Print Version|Feedback
Turkish government moves to crush Kurdish parliamentary HDP party
நாடாளுமன்ற குர்து HDP கட்சியை நசுக்க துருக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது
By Alex Lantier
5 November 2016
குர்து பெரும்பான்மை கொண்ட ஜனநாயக மக்கள் கட்சியின் (HDP) இணைத்தலைவர்களான Figen Yüksekdağ மற்றும் Selahattin Demirtaş உள்ளிட்ட 11 முன்னணி உறுப்பினர்களை துருக்கி போலிஸ் நேற்று கைது செய்தது.
நாடெங்கிலும் முன்னணி குர்து நாடாளுமன்றவாதிகள் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, போலிஸ் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். Demirtaş ஐ தலைநகர் அங்காராவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி போலிஸ் கைதுசெய்தனர், துருக்கியின் குர்துப் பெரும்பான்மை கொண்ட தென்கிழக்கு பகுதியின் மிகப்பெரும் நகரமான Diyarbakır இல் Yüksekdağ’ இன் வீட்டில் அதிரடியாக போலிஸ் நுழைந்து அவரைக் கைதுசெய்தனர். Ferhat Encü, Leyla Birlik, Selma Irmak, Abdullah Zeydan, İdris Baluken, Sırrı Süreyya Önder, Ziya Pir, Gülser Yıldırım மற்றும் Nursel Aydoğan ஆகியோர் கைது செய்யப்பட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.
Diyarbakır இல் Baluken ஐ கைதுசெய்து பலவந்தமாக அவரை தங்கள் வாகனத்தில் ஏற்றுவதற்கு போலிஸ் முனைந்தபோது அவரின் வீட்டைச் சுற்றிக் குழுமியிருந்த ஒரு கூட்டம் எதிர்ப்புத் தெரிவித்தது. “என் மேலிருந்து கையை எடுங்கள்! நான் ஆயிரக்கணக்கான வாக்குகளின் பிரதிநிதி. என் தலையை இப்படி அழுத்தி இழுத்து என்னைக் கொண்டு செல்ல முடியாது” என்று தன்னை வாகனத்திற்கு இழுத்துச் சென்ற போலிஸ் அதிகாரிகளிடம் Baluken கூறினார்.
HDP நிர்வாகிகள் முற்றுகையிடப்பட்ட சமயத்தில், Diyarbakır இல் ஒரு கார் குண்டு வெடித்ததில் இரண்டு போலிஸ்காரர்களும் ஏழு அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) பொறுப்பேற்றுக் கொண்ட இந்த தாக்குதல் ஒரு போலிஸ் கட்டிடத்தைக் குறிவைத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. PKK உடன் எந்தத் தொடர்புகளும் தங்களுக்கு இல்லை என HDP மறுத்திருக்கிறது.
துருக்கியின் ஒரு முக்கிய நாடாளுமன்றக் கட்சியான HDP ஐ சிரச்சேதம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதானது, ஜூலை மாதத்தில் ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகனுக்கு எதிராக நடந்த தோல்விகண்ட நேட்டோ-ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்புக்கு பதிலிறுப்பாக திணிக்கப்பட்ட அவசரகாலநிலையானது துருக்கியை ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு உருமாற்றம் செய்து கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இந்த சக்திகள் வெகுவிரைவிலேயே தொழிலாள வர்க்கத்தில் இருக்கும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்கு எதிராகத் திருப்பப்படும். மேலும், துருக்கி மற்றும் சிரியாவில் இருக்கக் கூடிய குர்து தேசியவாத போராளிகள் ஏற்கனவே துருக்கிப் படைகளுடன் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், HDP இன் முன்னணி நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதானது அண்டைய கிழக்குப் பகுதிகளில் இனப் பதட்டங்களையும் குருதிகொட்டுதலையும் தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்.
“என்னை பலவந்தமாக இழுத்துச் செல்வதற்காக என் வாசலில் போலிஸ் வாரண்டுடன் நிற்கிறது” என்று ட்விட்டரில் டெமிர்டாஸ் ஒரு பதிவை இட்டதன் பின்னர் துருக்கியில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் உள்ளிட்ட அத்தனை சமூக வலைத் தளங்களும் முடக்கப்பட்டன. நாட்டிற்குள்ளாக ஸ்கைப்பும் கூட முடக்கமடைந்திருந்ததாக Ars Technica தெரிவித்தது. தகவல்களை தணிக்கை செய்வதற்காகவும் சமூகப் போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்காகவும் பெரும் நெருக்கடியான சமயங்களில் —அங்காராவில் 2015 அக்டோபரில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னர், சென்ற மாதத்தில் Diyarbakır இல் இரண்டு இணைமேயர்கள் கைதுசெய்யப்பட்டதற்குப் பின்னர்— துருக்கியின் அதிகாரிகள் இணைய அணுகலை முடக்கி வந்திருக்கின்றனர்.
