Print Version|Feedback
Trump’s victory and the debacle of American democracy
ட்ரம்ப் இன் வெற்றியும், அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியும்
Joseph Kishore
9 November 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டோனால்ட் ட்ரம்ப் இன் வெற்றி, அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதி நெருக்கடியை ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னால் அம்பலப்படுத்தி உள்ள ஓர் அரசியல் பூகம்பமாகும். அம்மண்ணின் மிக உயர்ந்த பதவியில் ஒரு ஏமாற்றுத்தனமான பாசாங்குக்காரரை மற்றும் பில்லியனிய வனப்புரையாளரை மேலுயர்த்தி உள்ள முதலாளித்துவ ஆட்சியின் சீரழிவு இந்தளவிற்கு வந்துள்ளது.
வரவிருக்கும் நாட்களில் அவர் என்னவெல்லாம் நயமான பேச்சுக்களை வெளியிட்டாலும் சரி, ஜனாதிபதி ட்ரம்ப் ஆக அவர் வர்க்க போர், தேசிய பேரினவாதம், இராணுவவாதம் மற்றும் பொலிஸ் அரசு வன்முறையின் ஓர் அரசுக்கு தலைமை ஏற்றிருப்பார். நிர்வாகத்துறைக்கு கூடுதலாக, காங்கிரஸ் இன் இரண்டு சபைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள சகல பிரதான அரசியல் அமைப்புகளும் அதிதீவிர வலதின் கரங்களில் இருக்கும்.
ட்ரம்ப் இன் கீழ், அமெரிக்கா "மீண்டும் தலைச்சிறந்ததாக" ஆகப் போவதில்லை. அது சேற்றில் அழுந்த போகிறது.
ஊடக விமர்சகர்கள், இவர்களில் எவரொருவரும் இந்த விளைவை முன்அனுமானித்திராத நிலையில், இப்போது அவர்களது வழமையான விளக்கங்களை அளிக்க பல்வேறு இனவாத மற்றும் அடையாள குழுக்களின் வாக்களிப்பு முறைக்குப் பின்னால் ஒருமுனைப்பட்டுள்ளனர். இத்தேர்தல் பேரழிவுகரமான சமூக நெருக்கடிக்கும் மற்றும் அமெரிக்காவின் சீரழிவுக்குமான ஒரு வெகுஜன வாக்கெடுப்பாக மாறியிருந்தது என்பதையும், அதை ட்ரம்ப் ஆல் வலதை நோக்கி திசைதிருப்பி கொண்டு செல்ல முடிந்தது என்ற உண்மையையும் அவர்கள் அனைவரும் உதறிவிடுகிறார்கள்.
ட்ரம்ப் இன் வெற்றிக்கு யார் பொறுப்பாகிறார், எது பொறுப்பாகிறது? முதலாவதாக, கிளிண்டன் பிரச்சாரமும் ஜனநாயகக் கட்சியும் ஆகும், இது மக்கள் ஆதரவை ஈர்க்கும் எந்தவொரு முக்கிய வேலைத்திட்டத்தையும் முன்வைக்க விருப்பமின்றியும், தகைமையற்றும் இருந்தது.
கிளிண்டன் அவரது பிரச்சாரத்தை மிகவும் கீழ்மட்டத்தில் மற்றும் மிகவும் பிற்போக்குத்தனமான மட்டத்தில் நடத்தினார். ரஷ்யாவிற்கு எதிரான ஆக்ரோஷமான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், ட்ரம்ப் புட்டினின் ஒரு கையாள் என்ற வாதத்தை, தொழிலாள வர்க்கத்தை இனவாத மற்றும் "தனிச்சலுகை கொண்டதாக" குறைகூறிய வாதங்களுடன் அவர் இணைத்திருந்தார்.
இரண்டாவதாக, எட்டாண்டுகளுக்கு முன்னர் "நம்பிக்கை" மற்றும் "மாற்றம்" என்ற வாக்குறுதிகளின் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா நிர்வாகம். புஷ் நிர்வாகத்தினது போர் மற்றும் சமூக பிற்போக்குத்தன கொள்கையை மற்றும் சமூக சமத்துவமின்மையை கடுமையாக எதிர்த்த வெள்ளையின தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகளது ஆதரவில் ஒபாமா ஜெயித்திருந்தார்.
ஆனால் இரண்டு முழு பதவிகாலத்தின் போதும், ஒபாமா முடிவில்லா போர், வரலாற்றில் இல்லாதளவில் ஆளும் வர்க்கத்திற்கு செல்வவளத்தை கைமாற்றியமை, மற்றும் பரந்த பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தரங்களைத் தொடர்ந்து சீரழித்தமை ஆகியவற்றிற்குத் தலைமை தாங்கினார்.
ஒபாமாவின் கையொப்பமிட்ட உள்நாட்டு திட்டமான, கட்டுபடியாகின்ற மருத்துவக் காப்பீடு என்பது, ஒரு சீர்திருத்தமாக கொண்டு வரப்பட்ட, மருத்துவ சிகிச்சை மீதான ஒரு தாக்குதலாக இருந்தது. தேர்தலின் இறுதி வாரங்களில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை செலவுகளில் இரட்டை இலக்க உயர்வை முகங்கொடுப்பதை கண்டார்கள், இது கிளிண்டன் மின்னஞ்சல் முறைகேட்டை புதுப்பித்த FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமெ இன் நடவடிக்கைகளை விட தேர்தல் முடிவை பாதிப்பதில் பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கக் கூடும்.
