபியாவில் தொடங்கி வியட்நாம் மற்றும் கம்போடியா வரையில் எண்ணற்ற நகரங்கள் மற்றும் சிறுநகரங்களையும், காசா மற்றும் ஃபல்லூஜா ஆகியவற்றையும் தவிர்த்துக் கொண்டார்.
உலக சோசலிச வலைத் தளம், அலெப்போ மக்களின் ஆழ்ந்த துயரங்களையும், அசாத் அரசாங்கம் மற்றும் அதன் ரஷ்ய கூட்டாளிகளால் பயன்படுத்தப்பட்ட கொடூரமான முறைகளையும், ஆயிரக் கணக்கானவர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரங்களையும் உணர்ந்துள்ளது. ஆனால் முடிவாக இந்த பேரழிவுக்கான மூலம் எது?
திருமதி. பௌவர் ஏதோ தார்மீக ஒலிம்பஸ் மலை உச்சியில் வசித்துக் கொண்டு, சிரியாவின் வன்முறை சம்பவங்களை சீற்றத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஐ.நா வில் பேசலாம், ஆனால் உண்மை என்னவென்றால் வாஷிங்டனின் கரங்கள் இரத்தத்தில் நனைந்துள்ளன. முடிவாக, அரசு-எதிர்ப்பு இஸ்லாமிய போராளிகளுக்கு ஆயுதம் வழங்கவும், தளவாடங்கள் வினியோகிக்கவும், பயிற்சியளிக்க மற்றும் சம்பளம் அளிக்கவுமே கூட சிஐஏ மட்டுமே ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதுடன் சேர்ந்து, அலெப்போவில் கட்டவிழ்ந்துள்ள நாடகம், அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய ஒரு பாரிய ஆட்சி மாற்ற நடவடிக்கையின் விளைபொருளாகும். இது அமெரிக்க வான்வழி தாக்குதல்களுடன், சிரிய பொருளாதாரத்தில் என்ன எஞ்சியுள்ளதோ அதையும் முறிக்கும் நோக்கில் முடமாக்கும் தடையாணைகளையும் உள்ளடக்கி உள்ளன.
பாசாங்குத்தனமாக, அமெரிக்க அதிகாரிகளும், பெருநிறுவன ஊடகங்களும் மற்றும் சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற போலி-இடது குழுக்களும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மீதும் கூடுதலாக அமெரிக்க மேலாதிக்கத்தை கொண்டு வருவதற்கான இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையை, ஒருவகையான சிரிய ஜனநாயக "புரட்சியாக" சித்தரிக்கின்றன.
சிரிய அரசு படைகளது வெற்றியை, "அதிக ஜனநாயக சிரியாவிற்கான கனவின் இறுதி மரணம்…" என்று குணாம்சப்படுத்தியமை, சமீபத்திய அலெப்போ சம்பவங்களுக்கு வாஷிங்டன் போஸ்டின் ஒரு குறிப்பிடத்தக்க விடையிறுப்பாக இருந்தது.
அடாவடித்தனத்துடன் வக்கிரமான பிரிவினைவாதம் கலந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்களது ஒரு கூட்டத்தின் கிழக்கு அலெப்போ ஆட்சி தான், இந்த "கனவின்" அடியில் இருந்த யதார்த்தமாகும். விமானத் தாக்குதல்களால் வெறும் இடிபாடுகளாக சீரழிக்கப்படுவதற்கு முன்னர், அந்நகரம் இத்தகைய போராளிகள் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டது, இவை தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் மற்றும் பொருட்களை அபகரித்து, இலாபத்திற்காக விற்பனை செய்ய துருக்கிக்கு எல்லை கடந்து அவற்றை கொண்டு சென்றன.
சர்வதேச பொதுமன்னிப்பு சபை அதன் மிக சமீபத்திய அறிக்கையில், பின்வரும் வார்த்தைகளுடன் இந்த "ஜனநாயக கனவை" வர்ணிக்கிறது: “அதிகாரத்தில் இருக்கும் ஆயுத குழுக்களின் நடவடிக்கைகளை விமர்சித்தாலோ அல்லது அவற்றில் சில குழுக்கள் நடைமுறைப்படுத்தி உள்ள கடுமையான விதிமுறைகளுக்கு கீழ்படிய மறுத்தாலோ தாங்கள் கடத்தி கொல்லப்படலாம் என்ற நிரந்த அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர்.”
“இன்று அலெப்போ மற்றும் இட்லிப் இல், ஆயுதமேந்திய குழுக்கள் போர் குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ஏனைய மீறல்களில் இருந்து விலக்கீட்டுரிமையுடன் சுதந்திர அதிகாரத்தைக் கொண்டுள்ளன,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. அந்த அறிக்கை விசாரணையற்ற படுகொலைகள் மற்றும் சித்தரவதைகளையும் ஆவணப்படுத்துகிறது, அதேவேளையில் இந்த "கிளர்ச்சியாளர்கள்" அங்கே குழந்தைகளின் தலைதுண்டித்தல் உட்பட அவர்களது குற்றங்களை அவர்களே பதிவு செய்து பெருமைபீற்றிக் கொள்கின்றனர்.