Yüksekdağ, Demirtaş, மற்றும் பிற HDP நிர்வாகிகள் அவர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டின் மீதான விசாரணையில் சாட்சியமளிக்க மறுத்ததற்காக கைது செய்யப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டுகள், சிரியாவின் Kobane இல் குர்து மற்றும் IS படைகளுக்கு இடையில் 2014 அக்டோபரில் நடந்த சண்டை; Diyarbakir மாகாணத்தில் 2015 டிசம்பரில் நடந்த ஜனநாயக சமூக காங்கிரஸ் (Democratic Society Congress — DTK) கூட்டம் - இதில் HDP நிர்வாகிகள் பிராந்தியத்தில் இருக்கும் குர்துப் பகுதிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தைக் கோரினர்; மற்றும் தடைசெய்யப்பட்ட குர்து சமூகங்களின் ஒன்றியம் (Kurdish Communities Union — KCK) உடன் தொடர்புள்ளதாகக் கூறப்படுவது ஆகியவை தொடர்பானதாகும்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக HDP இன் அங்கத்தவர்கள் ஒரே பொதுவான தற்காப்பு வசனங்களையே —HDP ஐ நசுக்குவதற்கு வசதியாக அதற்கிருக்கும் அரசியல்சட்டப் பாதுகாப்பை அகற்றுவதற்கு ஜூன் மாதத்தில் துருக்கிய நாடாளுமன்றம் வாக்களித்தபோது இது தயாரிப்பு செய்யப்பட்டது— பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.
“என்னை வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் மட்டுமே எனது அரசியல் நடவடிக்கைகள் குறித்துக் கேள்வியெழுப்ப முடியும்” என்று அந்த பொதுவான தற்காப்பு அறிவிக்கிறது. “நாங்கள் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள். நாங்கள் எங்களுக்கு வாக்களித்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோமே தவிர, எங்களையல்ல. நான் உங்கள் முன்னால் ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதியாக, அரசியல்சட்ட பாதுகாப்பு கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நின்றுகொண்டிருக்கிறேன். நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற அடையாளத்தையும் எனது மக்களின் விருப்பத்தையும் அவமரியாதை செய்ய எவரொருவரையும் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.” “எர்டோகன் உத்தரவின் படி நடக்கும் ஒரு நீதி நாடகத்தில் உதிரிகளாக” HDP அங்கத்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்று அந்த தற்காப்பு பிரகடனம் தெரிவிக்கிறது.
துருக்கியின் பிரதமரான பினாலி யில்டிரிம் இந்தக் கைதுகளை ஆதரித்து நேற்று பேசினார். “பயங்கரவாத” நடவடிக்கைகளுக்கான விலையை அந்த நிர்வாகிகள் “கொடுத்துத்தான் தீரவேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். “பாதுகாப்பு” நோக்கங்களுக்காகவே அரசு இணையத்தை திட்டமிட்டு முடக்கியிருந்ததை ஊர்ஜிதம் செய்த அவர், இந்த முடக்கங்கள் தற்காலிகமானவையே என்று சேர்த்துக் கொண்டார்.
எதிர்க்கட்சி செய்தித்தாளான சுமுரிஜெட் (Cumhuriyet) இன் ஆசிரியரான முராத் சபுன்சு (Murat Sabuncu) உட்பட ஏராளமான முன்னணிப் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட கைதுகளின் திங்கட்கிழமைக்கு வெகுசில நாட்களின் பின்னர், இந்த கைதுகள் வந்துசேர்ந்திருக்கின்றன. PKK க்கும், இஸ்லாமிய மதகுருவான பெத்துல்லா கூலன் (Fethullah Gülen) க்கும் —நாடுகடந்து அமெரிக்காவில் வாழும் இவர்தான் ஜூலை மாதத்தில் தனக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பை தொடக்கியதாக எர்டோகன் குற்றம்சாட்டுகிறார்— ஆதரவாய் செயல்பட்டதான குற்றச்சாட்டுகளுக்கு அந்த பத்திரிகையாளர்கள் முகம்கொடுத்திருக்கின்றனர்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள், HDP மீதான ஒடுக்குமுறைக்குக் கண்டனம் தெரிவித்தனர். துருக்கி நிகழ்வுகளால் அமெரிக்கா “ஆழமான கவலை” கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளரான ஜோஸ் இயர்னஸ்ட் அறிவித்தார்.