மூன்றாவதாக, தொழிற்சங்கங்கள், இவை கடந்த நான்கு தசாப்தங்களாக அதிகரித்து வந்த சமூக சமத்துவமின்மைக்கு இடையே வர்க்க போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க வேலை செய்துள்ளன மற்றும் ஜனநாயகக் கட்சியுடனான அரசியல் பிடியை இறுக்கமாக பற்றியிருந்தன. இவை ட்ரம்ப் இன் சொந்த தளத்திற்கேற்ற அதே போக்கில் பிற்போக்குத்தனமான பொருளாதார தேசியவாதத்தையும் விடாப்பிடியாக ஊக்குவித்தன.
நான்காவதாக, வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அவரை ஊக்குவித்த அமைப்புகள். கிளிண்டனிடம் சாண்டர்ஸ் கோழைத்தனமாக மண்டியிட்டமை —அதாவது எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்குள் திசைதிருப்பும் அவரது செயல்திட்டத்தின் தர்க்கரீதியிலான விளைவானது— நடைமுறையில் இருப்பதற்கு எதிரான எதிர்ப்பை அரசியல் வலது ஏகபோகமாக்கிக் கொள்வதை உறுதிப்படுத்தியது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில், பெரும் எண்ணிக்கையில் எங்கெல்லாம் சாண்டர்ஸ் கிளிண்டனை தோற்கடித்தாரோ அம்மாநிலங்களில் மிகவும் கணிசமானளவிற்கு ட்ரம்ப் க்கு வாக்குகள் கிடைத்தன.
இவை அனைத்திற்கும் பின்னால், அடையாள அரசியலின் சித்தாந்தரீதியிலான மத்திய பாத்திரம் மற்றும் சமூகத்திற்குள் உள்ள நிஜமான சமூக பிளவுகளை மூடிமறைப்பதற்கான திட்டமிட்ட முயற்சி ஆகியவை இருந்தன. கடந்த நான்கு தசாப்தங்களாக இடைவிடாது கொள்கைபிடிப்போடு இனம் மற்றும் பாலினம் மீது ஒருமுகப்பட்டிருந்தமை, உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஜனநாயகக் கட்சியின் முழுமையான வலதுசாரி அரசியல் திட்டநிரலுக்கு ஒரு இடது மூடுமறைப்பை வழங்க பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், அது மிகவும் தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகளின் நலன்களை எடுத்துக்காட்டியது.
சமூகம் அடிப்படையில் இனம் மற்றும் பாலினம் சார்ந்து பிளவுபட்டுள்ளது என்ற கருத்து அரசியல்ரீதியில் பிற்போக்குத்தனமானது என்பது மட்டுமல்ல, அது அடிப்படையில் பிழையானதும் ஆகும். ஜனநாயகக் கட்சியினரும் கிளிண்டனும் அவர்களுக்கான சொந்த பொறியை அவர்களே வைத்துக் கொண்டார்கள். ஏழைகள் மற்றும் வெள்ளையினத்தவர்கள் அதிகமுள்ள பிரதேசங்களை மட்டும் அவர்கள் இழக்கவில்லை, மாறாக ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளர்களும் இளைஞர்கள் நடப்பில் உள்ள வேட்பாளரை ஆதரிக்க எந்த காரணமும் காணவில்லை என்பதால், பெரும்பான்மை கறுப்பினர்களது பிரதேசங்களிலும் வாக்குச்சரிவைக் கண்டார்கள்.
வரவிருக்கும் காலகட்டம் அதிர்ச்சி, சீற்றம் மற்றும் அதிகரித்தளவில் கடுமையான போராட்டங்களின் ஒரு காலகட்டமாக இருக்கும். ஜனாதிபதி ட்ரம்ப் வசம் அவர்களுக்கு என்ன இருக்கிறது என்பதை உணர்வதற்கு, அவருக்கு வாக்களித்தவர்கள் உட்பட, தொழிலாளர்களுக்கு அதிக காலம் எடுக்காது. அதே நேரத்தில், இத்தேர்தலில் வெளிப்பட்ட அரசு எந்திரத்தினுள் உள்ள வெடிப்பார்ந்த பிளவுகள் புதிய மற்றும் இன்னும் வன்முறையான வடிவங்களை எடுக்கும்.
இந்த தேர்தல் அனுபவங்களில் இருந்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
2016 தேர்தல்களில், சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களான ஜெர்ரி வைட் மற்றும் நைல்ஸ் நிமூத் உம் ஜனநாயகக் கட்சி மற்றும் அடையாள அரசியலின் அபாயகரமான மற்றும் அழிவுகரமான விளைவுகளை எச்சரித்தனர். போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சகல இனங்கள், வம்சாவளிகள் மற்றும் தேசியங்களை சேர்ந்த தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்க நலன்களை முன்னெடுக்க முடியும்.
இந்த எச்சரிக்கைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு புரட்சிகர சோசலிச தலைமையை —அதாவது சோசலிச சமத்துவக் கட்சியை— கட்டமைக்க வேண்டிய அவசியமே இப்போது இத்தேர்தல்களில் இருந்து எழும் அடிப்படையான மற்றும் அவசரமான பணியாகும்.