சிரிய அரசு அலெப்போவிலும் அந்நாட்டின் ஏனைய இடங்களிலும் இராணுவ வெற்றியை அனுபவிக்கிறது என்றால், அது வெறுமனே ரஷ்ய ஆயுத பலத்தால் மட்டுமல்ல. அல் கொய்தா இணைப்பு கொண்ட போராளிகள் குழுக்களை அமெரிக்கா அதன் பினாமிகளாக பயன்படுத்தி ஆட்சி மாற்றத்திற்காக அது ஐந்தாண்டுகளுக்கும் அதிக காலமாக ஒரு போர் நடத்திய பின்னர், பல சிரியர்கள் அசாத் அரசின் ஒடுக்குமுறை மற்றும் ஊழலை ஒரு குறைந்த கொடூரமாக பார்க்கிறார்கள்.
கிழக்கு அலெப்போவின் வீழ்ச்சி மீது ஊடகங்கள் மற்றும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் விஷம பிரச்சாரம், டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே ரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கை மீது நடக்கும் கடுமையான உட்பகை மோதல்களால் உந்தப்பட்டுள்ளது என்பதும் முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போக்கில் ட்ரம்ப் அறிவுறுத்துகையில், சிரியாவின் "பயங்கரவாதத்தை" எதிர்த்து போராடுவதில் அமெரிக்கா ரஷ்யாவுடன் தன்னை கூட்டு சேர்த்துக் கொள்ளக்கூடும் என்று அறிவுறுத்தி இருந்தார், மற்றும் சிரிய "கிளர்ச்சியாளர்களுக்கு" ஆயுதங்கள் வழங்கும் வாஷிங்டனின் கொள்கை மீதும் கேள்வி எழுப்பி இருந்தார். அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தில் உள்ள சக்தி வாய்ந்த பிரிவுகள் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ உந்துதலில் எந்தவித தணிவையும் ஆழமாக எதிர்க்கின்றன.
ட்ரம்பின் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அறிக்கைகள், மத்திய கிழக்கில் சமாதானத்திற்கான ஒரு புதிய சகாப்தத்திற்குள் திரும்பும் என்று யாரேனும் நம்பினால், அவர் ஒரு திடீர் அதிசயத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர் ஆகிறார். குடியரசு கட்சி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர், தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்லும் ஒரு பொருளாதார தேசியவாத கொள்கையை முன்னெடுத்துள்ளார் மற்றும் அதற்கு தயாரிப்பு செய்ய அமெரிக்க இராணுவ இராணுவத்தின் ஒரு பாரிய கட்டமைப்பைக் கோரியுள்ளார்.
அனைத்திற்கும் மேலாக, மோதலுக்கு உறுதி பூண்ட சமீபத்தில் ஓய்வூபெற்ற தளபதிகள் அவரை சூழ்ந்திருக்குமாறு அவரே செய்துள்ளார். நான்கு நட்சத்திர பதவியிலிருந்த கடற்படை தளபதிகள் இரண்டு பேர், பாதுகாப்புத்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடற்படையின் நான்கு நட்சத்திர பதவியிலிருந்த மூன்றாவது தளபதியான ஜோன் அலென், இத்தகைய அடுக்குகளுக்கு இடையே உள்ள சிந்தனைக்கு சமீபத்தில் குரல் கொடுத்தார். அலென், வாஷிங்டன் போஸ்ட் க்காக அக்டோபர் இறுதியில் துணை-தலையங்கம் ஒன்றை இணைந்து எழுதியிருந்தார், அதில் அவர் "மோதலைத் தீவிரப்படுத்துவது தான்" சிரியாவிற்கான தீர்வு என்றார். அசாத்தின் இராணுவ உள்கட்டமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு நம்பகமானரீதியில் அச்சுறுத்தல் விடுக்க 'விருப்பமுள்ள ஒரு கூட்டணியை' ஒன்றுதிரட்ட அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தார்.
சிரிய இராணுவம் மீதான அமெரிக்க தாக்குதல் ரஷ்ய துருப்புகளைக் கொல்லும் என்பதை உணர்ந்துள்ள அலென் ஆலோசனை வழங்குகையில், "தூண்டிவிட்டு வரும் சிரிய உட்கூறுகளைத் தாக்குவதற்கான" வாஷிங்டனின் "வாய்ப்பை இது தவறவிடாதவாறு" செய்யும் என்றார்.
ட்ரம்ப் இன் ஜனாதிபதி பதவிகாலம், உலகப் போரை நோக்கிய முதலாளித்துவத்தின் கூடுதல் தீவிரப்பாட்டை உள்ளடக்கி இருக்கும் என்பதற்கு இதுபோன்ற வெறிபிடித்த இராணுவவாதம் ஓர் எச்சரிக்கையாகும்.