HDP இன் இணைத்தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் “நம்பிக்கைக்குரிய மற்றும் மதிப்புமிக்க பேச்சுவார்த்தை தலைவர்களாக” இருந்ததாக ஐரோப்பிய ஒன்றிய தலைமை தூதர் ஃபெடெரிக்கா மொக்கெரீனி (Federica Mogherini) விடுத்த ஒரு அறிக்கை தெரிவித்தது. இந்தக் கைதுகள் “துருக்கியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சமரசம் செய்து விட்டதோடு நாட்டின் தென்கிழக்கில் ஏற்கனவே மிகப் பதட்டமாக இருக்கும் நிலைமையை மேலும் மோசமாக்கி” இருப்பதாக அது மேலும் சேர்த்துக்கொண்டது.
துருக்கியின் நாடாளுமன்ற ஜனநாயகம் துரிதமாக உருக்குலைந்து வருவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விடுக்கும் எச்சரிக்கைகள் கபடமானவை மற்றும் மோசடியானவை என்பதோடு ஏகாதிபத்திய சக்திகள் தான் துருக்கியில் ஜனநாயகப் பாதுகாவலர்களாய் இருப்பதான சித்திரத்தை அளிக்கின்றன. எல்லாவற்றுக்கும் முதலில், எர்டோகனின் கொள்கைகளை, தங்களது ஏகாதிபத்திய நலன்களது கண்ணோட்டத்தில் இருந்து விமர்சித்து, இவை தான் துருக்கியில் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குக் குழிபறிக்க வேலைசெய்து வந்திருக்கின்றன.
அமெரிக்காவும் ஜேர்மனியும் சத்தமில்லாமல் ஆதரவளித்து, துருக்கியிலுள்ள நேட்டோவின் இன்சிர்லிக் (Incirlik) வான் தளத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு —இது எர்டோகனை ஏறக்குறைய கவிழ்க்கும் நிலைக்குச் சென்றது— நடந்து நான்கு மாதங்களும் கூட ஆகியிருக்கவில்லை. இன்சிர்லிக் மற்றும் இராணுவத் துருப்புகளை சேர்ந்த வீரர்கள் எர்டோகனைக் கொல்வதற்கும் துருக்கியை சுற்றிய முக்கிய உள்கட்டமைப்பு பகுதிகளைக் கைப்பற்றுவதற்கும் முயற்சி செய்த நிலையிலும் கூட —1960, 1971, மற்றும் 1980 இல் துருக்கியில் நடந்த நேட்டோ ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்புத் திட்டங்களின் மறுபதிப்பாக இது இருந்தது— அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அதிகாரிகள் துருக்கியில் “தொடர்ச்சி”க்கு அழைப்புவிடுக்கும் மொன்னையான அறிக்கைகளையே விடுத்தனர். ரஷ்யா மற்றும் சீனாவுடன் எர்டோகனின் அபிவிருத்தி கண்டுவந்த உறவுகளை முறிப்பதே எல்லாவற்றுக்கும் மேல் இந்த ஆட்சிக்கவிழ்ப்பின் நோக்கமாய் இருந்தது.
தனது உயிருக்கு வைக்கப்பட்ட குறியில் இருந்து மயிரிழையில் தப்பிய எர்டோகன் இப்போது துருக்கிக்குள்ளாக, கூலன் இன் ஆதரவாளர்களாய் சந்தேகிக்கப்படுபவர்கள், குர்து தேசியவாதக் குழுக்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் குறிவைத்து ஒரு பரந்த ஒடுக்குமுறையை தொடங்கிக் கொண்டிருக்கிறார்.
எர்டோகன் பின்பற்றும் கொள்கை ஆழமாய் பிற்போக்குத்தனமானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனாலும், எல்லாவற்றுக்கும் முதலில், அவர் அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளுமே பிரதான பொறுப்பாய் இருக்கும் சிரியப் போரால் விளைந்த நெருக்கடிகளுக்குத்தான் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்பதற்கு ஆழமான அரசியல் உட்பார்வை அவசியமில்லை.
எர்டோகன் “அண்டை நாடுகளுடன் எந்தப் பிரச்சினையுமில்லை” என்ற வெளியுறவுக் கொள்கையைக் கைவிட்டு விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தாங்கள் தொடக்கிய சிரியாவிலான ஆட்சிமாற்றத்திற்கான போரை ஏற்றுக்கொள்வதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவருக்கு நெருக்குதலளித்தன. இது பரந்த மற்றும் முன்னெதிர்பார்த்திராத பின்விளைவுகளைக் கொண்டுவந்தமை நிரூபணமானது. ISIS மற்றும் அல் நுஸ்ரா முன்னணி போன்று சிரியாவிலுள்ள நேட்டோ-ஆதரவு இஸ்லாமிய எதிர்ப்புப்படையினருக்கு விநியோகம் நடைபெறுகின்ற ஒரு முக்கியமான இடைப்புள்ளியாக துருக்கி ஆனது.
எல்லாவற்றுக்கும் மேலாய், சிரியாவில் களப் பினாமிகளாக சிரியாவின் குர்து தீவிரவாதப் படையினரை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா முனைந்தபோது, துருக்கியில் துருக்கியர்களுக்கும் குர்து இனத்தவருக்கும் இடையில் நிலவிவந்த ஏற்கனவே நுனிவிளிம்பில் அமர்ந்திருந்த அமைதியானது நிலைகுலைந்து போனது. சிரியாவிலும் துருக்கியின் அண்டைப் பிராந்தியங்களிலும் —துருக்கியும் கூட IS வலைப்பின்னல்களின் பயங்கரவாதக் குண்டுவீச்சுகளுக்கு பலியாகி வந்தது— குர்து பிரிவினைவாத அபிலாசைகளை வளர்த்தெடுத்ததன் மூலமாக, சிரியாவிலான நேட்டோவின் பினாமிப் போரானது துருக்கியை ஒரு உள்நாட்டுப் போருக்குள் தள்ளி விட்டது.
பிரதானமாக தனது தெற்கு எல்லையில் ஒரு தனி குர்து அரசு எழுவதைத் தடுக்கும் முயற்சியில், சிரியாவிலும் ஈராக்கிலும் எர்டோகன் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற இப்போதைய மூர்க்கமான இராணுவத் தலையீடானது, உள்நாட்டு எதிர்ப்பை நசுக்குவதற்கான அதன் முயற்சியுடன் கரம்கோர்த்து நடைபெறுகின்றது.
இந்த இரண்டும் ஏகாதிபத்திய சக்திகளுடனான பதட்டங்களையும் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. மொசூலுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான தாக்குதலில் முழுமையாக பங்கேற்பதற்கு துருக்கிய துருப்புகளுக்கு ஒபாமா நிர்வாகம் அனுமதி மறுத்ததற்காக எர்டோகன் அமெரிக்காவுடன் மோதுகின்ற நிலையில், ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாக எர்டோகனுக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடையிலும் பதட்டங்கள் வெடித்து வருகின்றன.
வியாழக்கிழமையன்று எர்டோகன் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெலை - முன்னதாக முந்தைய தினம் சுமுரிஜெட் பத்திரிகையாளர்கள் கைது குறித்து “பெரும் எச்சரிக்கைக்குரியது” என்று மேர்கெல் கூறியிருந்தார் - கடுமையாகத் தாக்கினார். ஜேர்மனி பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
“பயங்கரவாதம் என்பது ஒரு தேள் போன்றது. அது இறுதியில் தன்னைச் சுமந்து கொண்டிருப்பவர்களையே கொட்டும். ஜேர்மனிக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. பயங்கரவாதிகள் அடைக்கலம் புகும் இடமாக அது ஆகி வருகிறது. ஜேர்மனியில் துருக்கியர்களுக்கு எதிராக இனவாதத் தாக்குதல்கள் நடக்கின்றன. ஜேர்மனி பயங்கரவாதிகளைப் பாதுகாப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்” என்றார் எர்டோகன். அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: ”கூலன் அமைப்பு ஒரு பயங்கரவாதக் குழுவா என்பதில் ஜேர்மனிக்கு சந்தேகம் இருந்தால், நான் அழைப்பு விடுக்கிறேன், ஜூலை 15 அன்று குண்டுவெடிப்புக்கு இலக்கான துருக்கி நாடாளுமன்றம் மற்றும் சிறப்புப் படைகளது கட்டிடங்களுக்கு அவர்கள் வந்து பார்க்கட்டும்.”